Last Updated : 25 Jul, 2016 09:33 AM

 

Published : 25 Jul 2016 09:33 AM
Last Updated : 25 Jul 2016 09:33 AM

மீண்டும் டிப்தீரியா

தடுப்பூசி குழந்தைகளுக்கானது மட்டுமல்ல; பெரியவர்களுக்கானதும் கூட



டிப்தீரியா - இந்த ஒற்றைச் சொல் விபரீதம் இன்றைய தேதியில் கேரள மக்களைக் கதிகலங்க வைத்திருக்கிறது. நோய் நமக்கும் வந்துவிடுமோ, நம் ஊருக்கும் பரவிவிடுமோ எனும் அச்சத்துடன்தான் பலரும் வாழ்கின்றனர். மலப்புரம், கோழிக்கோடு, கண்ணூர், திருச்சூர், பாலக்காடு, கோட்டயம், கொல்லம் ஆகிய 7 மாவட்டங்களில் டிப்தீரியா அச்சம் நிலவுகிறது.

சுகாதாரத்தில் முதலிடத்தில் இருக்கும் கேரளத்தில் எப்படி இந்த நிலை ஏற்பட்டது என்று வியப்பு ஏற்படலாம். மலப்புரத்தில் முஸ்லிம்கள் அதிகம். அவர்களில் ஒரு சிலரிடம் பரவியுள்ள அச்சமும் தயக்கமும்தான் தடுப்பூசிகளைப் போட விடாமல் தடுக்கின்றன. அம்மை நோய், மஞ்சள் காமாலை, இளம்பிள்ளை வாதம், டிப்தீரியா போன்ற நோய்களுக்கான தடுப்பு மருந்து என்ற பெயரில், நம் சமூகத்துக் குழந்தைகளுக்கு மலட்டுத்தன்மையை ஏற்படுத்தும் ஊசிகளை மேற்கத்திய நாடுகள் தயாரித்து அனுப்புகின்றன என்று மதப் பிரச்சாரகர்கள் சிலர் கிளப்பியுள்ள வீண் வதந்தி ஒரு காரணம். தடுப்பூசிக்கான மருந்தை சில பிராணிகளின் தோலிலிருந்தும் பன்றி இறைச்சியிலிருந்தும் மத நெறிகளுக்கு முரணான வகையில் எடுப்பதால் இவற்றைப் பயன்படுத்தக் கூடாது என்று கூறிவருகின்றனர். இதுவே, இப்போது முக்கியப் பிரச்சினையாக இருக்கிறது.

2008 வரை ஏறக்குறைய ஒழிக்கப்பட்டுவிட்டதாகக் கருதப்பட்ட டிப்தீரியா, இப்போது மீண்டும் கேரளத்தைத் தாக்கத்தொடங்கியுள்ளது. அங்கு பல மாவட்டங்களில் முறையாகத் தடுப்பூசி போடப்படவில்லை என்றும், அப்படியே முதன்மைத் தடுப்பூசி போட்டிருந்தாலும் மீண்டும் போட வேண்டிய ஊக்குவிப்பு ஊசி பலருக்குப் போடப்படவில்லை எனவும் தெரியவந்துள்ளது.

இந்த நோய் காற்றின் மூலம் பரவக்கூடிய ஒரு தீவிரமான தொற்றுநோய் என்பதால், முன்பு கேரளத்திலிருந்து பறவைக் காய்ச்சலும் பன்றிக் காய்ச்சலும் தமிழ்நாட்டுக்குப் பரவியதுபோல், இதுவும் பரவ அதிக வாய்ப்புள்ளது.

எது டிப்தீரியா?

‘காரிணி பாக்டீரியம் டிப்தீரியே’ (Corynebacterium diphtheriae) எனும் பாக்டீரியாக்களால் டிப்தீரியா ஏற்படுகிறது. இந்தக் கிருமிகளில் மைட்டிஸ், கிரேவிஸ், இண்டர்மீடியஸ் என்று மூன்று வகை உண்டு. கிரேவிஸ் வகைக் கிருமிகளால்தான் ஆபத்து அதிகம். இந்தக் கிருமிகள் நம் தொண்டையைப் பாதித்து, உணவு விழுங்குவதையும் மூச்சு விடுவதையும் தடுப்பதால், இதைத் ‘தொண்டை அடைப்பான்’ என்று அழைக்கிறார்கள்.

