Published : 15 Jun 2017 09:26 AM
Last Updated : 15 Jun 2017 09:26 AM

இரண்டு கருந்துளைகள், ஏராளமான நம்பிக்கைகள்!

அமெரிக்காவில் உள்ள லிகோ (லேஸர் இண்டெர் ஃபெரோமீட்டர் கிராவி டேஷனல் வேவ் அப்செர்வேட்டரி) ஆய்வகத்தின் உணர்மானிகள் (டிடெக்டர்) மற்றுமொரு கண்டுபிடிப்பை நிகழ்த்தியுள்ளன. முன்னூறு கோடி ஒளியாண்டுகள் தொலைவில் உள்ள இரண்டு கருந்துளைகள் (பிளாக் ஹோல்) இணைந்தபோது வெளிப்பட்ட ஈர்ப்பு அலைகளை (கிராவிட்டேஷனல் வேவ்) அந்த உணர்மானிகள் உள்வாங்கியிருக் கின்றன. கடந்த ஆண்டிலிருந்து இதுவரை மூன்று முறை இப்படிக் கண்டறியப் பட்டிருக்கிறது. தற்போது கண்டறியப்பட்ட கருந்துளை இணைவில் ஈடுபட்ட கருந்துளைகள் நமது சூரியனைவிட முறையே 31 மடங்கும் 19 மடங்கும் அதிக நிறை கொண்டவை.

கருந்துளைகளின் அமைப்பு, இயக்கம் போன்றவற்றைப் பற்றி அறிந்துகொள்ள முடிவதுடன் ஈர்ப்பு அலை வானியல், புதிய விண்பொருட்களைக் கண்டறிதல் போன்ற பல விஷயங்களும் இந்தக் கண்டுபிடிப்பால் சாத்தியமாகியிருக்கிறது. மேலும், ஐன்ஸ்டைனின் பொதுச் சார்பியல் கோட்பாடு குறித்தும் ஈர்ப்புவிசை குறித்தும் மேலும் நன்றாகப் புரிந்துகொள்ளும் வழிகளும் இந்தக் கண்டுபிடிப்பால் சாத்தியமாகியிருக்கின்றன.

இந்தியர்களின் பங்களிப்பு

இந்தியர்களும் இந்தக் கண்டுபிடிப்பில் பங்களித்திருக்கிறார்கள். இந்தியா முழுவதும் வெவ்வேறு 13 நிறுவனங்களைச் சேர்ந்த 67 பேர் கோட்பாட்டளவிலும் ஆய்வு அளவிலும் இந்தக் கண்டுபிடிப்பில் பங்களித்திருக்கிறார்கள். சென்னையைச் சேர்ந்த சி.எம்.ஐ., பெங்களூருவைச் சேர்ந்த ஐ.சி.டி.எஸ்-டி.ஐ.எஃப்.ஆர், புனேச்யைச் சேர்ந்த ஐ.யூ.சி.ஏ.ஏ. உள்ளிட்ட நிறுவனங்கள் பங்களித்திருக்கின்றன.

இந்தியர்களின் பங்களிப்பு குறித்த கொண்டாட்ட மனநிலை இருக்கும் அதே நேரத்தில், நம்மிடம் உள்ள இரண்டு உணர்மானிகளால் வானத்தில் எங்கிருந்து அந்த சமிக்ஞைகள் வருகின்றன என்பதைத் துல்லியமாகக் கண்டுபிடிக்க முடியாது என்ற போதாமை சற்றே சங்கடத்தைத் தருகிறது. இத்தாலியைச் சேர்ந்த விர்கோ உணர்மானி கூடிய சீக்கிரம் இந்த ஆய்வுச் செயல்பாடுகளோடு இணைந்துகொள்ளவிருப்பதால் மேற்கண்ட பிரச்சினை சரிசெய்யப்படும். ஆயினும், திட்டமிட்டபடி 2024-ல் லிகோ-இந்தியா கூட்டு ஆய்வுத்திட்டம் செயல்படத் தொடங்கும்வரை இன்னும் சில பிரச்சினைகள் நீடிக்கவே செய்யும். இதுபோன்ற எதிர்பார்ப்புகளுக்கிடையில் ஈர்ப்பு அலை கண்டறிதல் துறையில் நான்காவது ஆட்டக்காரராக லிகோ-இந்தியா நுழைவதில் உள்ள சவால்களை நாம் கணக்கில் எடுத்துக்கொள்வது மிகவும் அவசியமானது. இது செயல்படுத்தப்படுமானால் இந்திய அளவில் முதன்முறையாகப் பல விஷயங்கள் சாதிக்கப்படும்.

