Published : 17 Jan 2017 09:44 AM
Last Updated : 17 Jan 2017 09:44 AM

அவசரச் சட்டங்கள் மூலம் ஆட்சி நடத்தாதீர்கள்!

அரசியல்ரீதியிலான எதிர்ப்புகளைச் சமாளிக்கத் தெரியாமல், அவசரச் சட்டங்கள் மூலம் ஆட்சி நடத்தக் கூடாது என்று உச்ச நீதிமன்றம், உயர் நீதிமன்றங்கள், அரசியல் சட்டப்படியான பதவிகளை வகிக்கும் உயர் நிர்வாகிகள் பல முறை சுட்டிக்காட்டியும்கூட அவசரச் சட்டங்களை இயற்றுவதற்கு அரசுகள் சலிப்பதே இல்லை.

குடியரசுத் தலைவருக்கும் மாநில ஆளுநர்களுக்கும் அரசியல் சட்டத்தின் 123, 213-வது பிரிவுகள் வழங்கும் இந்த அவசரச் சட்டம் இயற்றும் அதிகாரம், மூன்று காரணங்களுக்காக அரசுகளால் பயன்படுத்தப்படுகிறது. ஒரு குறிப்பிட்ட பிரச்சினைக்காக சட்டமன்றம் அல்லது நாடாளுமன்றத்தைச் சந்திக்க ஆளும் தரப்பு தயங்கினால், முதலில் அவசரச் சட்டம் இயற்றிவிடுகிறது. சட்ட மேலவை அல்லது மாநிலங்களவையில் மசோதாவை நிறைவேற்றப் பெரும்பான்மை வலு இல்லை என்றால், மசோதா தோற்றுவிடக்கூடும் என்ற அச்சத்தில் அவசரச் சட்டமாக நிறைவேற்றிவிடுகிறது. அவையை நடத்தவிடாமல் எதிர்க்கட்சிகள் தொடர்ந்து கூச்சலிட்டு அமளியை ஏற்படுத்திக்கொண்டே இருந்தால், ஆளும் தரப்பு அவசரச் சட்டத்தை இயற்றுகிறது.

உச்ச நீதிமன்றத்தின் ஏழு உறுப்பினர்களைக் கொண்ட அமர்வு, அவசரச் சட்டங்கள் தொடர்பாக அளித்துள்ள புதிய தீர்ப்பு, வரம்பின்றி அவசரச் சட்டங்களை இயற்றும் போக்குக்கு அரசியல் சட்டரீதியாக உள்ள வரம்புகளைச் சுட்டிக்காட்டுகிறது.

இந்தத் தீர்ப்பானது, அவசரச் சட்டங்களை நீதிமன்றங்கள் ஆய்வுசெய்வதற்கான வாய்ப்புகளை விரிவுபடுத்தியிருக்கிறது. இப்படி அவசரச் சட்டங்களைக் கொண்டுவர அரசுக்கு உள்நோக்கம் இருக்கிறதா, மசோதா கொண்டுவரப்பட்டது நியாயம்தான் என்று குடியரசுத் தலைவர் அல்லது ஆளுநர் திருப்திப்படும் வகையில் தரவுகள் அரசால் தரப்பட்டிருக்கிறதா என்றெல்லாம் இனி நீதிமன்றங்கள் ஆய்வுசெய்யக் கூடும். அதிகாரத்தைப் பயன்படுத்துவதில் அரசு தார்மிக நெறிகளின்படி செயல்பட வேண்டும், அரசியல் சட்ட உணர்வுகளுக்கு மதிப்பளிக்கப்பட வேண்டும், அரசியல் சட்ட முறைமை காப்பாற்றப்பட வேண்டும் என்று நினைப்பவர்கள் இத்தீர்ப்பை நிச்சயம் வரவேற்பர்.

ஆனால், அவசரச் சட்டம் பிறப்பிக்கப்படுவதற்குக் காரணமே அரசியல் சவுகரியத்துக்காகத்தான், நாடாளுமன்றத்துக்கு அல்லது சட்டமன்றத்துக்குப் பதில் சொல்வதைத் தவிர்ப்பதற்காகக்தான் என்று எப்போதுமே கூறிவிட முடியாது. மிகவும் நெருக்கடியான தருணங்களில், அவசர நிலையைக் கருதி அரசுகள் அவசரச் சட்டம் இயற்றலாம். எதிர்க்கட்சிகளின் கோரிக்கைகளில் எளிதில் நிறைவேற்ற முடிந்தவற்றைக்கூட ஏற்க மறுக்கும் ஆளும் தரப்பின் பிடிவாதமும், நிச்சயமாக ஏற்க மறுப்பார்கள் என்று தெரிந்தும் நிபந்தனைகளை விதிக்கும் எதிர்க்கட்சிகளும் இப்படி அமளிகளுக்கும் முட்டுக்கட்டை நிலைகளுக்கும் காரணங்களாகிவிடுகின்றன. இந்தப் போக்கு காரணமாகவே அவசரச் சட்டங்கள் அதிகரிக்கின்றன.

அதிகாரத்தைப் பயன்படுத்துவதற்கும், தவறாகப் பயன்படுத்துவதற்கும் உள்ள எல்லையை நீதிமன்றங்களால் சுட்டிக்காட்டத்தான் முடியும். சம்பந்தப்பட்டவர்கள்தான் ஜனநாயகத்துக்கு மதிப்பளித்துத் தங்களுடைய செயல்களை மாற்றிக்கொள்ள வேண்டும். முறையாகச் சட்டமியற்றி நிர்வாகம் நடத்துவதில் தங்களுக்குள்ள ஆர்வத்தையும் கடமையையும் ஆளும் தரப்பு - எதிர்க்கட்சிகள் என்று இரண்டுமே வெளிப்படுத்த வேண்டும்!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x