இந்த முயற்சிகளை நாம் மறந்துவிட்டோமோ?

இந்த முயற்சிகளை நாம் மறந்துவிட்டோமோ?
Updated on
2 min read

அறிஞர் சாமிநாத சர்மாவின் புத்தகங்களைத் தேடித் தேடிப் படித்த காலம் அது. ஹிட்லர், முசோலினி, கமால் அதூதர்க் போன்ற தலைவர்கள் வாழ்ந்த காலத்திலேயே அவர்களுடைய வாழ்க்கை வரலாற்றை வெளியிட்டவர் சாமிநாத சர்மா. உலக ஆளுமைகள், அறிவியலாளர்கள் எடிசன், நியூட்டன், ஐன்ஸ்டைன் போன்றோரின் வரலாறு, சீனா, கிரேக்கம் வாழ்ந்த வரலாறு என்றெல்லாம் ஏராளமான புத்தகங்களைப் படைத்தவர். அவரது எழுத்துக்கள் ஒரு புறம் ஆதாரபூர்வமான தகவல்களால் நிரம்பியிருந்தாலும், மறுபுறம் வீண் வார்த்தைகள் ஏதும் இருக்காது.

தமிழில் அதுபோல் எவ்வளவோ முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன. திருநெல்வேலி சைவ சித்தாந்தக் கழகத்தால் வெளியிடப்பட்ட ‘புறநானூற்றுச் சொற்பொழிவுகள்’ என்ற நூலையும் படித்துப் பிரமிப்படைந்தேன். சென்னையில் பிப்ரவரி மாதம் 1944-ல் 19, 20, 22 ஆகிய மூன்று நாட்கள் நடைபெற்ற புறநானூற்று மாநாட்டில் பன்னிரு பண்டிதர்கள் வழங்கிய சொற்பொழிவுகளின் தொகுப்பு அது. அதே போல், 15.12.1940 அன்று நடந்த அகநானூற்று மாநாட்டுச் சொற்பொழிவுகளின் உரை வீச்சு, 11.12.1955 அன்று சென்னை ராஜாஜி மண்டபத்தில் நடைபெற்ற பதிற்றுப்பத்து சொற்பொழிவுகள் போன்றவையும் தொகுக் கப்பட்டுப் புத்தகங்களாக வெளியிடப் பட்டிருக்கின்றன. 21.08.1955 அன்று மதுரை திருவள்ளுவர் கழகத்தில் ஐங்குறுநூறு மாநாடு நடத்தப்பட்டு, அங்கு ஆற்றப்பட்ட சொற்பொழிவுகளும் தொகுக்கப்பட்டுள்ளன. பதினெண் கீழ்க்கணக்கு மாநாடு, குறுந்தொகை மாநாடு, கலித்தொகை மாநாடு, நற்றிணை சொற்பொழிவுகள் போன்றவையெல்லாம் தொகுக்கப்பட்டு வெளியிடப்பட்டன. இவை மட்டுமா, கவி. கா.மு. ஷெரீப் 1980-ல் புதுவை வானொலியில் உமறுப் புலவர் பற்றி நிகழ்த்திய அற்புதமான சொற்பொழிவுகள் சீறாப்புராணச் சொற்பொழிவுகளாகப் பதிப்பிக்கப்பட்டிருக்கின்றன.

இப்படிப் பல மாநாடுகள், பல சொற் பொழிவுகள், பல தொகுப்புகள்! எனினும், தமிழ் இலக்கியத்துக்காக மட்டுமன்றி, அரசியலறிவு குறித்தும் உரைகள் நிகழ்த்தப் பட்டிருக்கின்றன. மனித குலத்துக்கு அரசியல் சித்தாந்தங்களை வார்த்தளித்த பிளேட்டோ, வள்ளுவர், ரூசோ, எட்மண்ட் பர்க், மாக்கியவல்லி பற்றியெல்லாம் பிரமாதமான கருத்துருவாதங்கள் வைக்கப்பட்டு, உரைகள் நிகழ்த்தப்பட்டுத் தொகுக்கப்பட்டிருக்கின்றன.

மாநாடுகள், உரைவீச்சு மட்டுமல்ல! 1890-ல் மின்விளக்கு, பேனா போன்றவை கிடைக்காத காலகட்டத்தில், ஒரு தனிமனிதர் அறிவியல், மருத்துவம் உள்ளிட்ட அனைத்துத் துறைகளையும், நாடுகள், கண்டுபிடிப்புகள் போன்றவற்றையும் குறித்துத் தமிழர்கள் தெரிந்துகொள்ள வேண்டும் என்பதற்காகத் தரமான கலைக்களஞ்சியம் படைப்பதற்காகத் தகவல்களைத் தேடித் தேடிக் கண்டடைந்து மையைத் தொட்டுத் தொட்டு எழுதி, ஒவ்வொரு தாளாக உருவேற்றி ஆயிரம் பக்கங்களுக்கு மேலான அற்புதமான கலைக்களஞ்சியமாய் எழுதினார். எனினும் ‘கடை விரித்தேன் கொள்வார் இல்லை’ என்பதுபோல அதைப் பதிப்பிக்க முடியாமல் அல்லாடியபோது 1910 ல் பாண்டித்துரைத் தேவர் முன்வந்து பதிப்பித்து வெளியிட்டார். அதுதான் ‘அபிதான சிந்தாமணி’ எனும் அரிய கலைக்களஞ்சியம். அந்தப் படைப்பாளர் அ.சிங்காரவேலு முதலியாரை இன்று நாம் மறந்துவிட்டோம்.

சமீபமாக வாசிப்புப் பழக்கம் மேம்பட்டிருக்கிறது; புத்தகக் காட்சிகள் நிறைய நடக்கின்றன; மேம்பட்ட தரத்தில் நூல்கள் வெளிவருவது மகிழ்ச்சியளிக்கிறது. ஆனால், அறிவு சார்ந்த, செவ்வியல் இலக்கியம் சார்ந்த, அறிவியல் சார்ந்த, அரசியல் சிந்தனை சார்ந்த பழைய நூல்களை நாம் ஏன் மறந்துபோனோம்? நம் இலக்கியச் செல்வங்களை மீட்டெடுத்து அடுத்த தலைமுறைக்குக் கொண்டுசெல்லும் தரமான இலக்கியச் சொற்பொழிவுகள், கருத்தரங்கங்கள், ஆய்வரங்கம், நூலாக்கங்கள் ஏன் தடைபட்டுப் போனது? அறிவுலகத்தினர் சிந்திக்க வேண்டிய கேள்வி இது!

- த.செந்தில்குமார், காவல்துறை கண்காணிப்பாளர், திருச்சிராப்பள்ளி,

தொடர்புக்கு: spcampofficetrichy@gmail.com

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in