Last Updated : 30 Aug, 2016 08:52 AM

 

Published : 30 Aug 2016 08:52 AM
Last Updated : 30 Aug 2016 08:52 AM

புதிதாக மலர்கிறது பழைய உறவு!

நேபாளத்தின் பிரதமராக புஷ்ப கமல் தஹல் ‘பிரசண்டா’ பதவியேற்றுக்கொண்டார். நேபாள கம்யூனிஸ்ட் (மாவோயிஸ்ட் - மையம்) கட்சியின் தலைவரான அவர், இரண்டாவது முறையாகப் பிரதமர் ஆகிறார். குடியரசு நாடாக நேபாளம் மாறிய இந்த எட்டாண்டுகளில் ஒன்பது முறை பிரதமர்கள் மாறிவிட்டார்கள். அரசியல் பின்னடைவைச் சந்தித்தாலும் மறுபடியும் எழுந்து நிற்கிற ஒரே கம்யூனிஸ்ட் தலைவர் இவர்தான். பிரசண்டாவின் யதார்த்தமான அரசியல் இதற்கு காரணமாக இருக்கலாம். ஆனால், அரசியலில் பல முறை அவர் சறுக்கிவிட்டார் என்கிறார்கள் மற்றவர்கள்.

பிரசண்டாவுக்கு முன்னதாகப் பிரதமர் பதவியில் இருந்த நேபாள கம்யூனிஸ்ட் (ஐக்கிய மார்க்சிஸ்ட் - லெனினிஸ்ட்) கட்சியைச் சேர்ந்த கே.பி.சர்மா ஒளி கடந்த அக்டோபர் மாதம்தான் மாவோயிஸ்ட்டுகளின் ஆதரவோடு பதவிக்கு வந்தார். நேபாளத்தின் பொருளா தார, அரசியல் பிரச்சினைகளை அவரால் தீர்க்க முடிய வில்லை. அதனால் அவர் தனிமைப்பட்டுவிட்டார். அந்தக் கூட்டணியில் நீடிப்பதில் தனது கட்சிக்கு எந்தப் பலனும் கிடையாது என்று பிரசண்டாவுக்குத் தெரிந்துவிட்டது. ஏப்ரல் மாதத்தில் அவர் நேபாளக் காங்கிரஸ் தலைவர் ஷேர் பகதூர் தேபாவோடு புதிய கூட்டணிக்கான பேச்சுவார்த்தைகளைத் தொடங்கினார். மே 4-ம் தேதி சர்மா ஒளி அரசாங்கத்துக்குத் தங்களின் ஆதரவை விலக்கிக்கொள்வதாக அறிவித்தார். ஆனாலும், நேபாளக் கம்யூனிஸ்ட் கட்சி (ஐ.மா.லெ) தலைவர் பாம் தேவ் கவுதம் செய்துவைத்த சமரசத்தால் 24 மணி நேரத்துக்குள்ளாக, தாற்காலிகமாகப் பிரச்சினை சரியானது.

சர்மா ஒளி - பிரசண்டா வேறுபாடுகள்

அப்போது ஒன்பது அம்சங்களைக் கொண்ட உடன்பாடு உருவானது. நிதிநிலை அறிக்கையைச் சமர்ப்பித்த பிறகு மே மாதக் கடைசியில் பிரதமர் சர்மா ஒளி பதவியிறங்குவார் என்றும் அடுத்ததாக, பிரசண்டா பிரதமராகப் பதவியேற்க நேபாளக் கம்யூனிஸ்ட் கட்சி (ஐ.மா.லெ) ஆதரவு தர வேண்டும் என்பதே உடன்பாடு. ஆனால், சர்மா ஒளி அந்த உடன்பாட்டை நிறைவேற்றும் மனநிலையில் இல்லை என்பது ஜூன் கடைசியில் தெளிவானது. அவர் தனது பதவிக்காலத்தை நீட்டித்துக்கொள்ள முயன்றார். உடன்பாட்டை முறித்துக்கொள்கிற மனநிலைக்குப் பிரசண்டா போகும்போது, சர்மா ஒளி நேபாளக் காங்கிரஸ் கட்சியைத் தேடிப்போனார். மாவோயிஸ்ட்டுகள் ஆதரவை விலக்கிக்கொண்டால் நீங்கள் ஆதரவளியுங்கள் என்று கேட்டுக்கொண்டார்.

