Last Updated : 27 Dec, 2013 12:00 AM

 

Published : 27 Dec 2013 12:00 AM
Last Updated : 27 Dec 2013 12:00 AM

இறுதிப் போரும் மேரிகளின் கதையும்

மேரி 16 வயதுச் சிறுமி. மன்னார், விடத்தல்தீவில் அம்மாவுடன் வசிக்கிறாள். இளைஞர் அணி ஒன்றில் உறுப்பினராகவும் இயங்குகிறாள். இளைஞர் அணியில் இந்தச் சிறுமிக்கு என்ன வேலை என்று கேட்பதைத் தவிர்க்க முடியாதிருந்தது. 12 வயதுச் சிறுமிகள்கூட இளைஞர் அணியில் உறுப்பினர்களாக இருப்பதாகக் கூறினாள் மேரி. அவளுக்கு ஊரைப் பற்றிய விபரங்கள் முழுதும் தெரிந்திருந்தன. தனது சிறுபிராயம் முதற்கொண்டு நினைவு அடுக்குகளை மிக அழகாகவும் எளிமையாகவும் ஒவ்வொன்றாகப் பிரித்தெடுத்தாள் மேரி. முன்னர் அவளது கிராமம் எப்படிச் செழிப்போடும் இயல்போடும் இருந்ததென்று அவள் விபரிப்பதை நான் முழுமையாகக் கேட்க வேண்டும் என்று எதிர்பார்த்தாள்.

பெரிய வீட்டு எச்சங்கள்

தனது வீடு, நடுவில் நிலாமுற்றத்துடன் ஐந்து அறைகள் மண்டபம்போன்ற சமையல் அறையுடன் பெரிதாக இருந்ததையும் வீட்டு முற்றத்தில் செம்பருத்தி, மல்லிகைச் செடிகளும் பூமரங்களும் செழித்து நிரம்பி யிருந்ததையும் நினைவுகூர்ந்தாள். பூவரசு மரத்தின் இதய வடிவ இலைகளும் ஸ்பீக்கர் வடிவப் பூக்களும் அவளுக்குப் பிடிக்கும். இந்த மரங்களில் இருந்து மலர்கள் புரண்டு வாசனையை அள்ளிவருகின்ற இதமான காற்றை உலகத்தில் எங்குமே அனுபவிக்க முடியாதென்றாள்.

மேரி ஒரு காலத்தில் பெரிய வீட்டில் வசித்தாள் என்பதற்கான தடயங்கள் மட்டுமே இப்போது எஞ்சியிருந்தன. உடைந்து பெயர்ந்த சுவர்களில் மரக்கால்களை நட்டுத் தகரக் கூரை வேய்ந்திருந்தார்கள். அப்போது மழைக் காலமாக இருந்தபடியால் தகரக்கூரையின் கீழ் இருப்பதன் அவதியை உணர முடியாதிருந்தது. மேரியின் வீட்டைப் போன்றுதான் அங்கு எல்லா வீடுகளும் வெறும் தடயங்களாக மட்டும் காட்சிதந்தன. போரின் தாக்கத்திலிருந்து தப்பிய ஒரு வீட்டைத்தானும் அங்கு காண முடியாது.

வீட்டின் எதிர்முனை ராணுவ முகாம். அடிக்கடி கவனத்தில் தோன்றி இயல் பாக இருக்க விடாது அலைக்கழித்தது. ஏனைய கிராமங்களை விடவும் ராணுவ நடமாட்டம் இங்கு அதிகம் காணப் பட்டது. விடத்தல்தீவு முற்றிலும் புலிகள் வசமாகவும் புலிகளினு டையது என்றுமே அறியப்பட்டதென்பதால், இங்கிருக்கிறவர்களைப் புலிகளாகக் கருதியே ராணுவம் கண்காணிப்புச் செய்கிறது. மக்கள் ராணுவக் கட்டுப்பாட்டிலான வாழ்வுக்குப் பழகிவிட்டிருந்தார்கள்.

புலி வாழ்க்கை

மேரியின் வீட்டின் அரைச் சுவரில் இயேசு படம் மாட்டப்பட்டிருந்தது. உருகும் மெழுகுத் திரிக்கு இரு பக்கமாக இரு ஆண்களின் படங்கள். ஒன்று, கருப்பு வெள்ளைப் படம். மற்றையது, நீல நிறப் பின்னணியில் வெள்ளைச் சட்டை அணிந்த அரைப் படம். அவர்கள் மேரியின் அண்ணன்கள். இருவருமே புலிகள் அமைப்பில் போராடி மரித்தவர்கள்.

