Last Updated : 01 Jun, 2017 09:38 AM

 

Published : 01 Jun 2017 09:38 AM
Last Updated : 01 Jun 2017 09:38 AM

கூட்டாட்சியை நோக்கி நகரும் மியான்மர்

மியான்மர் தலைநகர் நைப்பியிதோவில் மே 24 முதல் 28 வரை, 21-வது பாங்லாங் ஒன்றிய அமைதி மாநாட்டின் இரண்டாவது சுற்று நடந்து முடிந்திருக்கிறது. மாநாட்டில் கூட்டாட்சி முறை தொடர்பான பேச்சே பிரதானமாக இடம்பெற்றது. இறுதி முடிவு ஏதும் எட்டப்படாமலேயே இந்தக் கூட்டம் நிறைவடைந்திருக்கிறது.

மே 12-ல் மியான்மர் அரசின் சார்பில் நடத்தப்பட்ட ஒன்றிய அமைதிப் பேச்சுவார்த்தைக் கூட்டுக் குழு கூட்டத்தில், மியான்மரின் ஏழு மாநிலங்களும் ஏழு பிராந்தியங்களும் தங்கள் சொந்த அரசியல் சட்டத்தை உருவாக்கிக்கொள்ளலாம் என்று முடிவெடுக்கப்பட்டது. ஒரே ஒரு நிபந்தனை மியான்மரிலிருந்து அவை பிரிந்துசென்றுவிடக் கூடாது! மியான்மர் அரசின் வெளியுறவுத் துறை அமைச்சர் ஆங் சான் சூச்சி தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில், பல்வேறு இனப் போராளிகள், அரசியல் கட்சிகள், அரசுப் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர். பாங்லாங் மாநாட்டில் சுய நிர்ணயம் தொடர்பாகவும், மாநிலங்கள், பிரதேசங் களுக்கான அரசியல் சட்ட வரைவு தொடர்பாகவும் பேசப்படலாம் என்று முன்பே எதிர்பார்க்கப்பட்டது.

முரண் நிலை

மியான்மரில், கூட்டாட்சி முறையா அல்லது சுயாட்சியா எனும் விவாதம் அந்நாடு சுதந்திரம் அடைவதற்கு முன்பே தொடங்கிய ஒன்று. வரலாற்றுரீதியான முக்கியத்துவம் கொண்ட இந்த விஷயம்தான் மியான்மரை ஒருங்கிணைக்கவும் அதேசமயம் துண்டாடவும் செய்தது. எல்லாக் குடிமக்களுக்கும் சம அந்தஸ்து வழங்குகின்ற ஒரு ஒன்றிய அரசை உருவாக்குவது எனும் கருத்தாக்கம், 1947-ல் நடந்த பாங்லாங் மாநாட்டில் பல்வேறு இனக்குழுக்களை ஒருங்கிணைத்தது. மியான்மர் சுதந்திரம் அடைந்ததற்குப் பின்னர் அமைந்த முதல் அரசான - பாசிஸத்துக்கு எதிரான மக்கள் விடுதலை சங்கம் எனும் பெயரில் அமைந்த கூட்டணி அரசு, பர்மியர்கள் அல்லாத இனக்குழுக்களின் அரசியல் விருப்பங்களைப் பூர்த்தி செய்ய முடியாத நிலையில், இதே கருத்தாக்கம் உளவியல்ரீதியாகவும், உணர்வுரீதியாகவும் நாட்டையே துண்டாடியது. சுயாட்சியா அல்லது கூட்டாட்சியா எனும் நிலைக்கு பர்மியர்கள் அல்லாத இனக் குழுக்கள் தள்ளிய காலகட்டத்தில், மத்தியில் ஆட்சி செய்த பொதுமக்கள் அரசு பலவீனமாக இருந்ததைப் பயன்படுத்தி, ராணுவத் தலைமை ஒரு ராணுவப் புரட்சியை நடத்தியது. இது நடந்தது 1962-ல். ‘கூட்டாட்சி’ எனும் பதம் 1947 அரசியல் சட்டத்திலேயே இணைக்கப் பட்டிருந்தாலும், அடுத்தடுத்து அமைந்த ராணுவ அரசுகள் அதை தேச விரோதச் சொல்லாகவும், ஒற்றுமைக்கு எதிரான தாகவும், பிரிவினைவாதச் சொல்லாகவும் கட்டமைத்தன.

