Published : 06 Mar 2017 08:49 AM
Last Updated : 06 Mar 2017 08:49 AM

எல்லையை மீறுகிறது உச்ச நீதிமன்றம்!

நம்முடைய அரசியல் சட்டத்தை இயற்றியவர்கள் புரட்சிகரமான ஒரு வாய்ப்பைத் தேர்ந்தெடுத்தார்கள். இந்திய மக்களை நம்ப அவர்கள் முடிவெடுத்தார்கள். வயது வந்த அனைவருக்கும் வாக்குரிமை என்ற புரட்சிகர முடிவை எடுத்து, தங்களுக்கான அரசைச் சுதந்திரமாகவும் சுயேச்சையாகவும் தேர்ந்தெடுக்கும் வாய்ப்பை அவர்களுக்கு வழங்கினார்கள். சுதந்திரச் சிந்தனை, வெளிப்படையான விவாதம், மக்கள் உரிமைகள் போன்றவற்றை அரசு அதிகாரம் ஒடுக்கிவிடும் என்பதை அனுபவபூர்வமாக உணர்ந்தவர்கள் அவர்கள். மக்களை நம்பிய அவர்கள், மக்களை ஆளப்போகிறவர்களை அப்படி முழுமையாக நம்பிவிடவில்லை. எனவே, அரசியல் சட்டத்தில் அனைத்து மக்களுடைய அடிப்படை உரிமைகளை உத்தரவாதப்படுத்தும் பிரிவுகளைச் சேர்த்தார்கள். பேச்சுச் சுதந்திரம், கருத்துச் சுதந்திரம் போன்றவற்றுக்குச் சில சந்தர்ப்பங்களில் மட்டும் கட்டுப்பாடுகளை விதிக்க வரம்புகளை ஏற்படுத்தினார்கள்.

அரசியல் சட்டத்தை வகுத்தவர்கள் சட்ட வாசகத்தை மிகுந்த கவனத்துடன் அமைத்திருக்கிறார்கள். அடிப்படை உரிமைகளுக்குக் கட்டுப்பாடு விதிப்பதாக இருந்தால், அதைச் சட்டமியற்றித்தான் செய்ய முடியும் என்று வரையறுத் தார்கள். தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுதான் ஒட்டுமொத்த பொது லட்சியத்துக்காக இப்படிப் பேச்சுரிமைக்கு வரம்பு நிர்ணயிக்க முடியும். அதையும் நீதிமன்றங்களில் எதிர்த்து வழக்காட முடியும். அடிப்படை உரிமையைக் கட்டுப்படுத்து வதாக இருந்தால், தேர்ந்தெடுக்கப்பட்ட மக்களவைதான் அதற்கான சட்டம் இயற்ற முடியும், அப்படிப்பட்ட சட்டம் செல்லத்தக்கதா என்பதை நீதிமன்றம் பரிசீலிக்க முடியும் என்பது இரு அடுக்குப் பாதுகாப்பு ஏற்பாடுகளாகும்.

மக்கள் உரிமைகளுக்கு எதிரானது

நாடு சுதந்திரம் அடைந்த பிறகு அரசுக்கும் மக்களுக்கும் இடையே, உரிமைகளுக்கும் பொது லட்சியங்களுக்கும் இடையே, சட்டமியற்றும் அதிகாரம் பெற்ற நாடாளு மன்றத்துக்கும் நீதிமன்றங்களுக்கும் இடையே சமநிலை இருக்குமாறு உருவாக்கிய அமைப்புக்குப் பல முறை சோதனைகள் ஏற்பட்டு, பிறகு நீங்கியுள்ளன. சமீபத்திய காலத்தில் அப்படிப்பட்ட சோதனைகள் மீண்டும் ஏற்படத் தொடங்கியுள்ளன. அதிகார வர்க்கத்தாலோ, சட்டமியற் றும் அதிகாரம் பெற்ற நாடாளுமன்றத்தாலோ அப்படி ஏற்படவில்லை; உச்ச நீதிமன்றத்தால்தான் ஏற்பட்டிருக்கிறது.