“இரண்டு ஆண் பிள்ளைகளைப் பெற்று, இரண்டையும் பலிகொடுத்திருக்கிறேன். மகளும் நானும் யார் உதவியும் இல்லாமல் நிற்கிறோம். புலிகள் மனது வைத்திருந்தால் எங்களுக்கு அப்போதே உதவிசெய்திருக்கலாம். இறுதிப் போருக்கு முன்பாகவே என் மக்கள் இறந்துபோனார்கள்’’ மேரியின் தாய் தனது கோபத்தையும் ஆற் றாமையையும் வெளிப்படுத்தத் துவங்கினார்.

மூத்த மகன் விருப்பத்துடனேயே புலிகளோடு இணைந்துவிட்டிருந்தான். அவன் வீரமரணமடைந்த பின்னர், இரண்டாமவனைப் புலிகள் பலவந்தமாகவே சேர்த்துக்கொண்டுள்ளனர். அப்படிச் சேர்த்துக்கொள்ளப்பட்டவன், சேர்ந்த ஒரு மாதத்துக்குள் இறந்துவிட்டதாகப் புலிகளிடமிருந்து அறிவித்தல் வரப் பெற்றதாக, சுவரில் மாட்டியிருக்கும் அவனது படத்தைப் பார்த்துக்கொண்டே கண்ணீர் வடிக்கிறார் மேரியின் தாய். அவன் இருந்திருந்தால், தனக்கும் மகளுக்கும் துணையாக இருந்திருப்பான் என்பதைத் திரும்பத் திரும்பக் கூறித் திருப்திப்பட்டுக் கொண்டிருந்தார். மூத்தவன் மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலையில் இருந்து நேரடி யாகச் சண்டைகளில் பங்கேற்றவன். பல முறை தாய் தங்கையைப் பார்ப்பதற்காக விடத்தல்தீவுக்கு வந்து சென்றிருக்கிறான். ஆனால், இரண்டாமவனுக்கு என்ன நடந்தது? எங்கு இருந்தான்? எப்படி இறந்தான் என்ற எந்த விபரமும் அவர்களுக்குத் தெரியவில்லை. இது தார்மீகக் கோபமாக அவர்களிடையே மாறியிருந்தது.

இடுப்பிலும் தலையிலுமாகத் தண்ணீர்க் குடங்களைத் தாங்கிக்கொண்டு புறப்பட்டார் மேரியின் அம்மா. கடலை அண்டிய பகுதி என்பதால், கிராமம் தோன்றிய காலம் முதல் குடிநீர் பிரச்சினை இருந்துவருவதாக விபரித்தார்கள். அங்குள்ள கிணற்று நீரில் உப்புச் சுவை மிகையாக இருப்பதால் அருந்த முடியவில்லை. போருக்கு முன்னர் குடிநீர் கிடைத்தது என்றார்கள். அரசுசார்பற்ற நிறுவனமொன்றின் அனுசரணையுடன் துவங்கப்பட்ட திட்டமொன்றின் உதவியில் குடிநீர் கிடைக்கப்பெற்றது நினைவுகளாக மாறியிருந்தன. விடத்தல்தீவு கிராமம் ராணுவ வசமாகும் நிலையை அடைந்ததும் தப்பியோடும்போது நீர்த்தாங்கியைப் புலிகள் குண்டுவைத்துத் தகர்த்துள்ளனர். உயரமான அந்தக் குடிநீர்த் தாங்கியில் ஏறிநின்று கவனித்தால், பல மைல்கள் வரைக்குமான நடமாட்டங்களைக் கண்காணிக்க முடியும் என்பதால், ராணுவ நடமாட்டத்தை வேவுபார்க்க அதன் மேலேயே புலிகளின் முகாமொன்றும் இருந்துள்ளது. பாரிய உருளைகளாகத் தகர்ந்து கிடக்கும் நீர்த் தாங்கியைச் சூழ புற்கள் அடர்ந்து காடு மண்டியிருக்கிறது.

சிதைவுகளின் உருவாக்கம்

வீடுகள் முழுவதும் போரினாலேயே சிதைந்தவை இல்லை, ராணுவத்தினால் சேதமாக்கப்பட்டவை என்கிறார் மேரியின் அம்மா. “மீளக்குடியேறியபோது வீடு கள் போரில் சேதமாக்கப்பட்டதாகத்தான் நாங்களும் நம்பினோம். கரையோரமாக நிலைகொண்டிருக்கும் ராணுவ முகாம்கள் இரண்டுக்கிடையிலான போக்குவரத்தை எளிதாக்கும் பொருட்டு, புதிய மரப்பாலமொன்றைக் கடலில் ராணுவம் நிறுவியுள்ளது. இரு முகாம்களுக்கிடையிலான தூரம் 12 கிலோமீற்றர்கள். இதற்காக எங்கள் தென்னை, பனை மரங்களை வெட்டி வீழ்த்தியும் வீட்டுக் கூரைகளைத் தகர்த்தும், கதவு ஜன்னல்களை உடைத்தும் முகாம் களையும் கடலில் மரப்பாலத்தையும் ராணுவம் நிர்மாணித்துக்கொண்டுள்ளது.”

