Last Updated : 16 Sep, 2016 10:27 AM

 

Published : 16 Sep 2016 10:27 AM
Last Updated : 16 Sep 2016 10:27 AM

பெங்களூரு ஏன் எரிகிறது?

காவிரி வெறும் நீர்ப் பிரச்சினை மட்டும் இல்லை; ஒரு சமூகவியல் பிரச்சினையும்கூட

அவர்கள் படையாய்க் கிளம்பினார்கள். உடல் மண்ணுக்கு, உயிர் காவிரிக்கு என்ற கோஷம் இல்லை அது. எமக்கு மிஞ்சித்தான் தான தர்மம் என்கிற கோஷமாக கன்னட அமைப்புகள், விவசாயிகள் எழுப்பிய கோபக் குரலாகத்தான் ஆரம்பித்தது அது. எங்களுக்கே குடிக்க நீர் இல்லை, விவசாயத்துக்கு இல்லை எனும்போது தமிழ்நாட்டுக்கு கர்நாடகம் காவிரி நீரை 15 நாட்களுக்கு (செப். 5-லிருந்து செப்.20 வரை) விநாடிக்கு 15,000 கன அடி நீர் விட வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் எப்படிச் சொன்னது என்கிற அதிர்ச்சியும் கோபமும் கலந்த எதிர்ப்பாகத்தான் முதலில் இருந்தது. காவிரி நதி நீர்ப் பங்கீடு தீர்பாணையத்தின் வாதமே கர்நாடகத்துக்குப் பாதகமானது, தமிழ்நாட்டுக்குப் பட்சமானது என்கிற அவர்களது/ மற்றும் கர்நாடக அரசுகளின் நிலைப்பாட்டில் 40 வருஷங்களுக்கு மேலாக மாறுதல் இல்லை.

நீர் என்பது உணர்வுபூர்வமான விஷயம். வெறுப்பைக் கக்கும் அபாயம் அதனுடன் பிணைந்திருப்பது. ‘தமிழனுக்கு ஒரு சொட்டு நீர் கிடையாது’ என்கிற வட்டாள் நாகராஜின் வாக்கியம் வெறியேற்றுவது. ஆனால், கன்னட அமைப்புகளே திகைக்கும் வகையில் பிரச்சினை சென்ற வாரம் கைமாறி, தீயாய்ப் பரவி, மாநிலத்தை, அதன் கௌரவத்தைப் பொசுக்கிற்று. ஊரடங்குச் சட்டம் போடும் அளவுக்குத் தகவல் தொழில்நுட்பத் தலை நகரமான பெங்களூரு ரணகளமாகிப் பற்றி எரிந்தது. தொலைக்காட்சிப் பதிவுகளைப் பார்க்கும்போது காட்சிகள் காஷ்மீர் பள்ளத் தாக்கில் நடக்கும் கலவரத்தைவிட மோச மானதாக வயிற்றைக் கலக்கிற்று. 40 வாக னங்களுக்கு மேல் தீக்கு இரையாகிப்போனது நம்ப முடியாத அராஜகமாகத் தோன்றிற்று. அவர்களை அடக்க நடந்த போலீஸ் துப்பாக்கிச் சூட்டில் இரண்டு பேர் மரணமடைந்தார்கள். அவர்கள் அப்பாவிகள் என்று செய்தித்தாள் சொல்கிறது.

மீள முடியாத துக்கம்

கர்நாடகத்தில் பிறந்து வளர்ந்த எனக்கு அதிர்ச்சியிலிருந்தும் துக்கத்திலிருந்தும் மீள முடியவில்லை. இப்படிப்பட்ட அராஜகங்களும் குண்டாயிசமும் நான் வளர்ந்த காலத்தில் நடந்ததில்லை. தமிழ்நாட்டுக்கும் கர்நாடகத்துக்கும் இடையே இருக்கும் காவிரிப் பிரச்சினை நூறு ஆண்டுகள் பழசு. மழை பொய்க்காத காலங்களில் கபினியில் கரைபுரண்டு வழிந்தோடும் உபரி நீரை கர்நாடகம் தாராளமாகத் தமிழ்நாட்டுக்கு அனுப்பும். மேட்டூர் அணை நிரம்பும். விவசாயிகள் மனம் குளிர்வார்கள். மழை பொய்த்துப் போனால், திரும்ப முளைக்கும் இரு மாநிலங்களுக்குமான தகராறு. ஆனால், இப்போது நாம் காண நேர்ந்தது வெட்கக்கேடான அராஜகம், அட்டூழியம்.

