Last Updated : 11 Jun, 2017 12:20 PM

 

Published : 11 Jun 2017 12:20 PM
Last Updated : 11 Jun 2017 12:20 PM

சுரண்டலின் பெயர் சுமங்கலி

திண்டுக்கல்லில் உள்ள ஜவுளி மில்லில் 18 வயதான கலா கடந்த மூன்று ஆண்டுகளாகப் பணியாற்றிவருகிறார். காலை 6.30 மணிக்கு அவர் தன் வீட்டிலிருந்து தினசரி கிளம்பி, 45 நிமிடங்கள் பயணம் செய்து மில்லுக்கு வருகிறார். காலை 8 மணிக்குத் தொடங்கும் வேலை 8 மணிநேரம் நீடிக்கிறது. பெரும்பாலான நாட்கள் இன்னொரு ஷிஃப்ட் பார்க்கிறார். அல்லது சில மணிநேரங்கள் கூடுதலாகப் பணிசெய்கிறார். மில்லிலேயே காலை உணவும் மதிய உணவும் தரப்பட்டாலும், அதன் தரம் மோசமாக இருப்பதால் மதியச் சாப்பாட்டைத் தவிர்க்கவே விரும்புகிறார்.

ஜவுளித் துறையில் பொதுவாக வழங்கப்படும் ஊதியத்துக்கும் குறைவாக மாதந்தோறும் கலா, ரூ. 3,000 முதல் ரூ. 3,500 மட்டுமே சம்பளமாகப் பெறுகிறார். அதிகமான வேலை, குறைவான கூலியுடன் பெரும்பாலான சமயங்களில் துன்புறுத்தலுக்கும் உள்ளாக்கப்படும் ஜவுளிப் பெண் தொழிலாளர்களில் ஒருவர்தான் கலா. தமிழகம் முழுவதும் உள்ள 2,000-க்கும் மேலான ஜவுளி ஆலைகளில் பணியாற்றும் 3 லட்சம் தொழிலாளர்களில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் பெண்கள். கடந்த 20 ஆண்டுகளில் பெண்களுக்கான வேலைவாய்ப்பு இத்துறையில் பல மடங்கு அதிகரித்துள்ளது.

பெண் தொழிலாளர்களை ஈர்ப்பதில் ஜவுளி ஆலை அதிபர்கள் முன்வைத்த திட்டங்களில் முதன்மையானது சுமங்கலி திட்டமாகும். அத்திட்டத்தின்படி, தொழிற்சாலையில் வேலைக்குச் சேரும் இளம்பெண்ணுக்குத் திருமணமாகும் சமயத்தில் ஒட்டுமொத்தமாக ஒரு தொகை அளிக்கப்படும். குறைந்தபட்சம் மூன்று ஆண்டுகள் பணியாற்றியவர்களுக்கு அவர்கள் திருமணமாகிச் செல்லும்போது 30 ஆயிரம் முதல் 40 ஆயிரம் ரூபாய் வரை மொத்தமாக வழங்கப்படும். அத்துடன் வேலை பார்க்கும்போது, மாதம் ரூ.1,000 செலவுக்காக வழங்கப்படும். உணவு மற்றும் தங்குமிடம் மில் வளாகத்திலேயே கொடுக்கப்படும். இதில் சில அம்சங்கள் ஒவ்வொரு இடத்திலும் வேறுபட்டாலும், திருமணத்துக்காகக் கொடுக்கப்படும் ஒட்டுமொத்தத் தொகை மட்டும் மாறாத அம்சமாகும். ஆனால், பெண் தொழிலாளர்களின் தரப்பைக் கேட்கும்போது, இதைச் சுரண்டல் என்றே சொல்ல முடியும்.

1990-களில் ஜவுளித் துறைத் தொழிலாளர்களுக்காக இயங்கிய வலுவான சங்கங்களைப் பலவீனப்படுத்தியதில் சுமங்கலித் திட்டம் போன்றவற்றுக்குப் பெரும் பங்கு உண்டு என்கிறார் ‘கார்மண்ட் அண்ட் ஃபேஷன் வொர்க்கர்ஸ் யூனியன் ’ தலைவர் சுஜாதா மோடி.

