Last Updated : 28 Jan, 2014 09:31 AM

 

Published : 28 Jan 2014 09:31 AM
Last Updated : 28 Jan 2014 09:31 AM

பாரம்பரிய மருத்துவம் மீது பார்வையைத் திருப்புங்கள்!

பாரம்பரிய மருத்துவம் அல்லது மாற்று மருத்துவம் என்று அழைக்கப்படும் சித்த மருத்துவம், ஆயுர்வேதம், யுனானி, ஹோமியோபதி, யோகா, இயற்கை மருத்துவம் ஆகியவற்றின் சிறப்புகளை அடுக்கிக்கொண்டே போகலாம். இம்மருத்துவ முறைகள் ஒவ்வொன்றும் தனித்தன்மை கொண்டது என்றபோதும், இவற்றுக்குரிய பொதுவான சிறப்புகள் பல: பக்கவிளைவுகள் அற்றவை; நோயின் விளைவுகளை மட்டும் குணப்படுத்தாமல் நோயை வேரோடு போக்கி முழுமையாகக் குணப்படுத்துபவை; அன்றாட உணவுகள், மூலிகைகள் மூலமாகவும் எளிய உடற்பயிற்சிகள் வழியாகவும் பிரச்சினைகளைத் தீர்ப்பவை; உடலை மட்டுமோ உடலின் தனி உறுப்பை மட்டுமோ கவனத்தில் கொள்ளாமல், ஒவ்வோர் உறுப்பும் ஒட்டுமொத்த உடலின் பாகம் என்னும் முழுமை உணர்வைக் கொண்டவை; மனம்பற்றிய அறிதலையும் செய்து மருந்துகளைத் தேர்பவை; முக்கியமாக, மக்களுக்குப் பெரும் செலவுகளை ஏற்படுத்தாதவை.

விஷக்காய்ச்சல் அனுபவங்கள்

ஒருகாலத்தில் எங்கோ, யாரோ சொல்ல மாற்று மருத்துவத்தின் சிறப்புகளைக் கதைபோலக் கேட்டுக் கொண்டிருந்தோம். ஆனால், இப்போது சூழல் மாறி யிருக்கிறது. கடந்த 10 ஆண்டுகளில் புதிதாக நுழைந்த பல நோய்களுக்கு மாற்று மருத்துவ சிகிச்சைகள் நல்ல பலன் கொடுத்திருக்கின்றன. குறிப்பாக, சிக்குன் குனியா காய்ச்சலைக் குணமாக்கவும் குணமான பின் பல நாட்கள் நீடித்த மூட்டுவலி, சோர்வு போன்ற பிரச்சினைகளைத் தீர்க்கவும் இம்மருத்துவ சிகிச்சைகள் பெரிதும் உதவின. சமீப காலத்தில் தமிழகத்தை அச்சுறுத்திய டெங்கு காய்ச்ச லின் பரவலை விரைந்து கட்டுப்படுத்தியதிலும் இந்த மருத்துவ முறைகளுக்குக் குறிப்பிடத்தக்க பங்கு உள்ளது.

சித்த மருத்துவ முறையிலான பப்பாளி இலைச்சாறு, மலைவேம்பு இலைச்சாறு, நிலவேம்புக் குடிநீர் ஆகியவை மிக எளிதாக இந்நோயைக் குணப்படுத்தவும் வராமல் தடுக்கவும் உதவின. திருமங்கலம் ஹோமியோபதி மருத்துவக் கல்லூரி, பல இடங்களில் முகாம் நடத்தி உரிய மருந்துகளை விநியோகித்தது மட்டுமல்லாமல், 24 மணி நேரமும் தொடர்புகொள்ள செல்பேசி எண்களை அளித்து, மக்களுக்கு உரிய ஆலோசனைகளை வழங்கியது. மருந்துகளைப் பரிந்துரைத்து வாங்கிக்கொள்ளவும் வழிகாட்டியது.

