Last Updated : 28 Jun, 2015 09:34 AM

 

Published : 28 Jun 2015 09:34 AM
Last Updated : 28 Jun 2015 09:34 AM

அரசியல் வானில் போலி பட்டங்கள்!

ஏதும் தெரியாத அக்காலக் கவிஞர், ‘மலை வாழை அல்லவோ கல்வி, விலைபோட்டு வாங்கவா முடியும்?’ என்று பாடிவைத்தார். இன்றைக்கு லஞ்சமும் ஊழலும் நுழைய முடியாத துறைகளே இல்லை. ‘அரசியல் என்பது அயோக்கியர்களின் கடைசிப் புகலிடம்’ என்றான் மேலைநாட்டு அறிஞன். நம் நாட்டில் பலரும் நேரத்தை வீணாக்குவதில்லை.

அயோக்கியத்தனத்திலும் வடிகட்டியது ஒன்று உண்டு என்றால், படிக்காமலேயே பட்டம் வாங்குவதும் அதை ஊரறியத் தம்பட்டம் அடித்துக்கொள்வதும்தான். நம் நாட்டு அரசியல்வாதிகள் அதில் கைதேர்ந்தவர்கள். ‘ஆணுக்குப் பெண் இளைப்பில்லை காண்’ என்றொரு தனிச் சிறப்பும் இதில் உண்டு.

இன்றைய இந்தியாவில் எந்த ஒரு பதவிக்கும் போட்டியிட ‘குறைந்தபட்சத் தகுதி’ என்று எதுவுமே கிடையாது. ‘18 வயதுக்கு மேல் ஆகியிருக்க வேண்டும், திவாலாகியிருக்கக் கூடாது, பைத்தியமாக இருக்கக் கூடாது (வாக்காளர்கள் இருக்கலாம்!)’ என்ற குறைந்தபட்ச நிபந்தனைகளோடு சரி.

குற்ற வழக்குகளில் கடும் தண்டனை பெற்றவர்கள் தேர்தலில் போட்டியிடக் கூடாது என்ற சட்டத் திருத்தம் பின்னாளில் வந்திருக்கிறது. இவ்வளவுதான் அரசியல்வாதிகளைத் தடுத்து நிறுத்தும் நிபந்தனைகள். அப்படியும் சிலர் தங்களுடைய கல்வியறிவுக் குறைவைப் பெரிய இழப்பாகக் கருதி, அந்தக் குறையைத் தாங்களாகவே தீர்த்துக்கொண்டுவிடுகிறார்கள்.

மருத்துவம், பொறியியல் கல்லூரிகளில் மாணவர்கள் சேர்க்கைக்குப் பிறகு அவர்களுடைய கல்விச் சான்றிதழ்களை ஒப்பிட்டுப் பார்ப்பது இப்போதைய நடைமுறை; அதையே ஒவ்வொரு பொதுத் தேர்தலுக்குப் பிறகும் மாநிலத்திலும் மத்திய அரசிலும் மேற்கொள்ளப்பட்டால் ஏராளமான போலி பட்டதாரிகள் பிடிபடுவார்கள் என்பது நிச்சயம்.

அரசியல் தலைவர்கள் சிலர் மீது இப்போது போலி பட்டதாரிகள் என்று குற்றச்சாட்டு கூறப்படுகிறது. எனவே, மக்களுடைய கவனம் அவர்கள் மீது திரும்பியிருக்கிறது.

ஸ்மிருதி இரானி: மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சராக ஸ்மிருதி இரானியைப் பிரதமர் நரேந்திர மோடி தேர்வு செய்தபோதே லட்சக்கணக்கான புருவங்கள் உயர்ந்தன. காரணம், அவர் தொலைக்காட்சித் தொடர் நடிப்பால் அறியப்பட்டவரே தவிர, படிப்பால் அல்ல. பட்டப் படிப்பைக்கூட முடிக்காத அவரைப் பல்வேறு பல்கலைக்கழகங்களின் துணை வேந்தர்களையும், கல்வியாளர்களையும், சிந்தனையாளர்களையும் சந்திக்க வேண்டிய இடத்தில் அமர வைத்தார் மோடி. நம் நாட்டுக் கல்வியைத் தரம் உயர்த்தி, உலக அரங்கில் ஏற்றி வைக்க பாரதிய ஜனதா கட்சியில் கிடைத்த அதிகபட்சத் தகுதி உள்ள வேட்பாளர் ஸ்மிருதி இரானிதான் என்றால், நாடு என்ன செய்ய முடியும்?