சிறை அபாயம்

2011-ல், மியான்மரின் அமைதி மற்றும் வளர்ச்சி ஆணையம் ராணுவ அரசு, மக்களாட்சி போன்ற அரசு நிர்வாகத்தை உருவாக்கிக்கொள்ள, முன்னாள் ராணுவத் தளபதி தெய்ன் செய்ன் தலைமையிலான ஒன்றிய ஒற்றுமை மற்றும் வளர்ச்சிக் கட்சிக்கு அனுமதி வழங்கியது. அதுவரை, கூட்டாட்சியை ஆதரிப்பவர்கள் சிறையில் தள்ளப்படலாம் எனும் நிலையே நீடித்தது. படிப்படியான ஜனநாயகமயமாக் கலைத் தொடர்ந்து, ஆயுதம் தாங்கிய இனக் குழுக்களுடனான அமைதிப் பேச்சுவார்த்தையின் முக்கிய அம்சங்களுள் ஒன்றான கூட்டாட்சித் தத்துவத்தை, தெய்ன் செய்ன் அரசு ஏற்றுக் கொண்டது. ஜனநாயகத்தை ஆதரிக்கும் கட்சி எனும் முறையில், கூட்டாட்சி அரசு அமைவதற்கு, ஜனநாயகத்துக்கான தேசிய லீக் கட்சி ஆதரவு தருகிறது. எனினும், எந்த வகையான கூட்டாட்சியை மியான்மர் ஏற்றுக்கொள்ளும் என்பது உண்மையில் யாருக்குமே தெரியாது.

பரிசீலிக்கப்படும் கூட்டாட்சி முறைகள்

சமச்சீரான கூட்டாட்சி, சமச்சீரற்ற கூட்டாட்சி, இரட்டைக் கூட்டாட்சி, கூட்டுறவுக் கூட்டாட்சி, தொலைநோக்கு அடிப்படையிலான கூட்டாட்சி என்று பல்வேறு வடிவங்கள் தொடர்பாக, கொள்கை வகுப்பாளர்களும், அறிஞர் களும் விவாதித்துவருகிறார்கள்.

மியான்மரின் ஏழு பிரதேசங்களிலும், நைப்பியிதோ ஒன்றியப் பிரதேசத்திலும் பர்மியப் பெரும்பான்மையினர் ஆதிக்கம் செலுத்தும் நிலையில், சமச் சீரான கூட்டாட்சி என்பது மிகப் பெரிய பிரச்சினையாக அமையும். பெரும் பான்மை பர்மியர்கள் இந்த ஏற்பாட்டை ஆதரித்தால்கூட, அரசியல்ரீதியான பின்னடைவுகள் ஏற்படலாம் எனும் அச்சம் காரணமாக சிறுபான்மையினர் அதை எதிர்க்கக்கூடும். அதேபோல், தங்களுக்கு முக்கியத்துவம் கிடைக்காது என்பதால் சமச்சீரற்ற கூட்டாட்சியை சில சிறுபான்மையின மக்கள் எதிர்க்கக் கூடும். நியாயமான கூட்டாட்சி நிறுவப் பட வேண்டும் என்றால் பெரும்பான்மை பர்மியர்களுக்கும், பிற இனக் குழுக்களுக்கும் ஒரே ஒரு மாநிலம்தான் வழங்கப்பட வேண்டும் என்று சிறுபான்மை இனக்குழுவினர் பலர் கருதுகிறார்கள். இரட்டைக் கூட்டாட்சி என்பது கூட்டாட்சி அரசுக்குப் பொருத்த மானதாக இருக்கலாம். ஆனால், அது மிகுந்த ஆதிக்கம் சார்ந்ததாக இருக்கும் என்றே மாநிலங்கள் கருதும். கூட்டுறவுக் கூட்டாட்சி சரியான தீர்வு என்று ஒருசாரார் கருதினாலும், மாநில அரசுகளுக்கும் மத்திய அரசுக்கும் இடையிலான அதிகாரத் தேக்க நிலையை உருவாக்கலாம் என்பதால் அது சரியான ஏற்பாடாக இருக்காது. முக்கியமான சட்டங்களை இயற்றும் விஷயத்தில் இரு தரப்புக்கும் இடையில் உடன்பாடு எட்டப்படாமல் போகலாம் என்று கருதப்படுகிறது. தொலைநோக்கு அடிப்படையிலான கூட்டாட்சியைப் பொறுத்தவரை, இரண்டு அரசுகளுக்கு இடையில் ஒருமித்த கருத்து எட்டப்படாத நிலையில் அதை அமல்படுத்துவது பெரிய பிரச்சினையாக இருக்கும்.

