Last Updated : 27 Sep, 2016 10:03 AM

 

Published : 27 Sep 2016 10:03 AM
Last Updated : 27 Sep 2016 10:03 AM

மெட்ரோ ரயிலும் சென்னையும்

சென்னை மெட்ரோ ரயில் நிலையங்களுக்கு அருகிலுள்ள மின்சார ரயில் நிலையங்களுக்கும், பறக்கும் ரயில் நிலையங்களுக்கும், புதிதாக அமைக்கப்படவிருக்கும் மோனோ ரயில் நிலையங்களுக்கும் பயணிகள் சிரமமின்றிச் செல்ல வகை செய்யப்பட வேண்டும். பிற பொதுப் போக்குவரத்துச் சேவைகளோடு இணைக்கப்படும்போது மெட்ரோ ரயிலின் பயன்பாடு மிகும்!

மெட்ரோ ரயில் குறித்த எதிர்பார்ப்பு அதிகமாகிவருகிறது. சின்ன மலையிலிருந்து விமான நிலையம் வரையிலான சேவையை கடந்த வாரம் முதல்வர் தொடங்கிவைத்திருக்கிறார். வட சென்னைக்கு மெட்ரோ ரயிலை நீட்டிக்கும் பணிகளைக் கடந்த ஜூலை மாதம் தொடங்கிவைத்தார். பூந்தமல்லி நெடுஞ்சாலைக்குக் கீழ் அமைக்கப்படும் சுரங்கப் பணி இறுதிக் கட்டத்தில் இருக்கிறது.

இந்த எதிர்பார்ப்புகளுக்கிடையில் மெட்ரோ ரயில் பணிகள் கட்டுமானக் காலத்தில் மக்களை அவதிக்குள்ளாக்குகிறது என்றும் பொருட்செலவு அதிகமென்றும், கால தாமதமாகிறது என்றும் விமர்சனங்கள் எழுகின்றன. மறுபுறம், உலகின் பல முன்னணி நகரங்களில் மக்கள் வாழ்வின் ஓர் அங்கமாகவே ஆகிவிட்ட மெட்ரோ ரயில், இந்திய நகரங்களுக்கு வருவதில் ஏன் தாமதமாகிறது என்கிற கேள்வியும் முன்வைக்கப்படுகிறது.

இந்தியாவில் மெட்ரோ ரயில்

இந்தியாவில் முதல் மெட்ரோ ரயிலின் கட்டுமானம் 1972-லேயே தொடங்கிவிட்டது. உலகின் தலைசிறந்த மெட்ரோ ரயில் சேவையை வழங்கிவரும் நகரங்களில் ஒன்றான ஹாங்காங் மெட்ரோ ரயிலின் கட்டுமானம் 1975-ல்தான் தொடங்கியது. அதற்கு முன்பாகவே பிரதமர் இந்திரா காந்தியால் அடிக்கல் நாட்டப்பட்டது கொல்கத்தா மெட்ரோ ரயில் சேவை. வங்கத்தைச் சேர்ந்த ரயில்வே அமைச்சர் கனி கான் சௌத்ரிக்கு இதில் விசேஷ அக்கறை இருந்தது. என்றாலும் திட்டம் முடங்கியது.

இப்போதெல்லாம் சாலைக்கும் கட்டிடங்களுக்கும் பாதிப்பு இல்லாமல், நிலத்துக்கு 30 அடியும் அதற்குக் கீழும் சுரங்கம் தோண்டுகிற நவீன இயந்திரங்கள் புழக்கத்தில் உள்ளன. சுரங்க ரயில் நிலையங்களை அமைப்பதற்குத்தான் சாலையை மறித்து மண்ணை வெட்ட வேண்டும். அப்போது ரயில் நிலையங்களைப் போலவே சுரங்கம் அமைப்பதற்கும் சாலை நெடுகிலும் தோண்ட வேண்டும். குடிநீர், மழைநீர், கழிவுநீர்க் குழாய்களையும், மின்சாரத் தொலைத் தொடர்புக் கேபிள்களையும் இடம் மாற்ற வேண்டும்.

இதற்கு அரசுத் துறைகளிடையே இணக்கமான உறவு வேண்டும். மேலும், நிலம் கையகப்படுத்துவது தொடர்பாகப் பல்வேறு வழக்குகளும், நிதிப் பற்றாக்குறையும் சேர்ந்துகொண்டன. திட்டம் தொடங்கப்பட்டு 12 ஆண்டுகளுக்குப் பிறகு 1984-ல், 3-1/2 கி.மீ. ரயில் தடம்தான் கட்டி முடிக்கப்பட்டது. மீதமுள்ள தடங்கள் அதே வேகத்தில் பிற்பாடு நடந்தேறின. இந்த கொல்கத்தா உதாரணம் பிற இந்திய நகரங்களை மெட்ரோ ரயிலை அணுகவிடாமல் செய்தன.

இந்தச் சூழலைப் புரட்டிப்போட்டது டெல்லி மெட்ரோ ரயில். 1998-ல் கட்டுமானம் தொடங்கியது. நவீனத் தொழில்நுட்பத்தின் உதவியுடன் முதல் தடம் 2002-ல் யமுனை நதிக்கு மேலாக 25 கி.மீ. நீளத்தில் பயன்பாட்டுக்கு வந்தது. பிறகு, டெல்லி மெட்ரோ ரயில் நிற்கவேயில்லை. இன்று 213 கி.மீ. நீளமும் 160 நிலையங்களுமாக இயங்கிவருகிறது. டெல்லியின் வெற்றியைத் தொடர்ந்து மும்பை, கொல்கத்தா, சென்னை, பெங்களூரு, ஹைதராபாத் எனப் பல்வேறு நகரங்களுக்கும் மெட்ரோ ரயில் சேவை விரிந்துவருகிறது.