ஸ்மிருதி இரானியைக் கல்வி அமைச்சராக்கியவுடன் (மனிதவள மேம்பாடு என்றெல்லாம் சுற்றி வளைத்தாலும் அந்தத் துறை கல்வி தொடர்பானதுதான்) முதலில் எதிர்த்தவர் மோடியின் தீவிர ஆதரவாளரான மது கிஷ்ட்வர்தான். ‘பள்ளியிறுதி வகுப்பை மட்டுமே பூர்த்திசெய்த அவரை நியமிப்பதா, பாஜகவில் படித்தவர்கள் வேறு யாரும் இல்லையா?’ என்று உரத்துக் குரல் எழுப்பினார். மோடி மவுனம் சாதித்தார்.

2004-ல் டெல்லியின் சாந்தினி சவுக் தொகுதி வேட்பாளராகப் போட்டியிட்டபோது தனது கல்வித் தகுதியை ‘பி.ஏ. 1996 டெல்லி பல்கலை. (அஞ்சல் வழி)’ என்று குறிப்பிட்டிருந்தார் ஸ்மிருதி. 2014-ல் அமேதியில் ராகுல் காந்திக்கு எதிராகப் போட்டியிட்டபோது ‘பி.காம் முதலாண்டு, பார்ட்-1 டெல்லி பல்கலை. (அஞ்சல் வழி) 1994’ என்று குறிப்பிட்டிருந்தார். பி.ஏ.வா, பி.காமா? படித்தாரா, முடித்தாரா? எதுவும் தெரியவில்லை.

கவியின் வாக்கு பலித்தது

‘காலேஜுக்குப் போகாதவன் கல்வி மந்திரி ஆனான், காபி ஓட்டல் வச்சிருந்தவன் உணவு மந்திரியானான்’என்று தமிழத் திரைப்படப் பாடலாசிரியர் 40 ஆண்டுகளுக்கு முன்னாலேயே எழுதி வைத்துவிட்டார். கவிஞன் வாக்கு பலித்துவிட்டது!

ஆமர் கான் என்ற பத்திரிகையாளர் ஸ்மிருதி இரானிக்கு எதிராகக் கொடுத்த புகாரை, டெல்லி பெருநகர மாஜிஸ்திரேட் ஆகாஷ் ஜெயின் விசாரணைக்கு ஏற்றுக்கொண்டுவிட்டார். ஆகஸ்ட் இறுதியில் சாட்சிகள் விசாரணைக்கு அழைக்கப்பட்டு விசாரணை தொடங்கும். 1951 மக்கள் பிரதிநிதித்துவச் சட்டப்படி, வேட்பு மனுவில் உண்மையை மறைத்து தவறான தகவலைத் தெரிவித்தால் 6 மாத சிறைத் தண்டனை அல்லது ரொக்க அபராதம் அல்லது இரண்டும் சேர்த்து தண்டனையாக வழங்கப்பட வாய்ப்பு இருக்கிறது. என்ன நடக்கிறது என்று பார்ப்போம்.

பதவியிழந்த தோமர்

டெல்லி சட்டப் பேரவைக்கு ஆம் ஆத்மி கட்சி (ஆ.ஆ.க.) சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டு சட்ட அமைச்சராகப் பதவியேற்ற ஜிதேந்திர சிங் தோமர் ‘பி.எஸ்சி., எல்.எல்.பி.’ பட்டம் பெற்றதாகக் குறிப்பிட்டிருந்தார். பொதுவாழ்வில் தூய்மையை முன்னிறுத்தப் புறப்பட்டிருக்கும் அர்விந்த் கேஜ்ரிவால், அவரையே சட்ட அமைச்சராக்கினார்.

பிஹார் மாநிலம் பாகல்பூர் பல்கலைக்கழகத்தில் படித்ததாக தோமர் குறிப்பிட்டிருக்கிறார். தோமரைக் கைது செய்த டெல்லி போலீஸார், அவர் படித்ததாகச் சொன்ன கல்லூரிகளுக்கும் பல்கலைக் கழகங்களுக்கும் ‘கல்விச் சுற்றுலா’ சென்றிருக்கிறார்கள். இதுவரை கிடைத்த தகவல்களின்படி அவருடைய எல்.எல்.பி. பட்டம் அசல், பி.எஸ்சி. பட்டம்?

