Published : 03 Aug 2016 09:16 am

Updated : 14 Jun 2017 17:00 pm

 

Published : 03 Aug 2016 09:16 AM
Last Updated : 14 Jun 2017 05:00 PM

தற்புகழ்ச்சியின் மறுவடிவம் மோடி!

இந்தியப் பொருளாதாரத்தில் தாராளமயம் புகுத்தப்பட்டு 25 ஆண்டுகள் ஆனதைக் குறிக்கும் வகையில், அப்போது நிதியமைச்சராக இருந்த டாக்டர் மன்மோகன் சிங்கின் நீண்ட பேட்டியை ‘இந்தியன் எக்ஸ்பிரஸ்’நாளிதழ் சமீபத்தில் வெளியிட்டிருந்தது. மன்மோகனின் பொதுவாழ்வில் அவை உன்னதமான நாட்கள். இரண்டாவது முறையாகப் பிரதமர் பதவி வகித்தபோது சுமாரான நிர்வாகத்தை மட்டும் அவரால் அளிக்க முடிந்தது. இப்போது கிட்டத்தட்ட ஓய்வுபெற்ற நிலையில் இருக்கிறார். தாராளமயமாக்கலால் விளைந்த சாதனைகளுக்காக அவர் தன்னைத்தானே பாராட்டிக்கொள்வார் என்று எதிர்பார்ப்போம்; அவரோ அப்போது தனக்கு உதவியாக இருந்த அமைச்சர்கள், அதிகாரிகள் என்று மற்றவர்களைத்தான் வெகுவாகப் பாராட்டுகிறார்!

சோனியா காந்திக்கு பி.வி. நரசிம்ம ராவ் என்ற பெயரே, அவர் முன்னிலையில் உச்சரிக்கப்படக் கூடாத ஒன்று. ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசின் பிரதமராக சோனியாவால் தேர்ந்தெடுக்கப்பட்ட மன்மோகன் சிங்கோ அப்படிப்பட்ட அழுக்காறான நெஞ்சம் கொண்டவரல்ல. 1990-களில் தன்னுடைய மேற்பார்வையில் நடந்த சீர்திருத்தங்கள் குறித்துப் பேசிக்கொண்டே வந்த மன்மோகன், “சீர்திருத்தங்களுக்கு நாட்டிலும் காங்கிரஸ் கட்சிக்குள்ளும் நிறைய எதிர்ப்புகள் தெரிவிக்கப்பட்டன. பிரதமர் நரசிம்ம ராவின் அரசியல் நிர்வாகம் அந்த எதிர்ப்புகளையெல்லாம் மீறி சீர்திருத்தத்தை அமல்படுத்துவதற்கு உதவியாக இருந்தது” என்று நெகிழ்ச்சியுடன் கூறியிருக்கிறார். அப்போது வர்த்தக அமைச்சராக இருந்த ப.சிதம்பரம் தனக்கு மிகவும் ஆதரவாகச் செயல்பட்டார் என்றும் அவர் இல்லாமல் வர்த்தகக் கொள்கை சீர்திருத்தம் அந்த அளவுக்கு வேகமாக நகர்ந்திருக்காது என்றும் மனம் திறந்து பாராட்டியிருக்கிறார். அதிகாரிகள் சிலரையும் பாராட்டியிருக்கிறார்.


மன்மோகன் சிங்கின் பெருந்தன்மை

பிரதமரின் முதன்மைச் செயலர் ஏ.என்.வர்மா இல்லாமல் இருந்திருந்தால், மத்திய அரசு நிர்வாகத்தின் அதிகாரிகளுடைய முழுமையான ஒத்துழைப்பு அவ்வளவு வலுவாக இருந்திருக்காது என்றிருக்கிறார். அமைச்சர்கள், அதிகாரிகளைப் பாராட்டி நன்றி தெரிவித்த பிறகு, பிற பொருளியல் அறிஞர்களையும் நன்றியோடு நினைவுகூர்ந்திருக்கிறார். அந்தப் பேட்டியின் வெவ்வேறு தருணங்களில் மொத்தம் 14 பொருளாதார அறிஞர்களை நினைவுகூர்ந்திருக்கிறார். அவர்களில் 7 பேர் அரசுக்குள் இருந்தவர்கள், 7 பேர் அரசுக்கு வெளியே இருந்தவர்கள். அவர்கள் சீர்திருத்தங்களை வடிவமைத்து அல்லது அதன் அம்சங்களை மேலும் கூர்தீட்டி உதவியுள்ளனர். மேலும், சிலர் பொதுவெளியில் சீர்திருத்தங்களை ஆதரித்துப் பேசினர்.

