Last Updated : 14 Jun, 2017 09:18 AM

 

Published : 14 Jun 2017 09:18 AM
Last Updated : 14 Jun 2017 09:18 AM

மாரடைப்பின்போது ‘பொன்னான நேரம்’ வீணாகலாமா?

இந்தியாவில் ஆண்டுதோறும் சுமார் இரண்டு லட்சம் பேர் மாரடைப்பால் மரணமடைகின்றனர். ஒவ்வொரு வருடமும் மூன்று லட்சம் பேருக்குப் புதிதாக மாரடைப்பு ஏற்படுகிறது. அவர்களில் 10% பேர் மட்டுமே மாரடைப்பு ஏற்பட்ட ஒரு மணி நேரத்துக்குள் மருத்துவமனைக்கு வருகின்றனர். அடுத்த 10% பேர் 12 மணி நேரம் கழித்து வருகின்றனர். மீதிப் பேர் சிகிச்சைக்கு வருவதற்கு 24 மணி நேரத்துக்கும் அதிகமாகிறது. மாரடைப்பு ஏற்பட்டவருக்கு முதல் ஒரு மணி நேரம்தான் உயிர் காக்கும் பொன்னான நேரம் (Golden hour). அந்த நேரத்துக்குள் அவருக்குத் தேவையான முக்கிய சிகிச்சைகள் கிடைத்துவிட்டால், பிழைத்துக் கொள்வார். தவற விட்டால், மரணம் ஜெயிக்க வாய்ப்புகள் அதிகம்.

இந்தியச் சூழலில் மாரடைப்பு வந்த ஒருவர் ஆட்டோ, பஸ், கார் போன்ற வாகனங்களில் மருத்துவமனைக்கு வந்து சேர சராசரியாக 6 மணி நேரம் ஆகிறது. இந்தத் தாமதம்தான் உயிர்ப் பலிக்கு முக்கியக் காரணம்; இதை மட்டும் தவிர்த்தால், இவர்களில் பாதிக்கு மேற்பட்டவர்களைக் காப்பாற்ற முடியும் என்கிறது, மும்பையில் ‘கெம்’மருத்துவமனை (KEM hospital) நடத்திய ஓர் ஆய்வு.

எது மாரடைப்பு?

தாமதத்துக்குக் காரணம், மாரடைப்பு வந்தவர்களில் பெரும்பாலானோர் தங்களுக்கு வந்துள்ளது மாரடைப்புதான் என்பதை உணரத் தவறிவிடுகின்றனர். இதனால், சரியான நேரத்தில் அவர்கள் மருத்துவமனைக்கு வருவதில்லை. மாரடைப்பு வந்தவருக்கு நெஞ்சு வலிக்கும் என்பது பலருக்கும் தெரியும். ஆனால், மாரடைப்புக்கு அது மட்டுமே அறிகுறி அல்ல. குறிப்பாக, நீரிழிவு நோயாளிகளுக்கு மாரடைப்பு வந்தால், நெஞ்சில் வலி எடுக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை. சாதாரணமாக நெஞ்சில் எரிச்சல் அல்லது ஓர் அசௌகரியம் ஏற்படுவதும் மாரடைப்பின் அறிகுறியாக இருக்கலாம். இதை வாயு என்றோ, அல்சர் என்றோ அலட்சியப்படுத்தக் கூடாது. இம்மாதிரி அசௌகரியத்தோடு உடல் வியர்க்கிறது; நடந்தால் / மாடிப்படி ஏறினால் மூச்சு வாங்குகிறது; மயக்கம் வருகிறது போன்ற பலவும் மாரடைப்புக்கான அறிகுறிகளே.

எங்கு செல்ல வேண்டும்?