இம்மருத்துவத் துறைகள் தாங்கள் வழங்கும் மருந்துகளையோ மருந்துப் பெயர்களையோ மறைத்து வைக்கவில்லை. மக்கள் எளிதாகத் தாங்களே கையாளும் படி பெயர்களையும் தயாரிப்பு முறைகளையும் தெரிவித் தும் அவற்றைப் பெறும் இடங்களையும் முறைகளையும் அறிவித்தும் வெளிப்படைத்தன்மையால் மக்களை நெருங்கிச் சென்றன. நாமக்கல் மாவட்டத்தில் சிக்குன் குனியா வேகமாகப் பரவியபோது, ஹோமியோபதி மருத்துவர்களின் ஆலோசனைப்படி ‘ரஸ்டாக்ஸ்’ என்னும் மருந்தை முன்தடுப்பாகப் பலர் பயன்படுத்தித் தற்காத்துக் கொண்டனர். தாகம் என வருவோர் தாமே மொண்டு பருகிச் செல்ல வாய்த்த திருவிழாத் தண்ணீர்ப் பந்தல்போல மூலிகைக் குடிநீரும் இலைச்சாறுகளும் மக்களுக்குப் பயன்பட்டன. எல்லா அரசு மருத்துவமனைகளிலும் இவை கிடைக்கும்படி செய்து மக்களைக் காத்ததோடு, நற்பெயரையும் பெற்றது அரசு. இப்போதைய நிதி ஒதுக்கீட்டு அறிக்கையில், அரசும் இம்மருத்துவ முறைகளின் சிறப்பையும் அவை பயன்பட்ட விதத்தையும் விதந்து குறிப்பிட்டுள்ளது. இந்நிலையில், பாரம்பரிய மருத்துவ முறைகளைப் பரவலாக்க மேலும் பல நடவடிக்கைகளை அரசு எடுப்பது அவசியமாகிறது.

கல்லூரிகளின் நிலை

பாரம்பரிய மருத்துவத்தைப் பரம்பரை பரம்பரையாகச் செய்துவருவோரே கற்றுக்கொள்ள முடியும் அல்லது கற்றுக்கொடுக்க முடியும் என்றிருந்த சூழலை உடைத்தவை இம்மருத்துவக் கல்விக்கு என அரசு சார்பில் தொடங்கப்பட்ட கல்லூரிகள். இந்திய மற்றும் ஹோமியோபதி மருத்துவத் துறையானது சித்தா, ஆயுர்வேதம், யுனானி, ஹோமியோபதி, யோகா- இயற்கை மருத்துவம் ஆகிய ஐந்து மருத்துவக் கல்லூரிகளை நிர்வகிக்கிறது. சித்த மருத்துவத்துக்கு சென்னை, பாளையங்கோட்டை ஆகிய இரண்டு இடங்களிலும் ஆயுர்வேதத்துக்கு கன்னியாகுமரி கோட்டாற்றிலும் ஹோமியோபதிக்கு மதுரை திருமங்கலத்திலும் யுனானி - இயற்கை மருத்துவத்துக்குச் சென்னையிலும் என ஆறு அரசுக் கல்லூரிகள் தமிழகத்தில் இருக்கின்றன. உள்கட்டமைப்புகளின் போதாமை காரணமாகக் கடந்த சில ஆண்டுகளாக இக்கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கு மத்திய மருத்துவ ஆணையம் அங்கீகாரம் கொடுக்க மறுப்பதும் தமிழக அரசு போராடி அங்கீகாரம் பெறுவதுமாக இருந்த நிலையில், இப்போது ஓரளவு ஆசிரியர் பணியிடம் நிரப்பப்பட்டுள்ளதுடன் தமிழக அரசு இக்கல்லூரிகளின் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த ரூ.15 கோடி நிதி ஒதுக்கியுள்ளது. தவிர, ஆராய்ச்சிப் பிரிவுகளை உருவாக்கவும் ரூ.12 கோடி நிதி வழங்கப்படும் என அறிவித்துள்ளது. ஆண்டுதோறும் இவ்விதம் இக்கல்லூரி களுக்கும் ஆராய்ச்சிக்கும் தொடர்ந்து நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும். இக்கல்லூரிகளில் பயிலும் மாணவர்களுக்குத் தன்னம்பிக்கையும் பெருமிதமும் தோன்றும் அளவு உள்கட்டமைப்பு வசதிகள் அப்போதுதான் மேம்படும். பல்வேறு கருத்தரங்குகள், பயிலரங்குகள், மருத்துவ முகாம்கள் நடைபெறவும் நிதி உதவி தேவை. அவற்றையும் கருத்தில் கொண்டு நிதி ஒதுக்கீட்டைத் தொடர வேண்டும்.

மாணவர் சேர்க்கையில் மாற்றம்

இம்மருத்துவக் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை தொடர்பான நடவடிக்கையிலும் பெருமளவு மாற்றம் தேவை. ஒவ்வொரு கல்வியாண்டிலும் மாணவர் சேர்க்கை நடைபெற செப்டம்பர், அக்டோபர் மாதங்கள் ஆகிவிடுகின்றன. இந்தக் கல்வியாண்டில் அங்கீகாரப் பிரச்சினைகள் ஏதுமில்லாதபோதும் மாணவர் சேர்க்கைக் கெடுவான அக்டோபர் இறுதியில்தான் கலந்தாய்வு நடத்தப்பட்டு, போதிய அவகாசம்கூட இன்றி மாணவர் சேர்க்கை நடைபெற்றது. மறுகலந்தாய்வு நடத்தக் காலம் இன்மையால், ஏற்பட்ட காலியிடங்களை நிரப்ப முடியவில்லை. மார்ச் மாதத்தில் பன்னிரண்டாம் வகுப்புத் தேர்வு எழுதும் மாணவர்கள் மே மாதத்தில் முடிவுகளைப் பெறுகின்றனர். இப்படிப்பில் சேர வேண்டுமானால், அதன் பின் கிட்டத்தட்ட ஆறு மாதங்கள் காத்திருக்க வேண்டிய நிலை.

