Last Updated : 10 Mar, 2014 09:46 AM

 

Published : 10 Mar 2014 09:46 AM
Last Updated : 10 Mar 2014 09:46 AM

வருமான வரி விலக்கு பத்திரம் - சிறந்த முதலீடா?

செய்தித்தாள்களை திறந்தாலே வரி விலக்கு பத்திரங்களைப் பற்றி பக்கம் பக்கமாய் விளம்பரங்கள் இருக்கின்றன. 10 வருடத்திற்கு 8.5%, 15 வருடத்திற்கு 8.93% மற்றும் 20 வருடத்திற்கு 8.9% வருவாய் அளிப்பதாக அந்த விளம்பரங்கள் ஈர்க்கின்றன. இதற்கு முந்தைய வருடங்களில் 8% க்கும் குறைவாக கொடுத்தார்கள், இப்பொழுது கிடைக்கக்கூடிய வாய்ப்பு மிக அரியது என்றும் விளம்பரப்படுத்தப்படுகிறது.

ஆண்களிடம் ஒரு முதலீட்டை விற்க வேண்டுமானால் அதற்கு வருமான வரி விலக்கு என்று சொன்னால் போதும், அதேபோல பெண்ணிடம் ஒன்றை விற்க வேண்டுமானால் தள்ளுபடி தருகிறார்கள் என்றால் போதும்’ என்ற நகைச்சுவை இந்த இடத்தில் நினைவுக்கு வருகிறது. இது நகைச்சுவையையும் தாண்டி நிதர்சனம் என்றே தோன்றுகிறது.

இதை செகண்டரி மார்க்கெட்டில் விற்கலாம் என்று சொல்கிறார்கள், எவ்வளவு பேர் வாங்குவார்கள், அப்படி வாங்கி னால் நியாயமான விலை கிடைக்குமா என்பது ஒரு கேள்விக்குறிதான். இருந்தாலும் இந்த மாதிரி பத்திரங்கள் நிறைய பேர் முதலீடு செய்ய போவதும் உண்மை. மேலும் இந்த வருவாய் 10 லட்சத் திற்கு கீழ் முதலீடு செய்பவருக்குத்தான், அதற்கு மேல் முதலீடு செய்பவர்களுக்கு மேற்சொன்ன சதவீதத்தில் இருந்து 0.25% இன்னும் குறைவு.

விளம்பரங்கள் நமக்கு என்ன தேவை என்று உணர்வதற்கு எப்போதும் வாய்ப்பு தருவதில்லை, அதனால் ஒரு பொருளை வாங்குவதிலிருந்து, முதலீடு வரை நாம் விளம்பரத்தின் உந்துதலின் பெயரில் முடிவெடுக்கிறோம். இன்னும் 10 வருடம் கழித்து நம்முடைய தேவைகள் என்ன, பணவீக்கம் என்னவென்று தெரியாமல் இந்த மாதிரி நீண்டகால கடன்

பத்திரத்தில் மாட்டிகொள்ளகூடாது. உங்கள் நிறுவனத்தில் 10% சம்பள உயர்வு இன்னும் 10 ஆண்டுகளுக்கு, அதுவரை நீங்கள் அங்கு தான் வேலை செய்யவேண்டும் என்றால் எத்தனை பேர் உடன்படுவீர்கள். கண்டிப்பாக நிறையபேர் ஒப்புக்கொள்ள மாட்டார் கள். அப்படி இருக்கும்போது இந்த வகையான திட்டங்களில் எப்படி துணிந்து முதலீடு செய்கிறீர்கள் என்று புரியவில்லை. இன்னும் 10 முதல் 15 ஆண்டுகள் வரை காத்திருக்கும் முதலீடுகளை நேரடியாக சந்தையிலோ அல்லது மியூச்சுவல் ஃபண்டிலோ முதலீடு செய்தால் அதைவிட அதிக வருமானம் கிடைப்பதற்கு வாய்ப்புகள் உள்ளன.

மேலும் இந்த முதலீட்டினை உங்களுக்கு தேவைப்படும் நேரத்தில் வெளியே எடுக்க முடியும். நீண்டகாலத்தில் முதலீடு செய்யும்பட்சத்தில் இதில் வரும் வருமானத்துக்கு நாம் வருமான வரி கட்ட தேவை இல்லை.ஒருவருக்கு சிறந்த ஃபண்டை தேர்ந்தெடுக்க தெரியவில்லை என்றால் இண்டெக்ஸ் ஃபண்ட்களில் (சென் செக்ஸ் அல்லது நிஃப்டியில் இருக்கும் பங்குகளில் மட்டும் முதலீடு செய்வது.

