Last Updated : 21 Nov, 2013 12:00 AM

 

Published : 21 Nov 2013 12:00 AM
Last Updated : 21 Nov 2013 12:00 AM

உழைக்கும் தோழர்களே ஒன்றுகூடுங்கள்!

இந்தியாவில் ஒழுங்குபடுத்தப் பட்ட உழைப்பாளிகளான ஏழு சதவீதம் பேருக்கு மட்டுமே ஓய்வூதியம் கிடைக்கிறது என் கின்றன புள்ளி விவரங்கள். மீதமுள்ள 93 சதவீத உழைப் பாளிகளில் சிலரைத் தவிர பெரும் பாலோனோருக்கு ஓய்வூதியம் இல்லை. ஆனால், உழைப்பாளிகள் அனைவருமே ஓய்வூதியம் பெறலாம் என்பது பலருக்கும் தெரிவதே இல்லை.

ஓய்வூதியத் தொகை ஒழுங்குபடுத்துதல் மற்றும் வளர்ச்சி ஆணையம் (Pension Fund Regulatory and Development Authority - PFRDA) என்ற மத்திய அரசு அமைப்பு இருக்கிறது. இது அனைவருக்கும் என்றாலும் குறிப்பாக, மிகவும் குறைந்த வருமானம் உள்ள, ஒழுங்குபடுத்தப்படாத தொழில்களில் உள்ள தொழிலாளர்களுக்காக புதிய ஓய்வூதியத் திட்டத்தை அறிமுகப்படுத்தி இருக்கிறது.

இத்திட்டம் கட்டாய சேமிப்பை நிலைநிறுத்தி, ஓய்வூதியம் கிடைக்கச் செய்கிறது. இத்திட்டத்தில் Tier I மற்றும் Tier II என இரு பகுதிகள் உண்டு. Tier I-ல் பணம் செலுத்தினால் மட்டுமே Tier II-லும் பணம் செலுத்த முடியும்.

Tier I-ல் குறைந்தது ஆண்டுக்கு நான்கு முதல் 12 தவணைகளில் ரூ.6000 முதல் அதிகபட்சம் எவ்வளவு வேண்டுமானாலும் 60 வயது வரை செலுத்தலாம். ஆனாலும் ஒவ்வொரு ஆண்டும் இடையில் நிறுத்தாமல் பணம் செலுத்துவது அவசியம். ஒரு ஆண்டு முழுவதும் தொகை செலுத்தத் தவறினால் ரூ.100 அபராதம். இதில் நீங்கள் செலுத்தும் தொகையை கீழ்கண்ட மூன்று முதலீட்டு வகைகளில் எவற்றில் முதலீடு செய்வது என்பதையும் நீங்களே தீர்மானிக்கலாம்.

1.இது மிகவும் பாதுகாப்பானது; அரசு கடன் பத்திரங்களில் மட்டுமே முதலீடு செய்யப்படும்.

2.பாதுகாப்பானது; அரசு அல்லாத நிறுவனங்களில் நிலையான வட்டி வருமானத்தை கொடுக்கும் கடன் பத்திரங்களில் முதலீடு செய்யப்படும்.

3.மிதமான பாதுகாப்பு கொண்டது; பங்குச் சந்தைக் குறியீட்டில் உள்ள பங்குகளில் முதலீடு செய்யப்படும். தவிர, உங்கள் பணத்தில் 50 சதவீதம் மேற்கண்ட இரு வகை கடன் பத்திரத் திட்டங்களிலும் முதலீடு செய்யப்படும்.

நீங்கள் எடுக்கும் ரிஸ்க்கைப் பொறுத்து வருவாய் கூடும் அல்லது குறையும். அவசரத் தேவைக்காக 60 வயதுக்கு முன்பே பணத்தை எடுத்தால், அதில் 20 சதவீதம் போக மீதமுள்ள 80 சதவீதத்தை மாதம்தோறும் சம அளவில் பிரித்துக் கட்ட வேண்டும்.

60 வயதில் நீங்கள் செலுத்திய பணம், அதன் மீது பெறப்பட்ட வருவாய் இரண்டும் சேர்த்து ஒரு தொகை வரும். அதில் 40 சதவீதப் பணத்தை நீங்கள் எடுத்துக்கொள்ளலாம். மீதமுள்ள தொகையை மீண்டும் முதலீடு செய்ய வேண்டும்.

இந்த முதலீட்டின் மீது மாதம்தோறும் குறிப்பிட்டத் தொகை ஓய்வூதியமாக கொடுக்கப்படும். 60 வயதுக்குள் பணம் செலுத்தியவர் இறந்து விட்டால், அவரின் வாரிசுக்கு அதுவரை சேர்த்த பணமும் அதன் மீதான வருவாயும் கொடுக்கப்படும்.

Tier II-ல் நீங்கள் குறைந்தபட்சம் ரூ.2000 செலுத்த வேண்டும். இதிலிருந்து நீங்கள் எடுக்கும் பணத்தை திருப்பிக் கட்டத் தேவை இல்லை.

இந்த ஓய்வூதியத் திட்டத்துக்கு ஆண்டுதோறும் சில கட்டணங்கள் உள்ளன. இதை 20-க்கும் மேற்பட்ட வங்கிகளும், காப்பீடு நிறுவனங்களும் நடத்துகின்றன. இந்தத் திட்டத்தில் அரசு இன்னும் அதிக வருவாயை அளிக்க வேண்டும் என்றும், தனியார் நிறுவனங்களை இதில் அனுமதிக்கக் கூடாது என்றும் சில தொழிலாளர் அமைப்புகள் கோருகின்றன. இதுபோன்ற நல்லதோர் ஓய்வூதிய திட்டத்தில் சேர்வது இன்றைய சூழலில் அனைவருக்குமே இன்றியமையாதது. ஆம், உழைக்கும் தோழர்களே ஒன்றுகூடுங்கள்!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x