Last Updated : 05 Nov, 2014 09:05 AM

 

Published : 05 Nov 2014 09:05 AM
Last Updated : 05 Nov 2014 09:05 AM

பகிர்ந்துகொள்ளுதல் எனும் பொறுப்பு

யோசிக்காமல் ஓடிக்கொண்டே இருக்க வேண்டும் என்று ஃபேஸ்புக் நமக்குக் கற்பிக்கிறது.

சில வாரங்களுக்கு முன்னால், தமிழக முன்னாள் முதல்வர் கர்நாடகச் சிறையில் இருந்த நேரம். அவர் ஜாமீனில் வெளிவரும் வாய்ப்பும் இந்த ஊர் (பெங்களூரு) நீதிமன்றத்தால் மறுக்கப்பட்டிருந்தது. அப்போது என்னுடைய ஃபேஸ்புக் பக்கத்தில் ஒரு புகைப்படத்தைப் பார்த்தேன். அதில் கர்நாடக மாநிலப் பதிவு எண் கொண்ட பேருந்து ஒன்று கண்ணாடி உடைந்து நின்றுகொண்டிருந்தது. அதனருகே, ‘தமிழகத்தினுள் வரும் கர்நாடக வாகனங்களின்மீது கல்வீச்சுத் தாக்குதல் ஆங்காங்கே நடைபெறுகிறது’ என்கிற செய்தி.

ஃபேஸ்புக்கில் அதனைப் பகிர்ந்துகொண்டிருந்தவர் என்னுடைய நெருங்கிய நண்பர்தான். அவர் மிகவும் அக்கறையாக அந்தப் புகைப்படத்தைத் தன் நண்பர்களுக்கு வழங்கி, ‘ஜாக்கிரதை’என்று குறிப்பும் எழுதியிருந்தார். அடுத்த சில மணி நேரங்களுக்குள் ஃபேஸ்புக்கில், ட்விட்டரில் அந்தப் புகைப்படத்தைப் பலமுறை பார்த்துவிட்டேன். வெவ்வேறு நண்பர்கள் அதே புகைப்படத்தை அதே அக்கறையுடன் பகிர்ந்து கொண்டிருந்தார்கள். அதனைத் திரும்பத் திரும்பப் பார்க்கப் பார்க்க, எனக்குப் பயம் அதிகரித்தது. காரணம், அன்று மாலை நான் ஒரு வாடகை வாகனத்தில் தமிழகம் செல்வதாக இருந்தேன். கண்டிப்பாக அது கர்நாடகப் பதிவு எண் கொண்ட வாகனமாகத்தான் இருக்கும். இப்போது, கல்வீச்சுக்குப் பயந்து பயணத்தைத் தள்ளிப்போடுவதும் சாத்தியப்படாத சூழ்நிலை. எந்தத் தைரியத்தில் கிளம்புவது?

கார், கர்நாடகத்தைச் சேர்ந்ததாக இருப்பினும், உள்ளே இருக்கிற நான் தமிழன்தான். ஆனால், அது கல் வீசுகிறவர்களுக்குத் தெரியுமா? கல்லுக்குத் தெரியுமா? வரும் கல்லை நிறுத்திவைத்துச் சிலப்பதிகாரம் சொல்லிக் காட்டியா நிரூபிக்க இயலும்?

வெறும் பூச்சாண்டி

நாள் முழுக்க அந்தக் கண்ணாடி உடைந்த பேருந்தின் புகைப்படம் என் ஞாபகத்தில் வந்து பயமுறுத்திக்கொண்டே இருந்தது. பெங்களூரு, சென்னை நெடுஞ்சாலையில் உள்ள சில நண்பர்களை அழைத்து அங்கே என்ன நிலவரம் என்று விசாரித்தேன். “ஒரு பிரச்சினையும் இல்லைங்க, தைரியமா வரலாம்” என்றார்கள்.

“நிஜமாவா? ஃபேஸ்புக்ல பயமுறுத்தறாங்களே!”

‘‘அதையெல்லாம் பார்க்காதீங்க, இத்தனை பெரிய தமிழ்நாட்ல எங்கயாவது ஒரு கர்நாடக பஸ் உடைக்கப்பட்டிருக்கும், அதையே திரும்பத் திரும்ப ஷேர் பண்ணினா, இங்கே எல்லாக் கர்நாடக வண்டிக்கும் ஆபத்துன்னு அர்த்தமாயிடுமா? கர்நாடக அரசாங்க பஸ்ஸே தைரியமா வருது, உங்களுக்கென்ன?”

