Published : 07 Jun 2017 09:34 AM
Last Updated : 07 Jun 2017 09:34 AM

இரா.செழியன்: தமிழகம் உருவாக்கிய சிறந்த நாடாளுமன்றவாதி!

இந்திய - தமிழக அறிவுஜீவி அரசியல் தளத்தில் முக்கியமான வெற்றிடத்தை அவரது மறைவு ஏற்படுத்தியிருக்கிறது.

ஒருகாலத்தில், தமிழகத்தின் டெல்லி முகமாக ஒருவர் இருக் கிறார் என்றால், அவர் காங்கிரஸ் பாரம்பரியத்தைச் சேர்ந்தவராக இருக்க வேண்டும் என்ற எழுதப்படாத விதி இருந்தது. அதனை அடியோடு மாற்றியமைத்தவர்களுள் ஒருவர் இரா.செழியன். உண்மையில், ஈ.வெ.கி. சம்பத்தில் தொடங்கி நாஞ்சில் மனோகரன், க.ராசாராம் என்று தொடர்ந்து முரசொலி மாறன், வைகோ என்று திராவிட இயக்க டெல்லி முகங்கள் பலர் இருந்தாலும், அந்த வரிசையில் இரா.செழியனுக்கான இடம் என்பது மிகக் காத்திரமானது.

‘அண்ணா’ காட்டிய வழி

ஆரம்ப காலம் முதலே பெரியார் மீதும் திராவிட இயக்கம் மீதும் நாவலர் நெடுஞ்செழியனுக்கு ஈர்ப்பு இருந்தது. அந்த ஈர்ப்பு அவருடைய இளைய சகோதரர் இரா.செழியனுக்கும் தொற்றிக்கொண்டது. அண்ணனோடு சேர்ந்து அரசியலில் ஈடுபடத் தொடங்கினார் செழியன். சுயமரியாதை இயக்கம், திராவிடர் கழகம் என்று செயல்பட்டுவந்தார். ஒருகட்டத்தில், பெரியாருடன் கருத்து வேறுபாடு கொண்ட அண்ணா, திராவிடர் கழகத்திலிருந்து விலகி திமுகவைத் தொடங்கியபோது, நெடுஞ்செழியனும் திமுகவில் இணைந்தார். அண்ணன் காட்டிய வழியில் இரா.செழியனும் அண்ணாவுடன் ஐக்கியமானார்.

அந்த நாள் தொடங்கி அண்ணாவுடனான அவரது நெருக்கம் அதிகரித்தது. படித்த இளைஞராகவும் விரிவான வாசிப்பனுபவம் கொண்டவராகவும் செழியன் இருந்தது அண்ணாவை ஈர்த்தது. அருகிலேயே வைத்துக்கொண்டார். திமுகவின் சட்டத் திட்டக் குழுவை உருவாக்குவது என்று தோன்றியபோது, அந்தக் குழுவில் இடம்பெற வேண்டும் என்று அண்ணா தேர்வுசெய்த முக்கியமான பெயர், இரா.செழியன். மூத்த தலைவர் களான சம்பத்தும் நெடுஞ்செழியனும் மதியழகனும் இடம்பெற்ற அந்தக் குழுவில், துடிதுடிப்பும் தொலைநோக்குச் சிந்தனையும் கொண்ட இளைஞராகச் செழியன் செயல்பட்டார்.

மக்களவையில்…

அண்ணாவின் நம்பிக்கைக்குப் பாத்திரமான செழியன் 1962 தேர்தலில் பெரம்பலூரிலும் 1967 தேர்தலில் கும்பகோணத்திலும் போட்டியிட்டு வெற்றிபெற்றிருந்தார். திமுகவின் உயிர்நாடிக் கொள்கைகள் ஒரு பக்கம், தமிழகத்தின் பிரச்சினைகள் இன்னொரு பக்கம் என இரண்டு முனைகளிலும் தீவிரமாகச் செயல்பட்டு முத்திரை பதித்துக்கொண்டிருந்தார் செழியன். அண்ணாவின் மறைவுக்குப் பின் முதலமைச்சரான கருணாநிதியுடனும் செழியனுக்கு நல்லுறவு இருந்தது.

எம்ஜிஆருடன் அணுக்கமான நட்பு கொண்டிருந்தவர் இரா.செழியன். 70-களின் தொடக்கத்தில் திமுகவிலிருந்து எம்ஜிஆரை நீக்க வேண்டும் என்ற கோரிக்கை தீவிரமடைந்தபோது, எம்ஜிஆர் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்கக் கூடாது என்று மூன்று முக்கியமான தலைவர்கள் குரல் கொடுத்தனர். அவர்கள், நாஞ்சில் மனோகரன், முரசொலி மாறன், இரா.செழியன். ஆனாலும் எம்ஜிஆர் நீக்கப்பட்டு, தனிக் கட்சி தொடங்கியபோது எம்ஜிஆருடன் செல்லாமல், திமுகவிலேயே நீடித்தார் இரா.செழியன்.

