Last Updated : 10 Mar, 2017 09:39 AM

 

Published : 10 Mar 2017 09:39 AM
Last Updated : 10 Mar 2017 09:39 AM

பண மசோதா என்பது என்ன?

ஒரு முக்கியமான வழக்கு உச்ச நீதிமன்றத்துக்கு முன்னாள் அமைச்சர் ஜெய்ராம் ரமேஷால் கொண்டுவரப்பட்டிருக்கிறது. ‘ஆதார் சட்டம் - 2016 செல்லத்தக்கதா?’ என்று பரிசீலிக்கக் கோரி வழக்கு தொடர்ந்திருக்கிறார் அவர். மத்திய அரசு வழங்கும் பணப் பயன், மானியம் மற்றும் சில வகை சேவைகள் யாரை இலக்காகக் கொண்டிருக்கின்றனவோ, அவர்களுக்கு மட்டும் கிடைப்பதற்காக அவரவர் ஆதார் எண்ணை இணைப்பதற்கு வகை செய்வது இச்சட்டம். இந்த மசோதாவை ‘பண மசோதா’ என்று வகைப்படுத்தி, மக்களவையில் சாதாரண பெரும்பான்மை வலு ஆதரவில் நிறைவேற்றி சட்டமாக்கிவிட்டது பாஜக அரசு. ஆக, மாநிலங்களவையில் எதிர்க் கட்சிகளின் எதிர்ப்பு பயனற்றதாகிவிட்டது.

இந்தச் சட்டம் மக்களுடைய உரிமைகளை ஆபத்தில் சிக்கவைப்பதுடன், வெளிப்படையாகவும், நீண்ட கால நோக்கிலும் தீங்கு விளைவிக்கும் வகையில் இருக்கிறது. மேலும், அரசியல் சட்டம் வகுத்துள்ள நியதிகளுக்கும் முரணாக இருப்பதை உற்று நோக்கினால் புலப்படும்.

ஜனநாயகத்துக்கு முரணானது

அரசு அளிக்கும் மானியங்களையும் பணப் பயன்களையும், நியாயமாகவும் சமமாகவும் அனைவருக்கும் விநியோகிக்கும் வகையில் மக்களுக்குத் தனிப்பட்ட அடையாள எண் வழங்க வேண்டும் என்றுதான் ஆதார் திட்டம் கொண்டுவரப்பட்டது. முன்கூட்டியே சட்டபூர்வ ஏற்பாடு இல்லாமல், ஆதார் அட்டையை அறிமுகப்படுத்தியது ஜனநாயக முறையிலான நிர்வாகத்துக்கு முற்றிலும் முரணானது என்பதில் சந்தேகம் இல்லை. இதற்காக ஜெய்ராம் ரமேஷ் சார்ந்துள்ள காங்கிரஸ் கட்சி பொறுப்பேற்க வேண்டும். ஆனால், அந்தத் தவறை அடுத்தகட்டத்துக்கு எடுத்துச் சென்றுவிட்டது பாஜக.

அதாவது, காங்கிரஸ் 2010-ல் இதை வரைவு மசோதாவாக மாநிலங்களவையில் அறிமுகப்படுத்தும்போது, சாதாரண மசோதாவாகத்தான் அறிமுகப்படுத்தியது. அது அதிகாரபூர்வச் சட்டமாக மாற வேண்டுமானால், மக்களவை - மாநிலங்களவை இரண்டுமே அதற்கு ஒப்புதல் தந்தாக வேண்டும் என்ற நிலை அப்போது இருந்தது. ஆனால், அந்தச் சட்ட வரைவில் தவறாகப் புரிந்துகொள்ளக்கூடிய அம்சங்கள் சில இருந்தன. எனவே, அதை ஆராய்ந்த நாடாளுமன்ற நிலைக்குழு, அரசின் கருத்துடன் வேறுபடும் வகையில் விரிவான அறிக்கை தந்தது. “ஆதார் எண் தொடர்பான தரவுகளை வேறு எவர் கைக்கும் சிக்காமல் பாதுகாக்க வேண்டும், தனி மனிதர்கள் பற்றிய தகவல்கள் ரகசியமாக வைத்திருக்கப்பட வேண்டும்” என்று அந்த அறிக்கை வலியுறுத்தியது.