பிரசண்டாவும் நேபாளக் காங்கிஸ் கட்சித் தலைவர் தேபாவோடு மறைமுகப் பேச்சுவார்த்தைகளைத் தொடங்கினார். பிரசண்டாவைப் போலவே தேபாவும் சர்மா ஒளி அரசாங்கத்தைச் செயல்படாத அரசாகப் பார்த்தார். மறைமுகப் பேச்சுவார்த்தைகளை நடத்திய நேபாளக் காங்கிரஸின் பிமலேந்திரா நிதியும் மாவோயிஸ்ட் கே.பி.மஹராவும் திறமையாக உடன்பாட்டை உருவாக்கினார்கள். ஜூலை 12-ல் அரசாங்கத்துக்கு ஆதரவை விலக்கிக்கொள்வதாகப் பிரசண்டா மறுபடியும் அறிவித்தார். மறுநாள் அரசாங்கத்தின் மீது நம்பிக்கையில்லா தீர்மானத்தையும் கொண்டுவந்தார். வெற்றிகரமாக உடன்பாட்டை உருவாக்கிய நிதியும் மஹராவும் துணைப் பிரதமர்களாகவும் முறையே உள்துறை மற்றும் நிதித் துறை பொறுப்புகளோடு கடந்த வாரத்தில் பதவியேற்றுக்கொண்டார்கள்.

காங்கிரஸ் - மாவோயிஸ்ட் அணி

நேபாளக் காங்கிரஸ் - மாவோயிஸ்ட் கூட்டணி அதற்கு முந்தைய எந்த ஒரு கூட்டணியை விடவும் நிலையானதாக இருக்கும் என்று அரசியல் நோக்கர்கள் கருதுகிறார்கள்.

ஜி.பி.கொய்ராலா தலைமையில்தான் நேபாளக் காங்கிரஸ் கட்சி மாவோயிஸ்ட்டுகளோடு அமைதி உடன்பாட்டை 2005-06-ல் முடித்தது. அதன் மூலம்தான் ஜனநாயகத் தேர்தல் நடைமுறைக்குள் மாவோயிஸ்ட்டுகள் நுழைந்தனர். 2008-ல் நடைபெற்ற அரசியல் சாசனச் சபைக்கான தேர்தலில் மாவோயிஸ்ட்டுகள் யாரும் எதிர்பாராத வெற்றியை அடைந்த பிறகுதான் பிரச்சினைகள் எழுந்தன. அரசியல் சாசனச் சபையின் 601 இடங்களில் 229 இடங்களைக் கைப்பற்றி மாவோயிஸ்ட்டுகள் தனிப்பெரும் கட்சியானார்கள். அவர்களுக்கு அடுத்த இடத்தில் நேபாளக் காங்கிரஸ் 115 இடங்களையும் நேபாளக் கம்யூனிஸ்ட் கட்சி (ஐ.மா.லெ) 108 இடங்களையும் பெற்றன.

