Last Updated : 17 Feb, 2017 09:38 AM

 

Published : 17 Feb 2017 09:38 AM
Last Updated : 17 Feb 2017 09:38 AM

நீதியை நிலைநாட்ட நீண்ட நெடிய பயணம்

இடைக்கால மனுக்களை ஏராளமாக தாக்கல் செய்து வழக்கு விசாரணையைத் தொடர முடியாமல் தொடர்ந்து தாமதப்படுத்திக் கொண்டே வந்தனர். உயர் நீதிமன்றத்திலும் உச்ச நீதிமன்றத்திலும் பல மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. சசிகலாவுக்கு ஆங்கிலம் தெரியாது என்பதால் வழக்கின் அனைத்து ஆவணங்களும் தமிழில் மொழிபெயர்க்கப்பட வேண்டும் என்று ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்தக் கோரிக்கை காரணமாகவே வழக்கு விசாரணை சில ஆண்டுகள் தாமதப்பட்டது

இந்தியாவிலேயே மிகவும் பரபரப்பாகப் பேசப்பட்ட, அரசியல் பிரமுகர்கள் தொடர்பான ஊழல் வழக்கு ஒரு வழியாக முடிவுக்கு வந்திருக்கிறது. ‘கர்நாடக அரசு எதிர். செல்வி ஜெ. ஜெயலலிதா மற்றும் மூவர்’ வழக்கில், குற்றஞ்சாட்டப்பட்ட அனைவருமே ஊழல் தடுப்புச் சட்டப்படி குற்றவாளிகள்தான் என்று உச்ச நீதிமன்றம் திட்டவட்டமாக உறுதிப்படுத்தியிருக்கிறது. கர்நாடக அரசின் மேல் முறையீட்டு மனுவை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள் இருவருமே, “கர்நாடக உயர் நீதிமன்ற நீதிபதி குமாரசாமி அளித்த தீர்ப்பு சரியல்ல, விசாரணை நீதிமன்ற நீதிபதி ஜான் மைக்கேல் டி குன்ஹா அளித்த தீர்ப்பே செல்லுபடியாகும்” என்று உறுதிப்படுத்தியுள்ளனர்.

இந்த ஊழல் வழக்கின் முதல் எதிரியான முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா இப்போது உயிருடன் இல்லை என்பதால் தீர்ப்பிலிருந்து அவர் விலக்கப்பட்டிருக்கிறார். முன்னரே விதிக்கப் பட்ட 4 ஆண்டு சிறைத்தண்டனையில் எஞ்சிய காலத்தை வி.கே. சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் சிறையில் கழித்தாக வேண்டும் என்பதே தீர்ப்பு. ஊழல் தடைச் சட்டப்படி 4 ஆண்டுகளுக்குச் சிறைத் தண்டனையை அனுபவிப்பதால், தண்டனைக் காலம் முடிந்த அடுத்த ஆறு ஆண்டுகளுக்கு எந்தத் தேர்தலி லும் வி.கே. சசிகலா போட்டியிட முடியாது.

நீதிபதிகளின் பேனாக்கள் வழங்கிய தீர்ப்பு தமிழகத்தின் அரசியல் களத்தையே புரட்டிப் போட்டுவிட்டது. சட்டத்தின் நீண்ட கரம், குற்றவாளிகளை இறுதியாக வளைத்துவிட்டது, ஆனால் அதற்காக ஏராளமான தொலைவு சுற்றுவழிகளில் பயணப்பட நேர்ந்துவிட்டது.

வழக்கின் தோற்றம்

இந்த வழக்கில் விசாரணை நீதிமன்றம் விசாரித்து முடித்துத் தீர்ப்பளிக்க 18 ஆண்டுகள் பிடித்திருக்கின்றன. திறமை வாய்ந்த வழக்கறிஞர்கள், எதிரிகளின் சார்பில் ஆஜராகி நீதித்துறையின் வரம்புக்குள்பட்ட சட்ட ஆட்சேபங்களைத் தொடர்ந்து எழுப்பியும், நடைமுறை சார்ந்தும், வழக்கு நுட்பம் சார்ந்தும் இடைக்கால மனுக்களை ஏராளமாக தாக்கல் செய்து வழக்கு விசாரணையைத் தொடர முடியாமல் தொடர்ந்து தாமதப்படுத்திக் கொண்டே வந்தனர். உயர் நீதிமன்றத்திலும் உச்ச நீதிமன்றத்திலும் பல மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. சில கோரிக்கைகள் மிகவும் புதுமையானவை. எதிரிகளில் ஒருவரான சசிகலாவுக்கு ஆங்கிலம் தெரியாது என்பதால் வழக்கின் அனைத்து ஆவணங்களும் தமிழில் மொழிபெயர்க்கப்பட வேண்டும் என்று ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்தக் கோரிக்கை காரணமாகவே வழக்கு விசாரணை சில ஆண்டுகள் தாமதப்பட்டது. இந்த வழக்கை விரைவு நீதிமன்றத்தின் வசம் ஒப்படைத்து வேகமாக விசாரித்துத் தீர்ப்பளிக்க நீதித்துறையும் தவறிவிட்டது.

