Last Updated : 20 Apr, 2017 09:50 AM

 

Published : 20 Apr 2017 09:50 AM
Last Updated : 20 Apr 2017 09:50 AM

தானியங்கி எனும் பூதம்!

இந்தியாவைச் சேர்ந்த தகவல் தொழில்நுட்பத் துறையினருக்கு (ஐ.டி.) இது சோதனையான காலம் எனும் பேச்சு எழுந்திருக்கிறது. வேலைவாய்ப்பில் அமெரிக்கர்களுக்கு முன்னுரிமை எனும் அடிப்படையில், அதிபர் ட்ரம்ப் எடுத்துவரும் கொள்கை முடிவுகள் இந்தியத் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களுக்குப் பாதிப்பை ஏற்படுத்துவதாக உள்ளன. அயல் பணி ஒப்படைப்பை (அவுட்சோர்ஸிங்) குறைத்துக்கொள்ளுமாறு அமெரிக்க நிறுவனங்களை வலியுறுத்துவதும், அமெரிக்கா வந்து பணியாற்றும் இந்தியப் பணியாளர்களுக்கான எச்-1 பி விசா கெடுபிடிகள் அதிகரிப்பும் நம்மவர்களை அச்சுறுத்தியிருக்கிறது.

ஆனால், ட்ரம்ப் கொள்கை முடிவுகளால் ஏற்படக்கூடிய பாதிப்பை விடவும் மிகப் பெரிய சவால் ஒன்று உண்டு. தானியங்கிமயமாக்கல் எனும் பூதம்தான் அது. ஆட்டோமேஷன் என குறிப்பிடப்படும் இந்தப் போக்கு, இயந்திர கற்றல், செயற்கை நுண்ணறிவு, ரோபோக்கள், பாட்கள் எனப்படும் புரோகிராமிங் சார்ந்த சேவைகள், கிளவுட் சேவை, டிஜிட்டல் பாதை எனப் பலவிதமாக விரிகிறது. தொழில்நுட்பச் சிக்கல்களை எல்லாம் நீக்கிவிட்டுச் சொல்ல வேண்டும் என்றால், இப்போது மனிதர்கள் பார்த்துக்கொண்டிருக்கும் பல வேலைகளை இயந்திரம் செய்யத் தொடங்கிவிடும் எனப் புரிந்துகொள்ளலாம்.

‘எந்திர’ யுகம்?

நிறுவனங்களில் எல்லாம் கம்ப்யூட்டர் முன் ‘எந்திரன்’கள் அமர்ந்து வேலை பார்க்கும் காலம் நாளையே வந்துவிடாது என்றாலும், மீண்டும் மீண்டும் ஒரேவிதமான செயல்கள் மற்றும் திறன்கள் தேவைப்படக்கூடிய பணிகளை எல்லாம் தானியங்கிமயமாக்கல் விழுங்கிவிடும் என்பதுதான் விஷயம். அநேகமாகக் கீழ் மட்டத்தில் உள்ள வேலைவாய்ப்புகள் அனைத்தும் இயந்திரமயமாக்கப்பட்டுவிடலாம். அறிமுக நிலை ஊழியர்களைக் கொண்டு இந்த வேலைகளைச் செய்வதைவிட, இயந்திரங்கள் வசம் இவற்றை ஒப்படைப்பதே தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களுக்கும் லாபகரமானது. இந்தச் சூழலில் அடுத்து வரும் ஆண்டுகளில் இந்தப் பணிகளுக்கு இளம் ஊழியர்கள் தேவைப்படுவார்களா என்பது கேள்விக்குறிதான். கடந்த ஆண்டு அமெரிக்காவின் எச்.எப்.எஸ்(HfS) எனும் ஆய்வு நிறுவனம் வெளியிட்ட அறிக்கையின்படி, அடுத்த ஐந்தாண்டுகளில் இந்தியத் தகவல் தொழில்நுட்பச் சேவைத் துறையில் 6.4 லட்சம் ‘குறைந்த திறனிலான வேலைவாய்ப்புகள்’ இல்லாமல் போகும் எனத் தெரிவிக்கிறது.

அறிமுக நிலை ஊழியர்கள் மட்டுமல்ல, நடுநிலை ஊழியர்களின் நிலையும்கூட கேள்விக் குறிதான் என இப்போது பேசப்படுகிறது. பொதுவாகத் தகவல் தொழில் நுட்பத் துறை ‘பிரமிட்’ வடிவில் செயல்படுவதாகக் கூறப்படுகிறது. அதாவது, அதிக எண்ணிக்கையி லான ஊழியர்களை நிர்வகிக்கும் ஆற்றல் அடிப்படையிலேயே நிறுவன வருவாய் அமைகிறது. இந்த பிரமிடின் கீழ் மட்டத்தில் குறைந்த திறன் தேவைப்படும் ஊழியர்கள் இருக்க, படிப்படியாக மேலே செல்ல, அவர்களை நிர்வகிக்கும் திறன் கொண்டவர்களாக நிறுவன செயல்பாடு அமைகிறது. இந்த முறையில், அனுபவம் வாய்ந்த ஊழியரின் முன்னேற்றம் என்பது தனக்குக் கீழே எத்தனை பெரிய குழுவை நிர்வகிக்கும் ஆற்றல் கொண்டிருக்கிறார் என்பதன் அடிப்படையிலேயே அமைகிறது. ஆனால், தானியங்கிமயமாக்கல் இப்படி குழுக்களை நிர்வகிக்கும் முறையில் பாதிப்பை ஏற்படுத்தும் என்று தெரிகிறது.

