Published : 25 May 2017 10:08 AM
Last Updated : 25 May 2017 10:08 AM

மன்னிக்கவும், மன்னிப்பு கேட்க முடியாது!

ஒவ்வொருவரும் பொறுப்புணர்வு கொண்டவர்களாக இருக்கலாம்; ஆனால், பதில் சொல்லக் கடமைப்பட்டவர்களாக இல்லை!

அமெரிக்காவின் யுனைடைட் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் விமானத்தில், ஆசிய வம்சாவளியைச் சேர்ந்த பயணியொருவர் விமான ஊழியரால் அவமதிக்கப்பட்ட சம்பவத்துக்கு வருத்தம் தெரிவித்தது அந்நிறுவனத்தின் முதன்மை நிர்வாக இயக்குநருக்கு மிகவும் சிக்கலானதொரு முடிவாகவே இருக்க வேண்டும். மருத்துவரான அந்தப் பயணி, அவரது இருக்கையிலிருந்து விமான ஊழியர்களால் வலுக்கட்டாயமாக இழுக்கப்பட்டு இரண்டு பக்க இருக்கைகளுக்கும் நடுவில் விடப்பட்டார். அதற்கான காணொளிக் காட்சி ஆதாரங்கள் இருந்தபோதிலும்கூட, அவர் மற்ற பயணிகளுக்கு இடையூறு விளைவித்தார் என்றே அந்நிறுவனம் தொடர்ந்து கூறிவந்தது. கடுமையான கண்டனங்களைத் தொடர்ந்து மன்னிப்பு கேட்பதே சிறந்தது என்று அந்நிறுவனம் முடிவெடுத்தது. அது செலவில்லாத வழிமுறையென்பதும் ஒரு காரணம்.

நம்முடைய நாட்டில், தங்களுடைய நீண்ட கால விருப்பங்களுக்குப் பங்கம் வந்து சேருமோ என்ற அச்சத்தால் எழுகின்ற கட்டாயத்தை உணரும்போது மட்டும்தான் மக்கள் மன்னிப்பு கேட்கிறார்கள். யாரிடம் மன்னிப்பு கேட்க வேண்டுமோ அவர்களையே குற்றஞ்சாட்டிவிட்டு அரைகுறையாக மன்னிப்பு கேட்பதுதான் பொதுவான பழக்கமாக இருக்கிறது. மேலும் மன்னிப்பு கேட்பதற்கு எந்த அவசியமும் இல்லையென்று தவறாகவும் புரிந்துகொள்ளப்படுகிறது. எனினும் மனத்தயக்கத்தோடு கேட்கும் மன்னிப்பானது, வேண்டுமென்றே குற்றஞ்சாட்டியோ அல்லது அதற்கான காரணங்களைக் கூறியோ மன்னிப்பு கேட்க மறுப்பதைக் காட்டிலும் சிறந்தது.

பழியை மாற்றிப் போடுதல்

கிரேட்டர் நொய்டாவில் இளம் ஆப்பிரிக்க மாணவர்களின் மீது நடத்தப்பட்ட தாக்குதல்களைப் பற்றிய சமீபத்திய வழக்கில் என்ன நடந்தது என்பது உண்மை நிலையை மறுப்பதாகும். அதிகாரபூர்வமாக மன்னிப்பு கேட்டிருப்பதால், சர்வதேச அளவில் கெட்டுப்போயிருக்கும் நமது மதிப்பு கொஞ்சம் உயர்ந்திருக்கலாம். ஆனால் நாம் நிறவெறிக்கு எதிரான குற்றச்சாட்டைத் தவிர்ப்பதையே தேர்ந்தெடுத்தோம்.

கடந்த ஆண்டு யமுனை நதிக்கரையில் நடந்த மிகப் பெரிய ஆன்மீக நிகழ்ச்சியால் ஏற்பட்ட சுற்றுச்சூழல் பாதிப்புகளை விளக்கும் தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தின் அறிக்கை தொடர்பான வழக்கிலும் இப்படித்தான் நடந்தது. அந்த நிகழ்ச்சியை நடத்தியவர்கள் மன்னிப்பு கேட்கவோ அல்லது அபராதத்தைச் செலுத்தவோ முன்வராமல் சுற்றுச்சூழல் நீதிமன்றத்தின் மதிப்பீட்டைப்பற்றி கேள்விகளை எழுப்பினார்கள். நதிநீர் ‘நன்றாகவும் தூய்மையாகவும்’ இருந்தாலும், அதிகாரிகள் நிகழ்ச்சிக்கு அனுமதிக்கவில்லை என்பதே அவர்களின் வாதமாக இருந்தது. அதனால், தொடர்புடைய அதிகாரிகளுக்கு அபராதம் செலுத்தவேண்டியிருந்தது.

