Published : 05 Mar 2014 00:00 am

Updated : 07 Jun 2017 10:56 am

 

Published : 05 Mar 2014 12:00 AM
Last Updated : 07 Jun 2017 10:56 AM

சஹாரா ஏன் சரிகிறது?

எல்லாப் பெரும் செல்வங்களுக்குப் பின்னாலும் குற்றமிருக்கிறது - பிரெஞ்சு நாவலாசிரியர் பால்ஸாக்கின் சற்றே மாற்றப்பட்ட இந்த வரியைத் தனது ‘காட் ஃபாதர்’ நாவலின் தொடக்கத்தில் மரியோ பூஸோ குறிப்பிட்டிருப்பார். மாஃபியா செயல்பாடுகளுக்கும் பெரும் பணக்காரர்களின் செயல்பாடுகளுக்கும் அதிக வித்தியாசமில்லை என்பதை இவ்வரியைக் குறிப்பிடுவதன் மூலம் பூஸோ வாசகனுக்கு உணர்த்த விரும்புகிறார்.

அடிப்படையிலேயே முதலாளித்துவ அமைப்பானது, மிகச் சிறிய சிறுபான்மையினரான பெரும் பணக்காரர்களுக்கானது என்பதால், பெரும்பாலான நாடுகளில் முதலாளித்துவம் என்பதே குரோனி கேப்பிடலிஸம்தான் (அரசியல் அதிகாரத்தில் இருப்பவர்களுக்கு நெருக்கமான முதலாளிகள் மட்டுமே தழைத்தோங்க வகை செய்யும் முதலாளித்துவமே குரோனி கேப்பிடலிஸம் எனப்படுகிறது). இன்றைய இந்தியா, குரோனி கேப்பிடலிஸத்துக்கான ஆகச் சிறந்த உதாரணம். அலைக்கற்றை ஊழல், நிலக்கரி ஊழல், கிருஷ்ணா-கோதாவரி படுகை எரிவாயு விலை நிர்ணய ஊழல், சமீபத்திய சுப்ரதா ராய் விவகாரம் ஆகிய அனைத்தும் காட்டுவது இதைத்தான்.


இந்தியாவில் கருப்புப் பணம் எப்படி வர்த்தகத்தில், தொழில் துறைகளில் முதலீடு செய்யப்படுகிறது என்பதற்கு உதாரணமாகத் திகழ்கிறது, ராய்க்குச் சொந்தமான ‘சஹாரா குழும’ விவகாரம். இந்தியாவின் மிகப் பெரும் தனியார் நிறுவனங்களுள் ஒன்றான ‘சஹாரா குழும’த்தின் ஒட்டுமொத்த மதிப்பு சுமார் ரூ. 68,000 கோடி. உற்பத்தி, சேவை, விளையாட்டு, சினிமா என சுப்ரதா ராய் கால் பதிக்காத துறை என்று எதுவுமில்லை எனலாம். இந்தியாவிலேயே மிக அதிகமான பணியாளர்களைக் கொண்ட தனியார் நிறுவனம் இதுவே. இந்தியாவின் முதல் 10 பெரும் பணக்காரர்களுள் ஒருவரான ராயின் செல்வாக்கு முகேஷ் அம்பானியின் செல்வாக்குக்குச் சற்றும் குறையாதது. பல நூறு கோடி ரூபாய்கள் செலவில் (திருமணத்துக்கான மெழுகுவத்திகள் வாங்க மட்டும் ஒன்றரைக் கோடி ரூபாய் செலவிடப்பட்டதாம்) 2004-ல்

இவரது இரண்டு மகன்களுக்கு நடந்த திருமணம், இவரது செல்வாக்குக்கு ஓர் உதாரணம். அன்றைய பிரதமர் வாஜ்பாய் முதல் சச்சின் டெண்டுல்கர் வரை இந்தியாவின் அதி முக்கியமான 10,000 விருந்தினர்கள் கலந்துகொண்ட திருமணம் அது.

இவ்வளவு செல்வாக்கு மிகுந்த ஒருவருக்கு எதிராக பிப்ரவரி 26-ம் தேதி ஜாமீனில் வெளிவர முடியாத கைது வாரண்ட்டை உச்ச நீதிமன்றம் பிறப்பித்தது என்றால், அதற்குப் பின்னால், ‘செபி’யில் (செக்யூரிட்டிஸ் அன்ட் எக்ஸ்சேஞ் போர்ட் ஆஃப் இந்தியா) இயக்குநராகப் பணியாற்றிய கே.எம்.ஆப்ரஹாம் போன்ற நேர்மையான, திறமையான அதிகாரிகளின் உழைப்பு இருக்கிறது.

