Last Updated : 07 Feb, 2017 11:15 AM

 

Published : 07 Feb 2017 11:15 AM
Last Updated : 07 Feb 2017 11:15 AM

மணிப்பூர் மணிமகுடம் யாருக்கு?

யாரையேனும் சார்ந்திருக்க வேண்டிய, பலவீனமான நிலையில் இருக்கும் வட கிழக்கு மாநிலங்கள், பொதுவாக மத்தியில் ஆட்சியில் இருக்கும் கட்சியுடன் கூட்டணி அமைத்துக்கொள்ளும் மனநிலையில் இருப்பவை. அந்த வகையில், காங்கிரஸ் கையிலிருந்த பல மாநிலங்களும் பாஜக கையில் வந்துகொண்டிருக்கும் நிலையில், இந்தத் தேர்தலைச் சந்திக்கிறது மணிப்பூர்.

காங்கிரஸ் வலுவான நிலையில் இங்கு இருக்கிறது. 15 ஆண்டுகளாகத் தொடர்ந்து ஆட்சியில் இருக்கும் முதல்வர் ஓக்ரம் இபோபி சிங் செல்வாக்கான தலைவர். பாஜகவுக்கு செல்வாக்கான தலைவர் கிடையாது. இங்கு அது பெரிய கட்சியும் கிடையாது. மத்தியிலும் மாநிலத்திலும் ஒரே கட்சி ஆட்சியில் இருந்தால், பல திட்டங்களுக்கு அனுமதி கிடைத்துவிடும்; கடினமான சூழல்களில் மத்திய அரசின் உதவி கிடைக்கும் எனும் மனநிலை வட கிழக்கு மாநில அரசியல் தலைவர்களிடமும் மக்களிடமும் எப்போதுமே உண்டு என்பது பாஜகவின் பலம்.

வியூக வலைகள்

அசாமில் 2016 ஏப்ரலில் நடந்த தேர்தலிலும், அதே ஆண்டில் அருணாசலப் பிரதேசத்திலும் பாஜக அப்படித்தான் ஆட்சியைப் பிடித்தது. அசாமில் காங்கிரஸிடமிருந்து ஆட்சியைக் கைப்பற்றுவதற்கு முன்னர், அக்கட்சியிலிருந்து பல தலைவர்களைத் தன் பக்கம் இழுத்துக்கொண்டது பாஜக. அருணாசலப் பிரதேசத்தில் தேர்தலுக்குப் பின்னர், கிட்டத்தட்ட காங்கிரஸ் கட்சியின் அத்தனை சட்டப்பேரவை உறுப்பினர்களையும் தன் பக்கம் இழுத்ததன் மூலம் ஆட்சிக்கு வந்தது. மணிப்பூரிலும் இதற்குச் சாத்தியம் இல்லாமல் இல்லை.கட்சி விசுவாசம் என்பது முக்கியமான மற்றொரு அம்சம். அளவில் சிறிய வட கிழக்கு மாநிலங்களின் அமைச்சரவையில் அதிகபட்சம் 12 பேர் இருக்கலாம் என்று கட்சித் தாவல் தடைச் சட்டம் வரையறுத்திருக்கிறது. அதாவது, முதல்வர் உட்பட 12 பேர். எனவே, அமைச்சரவையில் இடம் கிடைக்காத காங்கிரஸ் அல்லது பாஜக உறுப்பினர்கள் புதிய வாய்ப்புகளைத் தேடத் தொடங்கலாம். திரிணமூல் காங்கிரஸ் உட்பட மணிப்பூரின் சிறிய கட்சிகள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக்கொள்ளலாம்.