பாராட்டத்தக்கதாக இருந்தாலும்- செலவில் லாததும்கூட- மன்னிப்பு கேட்கும் வாய்ப்புக்கு செல்வாக்கு இல்லாத நிலையே நீடிக்கிறது. ஏனென்றால், அது பலவீனமாகக் கருதப்படுகிறது. அரசியலில், மன்னிப்பு கேட்பது என்பது ஒரு தலைவரை உச்சத்திற்கு இட்டுச் செல்லக்கூடியது, ஆனாலும்கூட, பலவீனமாகப் பார்க்கப்படுவோமோ அல்லது மதிப்பை இழக்க வேண்டியிருக்குமோ என்ற அச்சத்தைத் தாண்டி மிகச் சிலர் மட்டுமே அந்த முடிவையெடுக்கும் துணிச்சலைக் கொண்டிருக்கிறார்கள். ஒரு தவறு வெளியே தெரியவரும்போது, அது தவிர்க்கப்பட்டிருக்க வேண்டும் என்று ஏற்றுக்கொள்ளும் வகையில் தலையசைப்பதே மிகவும் உகந்த வழிமுறையாக இருக்கும்.

வணிக உலகில் மன்னிப்பு என்பது வழக்கத்திலேயே இல்லை. மன்னிப்பு, பிரச்சினையை முடிவுக்குக் கொண்டுவருவதில்லை என்பது அதற்கான காரணங்களில் ஒன்று. யுனைடைட் ஏர்லைன்ஸின் தலைமை அதிகாரி மன்னிப்பு கேட்டிருக்கிறார், ஆனாலும் அந்நிறுவனம் நீதிமன்ற வழக்கையும் எதிர்கொண்டாக வேண்டும். மன்னிப்பு மிகவும் காலம் தாழ்ந்து வந்திருக்கலாம். கால தாமதம், உண்மைத்தன்மை என்னும் கூறினை நீர்க்கச்செய்துவிடுகிறது. எனினும், பெரும் வணிக நிறுவனங்கள், குறிப்பாக பன்னாட்டு நிறுவனங்கள், அதிகாரிகளிலிருந்து கொஞ்சம் மாறுபட்டிருக்கிறார்கள். அவர்கள் மன்னிப்பு கேட்பதன் பின்விளைவுகளைக் கணக்கிட மிகவும் அதிகமான நேரத்தை எடுத்துக்கொள்கிறார்கள். அதனால், அதன் அழுத்தமே குறைந்துவிடுகிறது.

அரசு - வணிக நிறுவன உறவு

தற்போது உலகம் முழுவதுமே அரசும் பெருவணிகமும் மிகவும் நெருக்கத்தில் வந்துகொண்டிருக்கின்றன. இந்தியாவில், மிகச் சமீப காலத்திற்கு முன்புவரை இரண்டும் விலகித்தான் இருந்தன. சுதந்திரத்தை அடுத்துவந்த சில பத்தாண்டுகளில், வணிக நிறுவனங்கள் பற்றிய பொதுக்கருத்து தவிர்க்கப்பட்டது. குழந்தைப்பருவ சத்துணவுக் குறைபாடு பற்றிய ஒரு கட்டுரையில் நான் ஒரு வணிக நிறுவனத்தின் பெயரைச் சேர்த்திருந்ததையும், அந்தப் பெயரை பத்திரிகை ஆசிரியர் நீக்கச் சொன்னதையும் நினைத்துப்பார்க்கிறேன்.

அது 1970-களின் தொடக்கத்தில் நடந்தது. அப்போது அரசு நிறுவனங்களை விமர்சனம் செய்ய சுதந்திரம் இருந்தது. ஆனால், தனியார் நிறுவனங்களின் பெயரை பொதுவில் சொல்லக் கூடாது என்ற எச்சரிக்கையுணர்வும் இருந்தது. ஏனென்றால், அது நிச்சயமாக சட்டரீதியான தகராறுக்கு இட்டுச்செல்லும். அதனால் ஊடகங்கள் அரசியல் தலைமையைப் பற்றி கவனம் செலுத்துவதையே தேர்ந்தெடுத்துக்கொண்டன.

