Published : 06 Nov 2014 08:55 AM
Last Updated : 06 Nov 2014 08:55 AM

வீட்டிலிருந்துதான் ஆரம்பிக்க வேண்டும்

பெங்களூருவில் பள்ளிச் சிறுமிகள் அடுத்தடுத்துப் பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கப்பட்டிருக்கிறார்கள். மிகவும் பாதுகாப் பானவையாகக் கருதப்படும், பணக்காரக் குழந்தைகள் படிக்கும் பள்ளிகளில் இப்படி நடந்திருப்பதுதான் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது. எந்த இடமும் எப்படிப்பட்டவர்களும் விதிவிலக்கில்லை என்பது தான் பட்டவர்த்தனமாகத் தெரியும் உண்மை.

பெங்களூருவில் 3 வயதுச் சிறுமியைப் பாலியல்ரீதியாக இளைஞர் ஒருவர் துன்புறுத்திய செய்தியின் சீற்றம் அடங்கும் முன்பே, 6 வயதுச் சிறுமியின்மீது பாலியல் வன்முறை நிகழ்த்தப்பட்டிருக்கிறது. மேல்தட்டைச் சேர்ந்தவர்களுக்கான பள்ளிக்கூடங்கள் என்பதால், இந்தச் சம்பவங்கள் அம்பலமாகியிருக்கின்றன. ஏழைக் குழந்தைகள், நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்த குழந்தைகள் படிக்கும் பள்ளிகளில் நடக்கும் விஷயங்கள் வெளியில் தெரிவது மிகமிகக் குறைவே.

2007-ல் மகளிர், குழந்தைகள் நலத் துறை சார்பில் 12,000 சிறுவர்-சிறுமியரிடம் நாட்டின் சில பகுதிகளில் ரகசிய ஆய்வு நடத்தியதில், 53.22% ஏதேனும் ஒரு வகையில் பாலியல்ரீதியாகத் துன்புறுத்தப்பட்டிருப்பது தெரியவந்தது. வீடுகள், வெளியிடங்களைவிட பள்ளிக்கூடங்கள் பாதுகாப்பானவை. ஒருசில பகுதிகளில் மட்டுமே பள்ளிக்கூடங்களில் இத்தகைய சம்பவங்கள் நடந்துள்ளன என்றும் தெரியவந்தது. ஆனால், அண்மையில் நடந்த சம்பவங்களைப் பார்க்கும் போது எங்கும் பாதுகாப்பில்லை என்பதே அம்பலமாகியிருக்கிறது.

குழந்தைகள் மீது நடத்தும் பாலியல் வன்முறைகள் மிகவும் சிக்கலை ஏற்படுத்திவிடுகின்றன. வயதுவந்தோர் மீது இப்படி வன்முறைகள் நிகழ்த்தப்படும்போது, அவர்களில் பலரும் சம்பவத்தை வெளியில் சொல்வதற்குப் பயந்து மறைத்துவிடுகிறார்கள். குறைந்தபட்சம் தங்கள் குடும்பத்தினரிடமும் நெருங்கியவர்களிடமும் தெரிவிக்கிறார்கள். குழந்தைகள் விஷயத்தில் நடப்பதே வேறு. குழந்தையின் நம்பிக் கைக்கும் அன்புக்கும் பாத்திரமானவர்கள்தான் பெரும்பாலும் குழந்தைகள் மீது பாலியல் அத்துமீறல்களையும் வன்முறைகளையும் நிகழ்த்துகிறார்கள்.

இதுதான் இந்தப் பிரச்சினையை மேலும் சிக்கலுக்குள்ளாக்குகிறது. யாரிடம் போய் அவர்கள் சொல்வார்கள்? தங்களுக்கு என்ன நடந்தது என்பதைச் சொல்லக்கூடத் தெரியாத நிலையிலும், தங்கள் மீது பாலியல் அத்துமீறல் நிகழ்த்தப்படுகிறது என்பதை உணர முடியாத நிலையிலும்தான் பெரும்பாலான குழந்தைகள் இருக்கிறார்கள்.

குடும்பத்தினரும் குற்றவாளியாக இருக்கும் சூழ்நிலையில் இந்தப் பிரச்சினையைத் தீர்ப்பதற்கான வழிமுறைகளை வீட்டிலிருந்தே ஆரம்பிக்க வேண்டும். ஒரு குழந்தையின் தாய், தந்தையர் இருவருமே அந்தக் குழந்தையிடம் சில விஷயங்களை விளக்கலாம். உடலைப் பற்றியும், உடல் உறுப்புகளைப் பற்றியும் எளிமையான விளக்கங்களை அளிக்கலாம். அந்தரங்க உறுப்புகளைத் தொடுவதற்கு யாரையும் அனுமதிக்கக் கூடாது, அப்படி யார் செய்தாலும் உடனடியாக அம்மா, அப்பா, ஆசிரியர் முதலானவர்களிடம் வந்து சொல்ல வேண்டும் என்றெல்லாம் அந்தக் குழந்தையிடம் சொல்லலாம்.

பாலியல் அத்துமீறலுக்கு நம் குழந்தை இரையாகிவிடக் கூடாது என்பதைப் போலவே, நம் வீட்டிலிருந்தும் பாலியல் வன்முறையாளர் ஒருவர் எதிர்காலத்தில் உருவாகிவிடக் கூடாது என்பதும் முக்கியம். பெண்-ஆண் சமத்துவத்தைக் கற்றுக்கொடுத்தல், தன்னுடைய அந்தரங்கத்தைப் போலவே பிறருடைய அந்தரங்கத்தையும் மதிக்கக் கற்றுக்கொடுத்தல், அடிப்படைப் பாலியல் கல்வி போன்றவற்றின் மூலமே விழிப்புணர்வை ஏற்படுத்த முடியும். இதற்கு வலுசேர்ப் பவையாகத்தான் பள்ளிக்கூடங்களும் அரசும் சட்டங்களும் இருக்குமே தவிர, விழிப்புணர்வு என்பது வீட்டிலிருந்துதான் ஆரம்பிக்க வேண்டும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x