டிப்தீரியா பெரும்பாலும் 5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளையும் 10 வயதிலுள்ள சிறுவர், சிறுமிகளையும்தான் பெரிதும் பாதிக்கும். சமயங்களில் 40 வயதுக்கு மேற்பட்டவர்களையும் பாதிப்பது உண்டு. இந்த நோய் பாதித்துள்ளவரின் மூக்கு, தொண்டை, குரல்வளைப் பகுதிகளில் இந்தக் கிருமிகள் வளமாக வாழ்கின்றன. நோயாளி இருமும்போதும், காரித் துப்பும்போதும், மூக்கைச் சிந்தும்போதும் தொண்டைச் சளி, மூக்குச்சளி, எச்சில் ஆகியவற்றின் மூலம் காற்றில் கலந்து, அடுத்தவர்களுக்குப் பரவுகின்றன. தவிர, நோயாளி பயன்படுத்திய உடைமைப் பொருட்களின் வழியாகவும் இது அடுத்தவர்களுக்குப் பரவக்கூடும்.

அறிகுறிகள் என்ன?

அசுத்தக் காற்று மூலம் உடலுக்குள் நுழையும் இக்கிருமிகள் தொண்டை மற்றும் குரல்வளையில் குடிகொள்ளும். அப்போது காய்ச்சல் வரும். தொண்டை வலிக்கும். இருமல், சளித் தொல்லை தரும். சளியில் ரத்தம் வெளியேறும். கழுத்தில் இரண்டு பக்கங்களிலும் நெறி கட்டும்.

இக்கிருமிகள் அடுத்த சில நாட்களில் தொண்டையில் கருவெள்ளை நிறத்தில் ஒரு சவ்வை உருவாக்கும். இதுதான் உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும். இதைத் தொட்டாலே ரத்தம் கொப்பளிக்கும். ஆகவே, இதை அகற்ற முடியாது. மருந்துச் சிகிச்சையில்தான் சரியாக வேண்டும். இந்தச் சவ்வு வளர வளரத் தொண்டையை அடைக்கும். நோயாளி உணவை விழுங்கச் சிரமப்படுவார். மூச்சுவிட முடியாது. மேலும், இதிலுள்ள கிருமிகள் ஒருவித நச்சுப்பொருளை உற்பத்திசெய்து ரத்தத்தில் கலக்கும். இந்த நச்சு இதயம், நுரையீரல், மூளை, சிறுநீரகம் போன்ற உயிர் காக்கும் உறுப்புகளைச் சிதைக்கும். இதனால் உயிருக்கு ஆபத்து நேரும்.

டிப்தீரியாவை டான்சில் பாதிப்பு எனக் கருதி பலரும் அலட்சியமாக இருந்துவிடுவர். இந்த நோயை உறுதிசெய்ய, தொண்டைச் சவ்விலிருந்து துளியளவு திரவத்தைப் பஞ்சுக் குச்சியில் துடைத்து எடுத்துப் பக்குவப்படுத்தி நுண்ணோக்கியில் பார்த்தோமானால், டிப்தீரியா கிருமிகள் இருப்பது நன்றாகவே தெரியும். இதன் மூலம் நோயை உறுதிசெய்துவிடலாம்.

இந்த நோயை ஆரம்பக்கட்டத்திலேயே கண்டுபிடித்து, நோயாளியைத் தனிமைப்படுத்தி சிகிச்சை தர வேண்டியது முக்கியம். தகுந்த ஆன்டிபயாடிக் மருந்தையும், ‘ஆன்டி டிப்தெரிடிக் சீரம்’ என்ற மருந்தையும் கொடுத்தால், நோயாளி உயிர் பிழைக்க முடியும். நோய் முற்றிய நிலையில் சிகிச்சை பெறும்போதுதான் ஆபத்து அதிகம்; உயிர் பிழைப்பது கடினம்.

தடுக்க முடியுமா?

