Last Updated : 14 Apr, 2017 11:03 AM

 

Published : 14 Apr 2017 11:03 AM
Last Updated : 14 Apr 2017 11:03 AM

வறட்சியில் வாடும் தமிழகம்

கோயம்பத்தூருக்கு அருகில் உள்ள வீரகேரளத்தில் கரும்பு கலப்பின ஆராய்ச்சிக் கழகம் இருக்கிறது. சில நாள்களுக்கு முன்னால் அங்கே செல்ல முயன்ற எங்களுக்கு வழக்கத்தைவிட அதிக நேரம் பிடித்தது. போக்குவரத்து நெரிசலால் அல்ல, சாலை நெடுகிலும் மக்கள் காலி பிளாஸ்டிக் குடங்கள், வாளிகளுடன் தண்ணீர் லாரிக்காக ஆயிரக்கணக்கில் காத்துக்கிடக்கின்றனர்.

வாகனத்தை நிறுத்திவிட்டு அவர்களை அணுகியபோது, “வீட்டில் சொட்டுகூட தண்ணீர் இல்லை, இரண்டு நாள்களாகத் தண்ணீர் லாரிக்காகக் காத்துக்கொண்டிருக்கிறோம்” என்றார் சீரநாயக்கன்பாளையத்தைச் சேர்ந்த குடும்பத் தலைவி ராஜேஸ்வரி. “இந்தக் கோடையில் உங்களுக்குக் குடிப்பதற்குக் கொடுக்க வீட்டில் ஒரு டம்ளர் தண்ணீர் இல்லையே!” என்று அந்த நிலையிலும் வருந்துகிறார். லேசான மழை பெய்த சில நாள்களிலேயே வெப்பம் கடுமையாக உயர்ந்ததால் இப்பகுதி முழுக்க இந்தத் தண்ணீர் பற்றாக்குறை.

தண்ணீர் லாரி குறிப்பிட்ட நாள்களில், குறிப்பிட்ட நேரத்துக்கு வருவதில்லை என்று பலரும் கூறினர். தண்ணீர் லாரி எப்போது வந்தாலும் தண்ணீர் பிடித்தால்தான் வீட்டில் சமையல் மற்றும் இதர பணிகளைக் கவனிக்க முடியும் என்பதால் ஏராளமான பெண்கள் வேலைக்குப் போவதைக்கூட நிறுத்திவிட்டு சாலையையே பார்த்துக்கொண்டிருக்கின்றனர். தண்ணீர் லாரி வந்துவிட்டால் எல்லோரிடமும் ஒருவித பதற்றமும் அச்சமும் தொற்றிக்கொள்கிறது. வீட்டுக்கு முழுதாக நிரப்பிக் கொள்வதற்குள் தண்ணீர் தீர்ந்துவிடுமோ, லாரி போய்விடுமோ என்பதுதான் அந்த அச்சத்துக்குக் காரணம்.

“தண்ணீர் பிரச்சினை ஆண்டுதோறும் கோடைக் காலத்தில் வருவதுண்டு இந்த ஆண்டு மிகமிக மோசமாக இருக்கிறது. பிப்ரவரி இறுதியிலிருந்தே தண்ணீருக்காக வரிசையில் காத்திருத்தல் தொடங்கி ஜூன் மாத இறுதிவரை நீள்கிறது” என்கிறார் ராஜேஸ்வரி.

140 ஆண்டு காணாத வறட்சி

இந்த ஆண்டு வறட்சி, விவசாயிகளுக்குப் பெருந்துயராக மாறிக் கொண்டிருக்கிறது. வட கிழக்குப் பருவமழை பொய்த்தது, தென் மேற்குப் பருவமழையில் சும்மா நனைத்துவிட்டுச் சென்றது. 140 ஆண்டுகளில் இருந்திராத வறட்சி எங்கும் வாட்டுகிறது.

