Last Updated : 16 Feb, 2017 09:45 AM

 

Published : 16 Feb 2017 09:45 AM
Last Updated : 16 Feb 2017 09:45 AM

போட்டியில் முந்தும் அகிலேஷ்

ஆறு மாதங்களுக்கு முன்பெல்லாம், தோல்வியடைந்த தலைவராகவே கருதப்பட்டார். எல்லா விஷயத்திலும் மூக்கை நுழைக்கும் தந்தை, அதிகாரப் பசி கொண்ட சித்தப்பாக்கள் என்று ஒவ்வொரு மூலையிலும் நெருக்கடியை எதிர்கொண்டார். நீண்டகாலமாகப் புகைந்துகொண்டிருந்த குடும்பச் சண்டை கடந்த செப்டம்பரில் உச்சமடைந்தது. ஆனால், துணிச்சலுடனும் உறுதியுடனும் அதை எதிர்கொண்டார் அகிலேஷ். எல்லாவற்றுக்கும் மேலாக, நெருக்கடிகளுக்கு மத்தியில் செல்வாக்கை வளர்த்துக்கொண்டார்.

பிப்ரவரி 3-ல், ஆக்ராவில் சாலைப் பேரணியில், ‘உத்தர் பிரதேஷ் கே லட்கே’ என்று சமாஜ்வாதி கட்சியின் செய்தித் தொடர்பாளர்களால் அழைக்கப்படும் உத்தர பிரதேச மாநில இளைஞர்கள் கலந்துகொண்டபோது, அகிலேஷ் யாதவையும் ராகுல் காந்தியையும் பார்க்க தெருக்களில் திரண்டிருந்த கூட்டம் ஆக்ராவாசிகளை ஆச்சரியப்படுத்தியது. சமாஜ்வாதி கட்சியின் கொடியையும், காங்கிரஸ் கொடியையும் ஏந்தியவாறு இரு கட்சிகளின் தொண்டர்களும் இணைந்து பேரணியில் கலந்துகொண்டனர். சமாஜ்வாதி கட்சியின் பிரச்சாரப் பாடல் ஒலிபெருக்கிகளில் முழங்கியது. ‘நிறைவேற்றப்படும் வேலை சொல்கிறது எல்லாவற்றையும்’ என்று பொருள்படும் அந்தப் பாடல், இளம் முதல்வர் அகிலேஷின் வளர்ச்சி சாதனைகளை விளக்குகிறது. 12 கிலோ மீட்டர் நடந்த அந்தப் பேரணி முடிவடைய மூன்று மணி நேரம் ஆனது.

பேரணியில் முடிவில் மைக்கைப் பிடித்த அகிலேஷ், தானும் ராகுல் காந்தியும் புதிய பார்வையுடன் புதிய பாதையை உருவாக் குகின்ற புதிய தலைமுறையின் பிரதிநிதிகள் என்றார். கணிசமான இளைஞர்களைக் கொண்ட அந்தக் கூட்டத்தைப் பார்த்து, “தொண் டர்களின் உத்வேகத்தைக் கேட்கிறேன்; உணர்கிறேன்” என்றார். “நமது சின்னம் சைக்கிள். சைக்கிள் ஓட்டும்போது சில சமயம் அதன் கைப்பிடியைப் பிடிக்காமலேயே ஓட்டும் உற்சாகம் வரும். இந்த முறை காங்கிரஸ் ‘கை’யின் வலுவான துணையும் நம்முடன் உண்டு” என்று சொன்னார்.

சோதனையும் சாதனையும்

தனிப்பட்ட முறையிலும், அரசியல் ரீதியாக வும் கடந்த ஆறு மாதங்களாகத் தனக்குப் பிரச்சினையாக இருந்த விஷயங்களைக் கடந்துவந்திருக்கும் அகிலேஷ், உத்தர பிரதேசத் தேர்தலை ஒரு ஆளுமைப் போட்டி யாக மாற்றியிருக்கிறார். உத்தர பிரதேச யுத்தக் களத்தில் பாஜக சார்பில் முதல்வர் வேட்பாளர் இல்லை. ஒவ்வொரு கருத்துக் கணிப்பிலும் அகிலேஷ் யாதவை விட பின்தங் கியே இருக்கிறார் பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி. இந்நிலையில், ‘அகிலேஷ் எதிர் பிற கட்சிகள்’ என்று தேர்தல் களத்தை உருவாக்கிக்கொள்ள விரும்புகிறார் அகிலேஷ்.

