Published : 14 Jan 2017 10:58 AM
Last Updated : 14 Jan 2017 10:58 AM

மதப் பண்டிகையா பொங்கல்?

தமிழர்களின் அறுவடைத் திருநாளான பொங்கல் சங்க காலம் தொட்டே கொண்டாடப்பட்டுவரும் பண்டிகை. பிற்காலத்தில் இந்துக்கள் மட்டும் அன்றி முஸ்லிம்கள், கிறிஸ்தவர்கள் என்று தமிழ்நாட்டின் அனைத்துத் தரப்பு மக்களும் அதை விமரிசையாகக் கொண்டாடும் போக்கும் உருவானது. இன்றைக்கும் கிறிஸ்தவர்களில் ஒரு பகுதியினர் பொங்கலைக் கொண்டாடுகிறார்கள். சில முஸ்லிம்களும் கொண்டாடுகிறார்கள் என்றாலும், முந்தைய சூழல் இன்றில்லை. நாளுக்கு நாள் இந்த வழக்கம் அருகிவருகிறது. இதை எப்படி எடுத்துக்கொள்வது?

பொங்கலும் மதமும்

பொங்கல் பண்டிகை வரலாற்றுரீதியாக விவசாயச் செயல்பாடுகளோடு தொடர்புடைய ஒன்று. இம்மாதிரி விவசாயத்தோடு தொடர்புடைய பண்டிகைகள், விழாக்கள் உலகம் முழுக்கவே இருக்கின்றன. அவற்றில் பெருமளவில் எல்லாச் சமூகங்களும் கலந்தே பங்கேற்கின்றன.

தமிழ்நாட்டில் கிறிஸ்தவம் மற்றும் இஸ்லாத்தின் தாக்கம் கி.பி. எட்டாம் நூற்றாண்டில் தொடங்குகிறது. கேரளத்தில் தொடங்கி ஏறத்தாழ சமகாலத்தில் அல்லது அதற்குச் சற்று பிந்தைய நிலையில் இஸ்லாம் இங்கு அறிமுகமானது.

தமிழ் மொழியோடு, அதன் மண்ணோடு, அது சார்ந்த பண்பாட்டு நடவடிக்கைகளோடு இயங்கும் அனைவரும் தமிழர்களே. இங்கு சாதி, மத எல்லைகள் அனைத்துமே அடுத்தகட்டம்தான். பல்வேறு சாதிகள் பல்வேறு காலகட்டங்களில் தங்களின் சமூக, பொருளாதார, பண்பாட்டு காரணங்களுக்காக இஸ்லாத்துக்கு மாறினார்கள். அது உளவியல் மாற்றமே. ஏகத்துவத்தை ஏற்றுக்கொள்ளும் மந்திரத்தை மொழிந்த உடன் ஒருவர் இஸ்லாமியராகி விடுகிறார். ஆக இங்கு உடல்ரீதியான மாற்றம் நிகழவே இல்லை. அந்த அடையாளம் எப்போதுமே விரிந்து பரவும் சூரிய நிழலாகப் பின்தொடர்கிறது.

இதன் தொடர்ச்சியில் மொழியால், அதன் பண்பாட்டால் பிணைக்கப்பட்டிருக்கும் தமிழ்நாட்டு முஸ்லிம்கள் அனைவருமே தமிழர்கள் என்றே சொல்ல வேண்டும். இதில் அடையாளமற்று தங்களைச் செயற்கையாகத் துண்டித்துக்கொள்வது அல்லது மற்றவர்களால் துண்டிக்கப்படுவது துரதிர்ஷ்டமானது.

முஸ்லிம்கள் தம்மளர்கள், தமிழ் ஆட்கள் என்று மற்றவர்களை அழைப்பதும், மற்றவர்கள் பாய், சாகிபு என்று உருது மொழிசார்ந்து இவர்களை அழைப்பதும் அடையாள விலக்கம் சார்ந்த சொல்லாடல்களே. இந்தச் சொல்லாடல் களுக்கு பின்னால் உள்ள தூர அபாயத்தை முஸ்லிம்கள் புரிந்துகொள்ளத் தவறுகிறார்கள்.

வரலாற்றுரீதியாக இந்தப் பிளவு தமிழ்நாட்டில் நவாபுகளின் வருகைக்குப் பின்னரே உருவானதாகத் தோன்றுகிறது. தமிழ்நாட்டில் வடஆற்காடு பகுதி மற்றும் பிற மாவட்டங்களில் புலம்பெயர்ந்த உருது முஸ்லிம்கள் தமிழ் முஸ்லிம்களோடு சமூகரீதியான உறவு கொண்ட தருணத்திலேயே இந்தச் சிக்கலான பிளவு உருவானதாகக் கருத இடமிருக்கிறது. தமிழ் அடையாள விலக்கத்தின் மூலம் வெறும் முஸ்லிம் என்ற மத அடையாளத்தை மத அறிஞர்கள் முன்னெடுத்தனர். அதுவே பிற்காலத்தில் தமிழர் என்பது முஸ்லிம்களிடத்தில் முஸ்லிம் அல்லாதவர்களை குறிக்கும் சொல்லாக மாறியது.

