Published : 18 Apr 2014 11:04 AM
Last Updated : 18 Apr 2014 11:04 AM

தலித் மக்களின் குரல் கேட்கிறதா?

நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற்றுவரும் இந்தச் சூழலில், தலித் மக்களின் மேம்பாட்டுக்காக ஆறு நடவடிக்கைகளில் கட்சிகள் கவனம் எடுத்துக்கொள்ள வேண்டும். கல்வி, அதிகாரத் திட்டங்கள், வளங்களை உறுதிப்படுத்துதல், தீண்டாமை ஒழிப்பு, வளர்ச்சித் திட்டங்கள், அடிப்படை வசதிகளை உறுதிப்படுத்துதல் ஆகிய ஆறு நடவடிக்கைகள் உடனடியாக மேற்கொள்ளப்பட வேண்டியவை.

முதலில் கல்வி…

தமிழ்நாட்டில் ஆதிதிராவிடர் சமூகத்துக் குழந்தைகள் ஒவ்வொருவருக்கும் தரமான இலவசக் கல்வியை உறுதிப்படுத்த சிறப்புக் கல்வித் திட்டம் கொண்டுவரப்பட வேண்டும். ஒவ்வொரு ஆதிதிராவிடக் குழந்தைக்கும் மாதம் ரூ. 3000 வீதம் இந்தத் திட்டத்துக்கென்று ஒதுக்கீடு செய்யப்படுதல் அவசியம். ஆதிதிராவிடச் சமூகத்தைச் சேர்ந்த 18 வயதுக்கு உட்பட்டவர்களின் அனைத்து விவரங்களும் சேகரிக்கப்பட்டு, அவர்கள் தொடர்ந்து கல்வி கற்பதற்கான திட்டங்கள் வகுக்கப்பட வேண்டும்.

கொத்தடிமைகளாகவும் குழந்தைத் தொழி லாளர்களாகவும் இருக்கும் ஆதிதிராவிடக் குழந்தைகள் அனைவரும் உடனடியாக மீட்கப்பட்டு, அந்தக் குழந்தைகளுக்கென்று ‘மீட்கப்பட்ட ஆதிதிராவிடக் குழந்தைகளின் கல்வித் திட்டம்’ என்கிற சிறப்புத் திட்டம் கொண்டுவரப்படுதல் அவசியம்.

ஆதிதிராவிட மாணவர்களுக்கான பள்ளிக் கூடங்களும், தங்கும் விடுதிகளும் மிகவும் மோசமான நிலையில் இருக்கின்றன. அவற்றைப் புனரமைக்க வேண்டும். ஆதிதிராவிடர் பள்ளிக்கூடங்களில் பணியாற்றும் ஆசிரியர்களுடைய திறன்கள், கட்டிட வசதி, விளையாட்டு மைதானம், நூலகம், ஆய்வு மையம் உள்ளிட்ட அனைத்தின் தரத்தையும் மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். இவையெல்லாம் நிறைவேற்றப்பட்டால்தான் தரமான கல்வியைத் தரமான சூழலில் அந்த மாணவர்கள் பெறுவார்கள்.

இடஒதுக்கீடு

இடஒதுக்கீடு முறையை அமல்படுத்தியதோடு தன் கடமை முடிந்துவிட்டது என்று அரசு ஒதுங்கிவிட்டது. ஆதிதிராவிட மக்களுக்கான இடஒதுக்கீடுகளைக் கண்காணிப்பதற்குச் சிறப்புக் குழு ஏற்படுத்தி, மாவட்ட ஆட்சியர், காவல் கண்காணிப்பாளர், அரசு அதிகாரிகள், விஞ்ஞானிகள், பேராசிரியர்கள் உள்ளிட்ட அனைத்து நிலைகளிலும் துறைகளிலும் 19% இடஒதுக்கீடு கண்டிப்பாக நிறைவேற்றப்படுவதை உறுதிப்படுத்த வேண்டும்.

அரசுத் துறையில் மட்டுமின்றி தனியார் துறைகளிலும் இடஒதுக்கீடு கொண்டுவருவதற்கு நடவடிக்கை தேவை. ஒப்பந்தங்கள், பங்குகள், விநி யோகம், உற்பத்தி உள்ளிட்ட அனைத்து நிலைகளிலும் ஆதிதிராவிட மக்களுக்கான 19% இடஒதுக்கீடு அமல் படுத்தப்படும்போதுதான் இடஒதுக்கீட்டின் பலன்களை ஆதிதிராவிட சமூகத்தினர் அதிக அளவு அனுபவிக்க முடியும்.