உண்மையில் இந்தத் தேர்தலில் சமாஜ்வாதி கட்சி தனித்துப் போட்டியிட்டிருக்கும். ஆனால், ஜனவரி மத்தியில் வரை நீடித்த குடும்பச் சண்டை கட்சியைக் கொஞ்சம் பலவீனப்படுத்திவிட்டது. தலித் முஸ்லிம் வாக்காளர்களை ஒருங்கிணைத்துப் புதிய ஆதரவுத் தளத்தை உருவாக்கும் முயற்சியில் மாயாவதி இறங்கியதைத் தொடர்ந்து, சிறுபான்மையினர் வாக்குகள் சிதறுவதற்கான வாய்ப்புகள் உருவாகின. சமாஜ்வாதி கட்சியின் முஸ்லிம் வாக்காளர்களைத் திரட்டுவதற்கு காங்கிரஸுடன் கூட்டணி அமைப்பது அவசியம் என்று அகிலேஷுக்குத் தெளிவாகத் தெரிந்தது. 2015-ல் பிஹாரில் நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் லாலு பிரசாத் யாதவின் ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சியுடனும் காங்கிரஸுடனும் நிதிஷ் குமார் கைகோத்ததுபோல் இந்தக் கூட்டணியை அமைத்துக்கொண்டார் அகிலேஷ். பிஹார் தேர்தலில், நிதிஷ் குமார் கூட்டணிக்குப் பெரும்பான்மை கிடைக்க ராஷ்ட்ரிய ஜனதா தளமும் காங்கிரஸும் உதவின என்றால், மறுபக்கம் கறைபடாத அவரது செல்வாக்கு கைகொடுத்தது. அதேசமயம், பிஹாரின் மெகா கூட்டணி அளவுக்கு சமாஜ்வாதி காங்கிரஸ் கூட்டணியைச் சொல்லிவிட முடியாது. ஏற்கெனவே, பலம் வாய்ந்த மூன்றாவது கட்சியாக பகுஜன் சமாஜ் கட்சி களத்தில் இருக்கிறது. எனினும், இளைஞர்களின் ஆதரவைத் திரட்டியதுடன், ராகுல் காந்தியுடன் இணைந்து பிரச்சாரத்திலும் ஈடுபட்டிருப்பதன் மூலம் பாஜகவுக்குக் கடும் சவாலை ஏற்படுத்தியிருக்கிறார் அகிலேஷ்.

செதுக்கப்பட்ட பிம்பம்

உத்தர பிரதேசத் தேர்தல் களத்தில் பிரதான இடத்தைப் பிடித்திருக்கும் அகிலேஷ், அதிகபட்ச தாக்கம் செலுத்தும் திறன் கொண்ட தலைவராகத் தனது பிம்பத்தைச் செதுக்கிக்கொண்டார். சமாஜ்வாதி கட்சிக் குள் நடந்த குடும்பச் சண்டையில் தன் மீதே கவனம் குவியுமாறு அவர் பார்த்துக் கொண்டார். அவரது பிரச்சார காணொலி ஒன்றின் முதல் பகுதியில், உத்தர பிரதேசத் தலைமைச் செயலகத்தில், அகிலேஷ் கடுமையாக உழைக்கும் காட்சிகள் இடம்பெறு கின்றன. இரண்டாவது பாதியில், தனது மனைவி, மகன்களுடன் சாப்பாடு மேஜையில் உணவருந்திக்கொண்டிருக்கிறார். கடுமை யாக உழைக்கும் முதல்வர் எனும் பிம்பத்தை யும், பொறுப்புள்ள குடும்பத் தலைவர் எனும் பிம்பத்தையும் இணைக்கும் முயற்சி இது.

