Last Updated : 26 Sep, 2016 10:04 AM

 

Published : 26 Sep 2016 10:04 AM
Last Updated : 26 Sep 2016 10:04 AM

மருத்துவ நுழைவுத் தேர்வு: தமிழ்ச் சமூகம் பேச வேண்டும்!

அகில இந்திய மருத்துவ நுழைவுத் தேர்வு முறை (NEET) தொடர்பாக எழுந்த விவாதங்களை அப்படியே கீழே தள்ளி மூடிச் சென்றுவிட்டன, புதிய கல்விக் கொள்கை தொடர்பான விவாதங்கள். தமிழகத்தில் உள்ள வெறும் மூவாயிரத்துச் சொச்சம் மருத்துவப் படிப்பு இடங்களுக்கான பிரச்சினைதானே இது என்று கருதுகிறார்கள் பலரும். அப்படி அல்ல. மத்திய அரசுக்கு ஒதுக்கப்பட்டுள்ள 15% மருத்துவக் கல்லூரி இடங்களுக்கு அகில இந்திய மருத்துவத் தேர்வு நடத்துவதில் யாருக்கும் எந்தப் பிரச்சினையும் இல்லை. மீதி உள்ள 85% இடங்களுக்கு, அதாவது நம்முடைய மாநில அரசு ஒதுக்கீட்டின் கீழேயுள்ள இடங்களுக்கும் நாடு முழுக்க ஒரே நுழைவுத்தேர்வு என்று ஆகியிருப்பதுதான் பிரச்சினை.

மத்திய அரசு இதற்குச் சொல்லும் காரணம், “தகுதி இல்லாதவர்கள் நிறையப் பேர் மருத்துவர்களாகிவிடுகிறார்கள். தனியார் கல்லூரிகளும் பணம் வாங்கிக்கொண்டு இடம் தந்துவிடுகின்றன. ஆகவே, பொது நுழைவுத்தேர்வு மூலம் தகுதியானவர்களைத் தேர்ந்தெடுக்கப்போகிறோம்” என்பது. சரி, அரசு மருத்துவக் கல்லூரிகளில் தகுதி உள்ளவர்களுக்கு மட்டும்தானே இடம் கிடைக்கிறது. ஆக, அரசுக் கல்லூரிகளுக்கு என்ன தகுதி நிர்ணயம் செய்யப்பட்டிருக்கிறதோ அதையே தனியார் கல்லூரிகளுக்கும் அமல்படுத்த ஏதாவது சட்டத் தடை இருக்கிறதா என்ன?

‘நீட்’ பிரச்சினைகள்

தமிழ்நாட்டில் மருத்துவக் கல்லூரிகளில் இடம்பெறுகிற 99% மாணவர்கள் +2 வகுப்பை மாநிலப் பாடத்திட்டத்தில் படித்தவர்கள். எட்டரை லட்சத்திலிருந்து ஒன்பது லட்சம் மாணவர்கள் ஆண்டு தோறும் +2 பொதுத்தேர்வு எழுதுகிறார்கள். அதில் உத்தேசமாக 7 லட்சம் மாணவர்கள் அரசுப் பள்ளிகளில் தமிழ் வழியில் படிப்பவர்கள். மீதம் உள்ளவர்களில் பெரும்பாலானவர்கள் தனியார் மெட்ரிக் பள்ளிகளில் ஆங்கில வழியில் படிப்பவர்கள். ஆக, மருத்துவக் கல்லூரிகளில் இடம்பிடிப்பவர்களில் 99% பேர் தனியார் பள்ளி மாணவர்களே.

அதிர்ச்சியான விஷயம், இந்த ஆண்டு அரசுப் பள்ளிகளில் படித்து மருத்துவக் கல்லூரிகளில் இடம்பிடித்தவர்கள் வெறும் 24 பேர் என்பது. அரசுப் பள்ளிகளில் படித்த 7 லட்சம் மாணவர்களில் எத்தனை பேர் உயர் கல்விக்குப் போகிறார்கள் என்ற புள்ளிவிவரமும் அரசிடம் இல்லை. அவர்களின் உயர் கல்விக்கான வாய்ப்பாக இருப்பது அரசு கலைக் கல்லூரிகளில் தொடங்கி, பன்தொழில்நுட்பக் கல்லூரிகள் வரை எல்லா வாய்ப்புகளையும் சேர்த்தால்கூட, அரசுப் பள்ளிகளிலிருந்து உயர் கல்விக்குப் போனவர்களின் எண்ணிக்கை 50 ஆயிரத்தைத் தாண்டாது.

