Published : 22 Jun 2016 08:47 AM
Last Updated : 22 Jun 2016 08:47 AM

புராதன இந்தியாவிடமிருந்து ஒரு செய்தி!

மழை நீரைத் திறந்தவெளி நீர்த்தேக்கங்களில் சேமித்து வைப்பது ஜோத்பூர் மரபு



ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள ஜோத்பூர் நகரம்.. மதில் சுவர்களால் சூழப்பட்ட அந்நகரில், குறுகலான ஒரு சாலையின் முட்டுச்சந்து போன்ற இடத்துக்குச் சென்றால், பெரிய கல் கட்டிடம் கண்ணுக்குத் தெரிகிறது.

அடுக்கடுக்காகவும் படிப்படியாகவும் கல் பதித்துக் கலைநயத்துடன் கட்டப்பட்ட அந்தக் கட்டிடத்தில் உள்ள படிகளில் இறங்கிச் சென்றால், மிகப் பெரிய நீச்சல் குளத்துக்கு வந்துவிட்டோமோ என்று பிரமிக்கும் அளவுக்கு அங்கே நீர் இருக்கிறது. ஆனால், நீண்ட நாட்களாக யாருமே வந்து நீரெடுக்காததாலும் சுற்றியுள்ள பகுதிகளைச் சுத்தப்படுத்தாததாலும் பாசி பிடித்த தண்ணீரும் லேசாக துர்வாடையுடன் கூடிய சுற்றுப்புறமும் நாசிகளைத் துளைக்கின்றன. அங்கே சில இளைஞர்கள் நீரில் மூழ்கி கை நிறையப் பாசிகள், குப்பைகள், அழுக்கு மண் ஆகியவற்றைக் கொண்டுவந்து கரையில் போடுவதும் பிறகு மீண்டும் நீரில் மூழ்கு வதுமாக இருக்கிறார்கள். கரையில் அவர்கள் கொண்டுவந்து சேர்க்கும் குப்பைகளும் கழிவு களும் உடனுக்குடன் பிற இளைஞர்களால் அப்புறப் படுத்தப்படுகின்றன.

அந்தக் கட்டுமானங்களில் கல் படிகளும் கல்லால் வேயப்பட்ட விதானங்களும் ஜன்னல் போன்ற சாளரங்களும் அதில் உள்ள கலை வேலைப்பாடுகளும் கண்ணைக் கவர்கின்றன. தொடர்ந்து சில நாட்களாகச் சுத்தம் செய்துவருவதால் தண்ணீர் தூய்மையடைந்திருக்கிறது.

சத்யநாராயண்ஜி-கா-பவாரி

இந்த நீர்நிலைக்கு அடுத்து உள்ள கோயிலின் பெயரால் இதை ‘சத்யநாராயண்ஜி-கா-பவாரி’ என்று அழைக்கின்றனர். இதைப் போல ஜோத்பூரில் நூற்றுக்கணக்கான நீர்நிலைகள் இருக்கின்றன. மழை நீரை வீணாக வீதியில் வழிந்தோடச் செய்யாமல் பாதுகாப்பான, அழகிய, திறந்தவெளி நீர்த்தேக்கங்களில் சேமித்து வைப்பது ஜோத்பூர் மரபு.

இதற்காக நகரின் மேடான பகுதிகளைத் தேர்வுசெய்து, அங்கிருந்து தண்ணீர் வழிந்தோடும் பள்ளமான இடங்களை அடையாளமிட்டு, இந்த நீர்நிலைகளைக் கட்டி வைத்திருக்கிறார்கள். இந்த நீர்நிலைகளில் கால்நடைகள் விழுந்து இறந்துவிடக் கூடாது என்பதற்காகவும், புழுதியும் குப்பைகளும் தண்ணீரை மாசுபடுத்திவிடக் கூடாது என்பதற்காகவும் சுற்றிலும் வேலியடைத்தார்போல கல்சுவரால் கட்டுமானங்களை எழுப்பிப் பாதுகாத்திருக்கிறார்கள்.