அதை ஊதிப் பெரிதாக்குவது அரசியல் மட்டுமல்ல, பெங்களூருவின் பொருளாதார வரை படத்தை அலைக்கழிக்கும் சமூகவியல் காரணங்களும்தான். வன்முறை என்பது கடந்த 30 ஆண்டுகளாகத்தான். ஒரு சிறு பொறியைக் காரணம் காட்டி வெடிக்க ஆரம்பிப்பது. தமிழ்நாட்டுப் பேருந்துகளை சுட்டுப் பொசுக்கியவர்களுக்கும் காவிரிப் பிரச்சினைக்கும் சம்பந்தம் இல்லை என்பதுதான் இதில் இருக்கும் நகை முரண். தலைக்குத் தலை அம்பலமாக சட்டத்தைக் கைக்குள் எடுத்து ராட்சச வெறியுடன் அலைந்தவர்கள் எல்லாம் கன்னட இளைஞர்கள். விவசாயம் பொய்த்துப்போன கிராமப் பகுதிகளிலிருந்து வேலை தேடித் தகவல் தொழில்நுட்பத் தலைநகரமான பெங்களூருவுக்கு வந்தவர்கள். ஆட்டோ ஓட்டிகள், பெட்ரோல் பங்கில் வேலை செய்பவர்கள், வேலை கிடைக்காமல் அலைபவர்கள். 50 ஆண்டுகளுக்கு முன் இருந்த பெங்களூரு இல்லை இப்போது. எங்கள் குடும்பம் ஐந்து தலைமுறைகளாக கர்நாடகத்தில் வசிக்கிறது. என்னுடைய தாயும் அவருடன் பிறந்தவர்களும் கன்னடம்தான் படித்தார்கள். என்னுடைய பாட்டி பிசிபேளா ஹுளிஅன்னாவையும் ஒப்பட்டுவையும் செய்து, யுகாதியை, கன்னட வருடப் பிறப்பைக் கொண்டாடுவார். தமிழரும் கன்னடியரும் வெகு இணக்கமாக இருந்த காலம். தமிழர்கள் கன்னட சமூகத்துடன் ஒன்றியிருந்த காலம்.

முகம் மாறிய கன்னடம்

இப்போது இருக்கும் பெங்களூரு தகவல் தொழில்நுடபத் தலைமுறைக்கும் கன்னடி யருக்குமே ஒட்டு உறவு இல்லை. தகவல் தொழில்நுட்பத்தின் அசுர வளர்ச்சி கன்னட முகத்தையே மாற்றிவிட்டது. பூங்காவிலும் மால்களிலும் திரையரங்குகளிலும் கன்னட மொழி காதில் படுவதில்லை. அவர்களுக்கு விளங்காத ஆங்கிலமும் இந்தியும்தான் ஒலிக்கிறது. வறண்ட கிராமங்களிலிருந்து வேலை தேடி பெங்களூரு வந்து வேலை கிடைக்காமல் திண்டாடும் இளைஞர்கள் எல்லா வேலைவாய்ப்புகளையும் வெளி மாநிலத்தவர் அபகரித்துவிட்டதாகக் கருத ஆரம்பித்துவிட்டார்கள். தங்கள் வயதொத்த வாலிபர்கள், யுவதிகள் மாதத்துக்கு ஒரு லட்சம், இரண்டு லட்சம் சம்பளம் வாங்குவதாகக் கேள்விப்படுகிறார்கள். பெங்களூருவின் நிலத்தையெல்லாம் வெளியூர் ஆட்கள் வாங்கி, அடுக்குமாடி கட்டுகிறார்கள். தகவல் தொழில்நுடப இளைஞர்கள் வேலைக்குச் சேர்ந்த ஓர் ஆண்டுக்குள் ஃப்ளாட் வாங்கு கிறார்கள். கப்பல் போல வாகனம் வைத்துக் கொள்கிறார்கள். அவர்களது வருகையால் அடுக்குமாடிகள் பெருகிவிட்டன. நிலம், நீர் வறண்டுவிட்டது. குடிசைப் பகுதிகளில் தண்ணீர்ப் பஞ்சம் இருக்கும்போது, பணம் உள்ளவர்களுக்கு டாங்கரில் நீர் செல்கிறது.

கோபத்தின் வடிகாலா அராஜகம்?

பெங்களூருவின் ஒரு பகுதி அக்னிகுண்ட மாக மாறிவருவதைச் சமூகவியலாளர்கள் கவலையுடன் கவனித்துவருகிறார்கள். கன்னட நடிகர் ராஜ்குமார் இறந்த அன்றும் மறுநாளும் இப்படித்தான் ஒரு வெறியாட்டம் நடந்தது. துக்கம் கோபமாக, வெறியாக உருப்பெற்றது. பன்னாட்டு நிறுவனங்களின் கண்ணாடிகள் நொறுக்கப்பட்டன. தமிழ்நாட்டு வாகனங்கள் சேதப்படுத்தப்பட்டன. நான் அப்போதுதான் சென்னையிலிருந்து அங்கு குடிபெயர்ந்திருந்தேன். தமிழ்நாட்டு பதிவுஎண் உடைய என்னுடைய காரை காரேஜில் மூடி வைக்க வேண்டியிருந்தது.

இந்த வெறியர்களுக்கு எந்த உணர்வு பூர்வமான விஷயமும், அவர்களது உள்ளார்ந்த கோபத்துக்கு வடிகாலாகிவிடுவதுதான் சோகம். இது வெறும் நீர்ப் பிரச்சினை இல்லை. ஒரு சமூகவியல் பிரச்சினை. அதன் தீவிரத்தை உணராமல் கன்னட அமைப்பு களும் அரசுகளும் அரசியல் செய்தால் கர்நாடகத்துக்கு மட்டுமல்ல நாட்டுக்கே ஆபத்து. ஜனநாயகப் பண்புகளுக்கு ஆபத்து!

- வாஸந்தி, மூத்த பத்திரிகையாளர், எழுத்தாளர்,

தொடர்புக்கு: vaasanthi.sundaram@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x