அடிப்படை உரிமைகளைக் காப்பதில், உச்ச நீதிமன்றம் பெரும்பாலும் வெற்றிகரமாகவே செயல்பட்டுவருகிறது. ஆனால், இப்போது நடந்துவரும் நிகழ்வுகள் குழப்பத்தில் ஆழ்த்துகின்றன. மக்களுடைய உரிமைகளைக் காக்கும் பொறுப்பிலிருந்து விலகி, தார்மிக - அரசியல் தணிக்கையாளர் பொறுப்பை வகிப்பவராக உச்ச நீதிமன் றம் மாறிக்கொண்டிருக்கிறது. நீதித் துறைக்கு இப்படியொரு பங்கு அவசியம் என்று அரசியல் சட்டத்தை வகுத்தவர்கள் நினைக்கவில்லை. கட்டுப்படுத்த யாரும் இல்லாததால், அதிகமான அதிகாரங்களுடன் - அதற்கேற்ற பொறுப்பு இல்லாமலே நீதித் துறை செயல்படத் தொடங்கியிருக்கிறது. இது நம்முடைய அரசியல் சட்டத்தின் தார்மிக உணர்வுக்கு எதிரானது. அதிலும் சுயேச்சையாக, சுதந்திரமாகச் சிந்திக்க வேண்டிய மக்களுடைய உரிமைகளுக்கு எதிரானது. மூன்று சமீபத்திய சம்பவங்கள் இதை உணர்த்துகின்றன.

முதலாவது சம்பவம்

அக்ஷய் குமார் நடித்த ‘ஜாலி எல்எல்பி.2’ படத்தின் சில காட்சிகள் வழக்கறிஞர் தொழிலை இழிவுபடுத்தும் விதத்தில் இருப்பதாக மும்பை உயர் நீதிமன்றம் கருதியது. இந்தப் படத்துக்கு மத்தியத் தணிக்கை வாரியம் சான்று வழங்கிவிட்டபோதிலும், நீதிமன்றம் மூன்று உறுப்பினர்களைக் கொண்ட புதிய குழுவை நியமித்து, நான்கு காட்சிகளில் வெட்டச் சொன்னது. படத் தயாரிப்பாளர்கள் உச்ச நீதிமன்றத்தை நாடினர். மும்பை உயர் நீதிமன்றம் புதிய தணிக்கை அமைப்பாகச் செயல்படுவதைத் தயாரிப்பாளர்கள் சுட்டிக்காட்டினர். உச்ச நீதிமன்றமோ, “உயர் நீதிமன்றம் இதில் இறுதி உத்தரவு பிறப்பிக்கும் வரை தலையிட விரும்பவில்லை” என்றது.

உயர் நீதிமன்றம் தனது இறுதி ஆணையைப் பிறப்பித்துவிட்டது. விளைவாக, மூன்று வெட்டுகளுடன் திரைப்படம் வெளியானது. இச்சம்பவம் ஏற்படுத்தியுள்ள முன்னுதாரணம் ஒரு நெருடல்.

இரண்டாவது சம்பவம்

திரைப்படங்களைக் காட்டுவதற்கு முன்னால் திரையரங்குகளில் தேசிய கீதம் பாடப்படாததைப் பெரிய தவறாக உச்ச நீதிமன்றம் கருதியது. பொது நலன் கருதி தாக்கல் செய்யப்பட்ட ஒரு மனுவை ஏற்று - இப்போதுள்ள சட்டத்தில் எந்த அடிப்படையும் இல்லாத நிலையில் - ‘எல்லா திரையரங்குகளும் கட்டாயமாக தேசிய கீதத்தை ஒலிக்கச் செய்ய வேண்டும்’ என்று 2016 நவம்பரில் இடைக்கால உத்தரவைப் பிறப்பித்தது. பின்னர், அது தேவையில்லை என்று பிப்ரவரியில் கூறியது. இந்தத் தீர்ப்புகளில் எது நல்லது, கெட்டது என்ற கேள்வியெல்லாம் இருக்கட்டும். இது சட்டப்படி சரியானதா? அரசியல் சட்டம் இதை அனுமதிக்கிறதா? இந்தியாவின் சுதந்திரக் குடிமக்களை உச்ச நீதிமன்றம் தலையிட்டு, இப்படி தேசபக்தியைக் காட்டுவதைக் கட்டாயமாக்கலாமா?

மூன்றாவது சம்பவம்

கருவில் இருக்கும் சிசு ஆணா, பெண்ணா என்பதைக் கண்டறியும் சோதனைகளைத் தடைசெய்ய 1994-ல் இயற்றப்பட்ட சட்டத்தின் கீழ், உச்ச நீதிமன்றம் சில இடைக்கால உத்தரவுகளைப் பிறப்பித்திருக்கிறது. இவை தணிக்கையைத் தீவிரப்படுத்தும் வகையிலேயே அமைந்துள்ளன. அதாவது, கூகுள் போன்ற தேடுபொறிகள், பாலினம் கண்டுபிடிக்க யார் எந்த விதத்திலும் தகவல்களைத் தேட முடியாதபடிக்குத் தடுக்குமாறு உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்தத் தடை பெரிய அதிர்ச்சியைத் தருகிறது. சர்வாதிகார அரசுகள் இணையதளம் மீது காட்டும் கோபம் இங்கே காட்டப்பட்டிருக்கிறது.