கேரளம், பஞ்சாபைக் கவனியுங்கள்

ஆனால் திராவிட மொழிக் குடும்பத்தைச் சேர்ந்த கேரளத்தில் இது இல்லை. அங்கு எல்லோருமே தங்களை மலையாளிகள் என்று அழைத்துக்கொள்வதில் பெருமை கொள்கின்றனர். பல இஸ்லாமிய மத அறிஞர்கள்கூட இப்படியே தங்களை அழைத்துக்கொள்கிறார்கள். அவர்கள் மொழியை வைத்தும், வாழிடத்தை வைத்தும் தங்களை அடையாளப்படுத்திக்கொள்கின்றனர். வங்கதேசத்துக்கும், பாகிஸ்தானுக்குமான முரண்பாட்டின் மூலகாரணமே மொழி சார்ந்த தேசியம்தான். இருவருமே இஸ்லாமியர்களாக இருந்தபோதும் நிலவியல் அடிப்படையிலான தேசிய இன அடையாளமே அங்கு முதன்மை பெற்றது. இந்த அம்சங்கள் இங்கு கவனத்தில் எடுத்துக்கொள்ளப்பட வேண்டியது முக்கியம்.

தமிழ் முஸ்லிம் சமூகம் பொங்கல் விலக்கலுக்கான காரணங்களாக சிலவற்றை முன்வைக்கிறது. 1. பொங்கல் என்பது இந்து மதப் பண்டிகை. 2. அது சடங்குகள் மற்றும் இந்து மத வழிபாடுகளைக் கொண்டது. 3. பிற மதக் கலாச்சாரங்களுக்கு இஸ்லாத்தில் இடமில்லை. 4. ரம்ஜான், பக்ரீத் ஆகிய இரு பண்டிகைகளை தாண்டி வேறு எதுவும் இஸ்லாத்துக்கு எதிரானது.

இவையெல்லாம் எந்த அளவுக்குச் சரியானவை? இரு உதாரணங்கள் தருகிறேன்.

இந்தியாவில் விவசாயம் சார்ந்து பல பிராந்திய பண்டிகைகள் கொண்டாடப்படுகின்றன. கேரளாவில் ஓணம், பஞ்சாபின் வைசாகி மற்றும் வட இந்தியாவின் பண்டாரா இவற்றில் புகழ்பெற்றவை. கேரளாவின் உருவாக்கத்தோடு தொடர்புடைய ஓணம் பண்டிகையானது அங்கு சாதி மதம் கடந்து எல்லோராலும் கொண்டாடப்படுகிறது. கேரள முஸ்லிம்களில் கணிசமானோர் மரபார்ந்த சடங்குகள் அற்று ஓணத்தைக் கொண்டாடுகின்றனர். ஓணம் சத்யா மதிய விருந்து மிகவும் பிரசித்தி பெற்றது. அதேபோல், பஞ்சாபின் அறுவடைத் திருநாளான வைசாகி பண்டிகையை பாகிஸ்தானின் மேற்கு பஞ்சாபைச் சார்ந்த பஞ்சாபிகள் மதம் கடந்து கொண்டாடுகின்றனர்.

தமிழகத்தில் பொங்கல் பண்டிகையை இந்துப் பண்டிகையாகக் குறுக்கி, முஸ்லிம்களிடத்தில் அதை அந்நியப்படுத்துவது, உண்மையில் தமிழ் முஸ்லிம்களைப் பொது சமூகத்திடமிருந்து விலக்கிவைக்க வழிவகுக்கும். சூரிய வழிபாட்டோடு மட்டும் இதைத் தொடர்புபடுத்திக் குறுக்க நினைப்பவர்கள் மறுபுறம் கிறிஸ்தவர்கள், நாத்திகர்கள், பகுத்தறிவாளர்கள், இடதுசாரிகள், தாராளவாதிகள் என அனைவராலும் வழிபாட்டுச் சடங்குகள் ஏதுமின்றி அவரவருக்கேற்ற வடிவில் பொங்கல் கொண்டாடப்படுவதைக் கவனிக்க வேண்டும்.

இப்படி வழிபாடுகள் சார்ந்த சடங்குகள் ஏதுமற்றுப் பொங்கலை முஸ்லிம்களும் கொண்டாட முடியும். வீடுகளில் விசேஷ உணவு வகைகளைத் தயாரித்தாலே அதுவே சிறந்த கொண்டாட்டம்தான். விருந்து உபசரிப்பு மற்றும் பகிர்ந்து உண்ணலை அந்தத் தினத்தில் முன்னெடுக்கலாம். மதச்சார்பற்ற இந்தியாவில் பிராந்தியக் கொண்டாட்டங்களை மாநில அரசுகளே அதிகாரபூர்வமாகக் கொண்டாடுகின்றன. அப்படியிருக்க அந்த மொழி பேசும் மக்கள் தொகுதியினர் எப்படி மதம் சார்ந்து பிரிந்திருக்க முடியும்?

தமிழ் முஸ்லிம்கள் பொங்கலைத் தமிழர் அடையாளத்தோடு கொண்டாடுவது நமக்கும் இந்த மண்ணுக்குமான பிணைப்பை வெளிப்படுத்துவதாக அமையும். பொதுச் சமூகத்துடனான நம்முடைய ஆழமான உறவையும் அது மீட்டெடுக்கும்!

- எச். பீர்முஹம்மது, தொடர்புக்கு: mohammed.peer1@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x