அதேசமயம், சமாஜ்வாதி கட்சியின் சைக் கிள் சின்னம் அகிலேஷ் யாதவ் தரப்புக்குக் கிடைத்ததைத் தொடர்ந்து, கட்சியின் போஸ் டர்களில் மீண்டும் முலாயம் சிங் இடம்பெறத் தொடங்கினார். ஒரு போஸ்டரின் இடது பாதியை முலாயம் சிங் ஆக்கிரமித்திருக்க, வலது ஓரத்தில் தனது தந்தையை விட சிறிய அளவில், மரியாதையாகக் கைகட்டிக் கொண்டு, பணிவாகக் கீழே பார்த்தவாறு நிற்கிறார் அகிலேஷ். “தந்தைக்கு மரியாதை செய்வதில் அகிலேஷ் கஞ்சத்தனம் காட்டிய தில்லை” என்கிறார் தந்தை, மகன் இருவரிட மும் அருகில் இருந்து பணிபுரிந்த ஒரு மூத்த அதிகாரி. மறுபக்கம், நவீனத் தலைவராக, மாநிலத் தின் வளர்ச்சியில் கவனம் செலுத்துபவராக ‘காம் போல்தா ஹை’ எனும் ஹேஷ்டேக் அவரை முன்னிறுத்துகிறது. அகிலேஷ் சாதி, மதத்தைக் கடந்தவர்; அவரது நிலைப்பாடு யாதவ்கள், முஸ்லிம்களின் ஆதரவை அவருக்குப் பெற்றுத் தரும் என்பது ஒருபக்கம் இருக்க, பிற சமூகத்தினர் குறிப்பாக உயர் சாதியினர் மத்தியில் அவர் மீது வெறுப்பு இல்லை என்பது முக்கியமான இன்னொரு விஷயம். உத்தர பிரதேசத்தில் எங்கு சென்றாலும், அகிலேஷ் பற்றி எதிர்மறையாகப் பேசும் ஆட்களைப் பார்ப்பது கடினம். பாஜக ஆதரவாளர்கள், பகுஜன் சமாஜ் கட்சி ஆதரவாளர்கள்கூட அவருக்கு எதிராகப் பேசுவதில்லை. சோஷலிஸக் கொள்கைகளுக்கு அர்ப்பணிக்கப்பட்ட கட்சியாகக் கருதப்படும் சமாஜ்வாதி கட்சியை மறுஆய்வுக்கு உட்படுத்தியதன் மூலம் அக்கட்சியின் அடிப்படை விழுமியங்களைத் தக்கவைத்துக்கொண்டிருக்கும் அகிலேஷ், கட்சியின் ஆதரவுத் தளத்தையும் விரிவுபடுத்தியிருக்கிறார்.

கனியும் காலம்

உண்மையில், அகிலேஷிடம் ஏற்பட்டி ருக்கும் இந்த மாற்றம் ஒரு அதிசய நிகழ்வல்ல. ஆறு மாதங்களுக்கு முன்பெல்லாம், தோல்வி யடைந்த தலைவராகவே கருதப்பட்டார். எல்லா விஷயத்திலும் மூக்கை நுழைக்கும் தந்தை, அதிகாரப் பசி கொண்ட சித்தப்பாக்கள் என்று ஒவ்வொரு மூலையிலும் நெருக்கடியை எதிர் கொண்டார். நீண்ட காலமாகப் புகைந்து கொண்டிருந்த குடும்பச் சண்டை கடந்த செப்டம்பரில் உச்சமடைந்தது. ஆனால், துணிச் சலுடனும் உறுதியுடனும் அதை எதிர்கொண் டார் அகிலேஷ். எல்லாவற்றுக்கும் மேலாக, நெருக்கடிகளுக்கு மத்தியில் செல்வாக்கை வளர்த்துக்கொண்டார்.

சமாஜ்வாதி கட்சி சின்னமான ‘சைக்கி’ளைத் தக்கவைத்துக்கொள்வதில் வெற்றிபெற்றது உட்பட, கட்சியின் முழுக் கட்டுப்பாட்டைத் தன் வசம் வைத்துக்கொண்ட அகிலேஷ், முக்கியப் பொறுப்புகளில் தனது நம்பிக் கைக்குரியவர்களை அமர்த்திக்கொண்டார். ஊழல் கறைபடிந்த சட்டப்பேரவை உறுப்பினர் களை ஒதுக்கிவைத்தார். இளைஞர்களின் நம்பிக்கைக்கும் லட்சியத்துக்கும் சின்னமாக உருவாகியிருக்கும் அகிலேஷ், கடும் நெருக்கடியின்போதும் புன்னகையுடன் அதை எதிர்கொண்டதன் மூலமும், தனது தந்தைக்கு எதிராக ஒரு வார்த்தை கூட சொல்லாததன் மூலமும் மூத்த தலைமுறையினரையும் கவர்ந்தார். அகிலேஷ் பற்றி முதியவர்கள் மத்தியில் ஒரு பேச்சு உண்டு: “தன் மகன் சொந்தக் காலில் நிற்பதை முலாயம் சிங் ஏன் எதிர்க்கிறார்? அகிலேஷுக்கும் பக்குவம் வந்துவிட்டதல்லவா, கெட்டிக்காரப் பையனாயிற்றே அவர்!”

© ‘தி இந்து’ (ஆங்கிலம்)

தமிழில் சுருக்கமாக: வெ.சந்திரமோகன்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x