இந்த வழக்கில் முதல் எதிரியாகக் குறிப்பிடப்பட்டவர் பேரவைத் தேர்தலில் பெரும்பான்மை வலுவுடன் முதலமைச்சராகப் பதவிக்கு வந்துவிட்டதால், இந்த விசாரணை நேர்மையாகவும் சுதந்திரமாகவும் நடைபெற பக்கத்தில் உள்ள கர்நாடக மாநிலத்துக்கு மாற்றப்பட வேண்டும் என்று கோரப்பட்டது. இந்த வழக்கு விசாரணை அதற்குப் பிறகு வேகமெடுக்கவும், சாட்சிகள் முறையாக விசாரிக்கப்படவும், ஆவணங்கள் சரிபார்க்கப் படவும் நீதிபதி ஜான் மைக்கேல் டி குன்ஹா, அரசு தலைமை வழக்கறிஞர் பி.வி. ஆச்சார்யா ஆகியோரின் நியமனங்கள் பேருதவி புரிந்தன.

குன்ஹாவின் தீர்ப்புக்குப் பிறகு, கர்நாடக உயர் நீதிமன்றத்தில் ஜெயலலிதா தரப்பினர் மேல் முறையீட்டு மனு தாக்கல் செய்தனர். எதிரிகளுக்கு ஜாமீன் விடுதலை மறுக்கப்பட்டது. பிறகு அனைவரும் உச்ச நீதிமன்றத்தை அணுகினர். உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி எச்.எல்.தத்து, ஜாமீன் வழங்கினார். கூடவே, இந்த வழக்கை கர்நாடக உயர் நீதிமன்றம் மீண்டும் விசாரித்து மூன்று மாதங்களுக்குள் தீர்ப்பளிக்க வேண்டும் என்ற வினோதமான ஆணையையும் பிறப்பித்தார். எதிரிகள் கேட்காமலேயே, எந்தக் காரணத்தையும் குறிப்பிடாமல் இப்படி அவர் உத்தரவிட்டார்.

குற்ற வழக்கில் சிக்கும் எந்த எதிரியும் தன்னுடைய வழக்கு விரைவாக விசாரிக்கப் படக்கூடாது என்றே விரும்புவார்; தண்டனைக்கு உள்ளாகும் எந்தத் தலைவரும் தன்னுடைய மேல் முறையீட்டு மனு விரைவாக விசாரிக்கப்பட வேண்டும் என்றே விரும்புவார். இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ளவர்களுக்கு இந்த இரண்டுப் பயன்களும் கிடைத்துள்ளன. மூன்று மாதங்களுக்குள் வழக்கை விரைந்து விசாரித்து முடிக்க வேண்டும் என்றால் உயர் நீதிமன்றத்துக்கு இதைப் போன்ற பெரிய வழக்கில் நேரமே போதாது.

பிறகு கிடைத்தது விடுதலை

மேல் முறையீட்டு மனுவை விசாரித்த கர்நாடக உயர் நீதிமன்ற நீதிபதி சி.ஆர்.குமாரசாமி 4 பேரையும் குற்றமற்றவர்கள் என்று கூறி 2015 மே மாதம் விடுதலை செய்துவிட்டார். அவருடைய தீர்ப்பை மேலோட்டமாகப் படித்தாலே தவறுகள் தெரியும் அளவுக்கு இருந்தன. குவிக்கப்பட்ட சொத்துகளின் மதிப்பை அவர் குறைத்தார். கடனாக வாங்கிய தொகையை வருமானமாகச் சேர்த்து வருவாயை அதிகமாக்கினார். போதாக்குறைக்கு, 1976-ல் உச்ச நீதிமன்றம், ‘கிருஷ்ணானந்த் அக்னிஹோத்ரி எதிர். மத்தியப் பிரதேசம்’ வழக்கில் அளிக்கப்பட்ட தீர்ப்பை முன்னுதாரணமாகக் கொண்டார்.