அத்துடன் நிறுத்தாமல், தான் நிதியமைச்சராக இருந்து தொடங்கிய சீர்திருத்தங்களை அடுத்து ஆட்சிக்கு வந்த எச்.டி.தேவ கவுடா தலைமையிலான ஐக்கிய முன்னணி அரசும், பிறகு பதவிக்கு வந்த ஐ.கே.குஜ்ரால் அரசும், அதற்கும் பிறகு ஆட்சிக்கு வந்த வாஜ்பாய் தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசும் தொடர்ந்து செயல்படுத்தியதைக் குறிப்பிட்டுப் பாராட்டியுள்ளார்.

மோடியும் சிங்கும் ஓர் ஒப்பீடு

ஒரு பேராசிரியராக, அறிஞராக உருவெடுத்ததால் மன்மோகன் சிங் இப்படி ஒருவரைக்கூட விடாமல் நினைவுகூர்ந்து பாராட்டும் பண்பை இயல்பாகப் பெற்றிருக்கிறார். தங்களுடைய பணி, முன்னவர்களின் பணியை அடியொற்றியே மேற்கொள்ளப்படுகிறது என்ற உண்மை எல்லா அறிஞர்களுக்கும் தெரியும். எனவே, அதை அங்கீகரித்துப் பாராட்டுவார்கள். இருந்தாலும், இப்படி மற்றவர்களின் பங்கைப் பாராட்டும் பண்பு தனித்து தெரிகிறது. அதுவும் சமீபத்தில் காணப்பட்ட, அதிகம் விளம்பரப்படுத்தப்பட்ட இன்னொரு பேட்டியுடன் ஒப்பிடுகையில் மன்மோகனின் பண்புச் சிறப்பு மேலதிகமாகத் தெரிகிறது.

ஆமாம், பிரதமர் நரேந்திர மோடி, அர்னாப் கோஸ்வாமிக்கு சமீபத்தில் அளித்த பேட்டியைத்தான் நான் மன்மோகனின் பேட்டியுடன் ஒப்பிட்டுப் பார்க்கிறேன்.

“நான் பிரதமரானது முதல் எல்லா துறையிலும் புதிதாக எதையாவது சாதித்து நாடு எல்லா திசைகளிலும் முன்னேறிவருகிறது. நான் பதவியேற்றபோது ஏமாற்றம்தான் நாட்டைச் சூழ்ந்திருந்தது. இப்போது - இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு - நிர்வாக அமைப்பில் புதிய நம்பிக்கையை நான் ஊட்டியதாலும் மக்களிடையே நம்பிக்கையை ஏற்படுத்தியதாலும் இப்போது ஏமாற்றம் என்பதன் சாயைகூடக் காணப்படவில்லை” என்றார் மோடி.

‘‘நான் பிரதமராகப் பதவியேற்றபோது பிற நாடுகள் இந்தியாவை இகழ்ச்சியாகப் பார்த்துக்கொண்டிருந்தன. என்னுடைய செயல்களாலும் வெளிநாட்டுப் பயணங்களாலும் உலகத் தலைவர்கள் இந்தியா தொடர்பான தங்களுடைய கண்ணோட்டங்களை மாற்றிக்கொண்டுள்ளனர்’’ என்றார்.

