Last Updated : 27 Jun, 2016 09:32 AM

 

Published : 27 Jun 2016 09:32 AM
Last Updated : 27 Jun 2016 09:32 AM

வங்கிகளுக்கு உயிரூட்டுவது எப்போது?

வளர்ச்சியை விரைவுபடுத்துவது, அனைவருக்கும் ‘நல்ல நாள்’ ஏற்படுத்துவது என்கிற மோடி அரசின் முயற்சிகளுக்கு இன்று இரு பெரிய தடைகள் ஏற்பட்டுள்ளன. முதலாவது, உலகில் உள்ள பாதகமான சூழல். மற்றொன்று, அரசுத் துறை வங்கிகளின் வாராக் கடன் சுமை. முதலாவது தடையை நீக்க நம்மால் செய்ய முடிவது ஏதுமில்லை. இரண்டாவது முடியும். வங்கித் துறையை நாடிபிடித்துப் பார்க்க இந்திய ரிசர்வ் வங்கியைவிட உற்ற அமைப்பு வேறு இல்லை. அடுத்து, ரிசர்வ் வங்கி ஆளுநராக வரப்போகிறவர்தான் மேலும் வழிகாட்ட வேண்டும்.

வாராக் கடனில் பெரும் பகுதி அரசுத் துறை வங்கிகளால்தான் தரப்பட்டிருக்கிறது. வாராக் கடன்கள் அதிகரித்ததால் வங்கி நிர்வாகங்கள் உரிய மாற்று நடவடிக்கைகளை எடுத்தாக வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. இதனால் லாபம் குறைந்தது அல்லது பல வங்கிகளில் இழப்பு அதிகமானது. இதிலிருந்து மீள பி.ஜே. நாயக் தலைமையில் குழுவொன்றை நியமித்தது ரிசர்வ் வங்கி. ‘அரசுத் துறை வங்கிகளின் நிர்வாக முறைமைதான் வாராக் கடன்களின் அதிகரிப்புக்கு முக்கியக் காரணம்’ என்று அந்தக் குழு கண்டுபிடித்து, 2014 மே மாதம் அறிக்கை அளித்தது.

தீவிர, சாவதானமான முதலீட்டாளர்கள்

வங்கிகளின் பெரும்பான்மைப் பங்குகளைத் தன் வசம் வைத்திருந்த அரசாங்கம் தீவிரமான முதலீட்டாளரானது தவறு என்று அக்குழு வாதிட்டது. வங்கியின் நிர்வாகத்தைத் தொழில்முறை வங்கியாளர்களிடமும் இயக்குநர்கள் குழுமத்திடமும் ஒப்படைத்திருக்க வேண்டும் என்றும் அது தெரிவித்தது. ஊக்குவிப்பாளர் என்ற வகையில் வங்கியின் தலைவர், நிர்வாக இயக்குநர்களை நியமிப்பதில் அரசுக்குப் பங்கு இருந்திருக்கக் கூடாது என்றும் குழு கூறியது.

நாயக் குழுவின் ஆய்வறிக்கை பல வகைகளிலும் ஓட்டைகள் நிரம்பியது. அரசுத் துறை வங்கிகளின் நிர்வாகம் மோசமானது என்றால், சீர்திருத்த நடவடிக்கைகளுக்குப் பிறகு வங்கிகளின் செயல்பாடு மேம்பட்டது எப்படி? உருக்கு, சிவில் விமானப் போக்குவரத்து, சுரங்கத் தொழில், அடித்தளக் கட்டமைப்புத் தொழில்கள், ஜவுளி போன்ற துறைகளுக்கு அரசுத் துறை வங்கிகள் கடன் கொடுத்தன. அந்தத் துறைகள் முடங்கியது வங்கிகளின் கட்டுப்பாட்டுக்கு அப்பாற்பட்ட செயல்களாகும்.