பற்றி எரியும் வீதிகள்

இன்றைய மணிப்பூரின் பெரிய நெருக்கடி என்ன வென்றால், எல்லா நாகா பழங்குடிகளின் தலைமை அமைப்பு என்று தன்னை அழைத்துக்கொள்ளும் ஐக்கிய நாகா கவுன்சில் (யூ.என்.சி.) அமைப்பு, நெடுஞ்சாலைப் போக்குவரத்தைத் தடைசெய்து நடத்திவரும் காலவரையற்ற பொருளாதார முட்டுக்கட்டை. கிட்டத்தட்ட மூன்று மாதங்களாகத் தொடரும் இந்தப் போராட்டத்தால், பெட்ரோல், சமையல் எரிவாயு உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்கள் தட்டுப்பாட்டை மணிப்பூர் சந்தித்துவருகிறது. பெட்ரோல் நிலையங்கள் மூடிக்கிடக்கின்றன. குறைந்தபட்ச விநியோகத்துக்காக எந்த பெட்ரோல் நிலையத்திலாவது பெட்ரோல் நிரப்பப்படுகிறது என்று தகவல் கிடைத்தால், அதன் முன்னர் மைல் கணக்கில் வாகனங்கள் வரிசையில் காத்துக்கிடக்கின்றன. சில சமயம், நள்ளிரவைத் தாண்டியும் வரிசை நீள்கிறது.

மணிப்பூரின் வணிகம் மந்தமடைந்திருப்பதையும், அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்ந்திருப்பதையும் பார்க்க முடிகிறது. தினக்கூலி பெறும் தொழிலாளர்கள்தான் கடுமையாகப் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். மத்திய அரசின் பணமதிப்பு நீக்க நடவடிக்கை, நிலைமையை மேலும் மோசமடையச் செய்திருக்கிறது. நெல் விளையும் இம்பால் பள்ளத்தாக்குப் பகுதி வளமானது என்பதால், நல்லவேளையாக மக்கள் பசியில் துயருறும் அவலம் நேரவில்லை. அப்படி நடந்திருந்தால் மணிப்பூர் தெருக்களில் பெரும் கொந்தளிப்பே ஏற்பட்டிருக்கும்.

அரசியல் நிலவரம்

கவலைதரும் இந்தச் சூழல், மார்ச்சில் நடைபெறும் தேர்தலில் என்ன மாதிரியான விளைவை ஏற்படுத்தும் என்று கணிப்பதில் அரசியல் பார்வையாளர்கள் மும்முரமாக இருக்கிறார்கள். முக்கியமான கேள்விகள் இவைதான்: நெடுஞ்சாலைத் தடுப்புப் போராட்டம் ஏற்படுத்தியிருக்கும் பாதிப்பு, ஆளும் காங்கிரஸ் அரசுக்கு எதிராக மக்களைத் திரும்பச் செய்யுமா அல்லது பாஜகவுக்கு எதிரானதாக மாறுமா?

மணிப்பூர் சட்டசபையில் 60 இடங்கள் உள்ளன. அவற்றில் 40 தொகுதிகள் பழங்குடிகள் அல்லாத இந்துக்களான மெய்தேய் மக்கள் பிரதானமாக வாழும் பள்ளத்தாக்குப் பகுதிகளில் உள்ளன. இவற்றில் 39 பொதுத் தொகுதிகளும், பட்டியல் இனத்தவருக்கான ஒரு தனித்தொகுதியும் அடக்கம். மத அடிப்படையில் இந்தப் பிராந்தியத்தில் வெற்றியை அறுவடை செய்யலாம் என்று பாஜக கருதுகிறது.

மிச்சமிருக்கும் 20 தொகுதிகள் மலைப் பகுதிகளைச் சேர்ந்தவை. இவற்றில் 19 தொகுதிகள் பழங்குடி மக்களுக்கான தனித்தொகுதிகள். கணிசமான எண்ணிக்கையில் இருக்கும் நேபாளிகளை உள்ளடக்க வேண்டியதால் சதார் குன்றுப் பகுதிகளில் உள்ள காங்போப்கி தொகுதி தனித் தொகுதியிலிருந்து பொதுத் தொகுதியாக மாற்றப்பட்டது. இந்த 20 தொகுதிகளில் 11 அல்லது 12 தொகுதிகளில் நாகா இனத்தவர்களுக்கு வெற்றிவாய்ப்பு அதிகம். மிச்சமிருக்கும் தொகுதிகளில் குக்கீ இன மக்களும், பிற பழங்குடியினரும் செல்வாக்குடன் இருக்கிறார்கள்.