நேபாளத்தை ஒரு குடியரசாக அறிவிக்க வேண்டும் என்ற மாவோயிஸ்ட்டுகளின் கோரிக்கையை ஆதரித்தால் முதல் குடியரசுத் தலைவராகத் தன்னை மாவோயிஸ்ட்டுகள் ஆக்க வேண்டும் என்று கொய்ராலா விரும்பினார். ஒப்புக்கொண்ட பிரசண்டா வாக்குறுதி மீறினார். குடியரசுத் தலைவருக்குத் தங்களின் சொந்த வேட்பாளரை நிறுத்தினார். அவரைத் தோற்கடித்து நேபாளக் காங்கிரஸ் கட்சியின் ராம்பரண் யாதவ் முதல் குடியரசுத் தலைவரானார். போட்டியின்றித் தான் தேர்வு செய்யப்பட வேண்டும் என்று விரும்பிய கொய்ராலா, எதிர்க்கட்சித் தலைவராக மாறினார். மாவோயிஸ்ட்டுகளின் கடும் எதிர்ப்பாளராக அவர் மாறினார். தான் செய்தது ஒரு அரசியல் தவறு என்று தற்போது பிரசண்டா ஒப்புக்கொள்கிறார். ஒன்பது மாதங்களுக்குப் பிறகு, நேபாளத்தின் தலைமை ராணுவ அதிகாரியைப் பதவிநீக்கம் செய்யும் சர்ச்சைக்கிடமான முடிவைப் பிரசண்டா எடுத்தபோது, குடியரசுத் தலைவர் அதை ஏற்கவில்லை. கூட்டணிக் கட்சிகளும் பிரசண்டாவைக் கைவிட்டன.

கிங்மேக்கர் பிரசண்டா

குறைவான காலமே பதவி வகித்துக் கௌரவக் குறைவான முறையில் பிரசண்டா பதவி விலகினார். கடந்த ஏழு வருடங்களில் ஆட்சி அதிகாரம் அவர் பக்கமே வரவில்லை. அதற்குப் பிறகு, நேபாளக் கம்யூனிஸ்ட் (ஐ.மா.லெ) தலைவர் மாதவ் நேபாள் தலைமையிலான கூட்டணி அரசு 2009-ல் பதவியேற்றது. பலவிதமான கூட்டணி அரசுகள் வந்து போய்விட்டன. இடைப்பட்ட காலத்தில் பிரசண்டாவின் நிலையும் அவரது கட்சியின் நிலையும் பலவீனமடைந்தது. 2011-ல் மாவோயிஸ்ட்டுகளின் கையில் மீண்டும் ஆட்சி அதிகாரம் வந்தபோதுகூடக் கூட்டணிக் கட்சிகள் அவரது சக தோழர் பாபுராம் பட்டாராயைத் தேர்வுசெய்தன. 2013 நாடாளுமன்றத் தேர்தல் மாவோயிஸ்ட்டுகளின் பலத்தை 229-லிருந்து 80 ஆகக் குறைத்தது. நேபாளக் காங்கிரஸ் 196 இடங்களைக் கைப்பற்றித் தனிப் பெருங்கட்சியாக மாறியது. நேபாளக் கம்யூனிஸ்ட் (ஐ.மா.லெ) 175 இடங்களைக் கைப்பற்றியது.

தற்போது பிரசண்டா ஒரு ‘கிங் மேக்க’ராக இருப்பதால்தான் பிரதமர் ஆகிறார். அவரது கட்சி புதிய கூட்டணியில் சின்னக் கட்சிதான். நேபாளக் காங்கிரஸ் கட்சியோடு அவர் ஏற்படுத்திக்கொண்டுள்ள உடன்பாட்டின்படி 9 மாதங்கள் பதவியில் இருப்பார். அது நாட்டில் உள்ளாட்சித் தேர்தல்கள் நடக்கும் காலம். அதற்குப் பிறகு அவர் பதவி விலகி அடுத்தபடியாக நேபாளக் காங்கிரஸ் தலைவர் தேபா நான்காவது முறையாகப் பிரதமர் பதவியேற்பதற்கு ஆதரவு அளிக்க வேண்டும். புதிய அரசியல் சாசனத்தின்படி நடத்தப்படும் மாநிலத் தேர்தல்களையும் நாடாளுமன்றத் தேர்தலையும் தேபா நிர்வகிப்பார்.

