Last Updated : 12 May, 2017 09:15 AM

 

Published : 12 May 2017 09:15 AM
Last Updated : 12 May 2017 09:15 AM

குணசேகரா உனக்கு ஏது சாவு?

மே-12 கே.ஏ.குணசேகரன் பிறந்தநாள்

இன்றும் நினைவிருக்கிறது. சிவகங்கை மன்னர் துரைசிங்கம் அரசுக் கல்லூரி ஆண்டுவிழாவில், காற்றைக் கிழிக்கும் கணீர் குரலில், “சிவகங்கைச் சீமையிலே/ சிந்து பாட வந்தேனே / சீருடனே கவி பாடிடுவேனே…” என்று அண்ணன் பாடியபோது மாணவர்கள் மத்தியில் எழுந்த கைதட்டல் சத்தம். அந்தப் பகுதியே அதிர்ந்தது. இந்தப் பாடல்தான் திருச்சி வானொலி நிலையத்துக்கு அண்ணனை அழைத்துச் சென்றது. அந்தக் குரல் எங்கள் பாட்டன் தந்த சொத்து. களை எடுக்கும்போது, நீர் இறைக்கும்போது என்று பல்வேறு தருணங்களில் குரலெடுத்து அண்ணன் பாடும் பாடலைக் கேட்டு கிராமமே சொக்கி நின்றது.

சிறு வயதிலிருந்தே நடிப்பிலும் அண்ணனுக்கு ஆர்வம். அம்மாவுக்குப் பணி மஹூபா திரையரங்கில். ஆகையால், அண்ணனை அடிக்கடி அங்கே பார்க்கலாம். காலைக் காட்சியில் கொஞ்சம், மாலைக் காட்சியில் கொஞ்சம் என்று ஒருவிதத்தில் சினிமாவும் சேர்த்துதான் அண்ணனை வளர்த்தது. இரவில் வீட்டில் சினிமா ஓடும்.

அண்ணன் ஓட்டும் சினிமா அது. நடிகர், இயக்குநர், பாடகர் என்று பல அவதாரங்கள் எடுப்பார் அண்ணன். கொஞ்சம் வயதானதும் நாட்டுப்புறக் கலைஞர்களுக்கும் நிகழ்ச்சி களுக்கும் பெரிய முக்கியத்துவம் கொடுக்க ஆரம்பித்தார். பின்னாளில் கல்லூரி மேடைகள் வழியாக, பல்கலைக்கழகங்கள் வரை அவற்றைக் கொண்டுசென்றார்.

‘ஆக்காட்டி… ஆக்காட்டி’, ‘பாவாட சட்ட கிழிஞ்சுப் போச்சுதே’, ‘முக்கா மொழம் நெல்லுப் பயிரு’, ‘ஒத்த மாடு செத்துப்போச்சு’, ‘ஏழெட்டு வருசமா என்னத்தக் கண்டோம்’ என்று அண்ணனின் குரலில் ஒலித்த பல பாடல்கள், காற்றில் கலந்து தமிழர்கள் பலரின் சுவாசத்திலும் கரைந்துவிட்டவை. கவிஞர் இன்குலாப்பின் ‘மனுசங்கடா நாங்க மனுசங்கடா’ பாடலை அண்ணன் பாடிக் கேட்டவர்கள் மனம் கனக்க நின்றதை எத்தனையோ முறை பார்த்திருக்கிறேன்.

தனது ‘தன்னானே’ இசைக் குழு மூலம், இந்தப் பாடல்களைத் தமிழகத்தின் மூலை முடுக்கெல்லாம் கொண்டுசென்ற அவர், கொல்லங்குடிக் கருப்பாயி, சின்னப்பொண்ணு, மாரியம்மாள், ஆறுமுகம் என்று பல்வேறு கலைஞர்களைப் பரிமளிக்கவைத்தார். வெளிநாடுகளில் வாழும் தமிழர்களும் அவரது குழுவின் நாட்டுப்புறக் கலைகளை ரசித்து, தமிழ்நாட்டின் நினைவுகளில் திளைத்த தருணங்கள் நிறைய.

நாட்டுப்புறக் கலை வடிவங்களை வளர்த்தெடுப்பதில் அத்தனை அக்கறை காட்டினார். நாசரின் ‘தேவதை’ படத்தில் அவர் ‘அண்டங் கிடுகிடுங்க’ பாடியபோது, கூத்துக்கலையின் முழுவீச்சையும் சினிமாவுக்கும் தமிழ்ப் பொதுச் சமூகத்துக்கும் காட்டினார். இசைத் துறையில் நாள் முழுக்க வேலை செய்துகொண்டேதான் ‘தலித் அரங்கியல்’, ‘அக்னி ஸ்வரங்கள்’, ‘கரகாட்டம் ஓர் கண்ணோட்டம்’ என்று 34 நூல்களையும் அவர் எழுதினார் என்பது பலருக்கு ஆச்சரியம் அளிக்கலாம்.

அண்ணன் மறைந்து ஓராண்டாகிறது. ஆனால், தமிழகத்தில் எங்கு சென்றாலும் யாரோ ஒருவர் அவரை நினைவில் கொண்டுவந்து முன்னிறுத்திவிடுகிறார்.

“கே.ஏ.குணசேகரன் தங்கச்சிதானே நீங்க!” சில வாரங்களுக்கு முன் ஒரு கல்லூரி நிகழ்ச்சியில் மாணவர் ஒருவர் உரக்கப் பாடினார்: ‘மனுசங்கடா நாங்க மனுசங்கடா/ உன்னப் போல அவனப் போல எட்டுச்சாணு ஒசரமுள்ள / மனுசங்கடா நாங்க மனுசங்கடா!’

சாதிக்கு எதிரான, அடக்குமுறைக்கு எதிரான, ஜனநாயகத்துக்கான அந்தக் குரல் ஓங்கி ஓங்கி ஒலிக்கிறது: ‘மனுசங்கடா நாங்க மனுசங்கடா/ உன்னப் போல அவனப் போல எட்டுச்சாணு ஒசரமுள்ள / மனுசங்கடா நாங்க மனுசங்கடா!’

குணசேகரா உனக்கு ஏது சாவு?

- கே.ஏ.ஜோதிராணி, சென்னை காயிதே மில்லத் கல்லூரியில் பேராசிரியர், கே.ஏ.குணசேகரனின் சகோதரி.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x