Published : 23 Dec 2013 00:00 am

Updated : 06 Jun 2017 16:44 pm

 

Published : 23 Dec 2013 12:00 AM
Last Updated : 06 Jun 2017 04:44 PM

ஒரு தாய் மக்களா நாம்?

தாயிடமிருந்து குழந்தைகளுக்குக் கடத்தப்படும் டி.என்.ஏ-வின் சங்கிலியைப் பிடித்துக்கொண்டு ஓடிய விஞ்ஞானிகள், ‘மனிதர்கள் அனைவருமே ஆப்பிரிக்காவில் வாழ்ந்த ஒரு தாயின் மக்கள்’ என்கிறார்கள்.

உலகம் முழுவதும் பல்வேறு இடங்களில் கிடைத்த பழங்கால மனித உடல்களின் கல் படிவங்களை ஆராய்ந்த விஞ்ஞானிகள், ஆப்பிரிக்கக் கண்டத்தில் இருந்து சுமார் இரண்டு லட்சம் ஆண்டுகளுக்கு முன்பாகப் பிரிந்து உலகின் பல பகுதிகளுக்குச் சென்று வளர்ந்தவர்களே மனிதர்கள் என்று கூறுகிறார்கள்.


ஆமாம். அந்த வகையில் நாம் ஒரு தாய் மக்கள்தான்.

ஆப்பிரிக்க மாதாகி ஜே

ஆனால், இன்றைய மனித இனம் ஆயிரத்துக்கும் மேற்பட்ட தேசிய இனங்களாகப் பரிணமித்திருக்கிறது. அந்த தேசிய இனங்களுக்கு உள்ளே பல்வேறு சமூகக் குழுக்கள் உள்ளன.

அமெரிக்க அரசு ‘சென்டர் ஃபார் வேர்ல்டு விஷன்’ எனும் ஒரு துறையை வைத்திருக்கிறது. அது கிறித்தவ மதப் பிரச்சாரப் பணிகளுக்காக உலகம் முழுவதும் உள்ள சமூகக் குழுக்களைக் கணக்கெடுத்து வருகிறது. அதன் ஆய்வுப்படி, உலக அளவில் 16,788 குழுக்கள் இருக்கின்றன.

பாரத மாதாவின் மக்கள்

‘‘இந்திய மக்களைப் பற்றிய ஆய்வு மிகப் பழங்காலத்திய சம்ஸ்கிருத இலக்கியங்களிலேயே இருக்கிறது. ஆங்கிலேயர் கால ஆய்வுகள் 1806-ல் துவங்கின. 1881 முதல் 1941 வரையிலான மக்கள்தொகைக் கணக்கெடுப்புகளில் அவை விரிவடைந்தன’’ என்கிறார் இந்திய மானுடவியல் நிறுவனத்தின் தலைவராக இருந்த கே.எஸ்.சிங். இந்தியாவில் வாழும் மக்களைப் பற்றிய மிகப் பெரிய ஆய்வு 1985 முதல் 1992 வரை அவரது தலைமையில் நடந்தது. இந்த ஆய்வின் துவக்கத்தில் பல்வேறு பட்டியல்கள் தொகுக்கப்பட்டன. அவற்றின் எண்ணிக்கை 6,748 ஆக இருந்தது. பரிசீலனைக்குப் பிறகு 4,635 மக்கள் பிரிவுகள் ஆய்வுக்கு எடுத்துக்கொள்ளப்பட்டன. அவை விரிவாக ஆய்வுசெய்யப்பட்டு, 43 தொகுதி நூல்களாக வெளியிடப்பட்டுள்ளன.

இந்தியாவில் 28 மாநிலங்கள், 7 யூனியன் பிரதேசங்கள் இருக்கின்றன. அவற்றுள் 20 மொழிகளைப் பேசும் பெரிய மொழிவாரி தேசிய இனங்கள் உள்ளன.

உலக மொழிகளில் 61% ஆசியாவில் இருப்பதாக ஒரு ஆய்வு சொல்கிறது. இந்தியாவின் 1961 கணக்குப்படி, இந்தியாவில் அப்போது இருந்த மொழிகள் 1,652. அதிகாரபூர்வ மொழிகளாக 22 அறிவிக்கப்பட்டாலும், அவற்றில் சம்ஸ்கிருத மும் சிந்தியும் குறிப்பிட்ட பகுதியில் வாழும் மக்களால் பேசப்படாதவை. கொத்துக்கொத்தாக இத்தனை மொழிகள் பூத்திருக்கிற சமூகச் சூழல், ஆசியாவுக்கு அடுத்தபடியாக ஆப்பிரிக்காவில்தான் இருக்கிறது.

