Last Updated : 19 Jun, 2017 09:12 AM

 

Published : 19 Jun 2017 09:12 AM
Last Updated : 19 Jun 2017 09:12 AM

நேபாளத்தின் நெருக்க நண்பன் சீனா!

நேபாள அரசியலில் தன்னுடைய ஆதிக்கத்தை நிலைநாட்ட தொடர் நடவடிக்கைகளை எடுத்து வருகிறது சீனா. இரு நாடுகளுக்கும் இடையில் பொதுவான அம்சமாக இருக்கும் மதம் கலாச்சாரம் ஆகியவற்றைப் பயன்படுத்த நினைக்கிறது இந்தியா. மத்திய அரசில் பாஜக ஆட்சிக்கு வந்தது முதலே நேபாளத்தின் மலை மாவட்டங்கள் மற்றும் சமவெளிப் பகுதிகளில் இந்து உணர்வைப் பரப்ப ஆர்எஸ்எஸ் அமைப்பும் அதன் சார்பு அமைப்புகளும் முயற்சி செய்கின்றன.

கோரக்நாத் ஆலயத்தின் தலைமைப் பூசாரியாகக் கருதப்படும் யோகி ஆதித்யநாத்தை உத்தர பிரதேசத்தின் முதலமைச்சராகத் தேர்ந்தெடுத்ததை அடுத்து இந்த நடவடிக்கைகள் வேகம் பெற்றுள்ளன. மன்னராட்சிக் காலத்திலும் இப்போதும் நேபாளியர்களின் மதிப்பைப் பெற்றது கோரக்நாதர் ஆலயம் மற்றும் மடாலயம். அதன் தலைமைப் பூசாரியை நேபாள மன்னருக்கு இணையான அந்தஸ்தில் நேபாளிகள் மதிக்கின்றனர்.

மன்னராட்சிக் காலத்தில் வெளியிடப்பட்ட நாணயங்களில் கோரக்நாதர் கோயிலின் உருவம் பொறிக்கப்பட்டிருக்கிறது. யோகி ஆதித்யநாத் நேபாளத்துக்குத் தொடர்ந்து சென்றுவருகிறார். கடந்த ஆண்டு காத்மாண்டு நகரில் உலக இந்து மாநாடு நடந்தது. “நேபாளம் தன்னுடைய அடையாளத்தை இழந்து கொண்டிருக்கிறது. நேபாள இந்து மன்னர்களால் ஆண்டாண்டுக் காலமாக உருவாக்கப்பட்ட அடையாளம் அது, கோரக்நாத் ஆலயத்துக்கு அவர்கள் காட்டிய மரியாதை அந்த அடையாளம். இந்த ஐக்கிய அடையாளத்தின் மூலம் நேபாளம் நல்ல வளத்தை அடையும்” என்று யோகி ஆதித்ய நாத் மாநாட்டில் பேசினார். தன்னை மதச்சார்பற்ற நாடாக அரசியல் சட்டத்திலேயே நேபாளம் அறிவித்துக் கொண்டது யோகியையும் சங்கப் பரிவாரங்களைச் சேர்ந்தவர்களையும் ஆழ்ந்த துயரத்தில் ஆழ்த்தியிருப்பது வெளிப்படையாகத் தெரிந்தது. மதச்சார்பற்ற நாடாக அறிவித்துக்கொள்ள வேண்டாம் என்று வேண்டிக்கொள்ள இந்திய வெளியுறவுச் செயலர் ஜெய்சங்கரை அரசு, காத்மாண்டுக்கு அனுப்பி வைத்திருந்தது. அது ஏற்கப்படவில்லை.

மோடிக்கு அனுமதி மறுப்பு

அப்போது பிரதமராக இருந்த சுசீல் கொய்ராலா இந்திய ஆதரவாளர் என்றாலும் அரசியல் சட்ட நிர்ணய சபையிலும் வெளியிலும் நிலவிய உணர்வுகளுக்கேற்ப அந்தக் கோரிக்கையை ஏற்க மறுத்தார். நேபாளத்தின் ஜனக்பூரிலிருந்து அயோத்திக்குச் செல்லும் 4 வழி தேசிய நெடுஞ் சாலையைத் திறந்து வைக்கும் விழாவில் பிரதமர் மோடி பங்கேற்றார். அந் நிகழ்ச்சியில் அவர் பேச விரும்பினார். ஆனால் நேபாள அரசு அனுமதிக்க மறுத்துவிட்டது.

நேபாளத்தைப் பெரும் நிலநடுக்கம் தாக்கியபோது இந்தியா செய்த மீட்பு, நிவாரண உதவிகள் முதல் கட்டத்துக்குப் பிறகு தொடரப்படவில்லை. நேபாளத்தின் சமவெளிப் பகுதியில் வாழும் மாதேசிகள் இந்தியர்களுடன் குடும்ப உறவு, கலாச்சார உறவு உள்ளவர்கள். அரசியல் சட்டத்தின் மூலம் தங்களை இரண்டாம்தரக் குடிமக்களாக்க நேபாள அரசு முயல்வதாகக் கருதிய அவர்கள் நேபாள மலைப் பகுதிகளுக்கு அத்தியாவசியப் பொருட்களைக் கொண்டுசெல்ல முடியாமல் வாகனங்களைத் தடுத்தனர். அதை இந்தியா மறைமுகமாக ஆதரிப்பதாக நேபாளம் சந்தேகப்பட்டதால் உறவு மேலும் திரிந்தது. மலை மக்களுக்கும் மாதேசிகளுக்குமான பிளவை நேபாள கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த கே. சர்மா ஒலி, ஊதிப் பெரிதாக்கினார். அந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக்கொண்டு சீனத்துடன் அரசியல், பொருளாதார உறவை வலுப்படுத்தினார். ஆனால் இந்தியா தனக்கிருக்கும் செல்வாக்கு மூலம் ஒலி அரசைப் பதவியிலிருந்து இறக்கியது.

ஓங்கும் சீனத்தின் கை

இப்போது நேபாள அரசியல் தலைவர்கள் இரு நாடுகளிடமிருந்தும் விலகி நிற்க விரும்புகின்றனர். இரு நாடுகளையும் நேபாளம் தனக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்ள முற்படுவதை இந்தியா, சீனா இரண்டுமே விரும்பவில்லை. நான் இந்திய அரசின் கையாள் இல்லை என்று நிரூபிக்க விரும்பினார் பிரசண்டா. ஆனால் இந்தியா ஆதரிக்கும் கூட்டணி அரசுதான் இப்போது நிர்வாகத்தில் இருக்கிறது. ஆனால் நேபாளம் சீனா உறவு நெருக்கமாகிறது. நேபாள நாடாளுமன்றத்துக்கு அடுத்த ஆண்டு பொதுத் தேர்தல் நடைபெறவிருக்கிறது. நேபாளத்தில் சீனத்தின் செல்வாக்கு உயர்ந்திருக்கிறதா அல்லது ஆதித்யநாத் சங்கப் பரிவாரங்களின் இந்து அடையாளப் பேச்சை நேபாளிகள் அங்கீகரிக்கிறார்களா என்று தேர்தல் முடிவு காட்டிவிடும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x