“இன்னும் கொஞ்ச நாளில் அந்த மரப்பாலம் உப்புத் தண்ணீரில் உக்கி கடலில் விழுந்திடும் பாருங்கள்” எனப் பல பெண் குரல்கள் சபிக்கிற தொனியில் ஒலித்தன.

புலிகளின் நிர்வாகத்தில் வங்கிகளில் நகை அடகுக் கடன் நடைமுறை இருந்தபோது பல லட்சம் பெறுமதியான நகைகளை அடகுவைத்திருந்தவர்கள் இன்னமும் புலம்பித் திரிகிறார்கள். சகாயம், புலிகளின் வங்கியில், பத்து பவுன் தங்க ஆபரணங்களை வெவ்வேறு கட்டங்களில் அடகுவைத்திருந்திருக்கிறார். இறுதி முறை நான்கு பவுன் சங்கிலியைப் 10,000 ரூபாய்க்கு அடகுவைத்தாராம். குடும்ப நிலையால் அப்படிச் செய்தேன் என்றும், இப்போது 10,000 ரூபாய்க்கு நான்கு பவுனில் சங்கிலி வாங்க முடியுமா என்றும் அங்கலாய்க்கிறார். ராணுவம் முன்னேறி வரும்போது வங்கியிலிருந்த பணம், நகைகளைப் புலிகள் எடுத்துக்கொண்டுதான் சென்றார்கள். இறுதியில், அது எங்களுக்கும் இல்லாமல் அவர்களுக்கும் இல்லாமல் போனதென்கிறார்.

மின்சாரம் இல்லாத அந்தப் பகுதியில், இருட்டிய பின்னர் தீப்பந்தங்களுடன் நடமாடுகிறார்கள். அதுவும் மாலை ஏழு மணிவரைதான். மிகப் பக்கமாகக் கூப்பிட்டால் கேட்கிறளவு தொலைவுக்குச் செல்வதாக இருந்தால், அதுவும் தவிர்க்க முடியாதென்ற நிலையில் மட்டுமே ஏழு மணிவரை நடமாட்டத்தைக் காண முடிந்தது.

இறுதிப் போருக்குப் பின்

தீப்பந்தத்தை ஏந்திப் பிடித்தவாறு நானும் மேரியும் ஒரு வீட்டுக்குச் சென்றோம். இறுதிப் போரில் கணவனை இழந்த ஒரு பெண்ணின் வீடு அது. 10 அடிக்கும் குறைவான சதுர வடிவில் ஓலைகள் செருகிய, ஓலைகளில் கதவைக் கொண்டிருந்த, ஜன்னல்கள் இல்லாத அந்த வீட்டை அடைந்தோம். அவர்கள் இரவு உணவை உண்பதற்குத் தயாராக இருந்தார்கள். உப்புக் கருவாட்டை நெருப்பில் சுட்டுத் தேங்காய்த் துருவலுடன் பிள்ளைகளுக்குப் பகிர்ந்தளிப்பதற்காக மண்சட்டியில் சோறு பிசைந்துகொண்டிருந்தாள் அவள். பன்னிரண்டு, எட்டு வயதுகளில் அவளுக்கு இரு பிள்ளைகள். நண்டு உடைத்தல், வலை பிரித்தல், பின்னுதல் தொழில் செய்கிறாள். விடத்தல்தீவில் இவை பெண்களின் பிரதான தொழில்கள். இவற்றால் கிடைக்கிற நூறு, இருநூறு ரூபாய்ப் பணத்தில் முழுக் குடும்ப சீவியத்தை நடத்துகிற நூற்றுக்கும் அதிகமான பெண்கள் இருக்கிறார்கள். விவசாயியாக இருந்த அவளது கணவனுடன் போருக்கு முன்னர் சீமாட்டிபோல அவள் வாழ்ந்தாள் என்று மேரி கூறினாள்.

விளக்கின் தீபத்தை வெறித்தபடி அவள் திடீரென மௌனமானாள். பிள்ளைகள் அவளது தோளைத் தட்டி அசைத்தனர். ‘விட்டுட்டுப் போய்ட்டாரே அவர்’ என திரும்பத் திரும்பக் கூறினாள். அழுகையூடாக என்னை நேராக நோக்கிப் புன்னகைத்தாள். மீண்டும் அமைதியாக தீபத்தையே வெறித்தாள். அவளது கண்களிலிருந்து நீர் வடிந்தது. கணவனை இழந்ததிலிருந்து அவள் இப்படித்தான் இருக்கிறாளாம். இறுதிப் போர் குறித்தோ அதில் மாண்டவர்கள் குறித்தோ பேசுகிறபோதெல்லாம் அம்மா இப்படி ஆகிவிடுவதாகப் பிள்ளைகள் கூறினார்கள்.

- ஷர்மிளா செய்யித், எழுத்தாளர், தொடர்புக்கு: sharmilaseyyid@yahoo.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x