Published : 19 Sep 2016 09:19 AM
Last Updated : 19 Sep 2016 09:19 AM

‘நோவா பேழை’ நிஜமாகிறதா?

வார்த்தைகளுக்கும் நிலப் பரப்புகளுக்கும் இடையிலான தொடர்பைப் பற்றிய தனது ‘லேண்ட்மார்க்ஸ்’ புத்தகத்தில் சுவாரஸ்யமான அதேசமயம் அதிர்ச்சியூட்டும் விஷயத்தைப் பற்றிச் சொல்லியிருக்கிறார் பிரிட்டிஷ் எழுத்தாளர் ராபர்ட் மெக்ஃபார்லேன். ஏழு வயதுக் குழந்தைகளுக்கான ஆக்ஸ்ஃபோர்டு ஜூனியர் அகராதியின் சமீபத்திய பதிப்புகளில், நவீன யுகக் குழந்தைகளுக்குப் பொருத்தமில்லாதவை என்று கருதி, இயற்கை தொடர்பான பல வார்த்தைகளை அகராதியின் ஆசிரியர்கள் நீக்கியிருப்பதை அவர் குறிப்பிட்டிருக்கிறார். ‘acorn’ (ஓக் மரக் கொட்டை), ‘dandelion’ (சீமைக் காட்டு முள்ளங்கி), ‘nectar’ (பூந்தேன்), ‘otter’ (நீர்நாய்), உள்ளிட்ட வார்த்தைகள் நீக்கப்பட்டிருக்கின்றன. அவற்றுக்குப் பதிலாக, ‘broadband’ (பிராட்பேண்ட்), ‘MP3 player’(எம்.பி.-3 பிளேயர்), ‘voice-mail’ (வாய்ஸ் மெயில்) போன்ற சொற்கள் அறிமுகப்படுத்தப்பட்டிருக்கின்றன என்கிறார் ராபர்ட் மெக்ஃபார்லேன்.

சிதையும் இயற்கை

2015-ல் வெளியான இந்தத் தகவலை, ராபர்ட் மெக்ஃபார்லேனின் புத்தகத்தில் படித்தபோது, அதில் சுட்டிக்காட்டப்பட்டிருக்கும் விஷயம் தந்த அதிர்ச்சி இன்னும் நீங்கவில்லை. ஆனால், அமேசான் (காடு) தொடர்பான வார்த்தைகளுக்குப் பதிலாக ‘அமேசான்.காம்’ தொடர்பான வார்த்தைகளைப் பயன்படுத்தியிருப்பதற்கு ஆக்ஸ்போர்டு ஆசிரியர்களை யார் குற்றம் சொல்ல முடியும்? நமது இயற்கை உலகம் வேகமாக மறைந்துவருகிறது. ஹவாயில் உள்ள ஹோனோலுலுவில், சமீபத்தில் நடந்த சர்வதேச இயற்கைப் பாதுகாப்புச் சங்கத்தின் கூட்டத்தில், பிரதானத் தலைப்பாக அதுதான் இருந்தது. நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடக்கும் இந்தக் கூட்டத்தில், இந்த முறை 8,000 விஞ்ஞானிகள், இயற்கைப் பாதுகாப்பு நிபுணர்கள், சுற்றுச்சூழல் ஆர்வலர்களுடன் நானும் கலந்துகொண்டேன்.

பனி உருகுதல், உயிரினங்கள் அழிந்துவருவது, வெப்பநிலை, காடுகள், பெருங்கடல்கள் போன்ற விஷயங்களில் நாம் எல்லை மீறுவது பற்றிய விவாதம்தான் இந்தக் கூட்டங்களில் பிரதானமாக இடம்பெற்றது. இந்தப் பாதிப்புகளின் விளைவாக, இயற்கை அன்னையால் ஒருபோதும் மீண்டு வர முடியாது. பவளங்களும் யானைகளும் அழிந்துவிட்ட பின்னர், முப்பரிமாண அச்சு இயந்திரங்கள் மூலம் அவற்றை மீண்டும் உருவாக்க முடியாது.

சுருக்கமாகச் சொன்னால், விவிலியக் கதையில் ஊழிப் பெருவெள்ளத்துக்கு முன்பாக, பூமியில் உள்ள உயிரினங்களில் ஒவ்வொரு ஜோடியாகப் பாதுகாத்த ‘நோவா’வின் தலைமுறையாக நாமும் நமது குழந்தைகளும் வேகமாக மாறிவருகிறோம்.

சர்வதேச இயற்கைப் பாதுகாப்புச் சங்க நிகழ்ச்சிகளுடன், ‘ஈஸ்ட்-வெஸ்ட் சென்டர்’ எனும் அமைப்பு ஹோனோலுலுவில் நடத்திய கருத்தரங்கில் புகழ்பெற்ற கடல் ஆய்வு நிபுணர் சில்வியா இயர்லே இதை அழுத்தமாக முன்வைத்தார். தனது வாழ்நாளில், பூமியின் வரலாற்றில் கண்டுபிடிப்பின் மகத்தான யுகத்துக்கும், அழிவின் மாபெரும் யுகத்துக்கும் ஒரு சாட்சியாகத் தான் உணர்வதாக இயர்லே சொன்னார். “நாம் இப்போது முக்கியமான கட்டத்தில் இருக்கிறோம். நாம் இப்போது செய்யப்போகும் அல்லது செய்யத் தவறும் விஷயங்கள்தான், நமது எதிர்காலத்தை மட்டுமல்ல, பூமியின் அனைத்து உயிர்களின் எதிர்காலத்தையும் நிர்ணயிக்கும்” என்கிறார் அவர்.