சாதிகளின் மக்கள்

மனித சமூகத்தின் மற்ற பகுதிகளில் இல்லாத தனித்தன்மையாக சாதிமுறை இந்தியாவில் இருக்கிறது. படிக்கட்டுகளின் தொகுதிகளாக சாதியச் சமூகத்தின் அமைப்பு முறை இருக்கிறது. சாதிப் படிநிலை ஏற்றத்தாழ்விலிருந்து ஆதிக்க சாதிகளும் தப்பவில்லை. “தமிழகத்தில் பிராமணர்கள் மேலிருந்து கீழாக ஏற்றத்தாழ்வான முறையில் 42 சாதிகளாக உள்ளனர்” என்கிறார் பேராசிரியர் கோ.கேசவன்.

இந்திய அரசின் 2011 கணக்குப்படி 1,208 தலித் சாதிகளும் 577 பழங்குடி இனங்களும் தற்போது உள்ளன. பிற்படுத்தப்பட்ட சாதிகளும் ஆயிரக்கணக்கில் இருக்கின்றன.

பாரத மாதா என்ன சாதி என்று தெரிய வில்லை. ஒடுக்கப்பட்ட சாதியாக இருந்தால், முழு மனதோடு ‘பாரத மாதா கி ஜே’ சொல்லலாம்.

“மிருகக் காட்சிசாலை வைப்பதுபோல மனிதக் காட்சிசாலை ஒன்று வைத்தால், அதற்கு இந்தியாதான் பொருத்தமாக இருக்கும். மனிதச் சமூகம் கடந்துவருகிற பல்வேறு கட்டங்களில் இன்னமும் வாழும் மக்கள் இங்கே இருக்கிறார்கள்” என்று சொன்ன மாமேதை அம்பேத்கரின் வார்த்தைகளுக்கு இன்னமும் அர்த்தம் இருக்கிறது.

ஆடை அணியும் காலகட்டத்துக்கு முன்பான சமூகநிலையில், இயற்கையின் குழந்தைகளாக இன்னமும் அந்தமான் தீவுகளில் நிர்வாணமாக இருப்பவர் முதலாக உலகின் மிக நவீன வசதிகளை அனுபவிப்பவர் வரை இந்தியாவில் இருக்கிறார்கள்.

நவீன காலத்தின் தாக்கத்தால் சாதிப் படிக்கட்டுகள் கலகலத்தாலும்கூட, அவற்றின் அடித்தளம் இன்னும் முழுமையாக இடிந்து விடவில்லை.

ஆதிக்க சாதிகளிலிருந்தும்கூட சிறிய அளவில் அன்றாடங்காய்ச்சிகள் உரு வாவதும், அன்றாடங்காய்ச்சிகளாய் உள்ள உழைக்கும் சாதிகளிலிருந்து சிறிய அளவில் ஆதிக்க வர்க்கம் உருவாவதுமாகப் பழைய சாதியக் கட்டமைப்புக்குள்ளே ஒரு கடைசல் இந்தியச் சமூகத்தில் நீண்ட காலமாக நடைபெறுகிறது. இந்தக் கடைசலால் தனக்குள்ளேயே சுக்கல்சுக்கலாக நொறுங்கியுள்ளதாக நமது சமூகம் உள்ளது.

படிநிலை வரிசையில் இயங்கும் இந்த இயங்குமுறையில், சாதியும் வர்க்கமும் பின்னிப்பிணைந்துள்ளன. இந்த சமூகச் சூழலில் இருந்துதான் சாதிய ஏற்றத்தாழ்வும் சுரண்டலும் வெளிப்படுகின்றன. அவற்றின் சுமையை இந்திய உழைக்கும் மக்களில் பெரும்பான்மையாக உள்ள தலித்களும் பழங்குடிகளும்தான் அதிகமாகச் சுமக்கின்றனர்.

கருத்தா? வாழ்நிலையா?

அறிவியல்ரீதியாக நாம் ஒரு தாய் மக்களாக இருந்தாலும், இன்றைய அன்றாட நடைமுறையில் நாம் அவ்வாறு இல்லை. வெறும் பண்பாட்டு அடையாளங்களாக அல்ல… வேறுபட்ட வாழ்க்கை நிலைகளாய் நாம் வேறுபட்டுக் கிடக்கிறோம். வெறும் கருத்தாக அல்ல… வாழ்வின் யதார்த்தமாகவும் வேறுபட்டுக் கிடக்கிறோம்.

