Published : 05 Sep 2016 08:46 AM
Last Updated : 05 Sep 2016 08:46 AM

இலங்கை விஷ ஊசி விவகாரத்தை அப்படியே மறந்துவிடல் ஆகாது!

இலங்கையின் புனர்வாழ்வு முகாம்களில் அடைத்துவைக்கப்பட்டிருந்த முன்னாள் போராளிகளில் பலர், விடுதலைக்குப் பின் வெவ்வேறு நோய்த் தாக்குதல்களுக்கு ஆளாகி மர்மமான முறையில் அடுத்தடுத்து உயிரிழந்துவருவது தொடர்பான விவகாரத்தில் தமிழகக் கட்சிகள் கவனம் செலுத்த வேண்டும்.

2009 போருக்குப் பிந்தைய காலகட்டத்தில் முகாம்களிலிருந்து விடுவிக்கப்பட்ட பல போராளிகள் பார்வைக் குறைபாடு, உடல் நடுக்கம், புற்றுநோய் என்று பல்வேறு உடல்நலக் கோளாறுகளால் பாதிக்கப்பட்டிருப்பதாக ஒரு பேச்சு எழுந்தது. விடுதலையான போராளிகள் மர்மமான முறையில் அடுத்தடுத்து மரணம் அடைவது ஏனையோர் மத்தியில் அச்சத்தையும் சந்தேகத்தையும் கிளப்ப இந்த விவகாரம் பொதுவெளிக்கு வந்தது.

இறுதிப் போரின்போது பிடிபட்ட / சரணடைந்த போராளிகள் முகாம்களில் அடைக்கப்பட்டிருந்தபோது, தடுப்பூசி என்ற பெயரிலும் நோய்க்கான மருந்து என்ற பெயரிலும் அவர்களுக்கு ஊசி போடப்பட்டதாகவும், அது மெல்லக் கொல்லும் விஷ ஊசியாக இருந்திருக்கலாம் என்றும் தெரிவித்தன முதல்கட்டச் செய்திகள். முன்னதாக, தங்களுக்கு ஊசி வேண்டாம் என்று அவர்களில் சிலர் மறுப்புத் தெரிவித்தபோது, அதற்கு ராணுவத்தினர் தரப்பில் கடுமையாக எதிர்வினையாற்றப்பட்டதையும் இந்தச் செய்திகள் சுட்டிக்காட்டின.

இதேபோல, தங்களுக்கு வழங்கப்பட்ட உணவிலும் மெல்லக் கொல்லும் நஞ்சு கலக்கப்பட்டிருக்கலாம் என்கிற சந்தேகமும் முன்னாள் போராளிகள் மத்தியில் இருப்பதாகவும் செய்திகள் வெளியாயின.

தொடர்ந்து, சுமார் 11 ஆயிரம் வீரர்களுக்கு விஷ ஊசி செலுத்தப்பட்டிருக்கலாம் எனவும் அவர்களில் 104 பேர் புற்றுநோய் உள்ளிட்ட பல்வேறு வகையான நோய்களால் உயிரிழந்துள்ளனர் எனவும் மேலும் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட முன்னாள் போராளிகளின் உடல்நிலை மோசமாக உள்ளது எனவும் செய்திகள் வெளியானபோது, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இந்த விவகாரத்தைக் கையில் எடுத்தது.

இலங்கை நாடாளுமன்றத்தில் தீவிரமான குரலில் இந்த விவகாரத்தைக் கொண்டுவந்தார்கள் தமிழ் உறுப்பினர்கள். ராணுவத்தினர் மீதான எந்தக் குற்றச்சாட்டையும் உடனடியாக மறுத்துப் பழகிய இலங்கை அரசும் ராணுவமும் இதை உடனடியாக மறுத்தன. “இலங்கையில் கூட்டுப் பயிற்சிக்காக முகாமிட்டிருக்கும் அமெரிக்க விமானப் படை மருத்துவர்கள் மூலம் பாதிக்கப்பட்ட போராளிகளுக்கு உடல் பரிசோதனை நடத்தலாம்” என்ற கோரிக்கையைப் புறந்தள்ளிய அரசு, அழுத்தங்கள் அதிகரிக்கவே “வேண்டும் என்றால், பாதிக்கப்பட்டதாகச் சொல்லப்படுபவர்களுக்கு உள்நாட்டிலேயே பரிசோதனை செய்து பார்க்கலாம்” என்றது.

இலங்கை வடக்கு மாகாண அரசு இதைத் தொடர்ந்து, பாதிக்கப்பட்ட போராளிகள் பற்றிய விவரங்களைத் திரட்டும் நடவடிக்கைகளில் இறங்கியிருக்கிறது. கூடவே, இது தொடர்பாக விசாரிக்க ஒரு குழுவையும் அமைத்திருக்கிறது. போர்க் குற்றங்கள் தொடர்பான குற்றச்சாட்டுகள் எழும்போதெல்லாம், பிரச்சினைகளை எப்படியாவது தவிர்க்கும் மனநிலையுடன் செயல்படும் இலங்கை அரசின் அணுகுமுறை கடுமையான கண்டனத்துக்குரியது.

தமிழ் மக்களுக்கு இழைக்கப்படும் அநீதிகள் அடிப்படையில், அதன் சொந்தக் குடிமக்களில் ஒரு பகுதியினருக்கு இழைக்கப்படும் அநீதி என்பதை அது உணர வேண்டும். ஐ.நா. சபையின் பொதுச்செயலர் பான் கி மூன் தன்னுடைய சமீபத்திய பயணத்தில்கூட தமிழ் மக்களுக்கு அந்நாட்டு அரசு நிறைவேற்ற வேண்டிய கடமைகளைக் கோடிட்டுக் காட்டியிருக்கிறார். இந்த விவகாரத்தில் தலையிட வேண்டிய கடமை இந்திய அரசுக்கு உண்டு. தமிழக அரசியல் கட்சிகள்தான் அதற்கான அழுத்தத்தை உருவாக்க வேண்டும்!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x