சரிவுக்குப் பல காரணங்கள்

சீனா தன்னுடைய உருக்குப் பொருட்களை விலை குறைத்து, கொண்டுவந்து குவித்ததால் இந்திய உருக்குத் துறை கடும் போட்டியைச் சந்திக்க நேர்ந்தது. ஊழல் குற்றச்சாட்டு காரணமாக 2ஜி உரிமங்கள் ரத்துசெய்யப்பட்டதால் தொலைத்தொடர்புத் துறை முடங்கியது. நிலக்கரி வயல் ஒதுக்கீடுகள் ரத்துசெய்யப்பட்டதால், மின்உற்பத்தித் துறை செயலிழந்தது. இவ்வாறே எல்லாத் துறைகளும் பாதிப்புகளைச் சந்தித்தன.

நாயக் குழுவின் பரிந்துரைகள்

கிட்டத்தட்ட ஓராண்டு காலத்துக்கு நாயக் குழுவின் பரிந்துரையை வைத்துக்கொண்டு, பாஜக தலைமையிலான தேஜகூ அரசும் எந்த முடிவுக்கும் வர முடியாமல் திணறியது. அதன் விளைவாக வங்கித் துறையே முடங்கியது. நாயக் குழுவின் பரிந்துரைகளை அப்படியே அரசு ஏற்றுக்கொண்டுவிடவில்லை. வங்கிகளை நிர்வகிக்க தொழில்முறை நிபுணர்களைத் தேர்வுசெய்தது. வங்கிகளின் பங்குகளில் 51% மட்டுமே தன் வசம் வைத்துக்கொள்வது என்று தீர்மானித்தது. இவ்விரண்டும் வரவேற்கப்பட வேண்டியவை. அதே வேளையில், வாராக் கடன் பிரச்சினைக்கும் வங்கிகளின் மறு முதலீட்டுக்கும் உறுதியான நடவடிக்கைகளை எடுக்கத் தவறியதால் வங்கிகளின் நிலைமை தொடர்ந்து மோசமடையத் தொடங்கியது.

வங்கிகளுக்கு நெருக்கடி ஏற்படும்போதெல்லாம் திட்டவட்டமான சில நடவடிக்கைகளை எடுப்பது வழக்கம். இனி, வசூலிக்கவே முடியாத வாராக் கடன் எது என்று அடையாளம் கண்டு, அவற்றுக்கு இறுதித் தீர்வு காணப்படும். இந்தியாவில் ஏற்பட்டிருப்பது வங்கித் துறை நெருக்கடி அல்ல. கடன் வாங்கிய பலரால் தொடர்ந்து தொழில் செய்ய முடியாமல் முடக்கம் ஏற்பட்டிருப்பதால் கடனைத் திருப்பிச் செலுத்த முடியாமல் தவிக்கின்றனர்.

ஏகப்பட்ட தவறுகள்

வாராக் கடன்களை அடையாளம் காணும் வழிமுறைகளில் இந்திய ரிசர்வ் வங்கி சில கடுமையான நிபந்தனைகளைச் சேர்த்தது. மேலும், கடன் வாங்கியவர்களுக்கு மேலும் சிறிது கடன் கொடுத்தால்தான் அவர்களால் நிறுத்திவைக்கப்பட்ட திட்டங்களை மீண்டும் ஆரம்பித்து நடத்த முடியும். இந்நிலையில், வாராக் கடன் என்று அறிவித்துவிட்டு, மேற்கொண்டு கடன் தர முடியாது என்று கறாராகப் பேசினால் பல திட்டங்கள் தோல்வியில் முடியும்.

இரண்டாவதாக, வாராக் கடன்களைக் கையாளும் போது கடனில் ஒரு பகுதியை வங்கிகள் தள்ளுபடிசெய்ய வேண்டும். அப்போதுதான் அந்த நிறுவனமோ, திட்டமோ முழுமையாகச் செயல்பட முடியும். திரும்ப அடைபடக் கூடியது, அடைக்கவே முடியாதது என்று இரண்டு விதமாக வாராக் கடன்கள் வகைப்படுத்தப்பட்டன. அடைக்கவே முடியாத கடன்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. இதைப் பல மாதங்களுக்கு முன்னதாகவே செய்திருக்க வேண்டும்.