திண்டுக்கல் மாவட்ட ஜவுளி ஆலை ஒன்றில் பணியாற்றும் இன்னொரு தொழிலாளியான பி.லதா, ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்னர் தொழிற்சாலையில் நடந்த மறக்கவே முடியாத சம்பவம் ஒன்றைப் பற்றி நம்மிடம் நினைவுகூர்ந்தார். “அனைவர் முன்னாலும் மேற்பார்வையாளர் ஒருவர், ஒரு பெண்ணின் பாவாடையைப் பிடித்து இழுத்த அவமானம் தாங்காமல் அந்தப் பெண் மாடியிலிருந்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அது. “30 பேர் அந்தச் சம்பவத்தைப் பார்த்தோம். ஆனால், வெளியே சொல்லவில்லை. நிர்வாகம் கொடுத்த அழுத்தம் காரணமாக போலீஸும் வழக்கைப் பதிவுசெய்யவேயில்லை. எங்களாலும் எதையும் செய்திருக்க முடியும் என்று நினைக்கவில்லை.”

சமீபத்தில் வெளியிடப்பட்ட ‘ஃபேப்ரிக் ஆஃப் ஸ்லேவரி ரிப்போர்ட் ஆஃப் தி இந்தியா கமிட்டி ஆஃப் நெதர்லாண்ட்ஸ்’ அறிக்கை, தமிழகத்திலுள்ள ஜவுளி ஆலைகளில் நடக்கும் சுரண்டல்களைப் புள்ளிவிவரங்களுடன் வெளியிட்டுள்ளது. திண்டுக்கல், திருப்பூர், நாமக்கல் மற்றும் ஈரோடு மாவட்டங்களைச் சேர்ந்த 743 பஞ்சாலைகளிலுள்ள சூழ்நிலைகளை ஆய்வுசெய்து வெளியிடப்பட்ட அறிக்கை இது. “இளம் பெண் தொழிலாளர்கள் அச்சுறுத்தல், இரட்டை அர்த்தப் பேச்சு மற்றும் பாலியல்ரீதியான துன்புறுத்தலுக்கு உள்ளாகின்றனர்’’ என்கிறது இந்த அறிக்கை. இந்த ஆய்வு, 2015-ம் ஆண்டு ஜூலை மாதம் முதல் டிசம்பர் மாதம் வரை செய்யப்பட்டது. 8 ஆய்வாளர்கள், 40 தன்னார்வலர்கள் சேர்ந்து 2 ஆயிரத்து 286 பணியாளர்களை நேர்காணல் செய்ததோடு கலந்துரையாடலும் நடத்தி இந்த ஆய்வைச் செய்துள்ளனர். இந்த ஆய்வுக்குள்ளான ஜவுளி ஆலைகளில் பெரும்பாலானவற்றில், இந்திய தொழிலாளர் சட்டங்கள் எதுவும் பின்பற்றப்படவில்லை. 39 தொழிற்சாலைகளில் மட்டுமே சட்டரீதியான குறைந்தபட்ச ஊதியம் அளிக்கப்படுகிறது. 91% ஆலைகளில், கொத்தடிமை முறை அல்லது சுமங்கலித் திட்டம் உள்ளது. வேலை நேரத்துக்குப் பின்னர், பாதிக்கும் மேற்பட்ட மில்களின் தங்கும் விடுதிகளை விட்டு வெளியே போகத் தொழிலாளர்களுக்கு அனுமதியில்லை.

351 மில்களில் சுமங்கலித் திட்டம் இன்னும் நடைமுறையில் உள்ளது. 392 மில்களில் சுதந்திரமான நடமாட்டத்துக்குத் தடையுள்ளது. அத்துடன், 706 மில்களில் விதிக்கப்பட்ட வார வேலை நேரங்களான 48 மணி நேரங்களையும் தாண்டி, வேலை செய்யவைக்கப்படுகின்றனர். 367 மில்களில் வார வேலை நேரங்கள் 60 மணி நேரத்தையும் தாண்டுவதாக உள்ளது. தொழிலாளர்களுடன் நடத்தப்பட்ட குழு உரையாடல்களில், பெண் தொழிலாளர்கள் வசைக்குள்ளாவதும் மிரட்டப்படுவதும் சகஜமாக உள்ளது தெரியவந்தது.