கதை தொடங்கும் இடம்

சஹாரா குழுமம் 2008-09-ல் பொதுமக்களிடையே கடன் பத்திரங்களை வழங்கி முதலீட்டைத் திரட்டியது. இந்தக் கடன் பத்திரங்களை முதலீட்டாளர்கள் விரும்பும் பட்சத்தில் தங்களது பங்காக (ஷேர்) மாற்றிக்கொள்ளலாம் என்ற அடிப்படையில், சுமார் 20,000 கோடி ரூபாய் முதலீடு இந்த இரண்டு நிறுவனங்களால் திரட்டப்பட்டன. ‘சஹாரா குழும’த்தின்படி முதலீட்டாளர்களின் மொத்த எண்ணிக்கை சுமார் 3 கோடி. அதாவது, 40-ல் ஒரு இந்தியர் அல்லது எட்டு சதவீத இந்தியக் குடும்பங்கள் இதில் முதலீடு செய்துள்ளனர் என்றது.

முதலீட்டாளர்கள் விரும்பும் பட்சத்தில் பங்குகளாக மாற்றிக்கொள்ளப்படக்கூடிய கடன் பத்திரங்கள் மூலம் முதலீடு திரட்டும் செயல்பாடு 10 நாட்களுக்குள் நடந்து முடிய வேண்டும். ஆனால், இந்த முதலீடு திரட்டல் தொடர்ந்து பல மாதங்கள் நடந்ததையடுத்து இதுகுறித்து ‘புரபஷனல் குரூப் ஃபார் இன்வெஸ்டர் புரொடெக் ஷன்’ என்ற அமைப்பும் ரோஷன் லால் என்பவரும் அனுப்பிய புகார்களின் அடிப்படையில், செபி புலானய்வில் ஈடுபட்டபோது, இந்த நிறுவனங்களின் பல முறைகேடுகள் வெளிச்சத்துக்கு வந்தன.

சஹாராவின் விதி மீறல்

இத்தகைய கடன் பத்திரங்கள் வழியாகத் திரட்டப் படும் முதலீட்டில், முதலீட்டாளர்களின் எண்ணிக்கை 49-ஐத் தாண்டும் எனில், அதற்கு செபியின் அனுமதி யைப் பெற வேண்டும் என்கிறது சட்டம். “இந்த விதி மீறப்பட்டிருப்பதால் முதலீடு திரட்டுவதை உடனடியாக நிறுத்துவதுடன், திரட்டப்பட்ட நிதியை 15% வட்டியுடன் மீண்டும் முதலீட்டார்கள் வசம் ஒப்படைக்க வேண்டும்” என 2010 நவம்பரில் ‘செபி’ உத்தரவிட்டது. இதன்படி சஹாரா நிறுவனங்கள் இரண்டும் திருப்பித்தர வேண்டிய பணம் ரூ. 24,000 கோடி. இதை சஹாரா எதிர்த்தது. உச்சக்கட்டமாக, உச்ச நீதிமன்றத்துக்கு அது சென்றபோது, அங்கும் தீர்ப்பு அதற்கு எதிராகவே வந்தது. ரூ. 24,000 கோடியை சஹாரா செபியிடம் ஒப்படைக்க வேண்டும் என்றும், இந்தப் பணத்தை செபி முதலீட்டாளர்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்றும் சொன்னது உச்ச நீதிமன்றம். இதில் முதல் தவணையாக ரூ. 5,210 கோடியை செபியிடம் சஹாரா ஒப்படைத்தது. அத்துடன் இரண்டு மாதங்கள் கழித்து, தானே முதலீட்டாளர்கள் அனைவருக்கும் நேரடியாகப் பணத்தைத் திருப்பி அளித்துவிட்டதாகவும் இன்னும் ரூ. 2,620 கோடி மட்டுமே பாக்கியிருக்கிறது என்றும் நாளிதழ்களில் ‘சஹாரா குழுமம்’ துணிச்சலாக விளம்பரமும் தந்தது. அதாவது, பிரச்சினை சுமுகமாக முடிக்கப்பட்டுவிட்டதாம்.

ரூ.24,000 கோடி யாருடையது?