இத்தகைய சமத்துவமின்மை இந்தியச் சமூகத்தின் தனித்தன்மை. உலகம் முழுவதும் இடஒதுக்கீடு எனும் சமூகநீதி நடைமுறை இருக்கிறது. ஆனால், சிறுபான்மையினருக்கு இடஒதுக்கீடு வழங்குவதாக இருக்கிறது. இந்தியா மட்டும்தான் பெரும்பான்மையான மக்களுக்கு இடஒதுக்கீடு வழங்கிக் கொண்டிருக்கும் விநோதத்தை நிகழ்த்திக் கொண்டிருக்கிறது.

படிநிலை ஏற்றத்தாழ்வுகளோடு இருக்கும் இந்தியச் சமூகத்தில் பிறக்கும் எல்லாக் குழந்தைகளுக்கும் ஒரே மாதிரியான கல்வி, வேலை, இதர சமூகப் பாதுகாப்புகள் கிடைத்துவிட்டால், சமூகநீதிக்கான தேவை பெரிய அளவில் எழாது.

ஆனால் அவை இல்லாதபோது, அத்தகைய நிலை வரும்வரை, ‘எல்லோருக்கும் சம வாய்ப்புகள்’ என்பது அதிகமாகப் பாதிக்கப்பட்டோருக்கு எதிரான மோசடியாகவே அமையும். ‘அதிகம் பாதிக்கப்பட்டோருக்கு முதலில் மற்றும் கூடுதல் வாய்ப்புகள்’, ‘பாதிக்கப்பட்டோரின் பாதிப்புக்கு ஏற்ற வாய்ப்புகள்’ என்பதே இன்றைய சமூகத்தில் ஜனநாயகத்துக்கான கோரிக்கையாக இருக்க முடியும்.

ஒரு தாயின் மக்கள்

ஒரு தாயின் மக்கள் என்ற சிறு குடும்பமாகத் தொடங்கிய மனித இனம் தங்களுக்குள் ஏற்பட்ட வேறுபாடுகளைக் களைந்து கொண்டே மீண்டும் ஒரு பெருங்குடும்பமாக இணையப்போகிற பாதையில்தான் பயணிக்கிறது. அதற்கு இடையில்தான் ஆரியர்கள், திராவிடர்கள், இந்துக்கள், இஸ்லாமியர்கள், ஆதிக்க சாதி, ஒடுக்கப்பட்ட சாதி எனும் தற்காலிகப் பேருந்து நிறுத்தங்கள் எல்லாம் வந்துபோகின்றன.

ஆகவே, ஒரு தாய் மக்கள் நாம் என்ற கருத்து முற்போக்கானதுதான். ஆனால், இன்றைய யதார்த்தத்தில் அதைப் பேசுவதிலும் மிகுந்த எச்சரிக்கை தேவை. அடித்தள மக்களின் குரல்வளைமீது நின்றுகொண்டு, பொத்தாம் பொதுவாக “ஒரு தாய் மக்கள் நாம்” என்று பேசக் கூடாது. அடித்தள மக்களின் உரிமைகளை மீட்டுக்கொடுக்கும் வகையில் அதை விவாதிக்க வேண்டும். ஆதிக்க சக்திகளிடம் மனம் மாறுதல் வரும்படியாக அதைப் பேச வேண்டும்.

இந்திய சமூகத்தில் இருக்கும் அனைத்து வகையான முற்போக்கு சக்திகளெல்லாம், சாதியை ஒழித்து ஜனநாயகத்தை வலுப்படுத்தும் வகையில் அதைப் பேச வேண்டும். அப்படி நடந்தால் ஆப்பிரிக்க மாதாவுக்கும் ஜே போடலாம்; பாரத மாதாவுக்கும் ஜே போடலாம்.

- நீதிராஜன், தொடர்புக்கு: neethirajan.t@kslmedia.in

அன்பு வாசகர்களே....


வரும் ஏப்ரல் 14 வரை வீட்டை விட்டு வெளியே வராமல் நமக்கு நாமே சமூக விலகல் ( Social Distancing) செய்து கொள்வோம். செய்தி ஊடகங்களின் வழியே உலகுடன் தொடர்பில் இருப்போம். பொதுவெளியில் இருந்து தனிமைப்படுத்திக் கொண்டு கரோனா பரவலைத் தடுப்பதில் நம் பங்கை முழுமையாக இந்த சமூகத்துக்கு அளிப்போம்.


CoVid-19 கரோனா தடுப்பு / விழிப்புணர்வு கையேடு - இலவசமாக டவுன்லோடு செய்து பயன்பெறுங்கள்!


- வாசகர்கள் நலனில் அக்கறையுடன் இந்து தமிழ் திசைஆப்பிரிக்காசாதிமக்கள்இந்திய சமூகம்சிறுபான்மையினர்இடஒதுக்கீடு

Sign up to receive our newsletter in your inbox every day!

You May Like

More From This Category

More From this Author