அவர்கள் இந்த அளவு விளக்கிச் சொன்னபோதும், எனக்குச் சந்தேகம் தீரவில்லை. ஆனால், அவசியம் மேற்கொள்ள வேண்டிய பயணம் என்பதால், பயத்துடனே புறப்பட்டு வந்தேன்.

அடுத்த இரண்டு நாள் தமிழகத்தில் அந்த வண்டி யில்தான் சுற்றிக்கொண்டிருந்தேன். ஒரு சின்னப் பிரச்சினைகூட இல்லை. சொல்லப் போனால், ஓரிரு இடங்களில் எங்கள் வண்டியின் பதிவு எண்ணைப் பார்த்துவிட்டுக் கன்னடத்தில் பேசி வரவேற்றவர்களைப் பார்த்தோம். எந்தப் பிரச்சினையும் இல்லாமல் கர்நாடகம் திரும்பினோம்.

மறுநாள், அலுவலகத்தில் நண்பர் ஒருவரிடம் பேசிய போது, அவருக்கும் இதே அனுபவம்தான் என்றார். அவரும் ஃபேஸ்புக் ‘எச்சரிக்கை’களுக்குப் பயந்து தன் வாகனத்தை யாருக்கும் தெரியாமல் கிட்டத்தட்ட கள்ளக்கடத்தல் செய்வதுபோல் சந்துபொந்துகளில் ரகசியமாக ஓட்டிவந்திருக்கிறார். அவருக்கும் ஒரு பிரச்சினையும் இல்லை.

இப்போது, அந்த ஃபேஸ்புக் புகைப்படம் ஒரு வேடிக்கையாக எங்களுக்குத் தெரிந்தது. ஆனால், தமிழக எல்லைக்குள் இருந்தவரை அதை எண்ணிப் பதற்றத்தில்தான் இருந்தோம்.

அந்தப் புகைப்படத்தைப் பகிர்ந்துகொண்டவர்கள் எங்கள் நண்பர்கள்தான். அவர்கள் மிகுந்த அக்கறை யோடுதான் அதைச் செய்திருக்கிறார்கள் என்பதில் சந்தேகமில்லை. ஒருவேளை பிரச்சினை உண்மையாகவே பெரிதாக இருந்திருந்தால், அது மிகவும் பயன்பட்டிருக்கும் என்பதிலும் சந்தேகமில்லை. ஆனால், ‘ஷேர்’ என்கிற அந்தப் பொத்தானை அழுத்தும்

முன் நமக்கு ஒரு பொறுப்பு உள்ளது, நாம் பகிர்ந்துகொள்வது உண்மைதானா என்பதை உறுதி செய்துகொள்ள வேண்டிய அவசியம் உள்ளது என்பதை அவர்கள் யோசிக்கவில்லை; நாளைக்கே நாங்களும் யோசிக் காமல் இந்தப் பிழையைச் செய்வோம்.

இரண்டு நிலாக்கள்

டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் செய்திகளுக்கு இணையாக, சொல்லப் போனால் அவற்றைவிட வேகமாக வதந்திகள் பரவுகின்றன. ஆகவே, இந்தப் பொறுப்புணர்ச்சி பல மடங்கு அதிகரிக்க வேண்டும். உதாரணமாக, நாளை மாலை வானத்தில் இரண்டு நிலாக்கள் தோன்றும் என்று ஒரு செய்தி(?). முன்பு அதை நாம் பரப்ப வேண்டுமென்றால், அதிகபட்சம் நமக்குத் தெரிந்த நான்கைந்து பேரிடம் சொல்வோம்.

ஓரிருவருக்குத் தொலைபேசியில் சொல்வோம். அது மெதுவாகத்தான் பரவும். ஆனால் இன்றைக்கு, வானத்தில் இரண்டு நிலாக்கள் தோன்றுவதுபோல் ஃபோட்டோஷாப்பில் ஒருவர் படத்தை உருவாக்குகிறார், நான்கைந்து வரிகள் எழுதி ஃபேஸ்புக்கில் வெளியிடு கிறார். அதைப் பார்க்கிறவர்கள் ‘அட!’ என்று வியந்து ‘ஷேர்’ பொத்தானை அழுத்துகிறார்கள். மறுகணம் அது சில நூறு, அல்லது சில ஆயிரம் பேருக்குச் சென்று சேர்ந்துவிடுகிறது. இவர்கள் ஒவ்வொருவரும் ‘ஷேர்’ செய்யச் செய்ய, அது சில நொடிகளில் லட்சக் கணக்கானோரைச் சென்றடைவது சாத்தியமே.

சமூக ஊடகங்களா, செய்தி ஊடகங்களா?