தந்திர மசோதா

சட்டம் இயற்றப்படாமலேயே அதை அமலாக்கத் தொடங்கியதால் பலரும் பொது நலன் வழக்குகளைத் தொடுத்தனர். சில குறிப்பிட்ட அரசுத் திட்டங்களுக்கு மட்டும் அதை அனுமதித்த நீதிமன்றம், அடுக்கடுக்காகப் பல தடை ஆணைகளை இடைக்கால உத்தரவுகளாகப் பிறப்பித்தது. இதனிடையே புதிதாக ஆட்சிப் பொறுப்பேற்ற பாஜக அரசு, 2016 மார்ச்சில் முந்தைய காங்கிரஸ் அரசு தாக்கல்செய்த மசோதாவைத் திரும்பப் பெற்றுக்கொண்டு, புதிய வரைவு வாசகம் கொண்ட மசோதாவை ‘ஆதார் மசோதா-2016’ என்ற பெயரில் அறிமுகப்படுத்தியது. இந்த மசோதா, தந்திரமான வகையில் பண மசோதா என்று வகைப்படுத்தப்பட்டு அறிமுகப்படுத்தப்பட்டது.

இந்திய அரசியல் சட்டப்படி பண மசோதாக்களுக்கு மக்களவை ஒப்புதல் தந்தால் போதும். ஆக, மாநிலங்கள வையில் கடுமையான எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டபோது, மக்களவையில் தன்னுடைய பெரும்பான்மையை வைத்து, மசோதாவை நிறைவேற்றிக்கொண்டது பாஜக.

ஷரத்து சொல்வதென்ன?

பண மசோதா எது என்று அரசியல் சட்டத்தின் ஷரத்து 110 விவரிக்கிறது. நிதி நிர்வாகம் தொடர்பான ஏழு அம்சங்களை மொத்தமாகக் கொண்டது அல்லது அவற்றில் ஏதேனும் ஒன்றைக் கொண்டதுதான் பண மசோதா என்று அது கூறுகிறது. வரி விதிப்பது, குறைப்பது, கூட்டுவது, ரத்துசெய்வது உள்ளிட்ட ஒழுங்காற்றுச் செயல்கள், மத்திய அரசு கடன் வாங்குவதை ஒழுங்காற்றுவது, இந்தியத் தொகுப்பு நிதியத்திலிருந்து பணத்தைத் திரும்ப எடுப்பது அல்லது நிதியத்தில் சேர்ப்பது போன்றவை இந்த ஏழு அம்சங்களில் அடங்கும். வரைவு மசோதா மேலே குறிப்பிட்ட அம்சம் எதையும் கொண்டிருக்காவிட்டாலோ, திட்டமிடாமல் வேறு ஏதேனும் ஒன்றுடன் இணைந்து வந்தாலோ அது பண மசோதாவாகிவிடாது என்கிறது ஷரத்து. ஒரு மசோதா பண மசோதாவா, இல்லையா என்ற சர்ச்சை ஏற்பட்டால், சபாநாயகரின் முடிவே இறுதியானது என்றும் கூறுகிறது.

குறையுள்ள எதிர்வாதம்

ஜெய்ராம் ரமேஷின் ஆட்சேபத்துக்கு அரசின் பதில், எதிர்பார்த்தபடியே இரு அம்சங்களைக் கொண்டிருக்கிறது. “பண மசோதாதான் என்று சபாநாயகர் ஒப்புதல் வழங்கிய பிறகு, அதை எந்த நீதிமன்றமும் பரிசீலிக்க முடியாது. அரசியல் சட்டத்தின் தேவைக்கேற்ப எல்லா விதத்திலும் ஆதார் மசோதா - பண மசோதாதான்” என்று இப்போது அரசுத் தரப்பு கூறுகிறது. வெகு கவனமாக ஆராய்ந்தால், இந்த இரு அம்சங்களிலும் அரசு சொல்வது தவறு என்பது புரியும்.