தாமதிக்கும் ஒவ்வொரு நொடியும், மாரடைப்பு ஏற்பட்டவரின் உயிருக்கு ஆபத்து நெருங்கலாம். எனவே, எங்கு செல்வது எனத் தெரியாமல், பல மருத்துவமனைகளுக்கு அலைந்து நேரத்தை வீணாக்காமல், நெஞ்சுவலி ஆரம்பித்த ஒரு மணி நேரத்துக்குள் இதய நோய் மருத்துவரிடம் சென்றுவிட்டால், உயிர் பிழைக்கலாம்.

மாரடைப்பாக இருக்கலாம் எனச் சந்தேகம் வந்தாலே மருத்துவமனைக்கு ஆட்டோவில்/ காரில் /டாக்சியில் செல்வதைத் தவிருங்கள். 108 ஆம்புலன்ஸை அழையுங்கள். அதில் அவசர சிகிச்சைகளுக்குப் பயிற்சி பெற்ற உதவியாளர்கள் இருக்க வேண்டும். அப்போதுதான் ஆம்புலன்ஸிலேயே நோயாளிக்குத் தேவையான முதல் உதவி சரியாகக் கிடைக்கும். மேலும், ஆம்புலன்ஸுக்குப் போக்குவரத்து நெரிசலிலும் அவசர வழிகள் கிடைக்கும்.

இதயநோய் சிகிச்சைக்குத் தேவையான இசிஜி, டிரட் மில், எக்கோ, ‘கேத் லேப்’ (Cardiac catheterization (cath) lab.) ஆகிய மருத்துவ வசதிகள் கொண்ட மருத்துவமனைக்குச் சென்றால் மட்டுமே மாரடைப்புக்கு உரிய சிகிச்சை பெற முடியும்.

உயிர் காக்கும் மருந்துகள்

மாரடைப்பு வந்தவர்கள் மருத்துவமனை செல்லும்வரை காத்திருக்காமல், உடனடியாக ஆஸ்பிரின் 325 மி.கி. ஒன்று, அட்டார்வாஸ்டேடின் 80 மி.கி. ஒன்று அல்லது ரோஸ்வாஸ்டேடின் 40 மி.கி. ஒன்று, குளோபிடோகிரில் 150 மி.கி. இரண்டு மாத்திரைகள் சாப்பிட வேண்டும். இவை ரத்தம் உறைவதைத் தடுத்து, மாரடைப்பு தீவிரமாகாமல் பார்த்துக்கொள்ளும். மாரடைப்பு எனச் சந்தேகம் வந்தாலே, இவற்றைச் சாப்பிடலாம். முக்கியமாக, நெஞ்சுவலி வந்தவர் 40 வயதுக்கு மேல் இருந்தால், நீரிழிவு, உயர் ரத்த அழுத்தம் இருப்பவரானால், புகைப் பழக்கம் இருக்குமானால், ரத்தக் கொழுப்பு அதிகமாக இருப்பவரானால், பரம்பரையில் மாரடைப்பு வந்திருந்தால், அனுதினமும் மன அழுத்தத்துடன் அலுவலகத்தில் பணிபுரிபவராக இருந்தால் உயிர்காக்கும் இந்த மூன்று மாத்திரைகளை உடனே சாப்பிடலாம். இவர்கள் இந்த மாத்திரைகளை எந்நேரமும் கைவசம் வைத்துக்கொள்வது இன்னும் நல்லது.

உயிர் காக்கும் முதலுதவி

மாரடைப்பின்போது இதயத் தசைகள் வலுவிழந்து துடிப்புகள் குறைந்து மயக்கம் வரும். அப்போது சிறிதும் தாமதிக்காமல் ‘சிபிஆர்’ (Cardio Pulmonary Resuscitation) என்ற உயிர் காக்கும் முதலுதவியைச் செய்ய வேண்டும். இதை மேல் நாடுகளில் பெரும்பாலும் எல்லோரும் தெரிந்துவைத்திருக்கின்றனர்.

