Last Updated : 09 Mar, 2017 08:41 AM

 

Published : 09 Mar 2017 08:41 AM
Last Updated : 09 Mar 2017 08:41 AM

இணைய களம்: கர்மவினையும் கடமையும்!

சுப் பாதுகாப்பு இயக்கத்தைச் சேர்ந்த பிரச்சாரகர் ஒருவர், சுவாமியைச் சந்தித்து தமது சங்கத்துக்கு சுவாமியின் உதவியை வேண்டினார். “நம் தேசத்தின் கோமாதாக்களாகிய பசுக்களைக் கசாப்புக்காரர்களிடம் இருந்து நாங்கள் காப்பாற்றுகிறோம். வயதான பசுக்களையும், நோயுற்றவற்றையும், கசாப்புக்காரர்களிடமிருந்து மீட்ட பசுக்களையும் கோசாலைகள் அமைத்துப் பராமரித்துவருகிறோம்” என்றார். சுவாமி அவரிடம் கேட்டார்: “மத்திய இந்தியாவில் கடுமையான பஞ்சம் பரவியிருக்கிறது. பட்டினியால் ஒன்பது லட்சம் பேர் மாண்டு விட்டனர் என்று இந்திய அரசாங்கம் அறிக்கை வெளியிட்டுள்ளது. பஞ்சத்தால் பாதிக்கப்பட்ட பகுதியில் உங்கள் சங்கம் ஏதாவது உதவி செய்ததா?” அதற்கு அந்தப் பிரச்சாரகர் சொன்னார்: “பஞ்சத்தின்போதோ, மற்ற இடர்களின்போதோ நாங்கள் எதுவும் உதவிசெய்வதில்லை. பசுக்களைப் பாதுகாக்கவே எங்கள் சங்கம் அமைக்கப்பட்டுள்ளது. மனிதர்களின் கர்மவினை காரணமாக, அவர்கள் செய்த பாவங்களால் பஞ்சம் ஏற்பட்டுள்ளது. கர்மவினைப் பயன் அது.”

அவர் சொன்னதைக் கேட்டு வெகுண்ட சுவாமி, “மனிதர்கள் மீது இரக்கம் கொள்ளாத அமைப்புகள், தம் நாட்டுச் சகோதரர்கள் பட்டினியால் சாவதைக் கண்டும் அவர்களின் உயிரைக் காக்க கைப்பிடி உணவு கூடத் தராதவர்கள் பறவைகளுக்கும் விலங்குகளுக்கும் மூட்டை மூட்டையாகக் கொட்டுபவர்களின்மீது எனக்குச் சற்றும் பரிவு கிடையாது; அத்தகைய சங்கங்கள் எந்த விதப் பயனையும் தரும் என்றும் நான் நம்பவில்லை. மனிதர்கள் தாம் செய்த கர்ம வினைகளால்தான் செத்துப்போகிறார்கள் என்றால், இந்த உலகில் எதற்குமே போராடுவதோ முயற்சிப்பதோ வீண் என்பது உண்மையாகிவிடும். பசுக்களைப் பாதுகாக்கின்ற உங்கள் பணி வீண்தான். நீங்கள் சொல்கின்ற கர்மவினையே காரணம் என்றால், பசுக்கள் அவற்றின் கர்மவினைப்படியே கசாப்புக்காரனின் கைகளில் அகப்பட்டுக்கொள்கின்றன. அந்த விஷயத்திலும் நாம் எதுவும் செய்ய முடியாதே?” என்று சீறினார்.

இதை ஏற்றுக்கொள்ளாத பிரச்சாரகர், “சுவாமி, தாங்கள் சொல்வது உண்மைதான்: ஆனாலும் சாஸ்திரங்கள் பசுவை நம் தாயென்று சொல்கின்றனவே?” என்றார்.

சுவாமிஜி நையாண்டியாக, “ஆமாம் பசு நம் தாய்தான், உங்களைப் போன்ற பிள்ளைகளை வேறு யாரால் பெற்றெடுக்க முடியும்?” என்றார்.

அந்த சுவாமி - விவேகானந்தர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x