Published : 20 Jun 2015 11:03 AM
Last Updated : 20 Jun 2015 11:03 AM

ஒரு நதியின் வாக்குமூலம்: அண்டை மாநில விவகாரங்கள்!

கேரளம் நினைத்தால் பவானி ஆற்றையே தமிழகத்திடம் இருந்து பறித்துவிட முடியும். ‘ஓசை’, ‘தமிழ்நாடு பசுமை இயக்கம்’ உள்ளிட்ட பல்வேறு சமூக அமைப்புகள், அனைத்துக் கட்சிகள், பொதுமக்கள் ஓரணியில் திரண்டு காட்டிய எதிர்ப்பால் கேரளத்தின் நடவடிக்கையில் தற்காலிக முட்டுக்கட்டை ஏற்பட்டுள்ளது.

முக்காலி முழு உண்மை என்ன?

தமிழகத்தில் உற்பத்தியாகும் பவானி, கடல் மட்டத்திலிருந்து 2,200 மீட்டர் உயரத்தில் இருக்கும் மேல் பவானி அணையிலிருந்து, 800 அடி பள்ளத்தில் இருக்கும் கேரளத்தின் முக்காலி என்ற பகுதிக்கு அதிவேகமாகப் பாய்கிறது. அங்கு, 120 டிகிரி கோணத்தில் திரும்பி, அட்டப்பாடி வழியாக மீண்டும் தமிழகத்துக்குள் வருகிறது. அவ்வாறு 120 டிகிரி கோணத்தில் பவானி திரும்பும் இடத்தில் கேரளம் ஒரு சிறிய தடுப்பணையைக் கட்டினால் போதும். பவானியை முற்றிலுமாக நாம் மறந்துவிட வேண்டியதுதான்.

இப்படியான சூழல் 2003-ல் ஏற்பட்டது. அப்போது, பெரும் போராட்டங்களை நடத்தி அந்தத் திட்டத்தை தடுத்து நிறுத்தியதில் கோவை ‘ஓசை’ அமைப்புக்கு பெரும் பங்கு உண்டு. இதுகுறித்து அந்த அமைப்பின் தலைவர் காளிதாசன் கூறும்போது, “மேலோட்டமாகப் பார்த்தால் அது சிறிய தடுப்பணைதான். ஆனால், வேகமாகப் பாயும் ஆற்றை, அந்த இடத்தில் தடுத்து திருப்பும்போது, ஆறு அங்கிருந்து சுமார் ஒரு கி.மீ. தொலைவில் இருக்கும் 500 மீட்டர் ஆழமுள்ள பள்ளத்தாக்குக்குச் சென்று விடும். பின்னர், அது தமிழகத்துக்கு திரும்பவே முடியாது.

காளிதாசன்

கேரள அரசு தனது மக்களுக்காகவும் பாசனத் திட்டங்களுக்காகவும்கூட அந்தத் திட்டத்தை வகுக்கவில்லை. ஏனெனில், அந்தப் பகுதிக்கு அருகில்தான் கேரளத்தின் பாரதப் புழா ஆறு ஓடுகிறது. நாடு முழுவதும் குளிர்பானங்களில் பூச்சிக்கொல்லி கலப்பு விவகாரம் கொழுந்துவிட்டு எரிந்து கொண்டிருந்த நேரம் அது. குளிர்பான நிறுவனங்களோ, ‘நாங்கள் பூச்சிக்கொல்லி கலக்கவில்லை. உங்கள் நீர் நிலைகளின் தண்ணீரே அப்படித்தான் இருக்கிறது’ என்றன.

இந்த நிலையில் தான், முக்காலியின் பவானி தண்ணீரை பரிசோதித்த சில நிறுவனங்கள், தூய்மையான அந்தத் தண்ணீரை குளிர்பான தயாரிப்புக்கு பயன்படுத்தலாம் என்ற முடிவுக்கு வந்திருந்தன. இதன் பின்னணியிலேயே அங்கு அணை கட்ட கேரளம் திட்டமிட்டது.

அணை கட்டும் திட்டத்தை தடுத்து நிறுத்த ‘ஓசை’ மற்றும் ‘தமிழ்நாடு பசுமை இயக்கம்’ சார்பில் பல்வேறு போராட்டங்கள் நடத்தப்பட்டன. அனைத்துக் கட்சி கூட்டத்துக்கு ஏற்பாடு செய்து, உண்மைகளை எடுத்துச் சொன்னோம். கட்சிகள் மட்டுமின்றி, மக்களும் ஓரணியில் திரண்டனர். பல்வேறு கொங்கு அமைப்புகள் அட்டப்பாடிக்கு நடைபயணமாகச் சென்று போராட்டங்களை நடத்தின. அதன்பிறகே, அங்கு அணை கட்டும் திட்டத்தை கேரளம் கைவிட்டது. ஆனாலும், அந்த மாநிலத்துக்கு இப்போதும் முக்காலியின் மீது ஒரு கண் இருக்கிறது” என்றார்.

கட்சிகள் பேசாத கசப்பான உண்மைகள்

காவிரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பு, தமிழகத்துக்கு கிடைத்த வெற்றி எனக் கொண்டாடப்படுகிறது. ஆனால், தீர்ப்பின் அம்சங்களை நுட்பமாக ஆராய்ந்தால், அது கொங்கு மண்ட லத்தின் 5 மாவட்டங்களின் நீர் ஆதாரத்தை கேள்விக்குறியாக்கியிருப்பது தெளிவாகப் புரியும்.

காவிரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பின்படி, காவிரியின் மொத்த நீர் ஆண்டுக்கு 740 டிஎம்சி. இதில் தமிழகத்துக்கு 419; கர்நாடகத்துக்கு 270; கேரளத்துக்கு 30; புதுச்சேரிக்கு 7; சுற்றுப்புற சூழலுக்கு 10; கடலுக்கு 4 டிஎம்சி என்ற அளவில் பங்கு பிரிக்கப்பட்டுள்ளது. தமிழகத்துக்கான 419 டிஎம்சி-யில் கர்நாடகம் 192 டிஎம்சி மட்டுமே தரும். எஞ்சிய 227 டிஎம்சி-யை காவிரியின் கிளை ஆறுகளான பவானி, அமராவதி, நொய்யல், பாலாறு ஆகியவற்றில் இருந்து எடுத்துக் கொள்ள வேண்டும்.

அதேபோல், கேரளத்துக்கான 30 டிஎம்சி-யில் அந்த மாநிலம், கர்நாடகத்துக்குச் செல்லும் கபினி ஆற்றிலிருந்து 21 டிஎம்சி-யும், தமிழக – கேரள எல்லையில் இருக்கும் ஜி.டி.சாவடியூர் பவானி ஆற்றிலிருந்து 6 டிஎம்சி-யும், அமராவதியின் கிளை ஆறான பாம்பாற்றிலிருந்து 3 டிஎம்சி-யும் எடுத்துக் கொள்ள வேண்டும்.

தீர்ப்பின்படி, பவானியில் ஜி.டி.சாவடிக்கு மேலே சிறுவாணி உட்பட எங்கு வேண்டுமானாலும் அணை கட்டிக்கொள்ள கேரளத்துக்கு உரிமை உண்டு. இதன்படி கேரளம் தண்ணீரை எடுத்தால் கோவை, நீலகிரி, ஈரோடு, திருப்பூர், கரூர் மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்படும். இதற்காக கேரள அரசு ‘அட்டப்பாடி - சித்தூர் வேலி’ என்ற பெயரில் ரூ. 400 கோடியை ஒதுக்கியுள்ளதாகக் கூறப்படுகிறது.

ஏற்கெனவே கோவையின் குடிநீர் பயன்பாட்டுக்காக கட்டப்பட்ட சிறுவாணி அணையின் கீழ் பகுதியில் இருக்கும் குழாயை கேரள அரசு அடைத்துவிட்டது. இதனால், கோடை காலங்களில் அணையின் நீர்மட்டம் குறையும்போது கோவைக்கு குடிநீர் கிடைப்பது இல்லை. இந்த நிலையில் மேலும் 6 டிஎம்சி தண்ணீரை பவானியிலிருந்து எடுத்தால் கொங்கு மண்டலம் வறண்ட பூமியாக மாறிவிடும். எனவே, பிரச்சினைக்குத் தீர்வாக ‘பாம்பாறு, பவானியில் கேரளம் எடுக்க வேண்டிய 9 டிஎம்சி தண்ணீரையும் கபினி ஆற்றிலேயே எடுத்துக் கொள்ளுமாறு தீர்ப்பில் மாற்றம் செய்ய வேண்டும். ஆனால், இதைப்பற்றி எல்லாம் தமிழகத்தில் எந்த அரசியல் கட்சியும் பேசவில்லை என்பதுதான் வேதனை.

பறிபோகும் பாரம்பரிய உரிமை

காவிரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பால் தாங்கள் பெற்று வந்த பாரம்பரிய பாசன உரிமையை இழக்க நேரிடுகிறது என்கிறார்கள் ஈரோடு மாவட்ட விவசாயிகள்.

ஆற்றின் சராசரி ஆண்டு நீர் வரத்து 62 டிஎம்சி. இதில் தடப்பள்ளி, அரக்கன்கோட்டை பாசனத்துக்கு (24,500 ஏக்கர்) 16 டிஎம்சி, காளிங்கராயன் கால்வாய் பாசனத்துக்கு (15,400 ஏக்கர்) 10 டிஎம்சி, கீழ் பவானி பாசனத்துக்கு (2,07,000 ஏக்கர்) 36 டிஎம்சி என பவானி பாசனத்துக்கு மொத்தம் 62 டிஎம்சி தண்ணீர் வழங்க வேண்டும் என்று பொதுப்பணித் துறை வரையறுத்துள்ளது.

தற்போது பவானி ஆற்றில் சராசரியாக 40 டிஎம்சி நீர் வரத்து மட்டுமே உள்ளது. இதனால், பாசனப் பரப்புகள் ஏற்கெனவே குறைந்துவிட்டன. பாரம்பரியமாக இருந்த இந்த பாசன உரிமைதான் காவிரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பால் பாதிக்கப்பட்டுள்ளது. பவானி பாசனப் பகுதிக்கு உட்பட்ட பகுதிகளுக்கு 36 டிஎம்சி நீர் வழங்க வேண்டும் என்கிறது நடுவர் மன்றம்.

இதன்படி, தடப்பள்ளி, அரக்கன்கோட்டை பாசனத்துக்கு 4.65 டிஎம்சி, காளிங்கராயன் பாசனத்துக்கு 3.48 டிஎம்சி, கீழ் பவானி பாசனத்துக்கு 27.95 டிஎம்சி என தண்ணீரின் அளவு குறைகிறது. இதன்மூலம் 62 டிஎம்சி தண்ணீர் பெற்றுவந்த பவானி பாசன விவசாயிகள் தற்போது 36 டிஎம்சி தண்ணீர் மட்டுமே பெற வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்” என்றார்.

(பாய்வாள் பவானி)

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x