நாகா கிளர்ச்சிக் குழுவான நாகாலிம் தேசிய சோஷலிஸ கவுன்சில் - ஐசக் முய்வா (என்எஸ்சிஎன் - ஐஎம்) உடன், பாஜக தலைமையிலான மத்திய அரசு அமைதிப் பேச்சுவார்த்தை நடத்திவருவதால், நாகா இன மக்கள் வசிக்கும் பெரும்பாலான தொகுதிகளில், இந்த அமைப்புகளின் ஆதரவுடன் வெற்றி பெறலாம் என்று மாநில பாஜக நம்பியது. நாகாலாந்து மாநிலத்தில், நாகா மக்கள் கட்சியும் பாஜகவும் கூட்டணிக் கட்சிகள் என்பது குறிப்பிடத்தக்கது.

எனினும், நவம்பர் 1 முதல் ஐக்கிய நாகா கவுன்சில் (யூ.என்.சி.) நடத்திவரும் நெடுஞ்சாலைப் போக்குவரத்துத் தடைப் போராட்டம், இந்த அரசியல் கணக்குகளைக் கணிசமாகச் சீர்குலைத்திருக்கிறது. சேனாபதி மாவட்டத்தை இரண்டாகப் பிரிப்பதை ஐக்கிய நாகா கவுன்சில் எதிர்த்துவரும் சூழலில், அதற்குப் பதிலடியாக மாநிலத்தின் ஒன்பது மாவட்டங்களிலிருந்து மேலும் ஏழு புதிய மாவட்டங்களை உருவாக்குவது என்று டிசம்பர் 8 நள்ளிரவில் கூடிய மணிப்பூர் அமைச்சரவையில் முடிவெடுக்கப்பட்டது. அரசியல் சூழல் மோசமடைய இதுவும் முக்கியக் காரணம்.

கட்சிகளின் நிலை

பிரிக்கப்படும் ஏழு மாவட்டங்களில் நான்கு, பல தலைமுறைகளாக நாகா மக்களின் தாய்நிலத்தைச் சேர்ந்தவை என்று ஐக்கிய நாகா கவுன்சில் கருதுகிறது. இதையடுத்து, தங்கள் தாய்நிலத்தைப் பிரிப்பதாக காங்கிரஸ் அரசைக் குற்றம்சாட்டியது. எனினும், மாவட்டங்களைப் பிரிப்பதை மக்களைப் பிரிக்கும் செயலாகப் பார்க்க முடியுமா என்று மாநில அரசு கேட்கிறது. பாஜக இந்த விஷயத்தில் மேலோட்டமான எதிர்ப்பை மட்டுமே காட்டுவதாக நினைக்கின்றன நாகா அமைப்புகள்.

இந்துக்கள் கணிசமாக வசிக்கும் 40 தொகுதிகளில் வெற்றி வாய்ப்பை எதிர்பார்க்கும் மாநில பாஜக, மணிப்பூரைப் பிரித்து 'கிரேட்டர் நாகாலாந்து' உருவாக்கத்தில் ஈடுபடப்போவதாகச் சூளுரைத்திருக்கும் நாகா அமைப்புகள் அதைத் தகர்த்துவிடுமோ என்று கவலைப்படுகிறது. காங்கிரஸ் முதல்வர் ஓக்ரம் இபோபி சிங் அரசின் நடவடிக்கை, நாகா தாய்நிலத்தைப் பிரிக்கிறதோ இல்லையோ, பாஜகவுக்கு நெருக்கடியை உருவாக்கியிருக்கும் சாமர்த்தியமான நடவடிக்கையாகப் பார்க்கப்படுகிறது.

இரோம் ஷர்மிளாவின் புதிய கட்சியான 'மக்கள் எழுச்சி, நீதிக் கூட்டணி' (பி.ஆர்.ஜே.ஏ.), இந்த வகையான அரசியலில் ஈடுபாடு காட்டவில்லை. எனினும், அக்கட்சியின் கொள்கை, தேர்தல் வெற்றி நோக்கிய புதிய வகை அரசியல் அலையை உருவாக்கும் வாய்ப்பைக் கொண்டுதான் இருக்கிறது!

- பிரதீப் ஃபான்ஜவுபம், 'இம்பால் ஃப்ரீ பிரெஸ்' இதழின் ஆசிரியர்

© 'தி இந்து' (ஆங்கிலம்), தமிழில்:வெ.சந்திரமோகன்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x