நிலைமை இவ்வளவு மோசமாக இருக்கையில், அரசுப் பள்ளிகளில் தமிழ் வழியில் படித்த மாணவர்களுக்கு ஆங்கில வழி வினாத்தாள் வழங்கப்பட்டால், அவர்களால் எப்படி ‘நீட்’ தேர்வை எதிர்கொள்ள முடியும் என்றொரு கேள்வி எழுந்தது. உடனே, மாநில மொழிகளிலும் கேள்வித்தாள் வழங்கப்படும் என்று அறிவித்து, அவர்களின் வாயை அடைத்துவிட்டது மத்திய அரசு. இந்த அறிவிப்பின் மூலம் தமிழ் வழி பயின்ற மாணவர்களுக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை என்பது போன்ற தோற்றத்தை ஏற்படுத்திவிட்டார்கள்.

உண்மையில், தமிழ் மொழியில் படித்தாலும், ஆங்கில மொழியில் படித்தாலும் தேர்வின் தன்மை, கேள்வித்தாள் முறை, பகுத்தாயும் தன்மையில் எந்தப் பரிச்சயமும் பயிற்சியும் இல்லாத நம் தமிழ் வழிக் குழந்தைகள் ஏமாந்து நிற்பார்கள் என்பதுதான் நிதர்சனம். எனவேதான், மூவாயிரத்துச் சொச்சம் மருத்துவக் கல்லூரி இடங்களுக்கான ஒரு பிரச்சினையாக இதைப் பார்க்காமல், ஒரு மாநிலத்தின் பிரச்சினையாக இதை அணுக வேண்டியிருக்கிறது.

தற்போதுள்ள சூழ்நிலையில், பின்தங்கிய அல்லது மிகவும் பின்தங்கிய பகுதியிலிருந்து, ஒரு மாணவன் +2 வகுப்பில் அதிக மதிப்பெண் பெற்று அரசு மருத்துவக் கல்லூரியில் இடம்பிடித்துவிட முடியும். பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட, பட்டியலின மாணவர்களும் தங்களுக்குக் கிடைத்துள்ள வாய்ப்பைப் பயன்படுத்தி, மருத்துவக் கல்வி பயிலும் வாய்ப்பு நம்முடைய தமிழக அரசு பின்பற்றி வருகிற சமூகநீதிக் கொள்கையால் சாத்தியமாயிருக்கிறது. ஆக, சமூகத்தின் அனைத்துப் பிரிவினரும் உயர் கல்வியை அடைவதற்கான தமிழக அரசின் நிலைப்பாட்டுக்கு மாறாக, தமிழக மாணவர்களின் கனவைச் சிதைக்கிற, வாய்ப்பைத் தட்டிப்பறிக்கிற செயல்பாடே ‘நீட்’ என்று புரிந்துகொள்ள வேண்டும்.

மாணவர்களின் பிரச்சினைகள் என்ன?

1. பன்னிரண்டாம் வகுப்பு வரை மாநிலப் பாடத்திட்டத்தை தமிழ் அல்லது ஆங்கில வழியில் பயின்ற மாணவர்கள், மத்தியப் பாடத்திட்டத்திலிருந்து கேட்கப்படுகின்ற கேள்விகளுக்கு எப்படித் தயாராவார்கள்?