பஞ்சமி நிலங்கள்

தமிழகத்தில் பஞ்சமி நிலங்கள் எவ்வளவு உள்ளன என்பதுகுறித்து விரிவாக ஆய்வு மேற்கொண்டு, அவற்றை வெள்ளை அறிக்கையாக வெளியிட வேண்டும். அந்த நிலங்களை உடனடியாக மீட்பதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இதுமட்டுமல்லாமல் மீட்கப்படும் நிலங்களில் 50% நிலங்கள் ஆதிதிராவிடப் பெண்களுக்கு வழங்கப்பட வேண்டும். விவசாயம், பால் உற்பத்தி உள்ளிட்ட பல்வேறு தொழில் செய்வதற்கு அந்த துறைகளோடு இணைத்து, கூட்டுச் சிறப்புத் திட்டங்கள் கொண்டுவரப்பட வேண்டும்.

தீண்டாமை ஒழிப்புத் திட்டம்

இறப்பில்கூட தீண்டாமை நிலவுவதன் அடையாள மாக அனைத்துக் கிராமங்களிலும் இருக்கக்கூடிய தனித்தனி சுடுகாடுகள் தடை செய்யப்பட்டு, ஒரே சுடுகாடு அமைக்கப்பட வேண்டும். கிராமப் பஞ்சாயத்து களில் ஒதுக்கப்படும் குத்தகை 20% ஆதிதிராவிடச் சமூகத்தினருக்கு ஒதுக்கப்பட வேண்டும். தொகுப்பு வீடுகள் தனியாகக் கட்டப்படாமல் எல்லோரும் வசிக்கக்கூடிய பகுதிகளில் கட்டுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

தீண்டாமை ஒழிப்புத் திட்டம் என்கிற துறை உருவாக்கப்பட்டு, ஒவ்வொரு பஞ்சாயத்துக்கும் வருடத்துக்கு 50 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட வேண்டும். பஞ்சாயத்தில் நடக்கக்கூடிய தீண்டாமைக் கொடுமைகளைக் கண்காணிப்பதற்குப் பஞ்சாயத்துக் குழுவோடு சிறப்புக் குழு ஏற்படுத்தப்பட்டு, அனைவரும் கலந்து பேசுவதற்கான சமூகக் கலந்துரையாடல் திட்டம் கொண்டுவரப்படுதல் அவசியம்.

வன்கொடுமைத் தடுப்பு

ஆதிதிராவிட மக்கள்மீது நிகழ்த்தப்படும் வன் கொடுமைகளை மிக எளிதாகப் புகார் செய்வதற்குச் சிறப்புத் திட்டம் கொண்டுவரப்பட வேண்டும். அதுமட்டு மல்லாமல் ஒவ்வொரு தாலுகாவிலும் வன்கொடுமைத் தடுப்புக் காவல் செல் உருவாக்கப்படுவது அவசியம். காவல் நிலையத்தில் ஆதிதிராவிட மக்கள் கொடுக்கும் புகார்கள் மறுக்கப்பட்டால், தாலுகாவில் அமைக்கப்பட்ட செல் அந்தப் புகார்களை விசாரிப்பது மட்டுமல்லாமல், சம்பந்தப்பட்ட காவல் துறைமீது நடவடிக்கை எடுக்க வழிவகை செய்யப்பட வேண்டும்.

ஆதிதிராவிடப் பெண்கள்மீது நடக்கக்கூடிய வன் கொடுமைச் சம்பவங்களை விசாரணை செய்வதற்கு எஸ்.பி. அந்தஸ்தில் உள்ள பெண் அதிகாரிகள் மாவட்டம்தோறும் நியமிக்கப்பட வேண்டும். சாதிப் படுகொலையால் பாதிக்கப்படுகிற குடும்பத்தினருக்கும், பாலியல் பலாத்காரத்தால் பாதிக்கப்படும் ஆதிதிராவிடப் பெண்களுக்கும் தலா ரூ.25 லட்சம் நிவாரணம் அளிக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தமிழகத்தில் பஞ்சாயத்துத் தலைவர்களாக இருக்கும் ஆதிதிராவிடர்களில் பெரும்பாலானோர் சுதந்திரமாக இயங்க முடியாமல் சாதிய அடக்குமுறையால் ஒடுக்கப்பட்டுவருகின்றனர். இத்தகைய பஞ்சாயத்துத் தலைவர்களுக்குச் சமூகநீதி, நிர்வாகம், வளர்ச்சித் திட்டங்கள்குறித்த பயிற்சியும், அவர்கள் சுதந்திரமாகச் செயல்படுவதற்குச் சிறப்புத் திட்டங்களும் கொண்டு வரப்பட வேண்டும்.