அந்த வழக்கில் வருவாய்க்குப் பொருந்தாத வருவாய் வெறும் ரூ.11,000 மட்டுமே. அதுவும் மொத்த வருவாயில் 10%-க்கும் குறைவே. இதைக் கவனத்தில் கொள்ளத் தேவையில்லை என்று உச்ச நீதிமன்றம் கூறியிருந்தது. அது எப்படி, தான் விசாரிக்கும் வழக்குக்குப் பொருந்தும் என்று குமாரசுவாமி விளக்கவே இல்லை. அந்தத் தீர்ப்பு வந்தவுடனேயே, அதைத் திருத்த வேண்டும் என்று பல தரப்புகளிலிருந்தும் குரல்கள் எழுந்தன.

நல்ல வேளையாக அந்தத் தவறுகள் இப்போது நீக்கப்பட்டுள்ளன. இந்த வழக்கின் ஒவ்வொரு அம்சத்தையும் நீதிபதி பி.சி. கோஷ் தன்னுடைய 500 பக்கத் தீர்ப்பில் விரிவாக அலசியிருக்கிறார். உயர் நீதிமன்றமோ வழக்கின் ஆதாரங்களை உரிய சட்டப் பின்னணியில் எடுத்துக் கொள்ளத் தவறியதையும் நீதிபதி கோஷ் சுட்டிக்காட்டி வருத்தம் தெரிவித்திருக்கிறார். வருவாய்க்குப் பொருந்தாத சொத்தின் மதிப்பு 8.12% தான் அதிகம் என்ற உயர் நீதிமன்றத்தின் கணிப்பு முழுக்க முழுக்க ஆவணங்களைத் தவறாகப் புரிந்துகொண்டதாலும் கூட்டியதாலும் வந்திருக்கிறது என்று கூறி, நீதிபதி குன்ஹா தலைமையிலான விசாரணை நீதிமன்றத்தின் கணக்குதான் சரி என்று ஏற்றுக்கொண்டிருக்கிறார். கிருஷ்ணானந்த் அக்னிஹோத்ரி வழக்கில் உச்ச நீதிமன்றம் எடுத்த முடிவு இந்த வழக்குக்குச் சற்றும் பொருத்தமில்லாதது என்பதையும் சுட்டிக் காட்டியிருக்கிறார்.

ஜெயலலிதாவுக்கும் சசிகலாவுக்கும் இருந்த நெருங்கிய தொடர்பையும் பெருமளவில் சொத்து கள் வாங்கியது, 50-க்கும் மேற்பட்ட வங்கிக் கணக்குகளைத் தொடங்கியது போன்றவற்றில் கூட்டுச் சதி, சதிக்கு உடந்தை ஆகிய அம்சங்கள் இருந்ததையும் அவர் சுட்டிக்காட்டியிருக்கிறார். எந்தவிதக் குற்ற உணர்வும் இல்லாமல் பெருமளவுக்குச் சொத்துகளை வாங்கிக் குவிக்க ஆழ்ந்து சதி செய்யப்பட்டிருக்கிறது என்று நீதிபதி அமிதவ ராய் குறிப்பிட்டுள்ளார்.

இந்தத் தீர்ப்பில் நீதிமன்றம் வலியுறுத்தி யிருக்கும் இன்னொரு முக்கியமான அம்சம், “நீதிமன்றங்கள் தீர்ப்பு வழங்குவது பொறுப்புடன் இருக்க வேண்டும், சட்டத்தைப் பொருத்திப்பார்ப்பது காரணகாரியங்களுடன் செய்யப்பட வேண்டும், ஜோடனையான வாதங்கள் கருத்தில் கொள்ளப்படாமல் விலக்கப்பட வேண்டும், அனைத்துத் தரப்பிலும் இணைந்து, உறுதி மிக்க, துணிச்சலான நடவடிக்கைகளை மேற் கொள்ள வேண்டும். ஊழலை ஒழிக்கும் இந்த இயக்கத்தில் ஒவ்வொரு குடிமகனும் பங்கேற்க வேண்டும்!”

(கட்டுரையாளர் சென்னை உயர் நீதிமன்ற மூத்த வழக்கறிஞர்)

சுருக்கமாகத் தமிழில்: சாரி,

© தி இந்து ஆங்கிலம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x