உச்ச நீதிமன்றத் தீர்ப்பின்படி, மொத்தப் பணமும் செபி வசம் ஒப்படைக்கப்பட்டு, செபிதான் முதலீட்டாளர்களுக்கு பணத்தைத் திருப்பித் தர வேண்டும். ஆனால், சுமார் மூன்று கோடி முதலீட்டாளர்களில் 1% மட்டுமே உண்மையான ஆட்கள், மீதமுள்ள 99% முதலீட்டாளர்கள் போலி என்பது செபியின் விசாரணையில் தெரியவந்தது. முதலீட்டாளர்கள் பற்றிய விவரங்களைத் தன்னிடம் ஒப்படைக்கும்படி சஹாராவிடம் செபி கேட்டபோது, சுமார் 32,000 அலுமினியப் பெட்டிகளில் 127 லாரிகளில் ஆவணங்களை செபி அலுவலகத்துக்கு சஹாரா அனுப்பிவைத்தது (இதனால் செபியின் மும்பை அலுவலகம் உள்ள பகுதியில் பெரும் போக்குவரத்து நெரிசலே ஏற்பட்டதாம்). இந்தக் கேலிக்கூத்தை ஏற்க மறுத்த செபி, இயைபிலா அடிப்படையில் (ரேன்டம் சிஸ்டம்) சுமார் 20,000 முதலீட்டாளர்களுக்குத் தகவல் அனுப்பியது. ஆனால், பதில் வந்ததோ 68 பேரிடமிருந்து மட்டுமே. அதாவது, அரை சதவீதத்தினர்கூட உண்மையான முதலீட்டாளர்கள் இல்லை. ஆனால், சஹாராவோ தனது முதலீட்டாளர்களில் பெரும்பாலானவர்கள் ஏழைகள், வீடற்றவர்கள். எனவே, அவர்களுக்கு நிரந்தரமான முகவரி இல்லை என்ற அபத்தமான விளக்கத்தை அளித்தது. முதலீட்டாளர்கள் பட்டியலில், ஒரு சில பெயர்கள் பல ஆயிரம் தடவைகள் மீண்டும் மீண்டும் வருவதைப் பார்த்த உச்ச நீதிமன்ற நீதிபதி ஜே.எஸ். கேஹர் மொத்தப் பட்டியலுமே இட்டுக்கட்டப்பட்டதைப் போல் தோன்றுகிறது என்று சரியாகக் குறிப்பிட்டார் (கலாவதி என்ற பெயர் மட்டும் சுமார் 6,000 முறை வருகிறது). ஆக, பொதுமக்களுக்கும் இந்த முதலீடுகளுக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை என்பது வெட்டவெளிச்சமாகிவிட்டது. அப்படியானால், இந்த ரூ.24,000 கோடி யாருடையது? இவ்வளவு பெரிய மோசடியில் சுப்ரதா ராய் கைது செய்யப்பட்டது சரியே என்று ஒரேயொரு அரசியல் கட்சித் தலைவர்கூடக் கூறவில்லை என்பதில் இந்தப் பணம் யாருடையது என்பதற்கான விடை இருக்கிறது.

உலகறிந்த நெருக்கம்

உச்ச நீதிமன்றம் கூறியபடி, மொத்தப் பணத்தையும் சஹாரா தன்வசம் ஒப்படைக்கவில்லை எனக் கடந்த ஆண்டு செபி சொன்னதை அடுத்து, ராயை நீதிமன்றத் தில் ஆஜராகச் சொன்னது உச்ச நீதிமன்றம். ராயோ பொருட்படுத்தவில்லை. விளைவாக பிப்ரவரி 26 அன்று கைது வாரண்ட் பிறப்பித்தது. அப்போதும்கூட அன்றே கைதுசெய்தால் ராயைச் சிறைக்கு அனுப்ப வேண்டியிருக்கும் என்பதால், அதைத் தவிர்க்க (முலாயம் சிங்குடனான ராயின் நெருக்கம் உலகறிந்த விஷயம்) 28-ம் தேதி வரை காத்திருந்து, வெள்ளிக்கிழமை மாலை 6 மணிக்கு லக்னோ போலீஸ் மூலம் கைதுசெய்து, காவல் நிலையத்தில்கூட வைக்காமல், வனத் துறை மாளிகையில் ராயை வைத்திருக்கிறது உ.பி. அரசு. அரசியல் அதிகாரத்தைக் கையில் வைத்திருப்பவர்களின் துணையிருந்தால், என்னவெல்லாம் சாதிக்க முடியும் என்பதற்கு முகேஷ் அம்பானி, கவுதம் அடானி, ராய் போன்றவர்கள் உதாரணம். ‘பொழுதெல்லாம் எங்கள் செல்வம் கொள்ளை கொண்டு போகவோ - நாங்கள் சாகவோ? ’ என்ற பாரதியின் வரிகள் இன்றும் பொருத்தமாக இருப்பது பெரும் அவலம்.

- க. திருநாவுக்கரசு, ​கட்டுரையாளர், அரசியல் விமர்சகர், தொடர்புக்கு: kthiru1968@gmail.com


சஹாரா குழும விவகாரம்சுப்ரதா ராய்கருப்புப் பணம்ஜே.எஸ். கேஹர்உச்ச நீதிமன்றம்

Sign up to receive our newsletter in your inbox every day!

More From This Category

More From this Author

x