2. ‘நீட்’ தேர்வின் கேள்வித்தாள் முறை மத்தியத் தேர்வு வாரியத்தின் அணுகுமுறை யில் உள்ளது. அதாவது, பகுத்தாய்வது மற்றும் கண்டுணர்வது என்ற முறையில். 12 ஆண்டுகளாக மனப்பாடம் செய்து படிப்பதே கல்வி என்று பயிற்றுவிக்கப்பட்டிருக்கின்ற நம் மாணவர்கள், ஒரே நாளில் உற்றுநோக்குதல் அல்லது படித்து ஆராய்ந்து பதில் அளித்தல் முறைகளுக்கு எப்படித் தயாராவார்கள்?

3. அதிக மதிப்பெண் எடுப்பவர்களுக்கே மருத்துவம் மற்றும் பொறியியல் கல்லூரி களில் அரசு ஒதுக்கீட்டில் இடம் கிடைக்கும் என்ற சூழலை அரசுதான் உருவாக்கியிருக் கிறது. ‘கட்-ஆப்’ மதிப்பெண்களை நிர்ணயித்திருப்பதும் அரசுதான். மாநிலப் பாடத்திட்டத்தில் அதிக மதிப்பெண்களுக்காக மூச்சிரைக்க ஓடி, அதே ஆண்டில் சிபிஎஸ்சி கேள்வித்தாள் முறைக்கும் தயாராக வேண்டிய நிர்ப்பந்தம் என்பது குழந்தைகள் மீதான வன்முறை இல்லையா?

4. நம்மூரில் +2 பாடத்திட்டம் மாற்றியமைக்கப்பட்டு, சரியாக 12 ஆண்டுகள் முடிந்துவிட்டன. கடந்த 12 ஆண்டுகளில் உலகமே மாறிவிட்டது. ஆனால், புத்தகம் அப்படியே இருக்கிறது. 10 ஆண்டுகளுக்கு முன் இப்போது உள்ள +2 பாடப்புத்தகத்தைப் படித்த மாணவர்கள், அதே பாடப்புத்தகத்தைக் கற்பிக்கிற ஆசிரியர்களாக வளர்ந்திருக்கிற அவலம் நம்மூரில் மட்டுமே சாத்தியம். இந்நிலையில், மத்தியப் பாடத்திட்டத்திலிருந்துதான் நீட் எழுத வேண்டுமென்றால், அதை எதிர்கொள்கிற சூழல் தமிழக ஆசிரியர் சமூகத்திடம் உள்ளதா? மாநில அரசின் பொதுத்தேர்வு முறைக்கு மட்டுமே தன்னை நீண்ட காலமாகப் பழக்கிக்கொண்டிருக்கக் கூடிய ஆசிரியர் சமூகம், திடீரென்று ஒரே நாளில் சிபிஎஸ்சி பாடத்திட்டத்துக்கும், நீட் தேவுக்கும் தக்கவாறு எப்படி மாணவர்களைத் தயார்படுத்த முடியும்?

5. நீட் தேர்வுக்குத் தயார்படுத்துகிற பயிற்சியில் முன்னிலையில் உள்ள பேராசிரியர் ஒருவர், “தமிழ்நாடு முழுக்க நீட் தேர்வுக்கு முழுமையான ஆற்றலோடு உள்ள பயிற்சியாளர்கள் 50 பேர் இருந்தால் அதுவே அதிகம். நீட் தேர்வை எதிர்கொள்வதற்கு மாநிலப் பாடத்திட்டத்தின் சத்து போதாது. மத்திய பாடத்திட்டத்திலிருந்து படித்து தேர்ந்தாலும் போதாது. காரணம், சிபிஎஸ்சி பாடப்புத்தகத்திலிருந்து மட்டுமே கேள்விகள் வரப்போவதில்லை. ஒவ்வொரு பாடத்துக்கும் குறைந்தது 10 புத்தகங்களாவது ரெஃபரன்ஸ் செய்து படிக்க வேண்டும்” என்கிறார்.

இப்படிப்பட்ட சூழ்நிலையில், தமிழ் வழியில் மாநிலப் பாடத்திட்டத்தில் ஏற்கெனவே கேட்கப் பட்ட கேள்வித்தாள்களைப் புரட்டி தேர்வுக்குத் தயாராகும் நம் மாணவர்களின் கதி?

- துளசிதாசன்,
தொடர்புக்கு: thulasiyazhi@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x