வழக்குகளின் பிரச்சினை

நேபாளக் காங்கிரஸ் கட்சி கூட்டணி வருகிற மாதங்களில் ஏராளமான சவால்களைச் சந்திக்கும். மாதேசிகளையும் ஜன சாதியினரையும் தனது அரசில் இணைக்க அவர் விரும்புகிறார். ஆனால், அவர்களின் அமைப்புகள் இன்னும் நெருங்கி வரவில்லை. பிரசண்டா அவர்களோடு ஒரு இணக்கத்தை ஏற்படுத்த வேண்டும். அதைத்தான் சர்மா ஒளி செய்யத் தவறினார்.

1996 முதல் 2005 வரை நடைபெற்ற உள்நாட்டுப் போர்க் குற்றங்கள் தொடர்பாக மாவோயிஸ்ட் ஊழியர்கள் மீது போடப்பட்டுள்ள வழக்குகளை முடித்து வைக்க பிரசண்டா விரும்புவார். அவரது கட்சிக்குள் அது அவரைப் பலப்படுத்தும். ஆனால், அது அவருக்கும் நேபாளக் காங்கிரஸுக்குமான உறவைச் சிக்கலாக்கும். 2001-ல் தேபா பிரதமராக இருந்தபோதுதான் நேபாள ராணுவம் மாவோயிஸ்ட்டுகளுக்கு எதிராக நிறுத்தப்பட்டது.

இந்த வழக்குகளின் பிரச்சினையைத் தீர்க்கவில்லை என்பதுதான் சர்மா ஒளி அரசாங்கத்தின் மீதான பிரசண்டாவின் புகார்களில் ஒன்று. கட்சி ஊழியர்கள் மனம் கோணாமல் அதனைக் கொண்டுபோக வேண்டும். அது அவ்வளவு எளிதானதல்ல.

பிரசண்டாவின் வாய்ப்பு

நிலநடுக்கம் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மறுகட்டுமானப் பணிகளைக் கொண்டுபோவதுதான் எளிதாக இருக்கும். பல நாடுகளிலிருந்து 4.4 பில்லியன் டாலர்கள் உதவி வந்தது. ஆனால், சர்மா ஒளி அரசாங்கம் காலத்தை வீணாக்கியது. இந்தியாவும் 1.65 பில்லியன் டாலர்களுக்கான உதவிகளைத் தருவதாக வாக்களித்திருந்தது. ஆனால், கடந்த இரண்டாண்டுகளில் அவற்றில் 150 மிலியன் டாலர்கள்தான் பயன்படுத்தப்பட்டுள்ளன. வீடுகளை மறுநிர்மாணம் செய்வதற்காக இந்தியா தருவதாக வாக்களித்த 250 மிலியன் டாலர்கள் உதவியின் கதையும் இதுதான். இதேபோல வாக்களித்த பல நாடுகளின் உதவிகளும் பயன்படுத்திக்கொள்ளாமல் விடப்பட்டதால் அவை காலாவதியாகிவிட்டன.

இந்தியாவுக்கும் நேபாளத்துக்கும் இடையேயான உறவை முன்னாள் பிரதமர் சர்மா ஒளி சேதப்படுத்தி விட்டார். பிரசண்டா அதையும் சீர்ப்படுத்த வேண்டும். பிரதமர் நரேந்திர மோடி பிரசண்டாவுக்கு வாழ்த்துத் தெரிவித்துள்ளார். இந்தியாவுக்கு வருமாறும் அழைத்துள்ளார். போன முறை பிரதமராக இருந்தபோது பிரசண்டா 2008-ல் இந்தியா வந்திருந்தார். ஆனால், அவர் ஏற்படுத்திய நல்லுறவு கொஞ்ச காலமே நீடித்தது.

பயனுள்ள ஆட்சி புரியவும் தனது அரசியல்திறனை மீட்டுக்கொள்ளவும் அவருக்குத் தற்போது மறுபடியும் வாய்ப்பு வந்துள்ளது.

- ராகேஷ் சூட், நேபாளத்தில் இந்தியாவுக்கான தூதராகப் பணியாற்றியவர்

© ‘தி இந்து’ (ஆங்கிலம்)

தமிழில் சுருக்கமாக: த.நீதிராஜன்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x