Last Updated : 28 Jul, 2016 09:22 AM

 

Published : 28 Jul 2016 09:22 AM
Last Updated : 28 Jul 2016 09:22 AM

மாணவர் ஓரம்: தூதரக அதிகாரிகள் குடும்பத்தோடு வசிக்க முடியுமா?

பாகிஸ்தானில் பணிபுரியும் இந்திய தூதரகப் பணியாளர்கள் தங்கள் குழந்தைகளை இந்தியாவுக்குத் திருப்பி அனுப்பிவிட வேண்டும் என்று அறிவுறுத்தியிருக்கிறது மத்திய அரசு. புர்ஹான்வானி கொல்லப்பட்ட சம்பவத்தைத் தொடர்ந்து காஷ்மீரில் நடந்துவரும் போராட்டங்களைத் தனக்கு சாதகமாகப் பயன்படுத்திவருகிறது பாகிஸ்தான். இந்தச் சூழலில் இந்திய அதிகாரிகளின் குடும்பங்களுக்கு முறையான பாதுகாப்பு இருக்குமா எனும் சந்தேகம் மத்திய அரசுக்கு எழுந்திருக்கிறது. இதையடுத்து, ‘நான் - ஃபேமிலி அசைன்மென்ட்’ உத்தரவைப் பிறப்பித்திருக்கிறது.

இந்த உத்தரவு பிறப்பிக்கப்படும் நாடுகளுக்கு தூதரக அதிகாரிகள் தங்கள் குடும்பத்தை உடன் அழைத்துச் செல்ல முடியாது. இதுவரை, லிபியா, இராக், ஆப்கானிஸ்தானுக்கு அனுப்பப்படும் இந்தியத் தூதரகப் பணியாளர்கள் ‘தனி ஒருவ’னாகவே வாழ்ந்துவருகிறார்கள். இந்தப் பட்டியலில் இப்போது பாகிஸ்தானும் சேர்ந்திருக்கிறது. எனினும், இந்தியப் பணியாளர்கள் தங்கள் மனைவியுடன் தங்கியிருப்பதில் தற்போதைக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை.

பல்வேறு நாடுகளில் பணிபுரியும் ஐநா அதிகாரிகளுக்கும் இந்தக் கட்டுப்பாடு உண்டு. 2016 ஜனவரி 1-ன் நிலவரப்படி ஆப்கானிஸ்தான், அல்ஜீரியா தொடங்கி யேமன் வரை 30-க்கும் மேற்பட்ட நாடுகளின் நகரங்கள் இந்தப் பட்டியலில் இடம்பெற்றிருக்கின்றன. இப்படிப் பணிபுரிபவர்களுக்குச் சம்பளத்தில் கூடுதல் படி வழங்கப்படுகிறது. அதே சமயம், சம்பந்தப்பட்ட நாடுகளின் பாதுகாப்பு நிலை சீரடைந்துவிட்டதாக ஐநா கருதும்பட்சத்தில், பணியாளர்கள் தங்கள் குடும்பத்தினரை அங்கு அழைத்துக்கொள்ளலாம். கூடுதல் படியும் கிடைக்காது. இந்தப் பட்டியல் மாறுதலுக்கு உட்பட்டது எனும் குறிப்பு ஐநா இணையதளத்தில் இடம்பெற்றிருக்கிறது. இதில், பாகிஸ்தானின் லாகூர், இஸ்லாமாபாத், ராவல்பிண்டி உள்ளிட்ட 12 நகரங்கள் இடம்பெற்றிருப்பது குறிப்பிடத் தக்க விஷயம்.

- சந்தனார்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x