மலம் அள்ளும் தொழில்

மத்திய அரசு கொண்டுவந்திருக்கும் ‘கையால் மலம் அள்ளத் தடை மற்றும் மறுவாழ்வு சட்டம்- 2002' தமிழகத்தில் தீவிரமாக நடைமுறைப்படுத்தப்படாமல் இருக்கிறது. மலம் அள்ளும் தொழிலில் ஈடுபடக்கூடிய அனைத்துத் தொழிலாளர்களும் உடனடியாக மீட்கப்பட்டு, அனைவருக்கும் அரசு வேலையும் நிவாரணத் தொகையும் வழங்கப்பட்டு, மறுவாழ்வுத் திட்டங்கள் ஏற்படுத்தப்பட வேண்டும். இந்தத் தொழில் இயந்திரமயமாக்கப்படுதல் அவசியம்.

இடஒதுக்கீட்டைப் பற்றி தலித் மக்களுக்கான கட்சிகளைப் போன்றே பிற கட்சிகளும் பேசுகின்றன. ஆனால், அந்தக் கட்சிகளில் முக்கியப் பொறுப்புகளில் எத் தனை சதவீதம் ஆதிதிராவிடர்கள் இருக்கிறார்கள் என்று பார்த்தால் அதிர்ச்சியாக இருக்கும். எனவே, அரசியல் அங்கீகாரம் பெற்ற கட்சிகளில் ஆதிதிராவிடர்களுக்கு 20 சதவீத இடஒதுக்கீடு கொண்டுவந்தாக வேண்டும்.

தொழில், வங்கிக் கடன்…

ஆதிதிராவிட இளைஞர்கள் தொழில் தொடங்கு வதற்குப் பயிற்சியும் வங்கிக் கடனும், அந்தத் தொழில்களைத் திறம்படச் செய்வதற்கான திறன்களும் வழங்குவதற்குச் சிறப்புத் திட்டம் கொண்டுவரப்பட வேண்டும். இதற்கென்று சர்வதேச அளவில் பயிற்சி பெற்ற வல்லுநர்கள் இந்தத் திட்டத்தில் இடம் பெற வேண்டும். ஆதிதிராவிட மக்களின் மேம்பாட்டுக்கென்று பிரத்தியேகமாக ஆதிதிராவிடர் நல வங்கி உருவாக்கப்பட வேண்டும்.

தமிழக அரசின் மற்ற துறைகளுக்கு நிதி ஒதுக்குவது போன்றே ஆதிதிராவிட துறைக்கும் நிதி ஒதுக்குகிறது. இந்த நிதி குறைவான நிதியே. பல்வேறு வன்கொடுமைகளால் பாதிக்கப்படுகிற இம்மக்களுக்காக தமிழக பட்ஜெட்டில் குறிப்பிடத் தகுந்த அளவு நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும். அப்போதுதான் அது, சமூக நீதி பட்ஜெட்டாக இருக்கும். இந்த அடிப்படையில் ஆதிதிராவிட மக்களுக்கு ஒதுக்கப்படக்கூடிய நிதியில் மத்திய அரசின் பங்கும் உலக நாடுகளின் கடனும் இடம்பெறுவது முக்கிய அம்சமாகும்.

தமிழகம் முழுவதும் இரண்டு கட்டமாக வெள்ளை அறிக்கை வெளியிடப்பட வேண்டும். ஒன்று, ஆதிதிராவிட மக்களின் சமூகப் பொருளாதார அதிகாரங்கள்குறித்த நிலைகுறித்து. இன்னொன்று, அந்த மக்கள்மீது நடத்தப்படக்கூடிய வன்கொடுமைகள்குறித்து. தேர்தல் செயல்திட்டங்களில் ஆதிதிராவிடர்களின் இந்தப் பிரச்சினைகளையெல்லாம் அனைத்துக் கட்சிகளும் முன்னெடுத்துப் போராட வேண்டிய நேரம் இது. அப்படிச் செய்தால்தான் அமையவிருக்கும் நாடாளுமன்றமாவது சமூக நீதிக்கான மன்றமாக மலரும்.

‘எவிடென்ஸ்’ கதிர், சமூகச் செயல்பாட்டாளர்,

தொடர்புக்கு: vikathi@yahoo.co.in

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x