Published : 14 Mar 2017 10:35 AM
Last Updated : 14 Mar 2017 10:35 AM

இப்படிக்கு இவர்கள்: சமகால அறிவியக்கங்களில் ஒன்று ‘தி இந்து’!

மார்ச் 10-ல் வெளியான, ‘தமிழும், தமிழருமே முதன்மை அக்கறை’ என்ற தலையங்கமும் ‘விருதுக்கு இந்தி, சம்ஸ்கிருதப் பெயரைத்தான் சூட்ட வேண்டுமா?’ என்ற குமரேசன் கட்டுரையும் அருமையிலும் அருமை. இந்திய அரசியலைக் கொஞ்சம் பின்னோக்கிப் பார்த்தால், வடவர் ஆதிக்கத்துக்குக் காரணம் என்ன என்பது எளிதில் விளங்கும். 1947-ல் அரசியல் நிர்ணய சபையால் மொழிவழி மாகாணங்கள் பற்றி குழு அமைக்கப்பட்டது.

அதன் தலைவர் தார் அளித்த அறிக்கையில், மொழிவழி மாகாணங்கள் அமையக் கூடாது என்று பரிந்துரை செய்தார். அதற்கான காரணத்தை விளக்கும்போது, “அப்படி ஏற்பட்டால் இந்தியாவுக்குத் தெற்கே தென்னாட்டுக்காரர்களின் அரசும், இந்தியாவுக்கு வடக்கே சீக்கியர்கள் அல்லது ஜாட் சமூகத்தவர்களின் அரசும் ஏன், நாட்டின் சில பகுதிகளில் பிராமணர் அல்லாதவர்களின் அரசும் கூட ஏற்படக்கூடும்” என்று கருத்து தெரிவித்திருந்தார்.

நிலைமை இன்னும் மாறாத நிலையில், தமிழகத்தின் சமகால அறிவியக்கங்களில் ஒன்றாகிவிட்ட ‘தி இந்து’ நாளிதழ், ‘தமிழால் இணைவோம், தமிழராய் எழுவோம், நாட்டின் பன்மைத்துவம் காப்போம்’ என்ற முழக்கம் வரவேற்புக்குரியது. ‘உனக்குள் ஒரு ஐ.ஏ.எஸ்.’ முயற்சிக்கு வாழ்த்துகள்!

- பொ.நடராசன், நீதிபதி (பணி நிறைவு), மதுரை.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x