பிராந்தியம் சாராத கூட்டாட்சி

பல்வேறு இனக் குழுக்களைக் கொண்ட சிதறலான மக்கள்தொகை கொண்ட நாடு எனும் வகையில், விரிவாக விவாதிக்கப்பட்டுவரும் இன்னொரு கருத்தாக்கம் பிராந்தியம் சாராத கூட்டாட்சி. அதாவது, சுய நிர்ணயம் என்பது நன்கு வரையறுக்கப்பட்ட பிரதேசத்துக்குள் அடக்கப்படக் கூடாது என்பது இதன் அடிப்படை. பிராந்தியம் சாராத கூட்டாட்சி என்பது, சாத்தியக்கூறுகள் கொண்ட ஒரு தீர்வாக இருக்கலாம். சில இனக் குழுக்கள் முன்வைக்கும் கோரிக்கைகளுக்கு இது பொருத்தமாக இருக்கும். அதேசமயம், பல்வேறு இனக் குழுக்களுக்கு இடையில் மோதல் உருவாக இது வழிவகுக் கலாம். மேலும் மாநில அரசுகளுக்கும், பல்வேறு இனங்கள் அடங்கிய மக்கள் தொகையைக் கொண்ட பிராந்திய அரசுகளுக்கும் இடையிலான உறவிலும் பாதிப்பை ஏற்படுத்தலாம்.

மியான்மரின் அரசியல் கட்டமைப்பு கலப்பினத் தன்மை கொண்டது எனும் வகையில், அரசு அல்லது ராணுவத் தலைமை ‘மியான்மருக்கே உரிய பாணியிலான கூட்டாட்சி’க்கு வித்திடும் ஆபத்தும் உண்டு - ஜெனரல் நெ வின் தலைமையிலான பர்மா சோஷலிஸத் திட்டக் கட்சி அரசு எப்படி, ‘பர்மியர்களுக்கே உரிய பாணியிலான சோஷலிஸம்’ எனும் கருத்தாக்கத்தைக் கொண்டுவந்ததோ அதுபோல! அல்லது 2008 அரசியல் சட்டத்தில் குறிப்பிட்டிருப்பதுபோல், ‘செழித்து வளர்கின்ற கட்டுக்கோப்பான ஜனநாயக’மாக அது அமையலாம். சிறுபான்மை இனக் குழுக்களைப் பொறுத்தவரை, எல்லா இனக்குழுக் களுக்கும் சம உரிமை வழங்குகின்ற, குறிப்பிட்ட அளவு சுயாட்சிக்கு உத்தரவாதம் தருகின்ற ஒரு கூட்டாட்சியை விரும்புகிறார்கள்.

எல்லாவற்றுக்கும் மேலாக, கூட்டாட்சி தொடர்பான விவாதத்துக்கு அரசு அனுமதி அளித்ததுடன், மாநிலங் களுக்கும் பிராந்தியங்களுக்கும் அரசியல் சட்டத்தை உருவாக்கவும் அனுமதி வழங்கியிருப்பது ஆக்கபூர்வ மான நடவடிக்கை. மியான்மரின் இந்த மாற்றம், கூட்டாட்சி அரசை நோக்கிய அதன் முன்னகர்வு என்றே சொல்ல வேண்டும்!

-நெஹ்கின்பாவ் கிப்ஜென், உதவிப் பேராசிரியர், தென்கிழக்கு ஆசிய ஆய்வு மையத்தின் செயல் இயக்குநர், ஓ.பி.ஜிண்டால் சர்வதேசப் பல்கலைக்கழகம்.

‘தி இந்து’ ஆங்கிலம் - தமிழில்: வெ.சந்திரமோகன்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x