Published : 04 Jan 2016 08:51 AM
Last Updated : 04 Jan 2016 08:51 AM

வெறுப்புப் பிரச்சாரங்களை முறியடிப்போம்!

சோமாலியா இணைய இதழ்

*

அச்சம், கோபம், கையறுநிலை, வெறுப்பு, குரூரம் என்று மனிதர்களின் பொதுக் குணங்கள் கொதிநிலையை அடைந்திருக்கின்றன. தனிமனிதர்களிடமும், குழுக்களிடமும், நாடுகளிடமும் மிக மோசமான வெளிப்பாடுகளும், அபூர்வமாக ஆக்கபூர்வமான வெளிப்பாடுகளும் தோன்றி மறையும் காலம் இது.

ராணுவமயம் மற்றும் பயங்கரவாதம் ஆகியவை இந்தப் போக்கை ஆபத்தான வகையில் முடுக்கிவிட்டிருக்கின்றன. இரண்டுமே குறுகிய பார்வை கொண்டவர்களாலும், பொய்ப்பிரச்சாரத்தின் மூலம் தங்களுக்கு ஆதரவு திரட்டக்கூடியவர்களாலும் முன்னெடுக்கப்படுபவை. இந்த நாசகாரப்போக்கு பல நாடுகளில் கற்பனை செய்ய முடியாத அளவுக்கு பாதிப்பை ஏற்படுத்தியிருக்கிறது. வளர்ந்துவரும் நாடுகளைக் குலைத்துப்போட்டது, மேற்கத்திய நாடுகளின் வெளியுறவுக் கொள்கையில் நஞ்சை விதைத்தது என்று இதன் பாதிப்புகள் அதிகம்.

இந்தப் பின்னணியில், இந்த நூற்றாண்டில் கேட்கப்பட வேண்டிய முக்கியமான கேள்வி இதுதான். “ஆபத்தான இந்தப் போக்கைத் தடுத்து, இயல்புநிலைக்குக் கொண்டுவருவது எப்படி?”

“பயங்கரவாதிகள் அமெரிக்காவைத் தாக்க முயல்வதற்குக் காரணம், நாம் (அமெரிக்கர்கள்) பல உரிமைகளைக் கொண்டிருப் பதாலோ, ஜனநாயக முறையில் தேர்தல் நடத்துவதாலோ அல்லது பெண்கள் வேலைக்குச் செல்ல அனுமதிக்கப்படுவதாலோ அல்ல. வெளிநாடுகளின் விவகாரங்களில் தலையிடும் அமெரிக்காவின் வெளியுறவுக் கொள்கையால்தான் அவர்கள் சீற்றமடைந்திருக்கிறார்கள்” என்று ஒசாமா பின் லேடனின் மறைவிடத்தைத் தேடி அலைந்த படைக்குத் தலைமை வகித்தவரும் சிஐஏ முன்னாள் அதிகாரியுமான மைக்கேல் ஷீயர் குறிப்பிட்டிருக்கிறார்.

இதற்கிடையே, அமெரிக்காவில் முஸ்லிம் வெறுப்பு பிரச்சாரத்தைக் குடியரசுக் கட்சி வேட்பாளர்களில் ஒருவரான டொனால்டு டிரம்ப் தொடர்ந்து செய்துவருகிறார். இந்தப் பிரச்சாரத்தை வலுப்படுத்த பல சிந்தனையாளர் குழுக்கள், பேச்சாளர்கள், ஃபாக்ஸ் நியூஸ் போன்ற ஊடகங்கள் முனைப்புடன் செயல்படுகின்றன.

இதுபோன்ற வெறுப்புப் பிரச்சாரங்களை முறியடிக்க, நடுநிலையாளர்களின் குரலும் ஓங்கி ஒலிக்கின்றன. ஆஸ்கர் விருது பெற்ற ஆவணப்பட இயக்குநர் மைக்கேல் மூர் போன்றவர்கள் டிரம்பின் பேச்சுகளைக் கடுமையாக விமர்சித்திருக்கிறார்கள். “நாம் அனைவரும் முஸ்லிம்கள்” எனும் பிரச்சாரத்தைத் தொடங்கியிருக்கிறார் மைக்கேல் மூர். உண்மையில் கிறிஸ்தவர்கள், முஸ்லிம்கள் மட்டுமல்லாமல் யூதர்களும் பல நூற்றாண்டுகளாக ஒற்றுமையாக வாழ்ந்து வந்தவர்கள்தான்.

கடந்த டிசம்பர் மாதம், கென்யாவின் மண்டேரா நகரில் கிறிஸ்தவப் பயணிகளைக் கடத்திப் படுகொலை செய்ய அல்-ஷபாப் பயங்கரவாத அமைப்பினர் முயன்றபோது முஸ்லிம்கள் தங்கள் உயிரைப் பணயம் வைத்து அவர்களைக் காப்பாற்றினர். தீமைகளுக்கு எதிரான இதுபோன்ற ஒற்றுமை நிகழ்வுகள், மனிதர்களை மதத்தின் அடிப்படையில் பிரிக்கும் வெறுப்புப் பிரச்சாரத்துக்கு முடிவுகட்டும். அதேசமயம், ஊடகங்கள், குறிப்பாக மேற்கத்திய ஊடகங்கள் முஸ்லிம்கள் தொடர்பான எதிர்மறையான விஷயங்களைக்காட்டிலும் ஆக்கபூர்வமான விஷயங்களை வெளிக்கொணர்வதில் ஆர்வம் காட்ட வேண்டும்.

நாம் நமக்கு உண்மையாகவும் நேர்மையாகவும் நடந்து கொள்வோம். நமது வாழ்வும் எதிர்காலமும் அதைப் பொறுத்துத்தான் அமையும். ராணுவமயமும், பயங்கரவாதமும் ஒரு நாணயத்தின் இரு பக்கங்கள்தான். மேற்கத்திய எதிர்ப்புப் பிரச்சாரங்களும், முஸ்லிம் வெறுப்புப் பிரச்சாரங்களும் அவற்றின் பிரதிபலிப்புகள்தான். இந்நிலையில், பரஸ்பர நம்பிக்கைகள் நிலைத்திருக்க நாம் ஒற்றுமையாகச் செயல்பட வேண்டியது அவசியம்.

தமிழில் சுருக்கமாக: வெ. சந்திரமோகன்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x