அதிகரிக்கும் எதிர்பார்ப்பு

அனுபவசாலிகள் குழுக்களை நிர்வகிப்பதை விடவும், நிறுவனத்தின் வருவாயை அதிகரிக்க உதவும் புதுமை முயற்சிகள் மற்றும் புதிய சேவைகளை உருவாக்குவதில் கவனம் செலுத்த வேண்டும் என நிறுவனங்கள் எதிர்பார்க்கத் தொடங்கியுள்ளன. இந்த எதிர்பார்ப்பை நிறைவேற்றும் திறனும் ஆற்றலும் இல்லாதவர்கள் வெளியேற வேண்டியிருக்கலாம். ஒரு முன்னணி நிறுவனத்தில் மட்டும் ‘டிஜிட்டல்’ மயமாக்கலால் 9,000 பொறியாளர்கள் விடுவிக்கப்பட்டதாக ஒரு தகவல் சொல்லப்படுகிறது. அந்தப் பொறியாளர்களை நிறுவனம் வேறு மேம்பட்ட பணிக்காகத் தயாராக்க வேண்டும். இப்படித்தான் இருக்கிறது தகவல் தொழில்நுட்பத் துறை.

அழைப்பு மையப் பணிகள், தரவுப் பதிவு (‘டேட்டா என்ட்ரி’) உள்ளிட்ட பல வேலைகள் மெல்ல இயந்திரமயமாக்கப்படலாம். ஊழியர் களைக் கொண்டு பதில் அளிக்க வேண்டிய பணிகளுக்குப் பரிசீலிக்க வேண்டிய தரவுகள் ஒரே மாதிரியானவை என்றால், அந்தப் பணியை ஒரு ‘அரட்டை மென்பொருள்’ வசம் ஒப்படைத்துவிடலாம். இதேபோல ‘டிஜிட்டல்’ மயமாக்கல், கிளவுட் சேவையின் தாக்கமும் அதிகம் இருக்கும். அடிப்படையான சர்வர் பராமரிப்பு போன்ற பணிகளுக்கு எல்லாம் பொறியாளர்களே தேவையில்லை எனும் நிலை வரலாம். நிதிச்சேவை பிரிவில்கூட, ‘ரோபோ ஆலோசகர்’ சேவைகள் பிரபலமாகி வருகின்றன. காப்பீடு அடிப்படை விவரங்களைப் பரிசீலிப்பதைக் கூட அதற்காக உருவாக்கப்பட்ட நிரல் (புரோகிராம்) கச்சிதமாகச் செய்துவிடும்.

சவால்களும் வாய்ப்புகளும்

தகவல் தொழில்நுட்பத் துறையில் தானியங்கிமயமாக்கலின் தாக்கம் இன்னும் ஆழமாக நிகழ்ந்துகொண்டிருக்கிறது. மற்ற துறைகளிலும் இதன் பாதிப்பை உணரலாம். இந்நிலையில், இப்போது கல்லூரிகளில் படித்துக்கொண்டிருப்பவர்களின் வேலைவாய்ப்பு நிலை எப்படி இருக்கிறது? ஏற்கெனவே, பொறியல் பட்டதாரிகளில் பலர் பணி புரிவதற்குத் தயாராக இல்லாதவர்களாக இருப்பதாகவும், அவர்களுக்குத் திறன் வளர்ச்சிப் பயிற்சி தேவைப்படுவதாகவும் சொல்லப்படுகிறது. இந்நிலையில், தானியங்கிமயமாக்கல் அலையும் வீசினால் எப்படி எதிர்கொள்வார்கள்?

ஆனால், இந்தச் சோதனைகளுக்கு மறுபக்கமும் இருக்கிறது. தானியங்கிமயமாக்கல் பழைய வேலைகள் பலவற்றை இல்லாமல் செய்யலாம் என்றாலும், புதிய தேவைகளையும் வேலைவாய்ப்புகளையும் உருவாக்கவே செய்யும். உதாரணத்துக்கு ‘டிஜிட்டல்’ மயமாக்கலின் தேவை அரசுத் தரப்பில் இருந்து அதிக வேலைவாய்ப்பை அளிக்கலாம். அதே போல, தரவுகளைத் திரட்டுவது சுலபமாகியிருக்கலாம். ஆனால், அவற்றை அலசி ஆராய்ந்து பகுத்துணரும் திறனும் இதற்கு அவசியம். இதே போல ‘பிக் டேட்டா’வைக் கையாண்டு, திட்டங்களுக்குப் புதிய தீர்வுகள் வழங்கலாம்.

நிறுவனங்களும் சரி, ஊழியர்களும் சரி மாறிவரும் சூழலுக்கு ஏற்ப புதிய திறன்களை உருவாக்கிக்கொள்ள வேண்டும். இதற்காகப் புதிய சான்றிதழ் வகுப்பில் சேரலாம். இணையத்தின் மூலம் பயிலலாம். நிறுவனம் ஏற்பாடு செய்யும் பயிற்சித் திட்டம் அல்லது பயிலரங்கில் சேர்ந்து புதிய திறனை வளர்த்துக்கொள்ளலாம். அதாவது, வாழ்க்கை முழுவதும் கற்றுக்கொண்டே இருக்க வேண்டும். பணியில் சேர்ந்தவுடன் பதவி உயர்வில் மட்டும் கவனம் செலுத்தினால் போதாது. தங்கள் திறன் துறையின் எதிர்காலத் தேவைக்கேற்ப இருக்கிறதா என அறிந்து அதற்கேற்பத் தயாராக வேண்டும். இந்த ஆற்றல் உள்ளவர்கள் எதிர்காலம் குறித்துக் கவலைப்பட வேண்டியதில்லை!

- சைபர்சிம்மன்,

ஊடகவியலாளர், ‘நம் காலத்து நாயகர்கள்’ நூலின் ஆசிரியர்.

தொடர்புக்கு: enarasimhan@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x