Published : 27 Sep 2016 10:06 AM
Last Updated : 27 Sep 2016 10:06 AM

என்ன நினைக்கிறது உலகம்?- பாலஸ்தீனர்கள் வந்தேறிகள் அல்ல, நெதன்யாஹு!

மேற்குக் கரையில் உள்ள யூதர்களை இன அழிப்பு செய்ய பாலஸ்தீனர்கள் விரும்புகிறார்கள் என்று இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாஹு கூறியிருக்கிறார். இன ஒழிப்பு பற்றி இஸ்ரேல் பிரதமர் நெதன்யாஹு உண்மையாகவே தெரிந்துகொள்ள விரும்பினால், இஸ்ரேலில் வசிக் கும் பாலஸ்தீனக் குடிமக்களிடம் அதைப் பற்றிக் கேட்க வேண்டும். தற்போது இஸ்ரேல் என்று அழைக்கப்படும் பகுதியில் வசிக்கும் 85% பாலஸ்தீனர்கள், 1948-ல் நடந்த ‘நக்பா’ எனும் நிகழ்வின்போது தங்கள் வசிப்பிடங்களிலிருந்து கட்டாயமாக வெளியேற்றப் பட்டவர்கள் - அவர்கள் யூதர்கள் அல்ல எனும் ஒரே காரணத்துக்காக!

இஸ்ரேலில் வசிக்கும் பாலஸ்தீனர்களை, ஆக்கிரமிக்கப்பட்ட பாலஸ்தீனத்தில் சட்டவிரோதமாகக் குடியேறியிருக்கும் இஸ்ரேலியர் களுடன் ஒப்பிட்டு நெதன்யாஹு சமீபத்தில் பேசியிருப்பது தவறான விஷயம் மட்டுமல்ல பகுத்தறிவு, வரலாறு, சர்வதேசச் சட்டத்தின் கீழான பொறுப்பு ஆகியவற்றை அவர் புறந்தள்ளியிருக்கிறார் என்பதைக் காட்டும் விஷயம் அது. எத்தனை பாரபட்ச நடவடிக்கைகளை இஸ்ரேல் மேற்கொண்டாலும், இதுதான் எங்களின் (பாலஸ்தீனர்களின்) சொந்த நிலம் என்றும் நாங்கள் அங்குதான் வசிப்போம் என்றும் நெதன்யாஹு புரிந்துகொள்ள வேண்டும். முதலில், இஸ்ரேலில் வசிக்கும் பாலஸ்தீனர்கள் ஒன்றும் விசாவோ குடியுரிமையோ கேட்டு இஸ்ரேலை அணுகிய வெளிநாட்டுக் குடியேறிகள் அல்ல. மாறாக, இஸ்ரேல்தான் அவர்களிடம் சென்றது. அவர்கள் பூர்வகுடிகள். ‘ஜியோனிஸ்ட்’ இயக்கம் உருவாக்கப்படுவதற்கு வெகு காலத்துக்கு முன்பிருந்தே அங்கு வசிப்பவர்கள்.

நாங்கள் ஒன்றும் இஸ்ரேலியக் குடியேறிகள் அல்ல நெதன்யாஹு அவர்களே! வெளிநாட்டு நிலத்தைச் சட்டவிரோதமாகக் கைப்பற்றிக்கொள்பவர்களுடன் எங்களை ஒப்பிட்டுப் பேசுவது, யூதர்களைத் தவிர வேறு யாரும் இந்த நிலத்தைச் சொந்தம் கொண்டாடக் கூடாது என்று நீங்கள் நம்புவதைத்தான் காட்டுகிறது. இஸ்ரேலில் வசிக்கும் 15 லட்சத்துக்கும் மேற்பட்ட பாலஸ்தீனர்கள், உங்கள் இனவெறி மனப்பான்மையையும், திட்டமிட்டு நடத்தப்படும் மனித உரிமை மீறல்களையும் தொடர்ந்து எதிர்ப்பார்கள் - இஸ்ரேலில் வசிக்கும் யூதர் அல்லாதோரை மட்டும் குறிவைக்கும் பல சட்டங்களையும்தான்.

இன ஒழிப்பின் அர்த்தத்தையே கேலிக்குள்ளாக்கியிருக்கிறார் நெதன்யாஹு. இன ஒழிப்புக் கொள்கையின் உண்மையான அர்த்தத்தைத் தெரிந்துகொள்ள விரும்பினால், அழிக்கப்பட்ட பாலஸ்தீனக் கிராமங்களான இம்வாஸ், யாலு, பெய்ட் நியூபா பகுதிகளில் அமைக்கப்பட்ட ‘கனடா பார்க்’ நினைவிடத்தை அவர் சென்று பார்க்கலாம். மெனஹெம் பிகின், யித்ஷாக் ஷாமிர் போன்ற இஸ்ரேல் ‘நாயகர்’கள் தொடர்பான ஆவணங்களையும் அவர் பார்க்கலாம்.எத்தனை ட்வீட்டுகள், காணொளிகளை வேண்டுமானாலும் இஸ்ரேலியர்கள் பரிமாறிக்கொள்ளலாம். ஆக்கிரமிக்கப்பட்ட பாலஸ்தீனப் பகுதிகளைக் காலனிமயமாக்குவதற்கு நெதன்யாஹுவுக்குப் பெரும் ஆதரவும் கிடைக்கலாம். என்ன செய்தாலும், சொந்த நிலத்திலேயே அந்நியர்களாக எங்களை உணரச் செய்ய மட்டும் அவரால் முடியவே முடியாது!

- தமிழில் சுருக்கமாக: வெ.சந்திரமோகன்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x