மேலும் அதே விகிதத்தில் அந்த பங்குகளில் முதலீடு செய்வது. ஒரு வேளை சென்செக்ஸ், நிப்டி பட்டியல் மாற்றம் செய்யப்பட்டால் அதற்கேற்றது போல இந்த ஃபண்ட் களிலும் மாற்றம் செய்யப்படும்) முதலீடு செய்யும் பட்சத் தில்கூட நல்ல வருமானம் கிடைக்கும்.

நிதி ஆலோசகரின் உதவியோடு முதலீடு செய்யும்பட்சத்தில் இண்டெக்ஸ் ஃபண்ட்களை விடவும் அதிக வருமானம் கிடைக்க வாய்ப்பு இருக்கிறது. ஒவ்வொருவரும் மாதம் 2 மணி நேரம் அவரவருக்கென நேரத்தை ஒதுக்கி, வாழ்க்கையில் நமக்கு என்ன தேவை, நாம் அதை நோக்கி தான் சென்று கொண்டிருகிறோமா அல்லது வேறு திசையில் சென்றிருந்தால் எவ்வளவு விரைவில் நாம் போகும் பாதைக்கு திரும்பவேண்டும் என்ற முனைப்போடு செயல்பட்டால் நாம் தேவையற்ற விரய முதலீட்டை தவிர்க்க முடியும்.

மேலும் எல்லாவிதமான முதலீடு திட்டமும் எல்லோருக்கும் பொருந்தாது, காலுக்கேற்ற செருப்பு என்பதுபோல நம்முடைய தேவை அறிந்து முதலீடு செய்தால் கண்டிப்பாக நன்கு பயன்பெற முடியும் என்பது முற்றிலும் உண்மை.

சாராம்சம்

எந்த ஒரு முதலீட்டையும் விளம் பரத்தை மட்டும் நம்பி இறங்கா தீர்கள். முதலில் அந்த முதலீடு நமக்கு ஏற்றதா என்று பார்க்கவேண்டும், இது முதல் வடிகட்டுதல். வலைத்தளத்தில் நமக்கு தேவையான எல்லாவற்றையும் பற்றி ஓரளவிற்கு அறிந்து கொள்ள முடியும், இது இரண்டாவது வடிகட்டு தல். மூன்றாவது உங்களுடைய நிதி ஆலோசகரிடம் இதைப்பற்றி விவாதியுங்கள். இதை செய்யும் பட்சத்தில் தேவையற்ற முதலீடுகளை தவிர்க்க முடியும்.

எந்த முதலீடும் இன்றைய சூழ்நிலை களை மட்டும் பார்க்காமல் அது முதிர்வு அடையும் நேரத்தில் அதனுடைய மதிப்பு, பணவீக்கத்தை கட்டுபடுத்துமா, இல்லை இதை விட சிறந்த முதலீடு உள்ளதா அதில் என்ன ரிஸ்க் என்று அலசவேண்டும்.

உங்களுடைய முதலீடு கால அவகாசம் 5 முதல் 10 ஆண்டுவரை என்றால், பங்குசந்தையிலோ அல்லது அது சார்ந்த மியூச்சுவல் ஃபண்டிலோ முதலீடு செய்யாமல் இருந்தால், எதிர்காலத்துக்கு தேவையான, பணவீக் கத்தை தாண்டிய வருமானம் கிடைப்பது கடினம். உலகின் தலை சிறந்த முதலீட்டாளரான வாரன்ஃபபெட் ரிஸ்கை பற்றி இவ்வாறு கூறுகிறார். ’ரிஸ்க் என்பது நாம் என்ன செய்து கொண்டிருக்கிறோம் என்று தெரி யாமலே ஒரு வேலையைச் செய்து கொண்டிருப்பது.’

இது நம் எல்லோருக்கும் பொருத்தமான ஒன்று, இன்று பல பேர் எதற்கு முதலீடு செய்கிறோம் அதில் என்ன வருமானம், அது பணவீக்கத்தை கட்டுபடுத்துமா என்று தெரியாமல் எல்லாவற்றிலும் முதலீடு செய்கிறார்கள். முதலீட்டை தேர்ந்தெடுக்கும் போது அதனுடைய கால அளவை பொறுத்துதான் ரிஸ்க் மற்றும் வருமானம் மாறுபடுகிறது. பத்து ஆண்டு காத்திருப் பதற்கு ஒரு பலன் வேண்டும், அது கண்டிப்பாக வருமான வரி விலக்கு பத்திரத்தில் இல்லை.

padmanaban@fortuneplanners.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x