Published : 06 Mar 2014 10:02 AM
Last Updated : 06 Mar 2014 10:02 AM

கிழிந்து தொங்கும் முகத்திரை

நீண்ட நாள் இழுத்தடிக்கப்பட்ட லோக்பால் மசோதா கடந்த ஆண்டு நிறைவேறியபோது, ஒருவழியாக ஊழல் ஒழிப்புக்கு நல்ல சட்டம் ஒன்று வந்துவிட்டது என்ற நிம்மதி ஏற்பட்டது. ஆனால், வழக்கம்போல அரசு தன் வேலையைக் காட்டிவிட்டது.

லோக்பால் அமைப்பின் அடிப்படை ஆரம்பப் பணியான, அதற்கான நீதிபதிகளைப் பரிந்துரைக்கும் குழுவுக்குத் தலைமை வகிக்கும் வாய்ப்பையே நாட்டின் முக்கியமான சட்ட வல்லுநர்கள் நிராகரித்துவிட்டனர். முதலில், பரிந்துரைக் குழுத் தலைவர் வாய்ப்பை மூத்த வழக்கறிஞர் ஃபாலி நாரிமன் நிராகரித்தார்; இப்போது உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி கே.டி. தாமஸும் நிராகரித்துவிட்டார்.

மொத்தம் எட்டுப் பேர் கொண்ட பரிந்துரைக் குழு, லோக்பால் அமைப்பில் உள்ள பதவிகளுக்கான பெயர்களைத் தேர்வுக் குழுவுக்குப் பரிந்துரைக்க வேண்டும். அப்படிப் பரிந்துரைக்கப்படுவோரை பிரதமர், மக்களவைத் தலைவர், மக்களவை எதிர்க்கட்சித் தலைவர், உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி அல்லது உச்ச நீதிமன்ற நீதிபதி, குடியரசுத் தலைவரால் பரிந்துரைக்கப்படும் மூத்த வழக்கறிஞர் ஆகியோர் அடங்கிய தேர்வுக் குழு இறுதிசெய்யும் என்கிறது லோக்பால் விதி.

“இந்த விதிகளின்படி லோக்பாலில் உள்ள பல்வேறு பதவிகளுக்கான பெயர்களைத் தேர்வுசெய்வது பரிந்துரைக் குழுவின் பணி. ஆனால், பரிந்துரைக்கப்பட்ட பெயர்களை ஏற்றுக்கொள்ளலாமா அல்லது வேண்டாமா என்பதை பிரதமர் தலைமையிலான தேர்வுக் குழுவே முடிவுசெய்யும். இந்தக் காரணத்தால் பரிந்துரைக் குழு தேவையற்றது என்று கருதுகிறேன்” என்று சொல்லியிருக்கிறார் தாமஸ். இருவேறு தேர்வுமுறைகளால் நேர்மையாளர்கள் நிராகரிக்கப்படக் கூடும் என்ற இதே அச்சம்தான் வாய்ப்பை நாரிமன் நிராகரிக்கவும் காரணம்.

பொதுவாக, பரிந்துரைக் குழுவின் பரிந்துரைகளுக்கு வெளியிலிருந்தும் ஆட்களைப் பரிசீலிக்கும் சுதந்திரம் உயர்நிலைக் குழுவுக்கு இருப்பதில் தவறில்லை. ஆனால், அரசு தனக்கு ஏற்றவாறு ஆட்களைத் தேர்ந்தெடுத்து அமைப்பை ஒரு பொம்மையாக்கிவிட முடியும் என்பதுதான் பிரச்சினை. ஏனென்றால், அரசு எடுத்துவைக்கும் முதல் படியே அப்படித்தான் இருக்கிறது.

இந்தப் பதவிகளுக்கான நடுவர்களை மக்களோ வேறு அமைப்புகளோ பரிந்துரைத்துவிடக் கூடாது என்று கவனமாக, “மத்திய அரசின் பணியாளர் நியமனம் – பயிற்சித் துறை மூலம் பெறப்படும் மனுக்கள் மட்டுமே முதல் கட்டத்தில் பரிசீலிக்கப்பட்டு ஏற்கப்படும்” என்று ஒரு விதியின் மூலம் அரசு தெரிவித்தது; அடுத்து, “பரிந்துரைக் குழுவை தேர்வுக் குழு அப்படியே ஏற்கத் தேவையில்லை” என்று தெரிவிப்பதன் மூலம் இந்த நடைமுறைகள் யாவும் சம்பிரதாயங்கள் என்று காட்டிவிட்டது.

தேர்வுக் குழுவின் முதல் கூட்டத்தில், பரிந்துரைக் குழுவில் மூத்த வழக்கறிஞர் பி.பி. ராவை உள்ளடக்குவதற்கு சுஷ்மா சுவராஜ் தெரிவித்த எதிர்ப்பு நிராகரிக்கப்பட்டுள்ளது லோக்பாலை இந்த அரசு எப்படி உருவாக்கப்போகிறது என்பதற்கு ஓர் உதாரணம். மக்களுக்கு இழைக்கப்படும் துரோகம் இது. விரைவில் அவர்களை நேரில் எதிர்கொள்ளும்போது தண்டனையின் வீரியம் அரசுக்குப் புரியும்.​

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x