Published : 27 Feb 2017 09:04 AM
Last Updated : 27 Feb 2017 09:04 AM

அதிகார யுத்தம் சென்னைக்குப் புதிதல்ல!

இருநூறு வருடங்களுக்கு முன் இன்றைய சூழல் நிலவிய நிகழ்வு இது.

ஒரு ஆட்சியாளர் எதிர்பாராமல் இக்கட்டான சூழலில் மரணிப்பதும், அவரைச் சுற்றியுள்ள உற்றார் - உறவினர், நண்பர் - பகைவர் என்று பலரும், எப்பாடுபட்டாவது அப்பதவியைக் கைப்பற்ற வேண்டும் என்று வியூகங்கள் வகுப்பதும் வரலாற்றில் புதிதல்ல. சென்னையில் இன்று அரங்கேறிவரும் அரசியல் காட்சிகளுக்கு இணையாகக் கிட்டத்தட்ட 200 வருடங்களுக்கு முன்னர், அன்றைய மதராஸ்பட்டினத்தில் காட்சிகள் அரங்கேறியிருக்கின்றன.

அது ஆற்காடு நவாபுகள் தமிழகத்தை ஆண்ட காலகட்டம். 1801-ல் நடந்த அந்த அதிகார வேட்கை நாடகத்தின் மௌன சாட்சியாக இன்றும் எஞ்சியிருப்பது சென்னை திருவல்லிக்கேணி நெடுஞ்சாலையில், நவாப் வாலாஜா பள்ளிவாசல் அருகேயுள்ள ஒரு அலங்கார வளைவு. இன்று ‘அசீம்பேட்’ என்று ஆங்கிலத்தில் பெயர் பொறிக்கப்பட்டிருக்கும் இந்த அலங்கார வளைவை அப்பகுதி மக்கள் ‘கமான் தர்வாசா’ என்றே அறிவர். இந்த நுழைவாயில் 18-ம் நூற்றாண்டின் இறுதியில் தமிழகத்தை ஆண்டுகொண்டிருந்த அன்றைய ஆற்காடு நவாபான உம்தத்துல் உம்ராவின் சகோதரி சுல்தான் உன்னிசா பேகத்தின் அரண்மனைக்குச் செல்லும் நுழைவாயிலாகும்.

அதிகார மைய அரண்மனை

ஆற்காடு நவாபாக உம்தத்துல் உம்ரா இருந்தாலும், உண்மையான அதிகாரம் என்பது அவரது இளைய சகோதரி சுல்தான் உன்னிசா பேகம்தான் என்று வரலாற்று ஆய்வாளர்கள் கருதுவர். தனது சகோதரிகளில் மூத்தவரான சுல்தான் உன்னிசா மேல் மிகுந்த மரியாதையும் அன்பையும் கொண்டிருந்த நவாப், மாலைப் பொழுதினைப் பெரும்பாலும் தன் அன்புச் சகோதரியின் இல்லத்தில் இசைக் கலைஞர்களுடனோ, நாட்டியத்திலோ கழிப்பதும், அங்கேயே உணவருந்துவதும் வழக்கம். பல சமயம் அலுவல் நிமித்தமாக நவாப் தனது அதிகாரிகளைச் சந்தித்து ஆலோசனை நடத்தும் அளவுக்கு சுல்தான் உன்னிசாவின் அரண்மனை அதிகார மையமாக விளங்கியது.

தம்பிக்கு அடுத்து ஆற்காட்டு நவாபாக தனது மகன் ரசூல் ஓமராவே ஆட்சிக்கு வர வேண்டும் என்று சுல்தான் உன்னிசா விரும்பியிருக்கிறார். இதற்கு சகோதரன் ஒப்புக்கொண்டதாக நினைத்திருந்த சுல்தான் உன்னிசாவுக்கு, மரணத் தறுவாயில் உம்தத்துல் உம்ரா, ‘எனக்குப் பின்னர் தன் மகன் தாஜுல் உம்ராவே அடுத்த நவாபாக வேண்டும்’ என்று உயில் எழுத, வெகுண்டெழுந்தார் சகோதரி. தனது வெறுப்பை அண்ணனிடம் வெளிப்படுத்தவும் தயங்கவில்லை.

கிழக்கிந்திய கம்பெனியின் சூழ்ச்சி

இச்சூழலில் “நான் எனது மகனை அரியாசனத்தில் ஏற்ற விரும்புகிறேன். எனது தம்பி சைபுல் முல்க் அது தனக்கு உரியது என்று எண்ணுகிறான். எனது அன்புச் சகோதரியோ தனது மகனை எனக்கு அடுத்து அரியாசனத்தில் அமர்த்த வேண்டும் என்று விரும்புகிறார். பரங்கியரோ (கிழக்கிந்திய கம்பெனி) சரியான வாய்ப்புக்காகக் காத்திருக்கின்றனர். ஆனால், இறைவனின் நாட்டம் எதுவோ அதுவே நடக்கும்” என்று நவாபால் புலம்ப மட்டுமே முடிந்தது.

நவாப் சந்தேகித்ததுபோல், ஆட்சியைக் கைப்பற்றுவதற்குச் சரியான வாய்ப்புக்காகக் காத்திருந்த கிழக்கிந்திய கம்பெனி, உடனடியாக ஒரு சூழ்ச்சியுடன் களத்தில் இறங்கியது. அவர்களின் அவசரத்துக்குக் காரணம் இல்லாமல் இல்லை. உம்தத்துல் உம்ராவின் தந்தை முஹம்மது அலி வாலாஜா 1795-ல் மறைந்தபோதே ஆட்சியைக் கைப்பற்ற வேண்டும் என்று திட்டமிட்டிருந்தது ஆங்கிலேய கிழக்கிந்திய கம்பெனி.