அரசின் நடவடிக்கை

ஜவுளி ஆலைகளில் இளம்பெண்கள் பணியாற்றுவது தொடர்பாக கடந்த 2015-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் தமிழக சட்டப்பேரவையில் எதிர்க் கட்சிகள் கேள்வி எழுப்பியபோது, ஜவுளித் துறை அமைச்சர் ஓ.எஸ்.மணியன், சுமங்கலித் திட்டத்தின் கீழ் பணியாளர்கள் சுரண்டலுக்கு உள்ளாகிறார்கள் என்ற குற்றச்சாட்டை மறுத்தார்.

15 வயது முதல் 18 வயதுக்குள் உள்ள வளரிளம் பருவத்துப் பெண்களை வேலைக்கு அமர்த்துவது, கூடுதல் நேர வேலை, குறைந்தபட்சக் கூலி வழங்காமை போன்ற பிரச்சினைகள் பஞ்சாலைகளில் உடனடியாகக் கவனிக்க வேண்டிய நிலையில் உள்ளதாக அரசு அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். தொழிற்சாலைச் சட்டத்தின் கீழ், 15 வயதுக்கு மேலுள்ள குழந்தைகளைச் சில குறிப்பிட்ட சூழ்நிலைகளில் வேலைக்கு எடுக்கலாம். ஆனால், சர்வதேசத் தொழிலாளர் அமைப்பின்படி, 18 வயதுக்கு மேல் உள்ளவர்களை மட்டுமே வேலைக்குச் சேர்க்க வேண்டும். அத்துடன் அவர்களுக்கான தேவைகளையும் அங்கே சரியாக நிறைவேற்றுதல் வேண்டும். அதைப் போன்றே, பல இடங்களில் 10 மணி நேரங்களுக்கும் மேல் வேலை நேரம் நீட்டிக்கப்படுகிறது. தினக் கூலிகளுக்கு, பயிற்சிப் பணியாளர்களுக்கான கூலியை அளிக்க வேண்டியதும் அவசியம் என்று அரசு அதிகாரிகள் கூறுகின்றனர்.

தொழிற்சாலைகளில் உள்ள பிரச்சினைகளில் ஒன்றாக சுமங்கலித் திட்டத்தை அரசு அதிகாரிகள் பார்க்கவில்லை. தற்போதைக்கு சுமங்கலி என்ற பெயரில் திட்டமே இல்லையெனினும், வேறு பெயர்களில் கிராமப் பகுதிகளிலும் சிறு ஆலைகளிலும் அதுபோன்ற திட்டங்கள் செயல்படவே செய்கின்றன. பெரும்பாலான ஆலைகளில் மில் வளாகத்துக்கு வெளியே விடுதி வசதிகள் வழங்கப்படுகின்றன.

வருவாய்த் துறை அதிகாரிகள் மற்றும் தொழிலாளர் துறை அதிகாரிகளை ஆலை வளாகத்துக்குள் நுழையக்கூட ஆலை நிர்வாகத்தினர் அனுமதிப்பதில்லை என்று பெயர் வெளிப்படுத்த விரும்பாத அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். ஜவுளித் துறை சார்ந்த அதிகாரிகள் மட்டும்தான் ஆலை வளாகத்துக்குள் நுழைய வேண்டும் என்று கூறுகின்றனர். “மில் நிர்வாகத்தினர் வெளிப்படையாக இருக்கும்பட்சத்தில், அவர்கள் ஏன் மாவட்ட ஆட்சியர்களைக்கூட அனுமதிக்க மறுக்கிறார்கள்? பாலியல் துன்புறுத்தல் மற்றும் பிற பிரச்சினைகள் நடக்காத வண்ணம் ஏன் அவர்கள் சிசிடிவி கேமராக்களைப் பொருத்தாமல் இருக்கின்றனர்?” என்று கேட்கிறார் அதிகாரி ஒருவர்.