தண்ணீர் எடுக்க வருகிறவர்கள் எளிதாக வந்து செல்ல படிக்கட்டுகளை அமைத்திருக்கிறார்கள். தண்ணீர் எடுப்பவர்கள் சிறிது நேரம் இளைப்பாறவும், காலாற நடக்கவும் சக பெண்களுடன் உரையாடவும் இந்த இடம் பொழுதுபோக்குப் பூங்கா போன்றும் உதவுகிறது.

ராஜஸ்தான் முழுக்கப் பாலைவனப் பிரதேசம் என்பதால், தண்ணீரின் அருமை ராஜஸ்தானியர்களுக்கு நன்றாகவே தெரியும். பழைய ஜோத்பூரில் இத்தகைய படிக்கிணறுகள் 200-க்கும் மேற்பட்ட எண்ணிக்கையில் இருந்திருக்கின்றன. கி.பி. ஆறாவது நூற்றாண்டில் இந்தக் கிணறுகள் கட்டப்பட்டுள்ளன. ஜூன் முதல் செப்டம்பர் வரையில் சொற்ப அளவில்தான் மழை பெய்கிறது. மிகச் சிறிதளவு மழை பெய்தாலும் அது வேறெங்கும் சென்று வீணாகாமல் நேரே நீர்தேக்கத்துக்குச் செல்லுமாறு கட்டியிருக்கிறார்கள். இந்த நீர்த்தேக்கங்களை ‘தளாப்’ என்று அழைக்கிறார்கள். அப்படி வரும் நீர் மண் வழியே கசிந்து நிலத்தடிக்கும் போகிறது. இதனால் நிலத்தடி நீர்மட்டமும் வளமாகிறது.

இந்த நீர்த்தேக்கங்கள் நகரைச் சுற்றிப் பெரும் எண்ணிக்கையில் இருப்பதால் ஒன்றில் சேரும் அதிக நீர் தரைமட்டத்தில் ஊறி அடுத்த நீர்நிலைக்கும் சேருகிறது. இதனால் எல்லா நீர்நிலைகளும் வளம் பெறுகிறது. நீர் ஆவியாவது குறையும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.

படிக்கிணற்றின் அழகியல்

பஞ்சாப் மாநிலத்தில் பாயும் சட்லெஜ் ஆற்றிலிருந்து ராஜஸ்தானுக்கு வாய்க்கால் வழியாகத் தண்ணீர் கொண்டுவரும் திட்டத்தை இந்திரா காந்தி நிறைவேற்றினார். இந்தத் திட்டம் அமலுக்கு வந்த 1996 முதல் நிலைமை மாறிவிட்டது. குழாய் வழியாக வீடுகளுக்குத் தண்ணீர் வரத் தொடங்கிய பிறகு, இந்த நீர்த்தேக்கங்களை மக்கள் நாடுவது அருகிவிட்டது. பலர் தங்களுடைய வீட்டுக் குப்பைகளைக் கொட்டும் இடமாகவே இந்த படிக்கிணறு வளாகங்களைப் பயன்படுத்துகின்றனர் என்கிறார் தனஞ்செய சிங். ‘தூர்ஜி-கா-ஜல்ரா’ என்ற படிக்கிணற்றைச் சுத்தப்படுத்துவதில் இவர் ஈடுபட்டிருக்கிறார். இவருடைய குடும்பம் உணவகத் தொழிலில் ஈடுபட்டுவருகிறது.

இப்போது பஞ்சாப் வாய்க்கால் வழியாக வரும் நீர் இரண்டு அல்லது மூன்று நாட்களுக்கு ஒரு முறை கிடைக்கிறது. தண்ணீருக்குத் திண்டாடுகின்றனர். பஞ்சாப் மாநிலம் எதிர்காலத்தில் தருவதற்குத் தண்ணீர் கிடைக்குமா என்ற சந்தேகமும் வலுத்துவருகிறது. எனவே, ஜோத்பூர் நகரவாசிகள் மறந்துபோன தங்களுடைய படிக்கிணறுகளைத் தூய்மைப்படுத்த, நீரைச் சேமிக்க ஒரே சமயத்தில் திரண்டுள்ளனர்.