மேட்டூரில் உள்ள ஸ்டான்லி நீர்த்தேக்கத்தில், மொத்தக் கொள்ளளவில் வெறும் 7% தான் நீர் தேங்கியிருக்கிறது. காவிரி டெல்டாவுக்கு ஜீவநாடியான இந்த அணை வறண்டதால், இதை மட்டுமே நம்பியிருக்கும் 10 மாவட்டங்களில் குடிநீருக்குக் கடும் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. மார்ச் மாத இறுதியில் மேட்டூர் நீர் அளவு 6.5 டி.எம்.சி.யாகக் குறைந்துவிட்டது. அணையின் மொத்தக் கொள்ளளவு 93.47 டி.எம்.சி. 2013 ஜூனில் 2.89 டி.எம்.சி.யாகக் குறைந்ததுதான் இதுவரையில் மிகவும் தாழ்நிலை அளவாகும்.

பருவமழைக் காலம் ஒரே மாதிரியாக இருக்காது என்று அனுபவத்தில் தெரிந்து வைத்திருக்கிறோம். ஆனால் மழையைப் பெருக்கவும் மழை நீரைச் சேமிக்கவும் ‘நாம்’ எதையுமே செய்யவில்லை என்று 80 வயதைக் கடந்த முதியவர் ஒருவர் அரசை மறைமுகமாகச் சுட்டிக்காட்டினார்.

பயிர்களுக்கு பாதிப்பு

வறட்சி எல்லாப் பயிர்களையும் கடுமையாக பாதித்திருக்கிறது. ரொக்கப் பயிர்களான கரும்பு, மஞ்சள், தண்ணீர் அதிகம் தேவைப்படும் நெல், தேயிலை உள்ளிட்ட தோட்டப் பயிர்கள், தென்னை போன்ற அனைத்தும் பாதிப்படைந்துள்ளன. கரும்பு சாகுபடிப் பரப்பு நான்கில் ஒரு பங்காகச் சுருங்கிவிட்டது. சொட்டுநீர்ப்பாசனத்தைக் கையாண்டால்தான் கிடைக்கும் தண்ணீரில் 40% சேமிக்க முடியும் என்கிறார் பாரத ஸ்டேட் வங்கி அதிகாரி.

தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், கடலூர், திருச்சி, புதுக்கோட்டை, அரியலூர் ஆகிய 7 காவிரி டெல்டா மாவட்டங்களில் நெல் சாகுபடிதான் அதிகம் மேற்கொள்ளப்படுகிறது.

“ஒன்றரை ஏக்கரில் நெல் விதைத்தேன், தண்ணீரில்லாமல் பயிர் காய்ந்துவிட்டது” என்று வருந்துகிறார் லால்குடியைச் சேர்ந்த சுரேஷ். “சாகுபடிக்குச் செய்த செலவு அனைத்தும் வீணாகிவிட்டது. மத்திய அரசு விவசாயக் கடனை முழுதாகத் தள்ளுபடி செய்வதுடன் காவிரி மேலாண்மை வாரியத்தை உடனடியாக ஏற்படுத்தி, கர்நாடகம் தமிழ்நாடு இரண்டுக்குமே பாரபட்சமில்லாமல் தண்ணீரைத் தர நடவடிக்கை எடுக்கும் என்று நம்புகிறோம்” என்றும் அவர் குறிப்பிட்டார்.

முப்பது ஆண்டுகளுக்கு முன்னால் சம்பா, தாளடி சாகுபடி பரப்பு 21.42 லட்சம் ஹெக்டேராக இருந்தது, இப்போது 15 லட்சம் ஹெக்டேராகக் குறைந்திருக்கிறது. சாகுபடியும் இந்த முறை பலத்த அடி வாங்கியிருக்கிறது. டெல்டா மாவட்டங்களில் நேரடியாக விதைக்கப்பட்ட நெல் முழுக்க சாவியாகிவிட்டது. நாற்றங்கால் போட்டு நட்ட பயிர்களும் தண்ணீரில்லாமல் கருகிவிட்டன என்று வேளாண்மைத் துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

சுமார் 3 லட்சம் ஏக்கர் நிலத்தில், கிணற்று நீரைக் கொண்டு சாகுபடி செய்ததுகூட நல்ல மகசூலைத் தரவில்லை. ஒரு ஏக்கருக்கு சராசரியாக 2,100 கிலோ தர வேண்டிய நிலத்தில் வெறும் 700 கிலோ முதல் 1,000 கிலோ வரை மட்டுமே மகசூல் கண்டிருக்கிறது.