மில் அதிபர்கள் தங்கள் மீதான விசாரணைகளைத் தவிர்க்கச் சட்டரீதியான ஓட்டைகளைப் பயன்படுத்துகின்றனர். உதாரணத்துக்கு, கொத்தடிமை தொழிலாளர் ஒழிப்புச் சட்டம் (1976)-ன் படி பல வழக்குகளைப் போடவே இயலாது. ஏனெனில், முன்பணம் வாங்கிக்கொண்டு வேலைக்கு வரும் தொழிலாளர்களுக்குத்தான் அந்தச் சட்டம் பொருந்தும். மாநிலங்களுக்கு இடையிலான புலம்பெயர் தொழிலாளர்கள் சட்டம் (1983)-ன் அடிப்படையிலும் பல வழக்குகளைப் போட முடியாது. தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்த தரகர்களைப் பணித்தால் மட்டுமே இந்தச் சட்டத்தின் கீழ் வழக்குகளைப் போட முடியும். அதேபோல, பயிற்சிப் பணியாளர்கள் சட்டம் (1961)-ன் குறிப்பிட்ட அம்சங்களின் அடிப்படையிலும், குறைந்தபட்சக் கூலிச் சட்டம் (1948)-ன் அடிப்படையிலும் வழக்குகள் பாயாமல் இருக்க தொழிலாளர்களைப் பயிற்சியாளர்களாக ஆவணப்படுத்தாமலும், வேலையாள் பதிவேட்டைப் பராமரிக்காமலும் இருந்தால் போதுமானது.

அடிப்படைக் காரணங்கள்

‘‘அரசியல் விருப்புறுதி இல்லாமைதான், பெண் தொழிலாளர்கள் சந்திக்கும் பிரச்சினைகளுக்குக் காரணம்’’ என்கிறார் மதுரையைச் சேர்ந்த தொண்டு நிறுவனமான சோகோ அறக்கட்டளையின் துணை இயக்குநர் எஸ்.செல்வ கோமதி. பல விவகாரங்களில், மூத்த அமைச்சர்கள் மற்றும் எம்எல்ஏக்களின் கூட்டுடன் ஆலை முதலாளிகள் செயல்படுகின்றனர் என்றும் அவர் குற்றம்சாட்டுகிறார். ஜவுளி ஆலைகளில் பணியாற்றும் பெண்கள் தொடர்பான பிரச்சினைகளில் தலையிடும் ‘செரின் செக்குலர் சோஷியல் சர்வீசஸ்’ அமைப்பின் ஜேம்ஸ் விக்டர் பேசும்போது, ‘‘மழையில்லாமல் விவசாயம் பொய்த்துப்போனதுதான் அதிகப் பெண்கள் ஜவுளி வேலைக்குப் போவதற்குக் காரணம்’’ என்கிறார்.

பெண் தொழிலாளர்களில் பெரும்பாலானவர்கள் தொழிலாளர் சங்கங்களில் உறுப்பினர்களாக இல்லா விட்டாலும், எல்லாப் பணியாளர்களையும் நிரந்தரமாக்கவும் தங்குமிடம் கொடுக்கச் சொல்லியும் அறிவிக்கைகள் ஜவுளி ஆலைகளுக்குக் கொடுக்கப்பட்டிருப்பதாக ஏஐடியுசியின் எம்.ஆறுமுகம் கூறியுள்ளார். அத்துடன் இளம்பெண்களுக்குத் தொழிற்சாலை வளாகத்துக் குள்ளேயே தங்குமிடம் வழங்கக் கூடாது என்றும் அவர் கூறுகிறார்.