முதல்படியாகக் கிணற்றைத் தூய்மைப் படுத்துகின்றனர். பெரும்பாலான படிக்கிணறுகள் நவீன நகரமைப்புத் திட்டத்தில் சேராமல் பாழடைந்தும், தூர்ந்தும், கழிவுகள் சேர்ந்தும் சேதமடைந்துள்ளன.

ஜோத்பூரின் புறநகரில் புதிதாக உருவாகிவரும் ஒரு பிரம்மாண்ட குடியிருப்பில் நவீன கட்டிட பாணியில் இதே போன்ற படிக்கிணறைக் கட்டும் முயற்சியில் அனு மிருதுள் என்ற கட்டிடக்கலை நிபுணர் இறங்கியிருக்கிறார். 900 அடி நீளமுள்ள இந்தக் கிணறில் ஏராளமான உத்தரங்களும் தூண்களும் சாளரங்களும் அமைக்கப்படுகின்றன. இந்த நீர்நிலையில் அதிகபட்சம் 175 லட்சம் லிட்டர் தண்ணீரைத் தேக்கி வைத்துப் பிறகு பயன்படுத்த முடியும். வெறும் தண்ணீர் தொட்டியாகக் கட்டினால் பயனில்லை என்பதால் படிக்கிணறாகக் கட்ட முற்பட்டிருப்பதாக மிருதுள் தெரிவிக்கிறார். தங்களுடைய இந்த உமைத் குடியிருப்பில் இருப்பதைப் போல பிரம்மாண்டமாகச் செய்யாவிட்டாலும் எல்லா மாநிலங்களிலும் எல்லா நகரங்களிலும் இதைப் போல நீரைச் சேமிக்கும் நீர்நிலைகளை அனைவரும் கட்டினால் மழை நீர் சேகரிக்கப்படுவதுடன் நிலத்தடி நீர்மட்டத்தையும் வெகுவாக உயர்த்த முடியும் என்கிறார் அவர்.

மழை நீர் அறுவடை

ஜோத்பூர் மட்டுமல்லாமல் மேற்கு ராஜஸ்தானின் மாவட்டங்களும் குடிநீர் பற்றாக்குறையால் மிகவும் அவதிப்படுகின்றன. ஆண்டுதோறும் இங்கு அதிகபட்சம் 200 மி.மீ. மட்டுமே மழைபெய்கிறது. அரசே தண்ணீர் வழங்கும் என்ற எதிர்பார்ப்பால் கடந்த சில ஆண்டு களாக இத்தனை நீர்நிலைகளையும் மக்கள் அலட்சியம் செய்துவந்தார்கள். “இந்தப் பகுதியில் தண்ணீர்தான் பிரச்சினை என்பதால் யார் எதிர்க்கட்சி சார்பில் போட்டியிட் டாலும் தண்ணீர் தருவோம், உங்கள் வீட்டுக்குக் குழாய் இணைப்பு உண்டு என்று சொல்லியே வாக்குகளைக் கவர்கின்றனர்” என்று ‘ஜல் பாகீரதி’அறக்கட்டளைத் தலைவர் காணுப்பிரியா ஹரீஷ் தெரிவிக்கிறார்.

இப்போது மழைநீரைச் சேமிப்பதன் அவசியத்தை ராஜஸ்தான் அரசு வலியுறுத்திவருகிறது. இந்த ஆண்டு ஜனவரி மாதம் ‘ஜல் ஸ்வாலம்பன் யோஜனா’ என்ற திட்டத்தை முதல்வர் வசுந்தரா ராஜே தொடங்கிவைத்தார். இதை அமல் செய்யும் வேகம் போதவில்லை என்றாலும், ராஜஸ்தானிலிருந்து இந்தியா முழுமைக்கும் ஒரு செய்தி போகிறது - புராதன இந்தியாவின் நவீன செய்தி அது!

© ‘தி இந்து’ ஆங்கிலம்

தமிழில்: சாரி

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x