செய்திகளைப் பரப்புவதில் சமூக ஊடகங்களின் பங்கு மிக முக்கியமானது. இப்போதெல்லாம் தேர்தல் நிலவரத்தில் தொடங்கி வானிலை அறிக்கை வரை எல்லாவற்றையும் ஃபேஸ்புக் நண்பர்களிடமிருந்தே தெரிந்துகொள்ள இயலுகிறது. அது அவசியமான ஒன்று. ஆனால் அதேசமயம், நாமே நேரடியாகப் பார்க்காத, உறுதி செய்யாத ஒன்றைப் பேருண்மைபோல் பரப்பும் ‘ஷேர்’ பொத்தானின் வலிமையை நாம் புரிந்துகொள்வதே இல்லை. சற்றும் பொறுப்பில்லாமல் நாள் முழுக்க அதை அழுத்திக்கொண்டே இருக்கிறோம், நண்பர்களுக்கு நல்ல விஷயங்களைப் பரப்புகிறோம் என்று நினைத்துக்கொண்டு பல பொய்களையும் அனுமதித்துவிடுகிறோம்.

தலைகீழாகத் தந்தால்...

உதாரணமாக, ஏடிஎம் இயந்திரத்தில் யாராவது கழுத்தில் கத்தி வைத்து உங்களை மிரட்டினால், உங்களுடைய அடையாள எண்ணை (பின்-PIN) தலைகீழாகத் தாருங்கள், உடனே அருகில் உள்ள காவல் நிலையத்தில் ஒரு மணி அடிக்கும், அவர்கள் விரைந்து வந்து உங்களைக் காப்பாற்றுவார்கள் என்று ஒரு பயனுள்ள செய்தி(?). இதுவரை பல்லாயிரக் கணக்கானோர் இதை ஃபேஸ்புக்கில் பகிர்ந்துகொண்டுள்ளார்கள்.

ஆனால், இது உண்மைதானா? ஒருவேளை என்னுடைய எண் 3443 என்று இருந்தால்? அதைத் தலைகீழாகத் தந்தாலும் 3443-தானே வரும்? அது எப்படிக் காவல் துறைக்குத் தெரியும்? இப்படி ஓர் ஏற்பாடு இருந்தால், அதை வங்கி எனக்கு அதிகாரபூர்வமாகச் சொல்லியிருக்காதா? இப்படி யோசித்தவர்கள் எத்தனை பேர்? உடனே ‘ஷேர்’ பொத் தானை அழுத்தியவர்கள் எத்தனை பேர்?

இப்படி ‘யாருக்காவது பயன்படட்டும்’ என்கிற நம் அக்கறையைத்தான் இந்த வதந்தி பரப்பாளர்கள் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக்கொள்கிறார்கள். செய்திகள், முதலீட்டு டிப்ஸ், உடல்நல டிப்ஸ், அழகுக் குறிப்புகள், அறிவியல் உண்மைகள், நிஜ(?) சம்பவங்கள், அறிஞர்களின் பொன்மொழிகள், வெற்றிக் கதைகள் என்று எதையெதையோ எழுதி அவர்கள் பரப்பிவிட, நாமும் கண்மூடித்தனமாக ‘ஷேர்’ பண்ணிக்கொண்டிருக்கிறோம்.

யோசித்துப் பாருங்கள்! பகிர்ந்துகொள்ளப்படும் விஷயங்களின் நம்பகத்தன்மையை உறுதிப்படுத்த எந்த வழியும் இல்லாத ஓர் ஊடகத்தைத் தங்கள் அறிவைப் பெருக்கும் ஒரு சாதனமாக ஒரு தலைமுறை ஏற்றுக்கொண்டுவிட்டது. இது எப்பேர்ப்பட்ட பின்விளைவுகளை ஏற்படுத்தும்!

இந்தியில் ‘ஷேர்’ என்றால் சிங்கம் என்று அர்த்தம். இனிமேல் அந்தப் பொத்தானின்மீது ஒரு நிஜ சிங்கத்தை உட்காரவைத்துப் பொய்யான செய்திகளை ஷேர் செய்கிறவர்களின் விரல்களை ஒவ்வொன்றாகக் கடிக்கச் செய்ய வேண்டும். அல்லது, நமக்கே அந்தப் பொறுப்பு வரவேண்டும். எது வசதி?

- என். சொக்கன்,

‘நோக்கியா: கொள்ளை கொள்ளும் மாஃபியா’ உள்ளிட்ட நூல்களின் ஆசிரியர்.

தொடர்புக்கு: nchokkan@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x