“இந்த ஆண்டு சம்பா முழுக்க சாவியாகிவிட்டது, தொடர்ந்து ஐந்தாவது பருவமாக குறுவையும் பொய்த்துவிட்டது” என்கிறார் தஞ்சாவூரைச் சேர்ந்த விவசாயி தண்டபாணி. ஒரத்த நாட்டில் உள்ள தண்டபாணியின் நிலத்தில் 2016 ஜனவரி முதலே அறுவடை நடைபெறவே இல்லை. வாய்க்காலை ஒட்டிய நிலம் என்பதால் மேட்டூர் அணை திறக்கப்பட்டால் சாகுபடி செய்துவிட முடியும் என்ற நம்பிக்கையில் காத்திருக்கிறார். கொஞ்சமாகத் தண்ணீர் வந்தால்கூட ஈரம்பட்டு பயிர் பிழைத்துக்கொள்ளும் என்கிறார். மழை ஒரு சொட்டுகூட இதுவரை பெய்யவில்லை.

ஈரோடு மஞ்சள் சாகுபடியாளர்களின் கவலை அதற்கும் மேலே. 2015-16-ல் 10,000 ஹெக்டேரில் மஞ்சள் கிழங்கு பயிரிடப்பட்டது. இப்போது அதில் 60% நிலங்களில் மஞ்சள் சாகுபடியில்லை. மழையில்லாதது மட்டுமல்ல, நிலத்தடி நீரும் மேலும் வறண்டதுதான் துயரம் அதிகமாகக் காரணமாகிவிட்டது. இப்படியே வெயில் அடித்து வறட்சி நீடித்தால் மரங்களில் தேங்காய்களைக் காப்பாற்ற முடியாது என்று பொள்ளாச்சி தென்னை சாகுபடியாளர்கள் கூறுகின்றனர். ஒரு நாளைக்கு ஒரு மரத்துக்குக் குறைந்தது 100 லிட்டர் தண்ணீர் தேவை. இப்போது அதில் பாதிகூட கிடைப்பதில்லை. லாரி தண்ணீருக்காகும் விலை கட்டுப்படியாகவில்லை என்று அர்த்தநாரிபாளையத்தைச் சேர்ந்த பிரகாஷ் தெரிவிக்கிறார்.

தண்ணீர் தேவையைக் குறைக்க தென்னங்கிளைகளைத் தரித்துவிட்டு மொட்டை மரமாக்கிவிட்டால் மரத்தையாவதுக் காப்பாற்றலாம் என்று சிலர் நினைக்கின்றனர் என்கிறார் கந்தசாமி. மழையும் பொய்த்து, நிலத்தடி நீரும் வறண்டுவிட்ட இந்நிலையில் பயிர்களைக் காப்பாற்ற அருகில் ஓடும் பவானி, காவிரி ஆறுகளிலிருந்து நேரடியாகத் தண்ணீர் எடுக்காதீர்கள் என்று விவசாயிகளுக்கு எச்சரிக்கை விடப்பட்டிருக்கிறது. இதே எச்சரிக்கை மேட்டூர், ஈரோடு, பவானி, பெருந்துறை பகுதிகளில் உள்ள சாயப்பட்டறைகள், உணவு பதப்படுத்தல் பிரிவு ஆலைகளுக்கும் விடப்பட்டிருக்கிறது.

சுருக்கமாகத் தமிழில்: சாரி

தி பிசினஸ் லைன்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x