பாலினத் தேர்வு என்ற வார்த்தையைக் குறிப்பிட்டுத் தேடினாலே அதைத் தடுக்குமாறு தேடுபொறிக்கு உத்தரவிடப்பட்டிருக்கிறது. நாளை இதுவே மேலும் விரிவடைந்து, பிரிவினை, பயங்கரவாதம் என்ற வார்த்தையைக் கொண்டு யாராவது, ஏதாவது தகவலைத் தேட விரும்பினால் அதையும் பார்க்க முடியாதபடி தடுப்பதில்தான் போய் முடியும். இது மட்டுமல்ல; இனி இந்தியர்கள் எதையெல்லாம் பார்க்கக் கூடாது என்று உச்ச நீதிமன்றம் நினைக்கிறதோ அதையெல்லாம் தடை செய்ய இதுவே முன்னுதாரணமாகிவிடும்.

உச்ச நீதிமன்றமா, தணிக்கை மன்றமா?

இந்த மூன்று வழக்குகளுக்கும் ஒரு ஒற்றுமை இருக்கிறது. மூன்றுமே பொதுநலன் கோரும் மனுக்கள் மூலம்தான் நீதிமன்றங்களுக்குக் கொண்டுவரப்பட்டன. இது ஒரு முரண். நீதிமன்றங்களின் படிகளை மக்கள் எளிதாகச் சென்று அடைவதற்கான உத்தியாகத்தான் பொதுநல வழக்குகள் உருவாயின. வழக்கமான சாட்சியங்கள், ஆவணங்கள் போன்றவற்றைக் கேட்டுக்கொண்டிருக்காமல் மக்களுக்கு உடனடியாகத் தேவைப்படும் நீதியை வழங்கத்தான் இது உருவாக்கப்பட்டது. அதுவே 2017-ல், விதிகளை நீர்த்துப்போகும் நடைமுறையாகவும், நீதித் துறைக்கு அளிக்கப்பட்ட விரிவான அதிகாரமாகவும், மக்களுடைய அடிப்படை உரிமைகளையே வீழ்த்தும் ஆயுதமாகவும் மாறியிருக்கிறது!

சட்டமியற்றும் நாடாளுமன்றம், அதிகார வர்க்கம், நீதித் துறை ஆகியவற்றுக்கு இடையிலான பொறுப்புகளையும் இருக்க வேண்டிய இடைவெளியையும் பற்றி சிறிதும் கவலைப்படாமல் நீதித் துறை செயல்பட்டுக்கொண்டிருக் கிறது. எதைப் பற்றி சட்டம் இயற்றுவதாக இருந்தாலும், அதை நாடாளுமன்றமோ, சட்டமன்றமோதான் செய்ய வேண்டும். ஆனால் இப்போது, நீதிமன்றமே சட்டத்துக்கு வரம்பை நிர்ணயிக்கிறது, கட்டுப்படுத்துகிறது, பேச்சுச் சுதந்திரத்தை ஒடுக்குகிறது. மக்களை அது வெறும் பார்வையாளர்களாக்கிவிட்டது; சிந்திக்கும், செயல்படும் மக்களாக நாம் கருதப்படவில்லை. நாம் எதைப் பார்க்க வேண்டும், எதைப் பார்க்கக் கூடாது என்று இப்போது உச்ச நீதிமன்றம் சொல்லத் தொடங்கிவிட்டது.

இந்திய அரசியல் சட்டத்தை வகுத்தவர்கள் - அரசியல் சுதந்திரத்துக்காகப் பாடுபட்டவர்கள் - உங்களுக்கு எது சரியென்று நீங்களே முடிவெடுக்கும் துணிச்சலைப் பெறுங்கள் என்று மக்களைப் பார்த்துக் கூறினார்கள். உச்ச நீதிமன்றம் இப்போது உச்ச தணிக்கை மன்றமாக மாறிக்கொண்டிருக்கிறது என்பது தெரிந்தால், அவர்கள் வருத்தத்திலும் அதிர்ச்சியிலும் ஆழ்ந்துவிடுவார்கள்!

- கவுதம் பாட்டியா, டெல்லியைச் சேர்ந்த வழக்கறிஞர்,

சுருக்கமாகத் தமிழில்: சாரி,

© ‘தி இந்து’ ஆங்கிலம்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x