மாநில சுயாட்சி ஆய்வும் கச்சத்தீவு கண்டனக் குரலும்

திராவிட நாடு கொள்கையைக் கைவிட்ட பிறகு திமுக கைக்கொண்ட முழக்கம், ‘மாநிலத்தில் சுயாட்சி, மத்தியில் கூட்டாட்சி’. அந்த முழக்கத்தைச் செம்மைப்படுத்தும் வகையில் ராஜமன்னார் கமிட்டியை அமைத்தார் அன்றைய முதல்வர் கருணாநிதி. அந்தச் சமயத்தில் திமுகவின் சார்பில் இரண்டு பேர் கொண்ட குழுவை அமைத்து, மாநில சுயாட்சிக் கொள்கையை ஆய்வுசெய்யச் சொல்லியிருந்தார் கருணாநிதி. அந்த இருவர், இரா.செழியனும் முரசொலி மாறனும். ராஜமன்னார் கமிட்டி, செழியன் - மாறன் அறிக்கை ஆகிய இரண்டையும் அடிப்படையாக வைத்தே தமிழக சட்டமன்றத்தில் மாநில சுயாட்சித் தீர்மானத்தை நிறைவேற்றியது திமுக அரசு. அண்டை நாட்டு நல்லுறவைப் பேணுகிறோம் என்ற பெயரில், இந்தியாவுக்குச் சொந்தமான கச்சத் தீவை இலங்கைக்குத் தாரைவார்த்துக் கொடுக்க இந்திரா காந்தி அரசு முடிவெடுத்தபோது, அதற்கு எதிராக ஆவேசக் குரல் எழுப்பினார் திமுக மக்களவை உறுப்பினர் இரா.செழியன். அப்போது அவர் பயன்படுத்திய வார்த்தைகள் தமிழகத்தின் ஒட்டுமொத்த உணர் வையும் உரிமையையும் எதிரொலித்த துணிச்சல்மிகு வார்த்தைகள்.

“கச்சத்தீவு உடன்படிக்கையைத் தயார் செய்வதற்கு முன்பாக நமது நாடாளுமன்றத்தையும் சம்பந்தப்பட்ட மற்றவர்களையும் கலந்து ஆலோசனை செய்திருக்க வேண்டும். இந்தியாவின் ஒரு பகுதியை மற்றொரு நாட்டிடம் ஒப்படைப்பது என்பது மிகவும் கீழ்த்தரமான செயல். அண்டை நாடான இலங்கைத் தீவுடன் நட்புறவுடன் இருக்க வேண்டும் என்பதற்காக இந்தியாவின் அரசியலமைப்புச் சட்டத்தையும் இறையாண்மை உரிமைகளையும் உதறித் தள்ளுவது சரியல்ல. இது, எந்த அரசாங்கத்தாலும் நினைத்துப் பார்க்க முடியாத, கேவலமான, படுமோசமான பாதகச் செயல். இந்த கீழ்த்தரமான உடன்படிக்கையைச் சிறிதும் ஏற்றுக்கொள்ளவில்லை” என்று சொல்லிவிட்டு அவையிலிருந்து வெளிநடப்பு செய்தார் இரா.செழியன்.

நெருக்கடிக்கு அஞ்சாதவர்

70-களின் மத்தியில் நெருக்கடி நிலையை அன்றைய பிரதமர் இந்திரா காந்தி அமல்படுத்தியபோது, அதைத் தீவிரமாக எதிர்த்த இரா.செழியன், திமுகவிலிருந்து விலகி, ஜனதா கட்சியில் தன்னை இணைத்துக்கொண்டார். தொடர்ந்து திராவிட இயக்கத்தில் பயணம் செய்த செழியன், திடீரென தேசியப் பாதைக்குத் திரும்பியது அரசியல் களத்தில் வியப்பை ஏற்படுத்தியது.

நெருக்கடி நிலையின்போது நடத்தப் பட்ட அதிகார அத்துமீறல்கள் குறித்த நீதிபதி ஷா கமிஷனின் அறிக்கை சர்ச்சைக்குரிய பல அம்சங்களை உள்ளடக்கியிருந்தது. ஆகவே, பின்னாளில் ஆட்சிக்கு வந்த இந்திரா அரசு, அந்த அறிக்கையின் பிரதிகளை அழிக்கும் காரியத்தில் ஈடுபட்டது. என்றாலும், இந்தியாவின் கறுப்பு அத்தியாயமாகக் கருதப்படும் எமர்ஜென்சி குறித்த தகவல்களைப் பதிவுசெய்திருக்கும் அந்த ஆவணத்தைத் தன்னுடைய கடுமையான உழைப்பால் மீட்டுக் கொண்டுவந்தார் இரா.செழியன். இப்போது அது புத்தகமாகக் கிடைக்கிறது.

ஓய்வெடுக்கச் சென்ற அறிவுஜீவி

திமுகவிலிருந்து ஜனதா, ஜனதா தளம், லோக்தளம் என்று வெவ்வேறு கட்சிகளில் இயங்கிய அறிவு ஜீவியான இரா.செழியன், 1984 மக்கள வைத் தேர்தலில் தென் சென்னை தொகுதியில் போட்டியிட்டு, பிரபல திரைப்படக் கலைஞர் வைஜெயந்தி மாலாவிடம் தோற்றுப்போனார் என்பது வரலாற்றுச் சோகம். வென்றாலும் தோற்றாலும் இரா.செழியனின் கருத்துகளுக்கு இந்திய அரசியல் களத்திலும் தமிழக அரசியல் தளத்திலும் முக்கியமான இடம் உண்டு. தேர்ந்த அரசியல் சிந்தனையாளராகச் செயல்பட்ட இரா.செழியனின் மறைவு, இந்திய - தமிழக அறிவுஜீவி அரசியல் தளத்தில் முக்கியமான வெற்றிடத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

- ஆர். முத்துக்குமார், எழுத்தாளர். ‘இந்தியத் தேர்தல் வரலாறு’, ‘தமிழக அரசியல் வரலாறு’ உள்ளிட்ட நூல்களின் ஆசிரியர்.

- தொடர்புக்கு: writermuthukumar@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x