தாமதமான அறிவிப்பு

மூன்றாவதாக, வாராக் கடன்கள் பற்றி அனைவரும் உரத்த குரலில் பேசத் தொடங்கியதால், கடன்களை ரத்துசெய்வது குறித்து முடிவெடுக்க வங்கி நிர்வாகங்கள் தயங்கின. பணியிலிருந்து ஓய்வுபெற்ற பிறகுகூட இம்முடிவுக்காகத் தாங்கள் விசாரிக்கப்படலாம் என்ற அச்சம் வங்கி உயர் அதிகாரிகளிடையே ஏற்பட்டது. இதே காரணத்தால்தான் விஜய் மல்லையாவின் கிங் ஃபிஷர் விமான நிறுவனக் கடன் நிலுவை தொடர்பாகவும் ஏற்பட்டது.

கடனை அடைக்க விஜய் மல்லையா கூறிய சமரச யோசனைகள் பரிசீலிக்கப்படாமல் முற்றாக நிராகரிக்கப்பட்டன. வாராக் கடன்களை பைசல் செய்வது தொடர்பாக உயர் நிலைக் குழு அமைக்கப்போவதான அரசின் அறிவிப்புகூட ஓராண்டு தாமதமாக வந்துள்ளது.

இப்போதைய கவனம் வாராக் கடன்

நான்காவதாக, மறு முதலீடு வழங்குவதில் அரசு கஞ்சத்தனமாகவே நடந்திருக்கிறது. 2015-16 முதல் 4 ஆண்டுகளில் ரூ.70,000 கோடி வழங்கப்படும் என்ற அறிவிப்பு வங்கிகளைச் சீரமைக்கப் போதவே போதாது. இதனால் வங்கிகள் தரும் கடன் வளர்ச்சிதான் பாதிப்படையும்.

ஐந்தாவதாக, பாரத ஸ்டேட் வங்கியையும் அதன் துணை வங்கிகளையும் இணைப்பதில் அரசு அதி வேகமாகச் செயல்படுகிறது. உலகின் முன்னணி 50 வங்கிகளில் ஒன்று என்ற பெயரை ஸ்டேட் வங்கி பெற வேண்டும் என்ற நோக்கில் செய்யப்படுகிறது. அரசின் இப்போதைய கவனம், வாராக் கடன் பிரச்சினையைத் தீர்ப்பதில் மட்டுமே இருக்க வேண்டும். வங்கிகளை இணைக்கும்போது ஏற்படும் நிர்வாகச் சிக்கல்களுக்குத் தீர்வுகாணும் தலைவலியை இப்போது திணிக்கக் கூடாது.

இன்றியமையாத ஓர் அங்கம்

வங்கித் துறை என்பது பொருளாதாரத்தின் இன்றியமையாத ஓர் அங்கம். பொருளாதார வளர்ச்சி வேகம் பெற்றாலே வாராக் கடன்கள் குறைந்துவிடும். அதற்கு முதலீடு அதிகம் தேவை. அதைச் செய்ய தனியார் முதலீடுகளுக்கு ஊக்குவிப்பு அளிக்க வேண்டும்.

நிதிப் பற்றாக்குறையைக் குறைக்க அரசு தானாகவே விதித்துக்கொண்ட சுய கட்டுப்பாடுகளால் இப்போது பொது முதலீடு குறைந்துவிட்டது. ரிசர்வ் வங்கியின் பணவீக்க எதிர்ப்பு நடவடிக்கை காரணமாக, தனியாரும் முதலீடுகளைச் செய்யாமல் காலம் தாழ்த்திவருகின்றனர். வங்கித் துறையின் பிரச்சினைகளை மட்டும் பேசி அவற்றைத் தீர்த்துவிட முடியாது. பொருளாதாரத்தை முடுக்கிவிடுவதில்தான் இதற்கான விடை இருக்கிறது. அரசும் அடுத்து வரவிருக்கும் ரிசர்வ் வங்கி ஆளுநரும் ஆலோசனை கலந்து இப்போதுள்ள பொருளாதாரக் கொள்கைக் கட்டமைப்பில் உரிய மாறுதல்களைச் செய்தே தீர வேண்டும்!

(கட்டுரையாளர் ஆமதாபாத் இந்திய மேலாண்மை நிர்வாகவியல் கழகப் பேராசிரியர்).
© ‘தி இந்து’ ஆங்கிலம், தமிழில்: சாரி

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x