கடந்த முப்பதாண்டுகளில் நிலைமைகள் சப்தமே இல்லாமல் தீவிரமாக மாறியிருக்கின்றன. இந்த மாற்றங்கள், மிகவும் அரிதாக ஏற்படும் தவறுகளையும்கூட ஒத்துக்கொண்டிருக்கின்றன. தற்போதைய விவாதத்தில் ஆளுகை என்பது பல்வகைப்பட்ட அரசு சாரா செயல்பாட்டாளர்களை ஒருங்கிணைப்பதை முதன்மைப் பணியாகக் கொண்டிருக்கும் நலிவுற்ற அரசையே குறிப்பிடுகிறது.

தற்போது இந்த அரசுகள் கூட்டாண்மை முறை என அழைக்கப்படுவதன் நடுநாயகமாக விளங்குகின்றன. இரண்டு விதமான கூட்டாண்மை முறைகள் உருவாகியுள்ளன. அரசுக்கும் தனியார் வணிகங்களுக்கும் இடையிலானது ஒன்று. அரசுக்கும் அரசு சாரா அமைப்புகளுக்கும் இடையிலானது மற்றொன்று. குறைவான பணியாளர் எண்ணிக்கையும், பொதுப் பயன்பாட்டுப் பணிகளின் தர வீழ்ச்சியும் மக்களை தனியார் நிறுவனங்களிடமிருந்து அச்சேவைகளைப் பெற முயற்சிக்குமாறு கட்டாயப்படுத்துகின்றன.

பொறுப்பின்மை

ஒரு சேவை நிறுவனம் திருப்தியளிக்காதபோது, மற்றொரு நிறுவனத்தில் முயற்சிப்பீர்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தப் புதிய நிலை, குடிமக்களின் மிகப்பெரும் அளவிலான தேவைகளை நிறைவேற்றுவதில் உள்ள பொறுப்புணர்ச்சியை இல்லாமலாக்குகிறது. யாருமே பதில் சொல்லும் பொறுப்புடையவர்களாகத் தோன்றவில்லை.

வசதியானவர்களும் அரசாங்க அமைப்புகளால் ஏற்படும் சிக்கல்களிலிருந்து விடுபட்டதாகவே நினைக்கிறார்கள். அதனால், கல்வித் துறையில், சர்வதேசப் பள்ளிகள் எனும் சந்தையும் அதற்கு இணையாக, சிறந்த நிலையில் இல்லாதவர்களுக்கான தனியார்ப் பள்ளிகளும் அதிகரித்துவருகின்றன.

மிகவும் ஏழைகளாக இருப்பவர்களுக்கு, அரசுக்கும் அரசு சாரா அமைப்புகளுக்கும் இடையிலான கூட்டாண்மையால் சேவைப்பணிகளை அளிப்பது நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் அதிகரித்துவருகிறது. இத்தகைய முறையானது ஏழைகள் அதிக அளவில் வாழும் பகுதிகளில் மிகவும் வெளிப்படையாகத் தெரிகிறது.

இந்தப் பின்னணிக்கு மாறாக, எந்தவொரு வலுவான தனியார் நிறுவனமும், சேவைப் பணிகளின் தரக்குறைவால் ஏற்படும் தவறுகளை ஏன் ஏற்றுக்கொள்வதில்லை என்பதையும் அதற்காக மன்னிப்பு கோருவதில்லை என்பதையும் நம்மால் பார்க்க முடிகிறது. விருப்பமில்லாத ஓர் அரசினால் அளிக்கப்பட வேண்டிய சேவைப்பணிகளால் குடிமக்கள் தங்களது உரிமைகளை இழக்கிறார்கள். ஒவ்வொருவரும் பொறுப்புணர்வு கொண்டவர்களாக இருக்கலாம். ஆனால், யாருமே பதில் சொல்லக் கடமைப்பட்டவர்களாக இல்லை. தீர்வுகளைத் தேடி கண்டடைவதற்கான பாதை மிகவும் நீளமானது. எனவே மன்னிப்புக்கான எதிர்பார்ப்பு சாத்தியமானது என்பதைக் காட்டிலும் கனவாகவே தோன்றுகிறது.

-கிருஷ்ண குமார், என்.சி.இ.ஆர்.டி முன்னாள் இயக்குநர். � ‘தி இந்து’ (ஆங்கிலம்)

தமிழில் சுருக்கமாக : புவி

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x