சென்னை மெட்ரோ ரயில்

சென்னை மெட்ரோ ரயிலின் முதல்கட்டம் 45 கி.மீ. நீளத்தில் இரண்டு வழித்தடங்களில் கட்டப்படுகிறது. முதல் வழித்தடம் வண்ணாரப்பேட்டையிலிருந்து மண்ணடி, பாரிமுனை, சென்ட்ரல், அண்ணாசாலை வழியாக விமான நிலையத்தை அடையும். இரண்டாவது வழித்தடம், சென்ட்ரலில் தொடங்கி பூந்தமல்லி நெடுஞ்சாலை, நூறடி சாலை வழியாகப் பரங்கிமலையை அடையும். இதில் இரண்டாவது வழித்தடத்தில் கோயம்பேட்டிலிருந்து ஆலந்தூர் வரையிலான மேம்பாலப் பாதை ஜூன் 2015-லிருந்து பயன்பாட்டில் இருந்துவருகிறது. முதல் வழித்தடத்தில் சின்னமலையிலிருந்து விமான நிலையம் வரையிலான மேம்பாலப் பாதையும் இப்போது சேவையைத் தொடங்கிவிட்டது.

இரண்டு வழித்தடங்களிலும் சுரங்க ரயில் பாதையில் சுணக்கமிருக்கிறது. இதற்குப் பல காரணங்கள். சென்னை நகரின் வீதிகள் குறுகலானவை. இதில் ரயில் நிலையங்கள் அமைக்க போக்குவரத்தை மடைமாற்றுவதும், குடிநீர், மழைநீர், கழிவுநீர்க் குழாய்களையும், கேபிள்களையும் இடம்மாற்றுவதும் சவாலானது. மேலும் சென்னையின் நிலத்தடி நீர், டெல்லியைப் போலல்லாமல், கிட்டத்தட்ட நிலமட்டத்துக்குக் கீழேயே இருக்கிறது.

சென்னையின் நிலவியலும் ஒரு காரணம். மாறுபட்ட பண்புடைய நிலவியலை அடுத்தடுத்து எதிர்கொள்ள வேண்டும். இது சுரங்கம் தோண்டுவதற்குச் சிரமமானது. இந்தச் சவால்களை மீறிச் சுரங்க ரயில் பணிகள் முன்னெடுத்துச் செல்லப்படுகின்றன. அடுத்து, மாதவரம் - சிறுசேரி, நெற்குன்றம் - கலங்கரை விளக்கம், மாதவரம் - பெரும்பாக்கம் எனத் திட்டங்கள் தொடர்கின்றன.

போக்குவரத்து ஒருங்கிணைப்பு

சென்னையின் போக்குவரத்து நெரிசலை மெட்ரோ ரயிலால் மட்டும் சமாளித்துவிட முடியாது. ஆனால், குறைக்க முடியும். 90% மக்கள் பொதுப் போக்குவரத்தைப் பயன்படுத்துகிற நகரம் ஹாங்காங். அங்கு போக்குவரத்தின் ஜீவநாடி 218 கி.மீ. நீளமுள்ள மெட்ரோ ரயில் தடங்கள்தாம். இதன் வெற்றிக்குப் பல காரணங்கள். முக்கியமான காரணம், மெட்ரோ ரயில் நிலையங்களை ஒட்டி அமைக்கப்பட்டிருக்கும் பேருந்து நிலையங்கள். இங்கிருந்து அடுக்கு மாடி பேருந்துகளும் 16 பேர் பயணிக்கக்கூடிய சிறு பேருந்துகளும் வாடகை கார்களும் கிடைக்கும்.

சென்னையிலும் வருங்காலங்களில் மெட்ரோ ரயில் நிலையங்களை ஒட்டி பேருந்து நிறுத்தங்களும், ஆட்டோ, ஷேர் ஆட்டோ, வாடகை கார் நிறுத்தங்களும் அமைக்கப்பட வேண்டும். அருகிலுள்ள மின்சார ரயில் நிலையங்களுக்கும், பறக்கும் ரயில் நிலையங்களுக்கும், புதிதாக அமைக்கப்படவிருக்கும் மோனோ ரயில் நிலையங்களுக்கும் பயணிகள் சிரமமின்றிச் செல்ல வகை செய்யப்பட வேண்டும். பிற பொதுப் போக்குவரத்துச் சேவைகளோடு இணைக்கப்படும்போது மெட்ரோ ரயிலின் பயன்பாடு மிகும்.

மெட்ரோ ரயிலை இயக்கக் குறைவான எரிபொருளும் குறைவான மின்சாரமும் போதும். சுற்றுச் சூழலுக்கு உகந்தது. தூய்மையானது. குறிப்பிட்ட காலத்தில் வரும். துரிதமாகச் செல்லும். பயண நேரம் குறையும். சாலையில் வாகன நெரிசலும் குறையும்!

- மு.இராமனாதன், ஹாங்காங்கின் பதிவுபெற்ற பொறியாளர்.
தொடர்புக்கு:mu.ramanathan@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x