கடந்த ஆண்டு நவம்பர் மாதம், சென்னை நீதிமன்றத்தில் மாநில அரசு தாக்கல் செய்த அறிக்கையின் அடிப்படையில், மாநில அரசு, தொழிற்சாலைகளில் பணியாளர்களை நடத்துவதைத் தொடர்ந்து கள அதிகாரிகளை வைத்துக் கண்காணிக்க வேண்டுமென்றும், பஞ்சாலைகள் மற்றும் ஜவுளித் துறையில் பெண்களுக்கு ஏற்ற சூழ்நிலைகளை உருவாக்குவதை உறுதிசெய்ய வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது. நீதிமன்றத்தின் ஆணைப்படி, மாவட்ட அளவிலான கண்காணிப்பு கமிட்டிகள் தொடர வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.

கடந்த சில ஆண்டுகளில் வேலைவாய்ப்பு முறைகள் ஜவுளி ஆலைகளில் மாறியுள்ளதாக ஆலை உரிமையாளர்கள் சொல்கின்றனர். பெண் தொழிலாளர்களோடு, அன்றாடக் கூலிகளையும் புலம்பெயர் பணியாளர்களையும் வேலைக்கு அமர்த்துகிறார்கள். மேற்கு வங்காளம் மற்றும் ஒடிஷா போன்ற மாநிலங்களிலிருந்து வரும் புலம்பெயர் தொழிலாளர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. சேலம் போன்ற பகுதிகளில் பெரும்பாலான ஆலைகளில் விடுதி முறை இல்லை.

“வளரிளம் பருவத்திலுள்ள இளம்பெண்களை வேலைக்கு அமர்த்தக் கூடாது என்று தொழிற்சாலை அமைப்புகள் தங்கள் உறுப்பினர் ஆலைகளுக்கு அறிவுறுத்தியுள்ளன. பொருட்களை வாங்குபவர்கள் சில நெறிமுறைகளை வலியுறுத்துவதன் மூலமும், வர்த்தகத்தில் தொடர்ந்து நிலைக்கவும் வேலை நிலைமைகளில் வரும் ஆண்டுகளில் மாற்றம் வரும்” என்கிறார் தொழிற்சாலை அமைப்புகளின் பிரதிநிதி ஒருவர்.

அத்துடன் மத்திய அரசு, புலம்பெயர் தொழிலாளர்கள் உட்பட அனைத்துப் பணியாளர்களுக்கும் சம்பளத்தை வங்கிக் கணக்குகளில் செலுத்த வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது. இதன் காரணமாக 18 வயதுக்கு மேலுள்ள ஊழியர்களை வேலைக்கு எடுக்க வேண்டிய கட்டாயச் சூழ்நிலை உருவாகியுள்ளது. அப்போதுதான் தனி வங்கிக் கணக்குகளை ஒவ்வொரு ஊழியருக்கும் திறக்க முடியும்.

சில நடுத்தர ஆலைகளில் பணியாளர்களின் குறைகளைத் தெரியப்படுத்தும் விதமாக புகார் பெட்டிகளையும் விடுதிகளில் அமைத்துள்ளனர். தொழிலாளர்களின் குறைகளைத் தீர்க்கும் ஆர்வம் அவர்களிடம் இருப்பதாகத் தெரிகிறது. சில ஆலைகளின் சார்பாக நடத்தப்படும் விடுதிகளில் உயர் கல்வியைத் தொடர்வதற்கும், தொழிற்கல்வி வசதி மற்றும் மருத்துவ வசதிகளும் கொடுக்கப்படுகின்றன. சர்வதேச பிராண்டுகளுக்கான உடைகளை வழங்கும் பெரிய அளவிலான சில தொழிற்சாலைகளில் பெண் தொழிலாளர்களுக்குப் பலவிதமான வசதிகள் உள்ளன. இதைப் போலவே மற்ற தொழிற்சாலைகளும் பின்பற்ற வேண்டும் என்கிறார்கள். ஆனால், மற்ற தொழிற்சாலைகள் உண்மையிலேயே மனம் வைக்க வேண்டும்.

(பெண் தொழிலாளர்களின் பெயர்கள் அவர்களின் அடையாளத்தைப் பாதுகாப்பதற்காக மாற்றப்பட்டுள்ளன.)

தி இந்து’ ஆங்கிலம், தமிழில்: ஷங்கர்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x