வேதனையில் நவாபு

சேப்பாக்கம் அரண்மனையிலிருந்து வெகு அருகிலேயே புனித ஜார்ஜ் கோட்டை இருந்தாலும், முஹம்மது அலியின் மரணத்தை கம்பெனிக்குத் தெரிவிக்காமல், அவசர அவசரமாக அரண்மனையில் வைத்து தன்னை அடுத்த நவாபாக உம்தத்துல் உம்ரா முடிசூட்டிக்கொண்டதை கம்பெனி மறந்திருக்கவில்லை.

இம்முறையும் அதுபோல் நடந்துவிடக் கூடாது என்று எச்சரிக்கையாக இருந்த கிழக்கிந்திய கம்பனி, நவாபின் உறவுகளுக்குள் புகைந்துகொண்டிருக்கும் பகையைப் பயன்படுத்தி, நவாபுக்கு எதிராக, அவர் உறவினர்களே சில ஆற்காடு படையணிகளைக் கொண்டு புரட்சி செய்யலாம் என்று பீதியைக் கிளப்பிவிட்டனர். நவாபின் திவானாக இருந்த கர்னல் பேரெட் என்ற போர்த்துகீசியரின் உதவியுடன், ஏற்கெனவே மனக் குழப்பத்திலும் தாளாத மரண வேதனையிலும் துடித்துக்கொண்டிருந்த நவாபின் அரை மனது சம்மதத்துடன், அவருக்குப் பாதுகாப்பு என்ற பெயரில், கம்பெனி தனது சிப்பாய்களை அரண்மனைக்குள் நுழைத்தது.

மன்னிக்காத உன்னிசா

கம்பெனி சிப்பாய்கள் அரண்மனைக்குள் வந்த சில நாட்களில் நவாப் மரணித்தார். வெறுப்பின் உச்சகட்டத்திலிருந்த சுல்தான் உன்னிசா பேகம், மரணித்துவிட்ட தன் உடன் பிறந்த சகோதரரை மன்னிக்கத் தயாராக இல்லை. தனது அரண்மனை நுழைவாயில் முன், தனக்குத் துரோகம் செய்துவிட்ட சகோதரரின் இறுதி ஊர்வலத்தை ஒருபோதும் அனுமதிக்க முடியாது என்று அடம்பிடிக்க, வேறு வழியின்றி ‘கமான் தர்வாஸா’வுக்கு எதிரில் இருந்த மண்டபத்தில், காவலர்கள் பாதுகாப்போடு ஒரு இரவு முழுக்க நவாபின் உடல் கிடத்தப்பட்ட அவலம் சென்னை திருவல்லிக்கேணியில் நடந்தேறியது. நவாபின் வாரிசான தாஜுல் உமரா, மறுநாள் நஸ்ரத் மஹாலின் பின்பக்கச் சுவரை உடைக்கச் சொல்லி, வேறு வழியாக உடலை திருச்சி நத்தர்வலி தர்காவில் தன் தந்தை விரும்பியபடி அடக்கம் செய்ய அனுப்பி வைத்தார்.

இந்த உட்குடும்பக் குழப்பங்களைத் தனக்குச் சாதகமாக்கிக்கொண்ட கம்பெனி, அதே காலகட்டத்தில் நவாபின் அரண்மனை யையும் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்திருந்தது. அரண்மனை கைவசம் வந்த வுடன் அடுத்த ஆட்சியாளரை நியமிக்கும் பொறுப்பையும் தனதாக்கிக்கொண்டது. அரசியல் அதிகாரத்தை விட்டுக்கொடுக்க முன் வராத உம்தத்துல் உம்ராவின் மகன் தாஜுல் உம்ராவுக்குப் பதிலாக, கம்பெனி கேட்ட இடத்தில் கையெழுத்திடத் தயாராக இருந்த அசீம் உத்தவுலாவை, அரசியல் அதிகாரங்கள் ஏதுமற்ற, பெயரளவில் நவாபு பட்டத்தை (Titular Nawab) சுமந்தவராக கவர்னர் ஜெனரல் எட்வெர்ட் கிளைவ் அறிவித்தார்.

ஆக, இக்குழப்பத்தின் முடிவில் கம்பெனி வசம் தமிழகம் கை மாறியது. இதனை அடுத்து, சில மாதங்களில் தாஜுல் உமரா இளம் வயதிலேயே காலமானார். தனது மகனை அடுத்த நவாபாக ஆக்க முடியாது தோல்வியுற்ற சுல்தான் உன்னிசா, புனிதப் பயணம் சென்றபோது இராக்கில் உள்ள பாஸ்ராவில் மரணமுற்றார். அன்று இந்தச் சம்பவங்கள் திருவல்லிக்கேணி வீதிகளில் அரங்கேறின. இன்று நடப்பவை திருவல்லிக்கேணி விளிம்பில் உள்ள மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் நினைவிடம் முன்னர். முன்னது, தமிழக அரசியலையும் இந்திய அரசியலையும் புரட்டிப்போட்டது. இன்று நடப்பதன் பின்விளைவுகள் போகப் போகத்தான் தெரியும்!

- கோம்பை எஸ். அன்வர், தமிழ் முஸ்லிம்களின் வேர்களைப் பதிவுசெய்த ‘யாதும்’ எனும் ஆவணப்படத்தை இயக்கியவர், வரலாற்று ஆய்வாளர்.

தொடர்புக்கு: anvars@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x