அமெரிக்காவில் பணிபுரியும் நண்பர் என்னிடம் கூறிய நிகழ்வை இங்கே குறிப்பிட வேண்டும். அமெரிக்காவைச் சுற்றிப் பார்க்க வந்திருந்த அவரது அப்பாவுக்கு நெஞ்சுவலி வந்தது. டாக்சியில் அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று கொண்டிருந்தார். வழியில் திடீரென அப்பாவுக்கு இதயத் துடிப்பு நின்றுவிட்டது. உடனே, டிரைவர் சாலையோரத்தில் டாக்சியை நிறுத்தினார். அங்கு ஏடிஎம் மையம் போலிருந்த சிறு அறையில் இதயத் துடிப்பை அறியும் இசிஜி கருவியும், மின் அதிர்ச்சி கொடுக்கும் இயந்திரமும் (DC shock defibrillator) பொருத்தப்பட்டிருந்தன. அங்கு குறிப்பிட்டிருந்த மருத்துவரிடம் செல்பேசியில் கலந்தாலோசித்துவிட்டு, அந்தக் கருவியைப் பயன்படுத்தி முதலுதவி கொடுத்தார். நண்பரின் அப்பாவுக்கு இதயத் துடிப்பு மீண்டது. பிறகு, மருத்துவமனையில் ஸ்டென்ட் பொருத்தப்பட்டு உயிர் பிழைத்தார்.

சாமானிய இந்தியருக்கும் உயிர்ப் பாதுகாப்பு தர வேண்டியது மத்திய, மாநில அரசுகளின் கடமைதானே? அதற்கு ஆரம்ப சுகாதார நிலையத்தில் தொடங்கி அனைத்து மட்ட அரசு மருத்துவமனைகளிலும் இசிஜி, எக்கோ, சிடி ஸ்கேன் உள்ளிட்ட மருத்துவக் கருவி வசதிகளை ஏற்படுத்த வேண்டும். தனிப் பயிற்சி பெற்ற துணைப் பணியாளர்ளையும் சிறப்பு மருத்துவ வல்லுநர்களையும் அங்கு நியமிக்க வேண்டும். மாரடைப்பை உறுதிசெய்யும் ஆஞ்சியோகிராம் பரிசோதனைக்கும், மரணத்தைத் தவிர்க்கும் ஸ்டென்ட் மற்றும் ஃபேஸ்மேக்கர் சிகிச்சைகளுக்கும் மாவட்ட அரசு மருத்துவமனைகளில் ‘கேத் லேப்’ வசதி அவசியம் இருக்க வேண்டும்.

அரசு மருத்துவமனைகளில் ஒருவரை உள்நோயா ளியாக அனுமதிப்பதற்குப் பல வழிகாட்டு நெறிகளைப் பின்பற்றுகின்றனர். அச்சுத் தாளில் தகவல்கள் நிரப்பும் இந்தப் பணியால், உயிர் காக்க உதவும் ‘பொன்னான நேரம்’ பல சமயங்களில் வீணாகிறது. இதைத் தவிர்க்க, உயிருக்குப் போராடும் நோயாளிகள் வரும்போது அந்த விதிகளைத் தளர்த்துவதற்குச் சட்டத்தில் இடம் தர வேண்டும்.

மாரடைப்பு ஏற்பட்டவர்களை உடனடியாக கேத் லேப் வசதியுள்ள மருத்துவமனைக்கு அனுப்பும் விழிப்புணர்வைப் பயிற்சிப் பட்டறைகள் மூலம் மக்களுக்கும், மருத்துவப் பணியாளர்களுக்கும் ஏற்படுத்த வேண்டியது இன்றைய அவசரத் தேவை. இதற்குப் பயிற்சி மருத்துவர்கள், தன்னார்வ அமைப்புகள், ஆயுள் காப்பீட்டு முகவர்கள் போன்றவர்களை ஈடுபடுத்தலாம். மாரடைப்பு நோயாளிகளுக்கு மாத்திரை மருந்து மட்டுமல்ல, நேரமும் உயிர் காக்கும் மருந்துதான்!

- கு. கணேசன்,

பொதுநல மருத்துவர்,

தொடர்புக்கு: gganesan95@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x