அழியும் பேருயிர்

குழந்தைகளின் அகராதிகளிலிருந்து இயற்கை தொடர்பான வார்த்தைகள் நீக்கப்படுவதற்கு ஒரு காரணம் உண்டு. “ஆப்பிரிக்க யானைகளின் எண்ணிக்கை படுவேகமாகக் குறைந்துவருகிறது” என்று ‘தி டைம்ஸ்’ இதழ் சமீபத்தில் வெளியிட்ட ஒரு ஆய்வு தெரிவிக்கிறது. 2007-ல் இருந்ததை விட, 2014-ல் அவற்றின் எண்ணிக்கை 30% குறைந்திருக்கிறது. “மனிதர்கள் உலகம் முழுவதும் பரவத் தொடங்குவதற்கு முன்பு இருந்ததைவிட, உயிரினங்களின் அழிவு விகிதம் இன்றைக்கு 1,000 மடங்கு வேகமாகியிருக்கிறது” என்று இந்தக் கூட்டத்தில் பேசிய பல்லுயிர் நிபுணர் இ.ஓ.வில்ஸன் விளக்கினார்.

1880-லிருந்து, அதாவது கடந்த 1,639 மாதங்களாக உலகின் நிலப்பரப்பு மற்றும் கடல் பரப்பின் சராசரி வெப்ப நிலையை நாம் கவனித்துவருகிறோம் என்று ‘டிஸ்கவர்’ இதழ் குறிப்பிட்டிருக்கிறது. புவிவெப்பமயமாதலின் விளைவாக, கடந்த 1,639 மாதங்களில், 2016-ம் ஆண்டின் ஜூலை மாதம்தான் மிகவும் வெப்பமான மாதம் என்று ‘நேஷனல் ஓஷியானிக் அண்ட் அட்மாஸ்பியரிக் அட்மினிஸ்ட்ரேஷன்’ அமைப்பு தெரிவிக்கிறது.

அதனால்தான், சர்வதேச இயற்கைப் பாது காப்புச் சங்கத்தின் நல்லெண்ணத் தூதராக இருக்கும் நடிகை அலிஸன் சுடோல், நிகழ்ச்சியைத் தொடங்கி வைக்கும்போது சொன்னார்: “கடல்களும் காடுகளும் பூமியின் நுரையீரல்கள். நாம் அவற்றை அழிக்கிறோம். விஷயம் கைமீறுவதற்குள் யாரேனும் ஏதாவது செய்வார்கள் என்று நாம் ஆழமாக, தீவிரமாக நம்புகிறோம். அப்படி நாம் நம்பியிருப்பது உங்களைத்தான்!”

பாதி பூமி

நம்மிடம் அப்படி ஒரு திட்டம் இருக்கிறதா? வில்ஸனிடம் பெரிய, துணிச்சலான திட்டம் இருக்கிறது. ‘ஹாஃப் எர்த்’ (பாதி பூமி). அவரது சமீபத்திய புத்தகத்தின் தலைப்பு அதுதான். பூமியின் பரப்பில் - நிலப்பரப்புகள் மற்றும் கடல்களில் பாதியைப் பாதுகாப்பட்ட பகுதிகளாக மாற்றுவதுதான் அவரது திட்டம்.

இன்றைய தேதியில், பூமியின் நிலப்பகுதிகளில் கிட்டத்தட்ட 15%மும், கடல் எல்லைகளில் 10%மும் தேசியப் பூங்காக்களையும், பாதுகாக்கப்பட்ட பகுதிகளையும் கொண்டிருக்கின்றன என்கிறது சர்வதேச இயற்கைப் பாதுகாப்புச் சங்கம். பூமியின் பரப்பில் பாதியைப் பாதுகாப்பதன் மூலம், 85% உயிரினங்களைப் பாதுகாக்கலாம் என்றும், அதன் மூலம் மனிதர்கள் உட்பட பூமியின் உயிர்களைப் பாதுகாப்பான பகுதியில் வைத்திருக்கலாம் என்றும் வில்ஸன் சொல்கிறார்.

அப்பாவித்தனம் என்கிறீர்களா? அப்படி யொன்றும் இல்லை. ஆரோக்கியமான இயற்கை அமைப்பு இல்லாமல் மனிதர்களால் உயிர்வாழ முடியும் என்று நம்பியதுதான் அப்பாவித்தனம். அப்பாவித்தனம் ஒரு புதிய யதார்த்தம். இல்லையென்றால், மனித இனம் இன்னுமொரு மோசமான உயிரியல் பரிசோதனையாகிவிடும்!

© ‘தி நியூயார்க் டைம்ஸ்’ தமிழில்: வெ.சந்திரமோகன்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x