அரசியல் சட்டத்தின் 110-வது ஷரத்து சபாநாயகருக்குக் கட்டுப்பாடற்ற விருப்ப அதிகாரத்தைத் தந்துவிடவில்லை. பண மசோதாவுக்குரிய அம்சங்கள் என்று 110-வது ஷரத்து கூறுவதில் உள்ள அம்சங்கள் ஏதும் இல்லாவிட்டால், அதைச் சாதாரண மசோதாவாகத்தான் கருத வேண்டும் என்று அரசியல் சட்டம் தெளிவாகக் குறிப்பிடுகிறது. அப்படி இல்லாத ஒன்றைப் பண மசோதாவாகக் கருதுவது அரசியல் சட்டப்படி பெரும் தவறாகும்.

2007-ல் நடந்த ‘ராஜா ராம் பால் - எதிர் - சபாநாயகர்’ வழக்கில் கூறப்பட்ட தீர்ப்பு என்ன சொல்கிறது என்றால், ‘நாடாளுமன்றம் ஒரு விஷயத்தில் எப்படி முடிவெடுத்திருந்தாலும் அதை நீதிமன்றங்கள் ஆராயவும் பரிசீலிக்கவும் தடையில்லை’ என்கிறது. சபாநாயகர் சட்டத்துக்குப் புறம்பாக வேண்டும் என்றே வகைப்படுத்தி னாலோ, அரசியல் சட்டம் எதிர்பார்க்கும் அடிப்படைக் கூறுகளைப் புறந்தள்ளினாலோ, தான்தோன்றித்தனமாக முடிவெடுத்தாலோ, நேர்மையற்ற உள்நோக்கத்துடன் ஒரு முடிவுக்கு வந்தாலோ, அவருடைய முடிவே இறுதியானது என்று இருந்துவிடாமல் பரிசீலிப்பதற்கு நீதிமன்றத்துக்கு அதிகாரம் உண்டு என்கிறது தீர்ப்பு.

ஆதார் சட்ட அம்சங்கள்

ஆதார் சட்டத்தைச் சாதாரணமாக வாசித்தாலே அதன் கூறுகள் அரசியல் சட்டத்தின் 110-வது ஷரத்து கூறுவனவற்றையும் தாண்டிச் செல்வது புலனாகும். அரசின் பொது நிதியிலிருந்து பணம் எடுக்க அல்லது பணத்தைச் சேர்க்க அந்த ஷரத்து வகை செய்கிறது. ஆதார் சட்டத்தில், குடிமக்களிடம் திரட்டப்படும் அனைத்துத் தரவுகளையும், கண்விழி அடையாளம் - ரேகை அடையாளம் உள்ளிட்ட தனிப்பட்ட அங்க அடையாளங்களையும் பொதுவாகச் சேர்த்து வைக்க வழி செய்கிறது. ஒரு குறிப்பிட்ட பணியைச் செய்ய தேவைப்படும் பணத்தை அனுமதிப்பதுதான் பண மசோதா.

ஆதார் மசோதாவில் இப்படிப்பட்ட அம்சம் ஏதுமில்லை. எனவே, இதைப் பண மசோதாவாக மக்களவைத் தலைவர் அனுமதித்தது நடைமுறையில் ஏற்பட்ட தவறு மட்டுமல்ல, அரசியல் சட்டத்தின் 110-வது ஷரத்தையே மீறும் செயல். அரசின் எதேச்சாதிகாரப் போக்கை வெளிக்கொணரும் விதத்தில்தான் ஆதார் மசோதா இருக்கிறது. இந்தத் தவறான முன்னுதாரணம் தொடர்ந்தால், எதிர்காலத்தில் இதையே உதாரணமாகக் கொண்டு, பல சட்ட மீறல்களையும் இனிவரும் காலத்தில் அரசுகள் செய்ய முடியும். எனவே, அரசின் இந்த முடிவில், சபாநாயகரின் இந்த முடிவில் உச்ச நீதிமன்றம் தலையிட வேண்டும். நீதியை நிலைநாட்ட வேண்டும்!

- சுரீத் பார்த்தசாரதி, சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர்,

சுருக்கமாகத் தமிழில்: சாரி

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x