பதவி இழந்தாலும் சிறையில் அடைக்கப்பட்டாலும் தோமர் ‘நான் குற்றமற்றவன்’ என்றே கூறுகிறார். விரைவிலேயே உண்மையை நிரூபித்து, முகிலைக் கிழித்து வெளிவரும் முழு நிலவைப் போல வெளியே வருவேன் என்றிருக்கிறார். அப்போதும் கிழிப்பதைவிட மாட்டார் போலிருக்கிறது.

வினோத் தாவ்டே

மகாராஷ்டிரத்தை ஆளும் பாஜக-சிவசேனைக் கூட்டணி சார்பில் மாநில மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சராகப் பதவி வகிக்கிறார் வினோத் தாவ்டே. அவர் புணேயில் உள்ள தியானேஸ்வர் வித்யா பீடத்தில் 1980

முதல் 1984 வரை ‘படித்து’, மின்னணுவியலில் பொறியியலாளர் பட்டம் பெற்றிருக்கிறார். அந்தப் பல்கலைக்கழகத்துக்கு அனைத்திந்தியத் தொழில்நுட்பக் கல்வி கவுன்சிலின் அங்கீகாரம் இல்லை. இனி, பல்கலைக்கழகத்தை நடத்தக் கூடாது என்று மும்பை உயர் நீதிமன்றம் 2002-ல் தடை விதித்தது. 2005-ல் பல்கலைக்கழகம் மூடப்பட்டது.

பள்ளியிறுதி வகுப்பை முடித்த சில காலத்துக்கெல்லாம் அந்தப் பல்கலைக்கழகத்தில் சேர்ந்ததாகவும், அதற்கு அங்கீகாரம் வழங்கப்படவில்லை என்று தெரியும் என்றும், அந்தப் பல்கலைக்கழகத்தில் படித்ததைப் பெருமையாகக் கருதுவதாகவும் தாவ்டே இப்போது கூறுகிறார். ‘சான்றிதழ் களைத் திருத்தவில்லை, வேறு பல்கலைக்கழகத்தில் படித்ததாகப் பொய் சொல்லவில்லை, பட்டதாரி என்ற வகையில் பட்டதாரி தொகுதியில் வாக்காளராகப் பதிவுசெய்துகொள்ளவில்லை, வேறு எந்தச் சலுகையையும் அனுபவித்ததில்லை’ என்கிறார் தாவ்டே.

அங்கீகாரம் இல்லாத பல்கலைக் கழகம் அளிக்கும் பட்டத்தை எப்படிப் போட்டுக்கொள்வது? இது முறைகேடு இல்லை என்று மனசாந்தி அடைய முடியுமா? தாவ்டேயைப் போல அங்கே படித்த எத்தனை பேர் இப்போது எங்கெங்கே, என்னென்ன பதவிகளில் இருக்கிறார்களோ என்ற கேள்விகள் எழுகின்றன.

ராம்சங்கர் கத்தாரியா

மத்திய அமைச்சரவையிலேயே ஸ்மிருதி இரானியின் துறையில், ‘இணை’அமைச்சராக இருக்கும் ராம்சங்கர் கத்தாரியா இந்திப் பேராசிரியர். கான்பூர் பல்கலைக்கழகத்தில் பி.எச்டி. பட்டம் பெற்றவர். ஆக்ரா மக்களவைத் தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டவர். பி.ஏ., எம்.ஏ. மதிப்பெண் சான்றிதழ் களில் திருத்தம் செய்ததாக அவர் மீது குற்றச்சாட்டு இருக்கிறது. இப்படி ஒரு குற்றச்சாட்டாவது இல்லாவிட்டால் எப்படி ‘இணை’ஆக முடியும்?

படித்துவிட்டுத்தான் நாட்டுக்குத் தலைவராக வேண்டும் என்பது கட்டாய மில்லை. படிக்காத மேதைகளை வரவேற்கத் தயங்காத நாடு இது. படித்ததாக வேட்பு மனுவில் குறிப்பிட்டு மாட்டிக்கொள்வானேன் என்பதுதான் கேள்வி!

எண்களில் அரசியல்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x