ஐந்து படிப்புகளில், தாம் சேர விரும்பும் துறை கிடைக்குமா என்பதைத் தெரிந்துகொள்வதற்கு எந்த வழியும் இல்லை. கிடைக்கும் என்னும் உறுதியில்லாத நிலையில் வேறு ஏதாவது படிப்புகளில் சேர்ந்துவிடுகின்றனர். பின்னர், இப்படிப்பு கிடைக்குமானால், ஏற்கெனவே சேர்ந்த படிப்பிலிருந்து விலகி வருவதா வேண்டாமா என முடிவெடுக்கத் திணறுகின்றனர். ஏனென்றால், பிற படிப்புகளில் கிட்டத்தட்ட ஒரு பருவம் முடிந்து தேர்வு எழுதத் தயாராகும் நிலையில்தான் இப்படிப்புகளுக்கான கலந்தாய்வு நடைபெறுகிறது. சேர்ந்த கல்லூரியிலிருந்து செலுத்திய கட்டணத்தை முழுமையாகத் திரும்பப் பெறவும் இயலுவதில்லை. பன்னிரண்டாம் வகுப்புத் தேர்வு எழுதிய பின், அடுத்த படிப்பில் சேர எட்டு மாதக் காத்திருப்பு மாணவர்களுக்கு மன உளைச்சலை ஏற்படுத்துகிறது. பொறியியல், ஆங்கில மருத்துவக் கல்வி ஆகியவற்றுக்கு நடைபெறுவதைப் போல ஜூலை மாதத்துக்குள் கலந்தாய்வை முடித்து மாணவர்கள் சேர்வதற்கு வழிவகை செய்ய வேண்டும்.

எங்கே பணி வாய்ப்புகள்?

மாற்று மருத்துவப் படிப்பை முடித்தோருக்கான அரசு வேலைவாய்ப்பும் மிகவும் குறைவு. வட்டத் தலைநகர அரசு மருத்துவமனைகளில் சித்தா அல்லது ஹோமியோபதி மருத்துவத் துறை மட்டும் செயல்படுகிறது. மாவட்டத் தலைநகர் என்றால் இவ்விரு துறைகளும் இருக்கின்றன. ஒரே மருத்துவர்தான். அவர்களும் வெளிநோயாளிகளைப் பார்ப்பதோடு சரி. ஆயுர்வேதம், யுனானி, இயற்கை மருத்துவம் ஆகிய துறைகள் இன்னும் அரசு மருத்துவ மனைகளில் செயல்படவில்லை. அவற்றைக் கற்கும் மாணவர்களுக்கு அரசு வேலைவாய்ப்பும் கிடையாது. அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள் ஆகியவற்றில் மாற்று மருத்துவத்துக்கான அனைத்துப் பிரிவுகளும் தொடங்கி மருத்துவர்களை நியமிக்க வேண்டும்.

நோயாளிகளுக்குத் தேவையான மருந்துகளைப் பெற மருத்துவர்களையே நாட வேண்டியுள்ளது. அவசரத்துக்கு ஏதாவது மருந்து வாங்க வேண்டும் என்றால்கூட, மருந்துக் கடைகள் இல்லை. பெருநகரங்களில் எங்காவது ஒளிந்திருக்கும் மருந்துக் கடைகளைத் தேடிப் போக வேண்டும். கூட்டுறவு மருந்தகங்களில் மாற்று மருத்துவ மருந்துகளும் எளிதில் கிடைக்கும்படி செய்ய வேண்டும்.

நமது பாரம்பரியத்தையும் அடையாளத்தையும் தக்கவைப்பதோடு நம் பருவநிலைகள், வாழ்நிலைகளைக் கணக்கில் கொண்டு சிகிச்சை முறைகளை உருவாக்கியுள்ள இம்மருத்துவ முறைகள் மக்களிடம் அரசுக்கு நற்பெயரை உருவாக்குவதிலும் முன்னிற்பவையாக இருக்கின்றன. ஆகவே, அரசு இன்னும் கூடுதல் கவனம் செலுத்தி, இம்மருத்துவ முறைகளையும் கல்வியையும் மேலெடுத்துச் செல்ல வேண்டும்!

- பெருமாள் முருகன், கட்டுரையாளர், எழுத்தாளர். தொடர்புக்கு: murugutcd@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x