இந்த ஆய்வுக்கான தேவைகள் பல்வேறு ஆய்வுத் துறைகளின் வளர்ச்சிக்கு அடிகோலும். இவற்றில் சில துறைகளில் பணிகள் ஏற்கெனவே தொடங்கி விட்டன. சென்னை, டெல்லி ஐஐடி களிலும், கொல்கத்தாவில் உள்ள அணுக்கரு இயற்பியலுக்கான சாஹா மையத்திலும் ஹைதராபாதின் டி.ஐ.எஃப்.ஆர். நிறுவனத்திலும் செய்யப்படும் ஆய்வுகள் போன்றவற்றைக் குறிப்பிடலாம்.

இந்தியாவின் முன்னே...

கோட்பாட்டுத் தளத்திலும் முக்கியத்துவம் வாய்ந்த பல்வேறு முன்னேற்றங்கள் காத்திருக்கின்றன. இவற்றையெல்லாம் ஒருங்கிணைத்துப் பராமரித்து, செயல்வடிவம் கொடுப்பதில்தான் சவால் இருக்கிறது. இரண்டாவதாக, கச்சிதமான சிறு குழுவொன்று மேற்கொள்ளும் ஆய்வுகளைப் போலில்லாமல் லிகோ-இந்தியா ஆய்வானது பல்வேறு அங்கங்களைக் கொண்டு செயல்பட ஆரம்பிக்கும். இவற்றின் பெரும்பாலான அங்கங்கள் நாட்டின் வெவ்வேறு பகுதிகளில் ஒரே நேரத்தில் செயல்படுவதுடன், மேம்பாடும் அடையும். வெவ்வேறு பாகங்களையும் ஒன்றுசேர்த்து மேம்பட்ட அறிவியல் முன் னெடுப்பாக மாற்றுவதென்பது இந்தியாவைப் பொறுத்தவரை முதன் முதலில் நிகழ்த்தப்படும் சாதனை யாகவும் பெரும் சவாலாக வும் இருக்கும். இறுதியாக, இந்தியாவில் மேற்கொள்ளப்படும் எல்லாப் பெரிய அறிவியல் முதலீடுகளுக்கும் பிரதானமாக நிதியுதவி வழங்கும் இந்திய அணுசக்தித் துறையும் முன்னுதாரணம் இல்லாத வகையில் இந்த ஆய்வை உருவாக்கி, வழிநடத்தும் பொறுப்பை ஏற்றுக்கொள்ளும். ஏராளமான கோட்பாட்டு அறிவிய லாளர்கள் அறிவியல் ஆய்வாளர்கள் போன்றவற்றை இப்படி ஒருங்கிணைத்து மேற்கொள்ளும் பெரும் பணியின் இயங்குமுறையுடன் ஒப்பிட்டால் கருந்துளை இணைவு என்ற விஷயம் நமக்குச் சாதாரணமானது போல தோன்றலாம். பெரும் சவாலை எதிர்கொள்ளும் விதத்திலான அனுபவம், இதில் ஈடுபடும் அறிவியல் நிபுணர்களின் எண்ணிக்கை, அவர்களின் திறமை போன்றவைதான் நமக்குப் பெரும் நம்பிக்கையை ஊட்டுகின்றன.

- சுருக்கமாகத் தமிழில்: ஆசை

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x