டிப்தீரியாவைத் தடுக்க முத்தடுப்பு ஊசி உதவுகிறது. இதில் டி.டி.டபிள்யூ.பி (DTwP), டி.டி.ஏ.பி (DTaP) என்று இரண்டு வகை உண்டு. குழந்தைக்கு ஒன்றரை, இரண்டரை, மூன்றரை மாதங்கள், ஒன்றரை வயது, ஐந்து வயது முடிந்தவுடன் இந்தத் தடுப்பூசிகளில் ஒன்றைப் போட வேண்டும். இப்போது முத்தடுப்பு ஊசியானது, ‘ஹிப்’, மஞ்சள் காமாலை - பி, போலியோ தடுப்பூசி ஆகியவற்றுடன் கலந்து ஒரே ஊசியாகவும் கிடைக்கிறது. இதற்கு ‘பென்டாவேலன்ட் தடுப்பூசி’ என்று பெயர். பல முறை ஊசி குத்தினால் குழந்தைக்கு வலிக்கும் என்று கருதுபவர்கள், இந்த பென்டாவேலன்ட் தடுப்பூசியை ஒவ்வொரு முறையும் ஒரு ஊசி போட்டுக்கொண்டால் போதும்.

பெரியவர்களுக்கும் தேவை தடுப்பூசி!

நம் நாட்டைப் பொறுத்தவரை தடுப்பூசி என்பது குழந்தைகள் சமாச்சாரம் என்றே பலரும் நினைக்கின்றனர். அப்படியில்லை. இளம் வயதினருக்கும் முதியவர்களுக்கும் பல தடுப்பூசிகள் உள்ளன. இவற்றைப் போட்டுக்கொள்வது அவர்களின் உயிரையே காப்பாற்றும். அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட மேலை நாடுகளில் இவற்றைப் போட்டுக்கொள்ள வேண்டியது கட்டாயம். ஆனால், இந்திய மக்களிடம் இது தொடர்பான விழிப்புணர்வு இல்லை என்பது கவலை தரும் விஷயம்.

பிறந்த குழந்தைக்கு நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருப்பது போலவே, வயதாக ஆக எதிர்ப்பு சக்தி குறைய ஆரம்பிக்கிறது. அதிலும், முதுமைப் பருவத்தில் மிகமிகக் குறைவாகவே இருக்கிறது. அந்த நேரத்தில் டிப்தீரியா, நிமோனியா போன்ற நோய்கள் தாக்கினால், ஆரோக்கியம் பாதிக்கப்படுவதுடன், உயிர் இழப்பும் ஏற்படலாம். முதியவர்கள் தங்களுக்கான தடுப்பூசிகளைப் போட்டுக்கொள்வதன் மூலம் இம்மாதிரியான தீவிர நோய்களை வரவிடாமல் தடுக்கலாம்.

இதற்கு நாம் என்ன செய்ய வேண்டும்?

குழந்தைப் பருவத்தில் முத்தடுப்பூசி போட்டிருந்தாலும், 10 வயதுக்கு மேற்பட்டவர்கள் அனைவரும் மீண்டும் ஒருமுறை ‘டிஏடிபி’ (Tadp) எனும் தடுப்பூசியைப் போட்டுக்கொள்ள வேண்டும். அதன் பிறகு 10 வருடங்களுக்கு ஒருமுறை ‘டிடி’ (Td) எனும் தடுப்பூசியை போட்டுக்கொள்ள வேண்டும். இப்படிப் போட்டுக்கொள்வதால் இரண்டுவித நன்மைகள் கிடைக்கின்றன. ஒன்று, இவர்களுக்கு டிப்தீரியா மற்றும் டெட்டனஸ் நோய்கள் ஏற்படாது. அடுத்து, இவர்கள் மூலம் மற்றவர்களுக்கு இந்த இரண்டு நோய்கள் பரவுவது தடுக்கப்படுகிறது.

வளரும் பருவத்தினருக்கும் பெரியவர்களுக்கும் போடப் பட வேண்டிய முத்தடுப்பு ஊசி உள்ளிட்ட பல தடுப் பூசிகள் குறித்து பள்ளி, கல்லூரி மாணவர்கள் மற்றும் பொதுமக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்துவதில் அரசின் சுகாதாரத் துறை இன்னும் மேம்பட்ட முறையில் செயல்பட வேண்டும். தற்போது முத்தடுப்பு ஊசி மட்டும் அரசு மருத்துவமனைகளில் இலவசமாகக் கிடைக்கிறது. இதுபோல் மற்ற இரண்டு தடுப்பூசிகளையும் இலவசமாகப் போடுவதற்கு அரசு ஏற்பாடு செய்தால், 50 வயதுக்கு மேற்பட்டவர்கள் அனைவரும் இன்னும் நல்ல ஆரோக்கியம் பெறுவர். சராசரி ஆயுட்காலம் இன்னும் அதிகமாகும்!

- கு.கணேசன், பொதுநல மருத்துவர்,

தொடர்புக்கு: gganesan95@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x