தற்புகழ்ச்சியின் மறுவடிவம் மோடி

சட்ட விரோதமாக வெளிநாடுகளில் பதுக்கி வைத்திருக்கும் கருப்புப் பணத்தைக் கண்டுபிடித்து வெளியே கொண்டுவருவேன் என்று தேர்தலின்போது வாக்களித்தீர்களே, அது இன்னமும் நிறைவேறவில்லையே என்று மிகுந்த சாந்தத்தோடு கேட்கப்பட்டதற்கு மோடி அளித்த பதில் வருமாறு:

“இப்படி ஒரு கேள்வி மக்களுடைய மனங்களில் இல்லை. இதை யாராலாவது செய்ய முடியும் என்றால் அது மோடி மட்டுமே, மோடி நிச்சயம் செய்துமுடிப்பார் என்று மக்கள் நம்பிக்கையோடு இருக்கிறார்கள்” என்றார்.

இப்படித் தன்னைத்தானே புகழ்ந்துகொண்டிருப்பதற்கு நடுவிலும் ஒரு வகையிலான அச்சத்தையும் அவர் வெளிப்படுத்தத் தவறவில்லை. பிரதமரை விமர்சிப்பதற்குக் காரணம், அவருடைய சாதனைகளைக் கண்டு ஏற்பட்ட பொறாமைதான் என்றார்.

“அமெரிக்க நாடாளுமன்றத்தில் நான் ஆற்றிய உரையும், இந்தியா மீது நாடாளுமன்றம் காட்டிய மரியாதையும் அளவுக்கு அதிகமான விளம்பரத்தை ஈர்த்தது. அப்படி இருந்திராவிட்டால், என்.எஸ்.ஜி. விவகாரம் தொடர்பாக அரசை அந்த அளவுக்குக் கடுமையாக எதிர்க்கட்சித் தலைவர்கள் சாடியிருக்க மாட்டார்கள். அமெரிக்காவில் எங்களுக்குக் கிடைத்த வரவேற்பும் ஆதரவும் அவர்களுக்குப் பொறாமையை ஏற்படுத்தியதால், என்.எஸ்.ஜி.யில் இந்தியாவால் உறுப்பினராக முடியாததைக் கடுமையான தோல்வியாகச் சித்தரிக்க முற்பட்டார்கள்” என்று கூறியிருக்கிறார்.

அந்தப் பேட்டியின் இறுதியில் நரேந்திர மோடி தனக்குத்தானே ஒரு சான்றிதழையும் தந்துகொள்கிறார். “நான் எத்தனை வேகமாக முன்னேறினாலும் எனக்குத் திருப்தி ஏற்படுவதே இல்லை. இப்போது 100 மைல் வேகத்தில் ஓடினால் அடுத்து 200 மைல் வேகத்தில் ஓட இலக்கு நிர்ணயித்துக்கொள்கிறேன். நம்முடைய ஆற்றல் முழுவதையும் அளித்தாக வேண்டும், நான் என்னுடைய ஆற்றலை முழுமையாக வழங்கிவருகிறேன்; என்னுடைய முழு அரசையும் வெற்றிகரமாக வழி நடத்திச் செல்கிறேன்” என்று கூறியிருக்கிறார்.

குஜராத் பாலும் கேரள குரியனும்

நான் படித்ததைப் போல இந்த இரு பேட்டிகளையும் அடுத்தடுத்துப் படித்தால், நரேந்திர மோடி அதிகம் பெருமை பாராட்டிக்கொள்கிறார் என்பது நன்கு புரியும். உண்மையில், மற்ற சமயங்களைவிட, மற்ற நேரங்களைவிட தன்னைத் தானே புகழ்ந்துகொள்வதில் மோடி அடக்கி வாசித்திருக்கிறார் என்றே கூற வேண்டும்.

மே மாதத்தின் கடைசி வாரத்தில், புது டெல்லியில் 6 மணி நேரம் நடந்த ஆடம்பர நிகழ்ச்சியில் அவர் பேசியதை நினைவுகூர்ந்து பாருங்கள். “என்னுடைய ஆட்சியில் ஏராளமான சாதனைகள், அவற்றையெல்லாம் தூர்தர்ஷன் ஒளிபரப்பு செய்ய வேண்டும் என்றால், ஒரு முழு வாரம் தேவைப்படும்” என்றார்.

தன்னைத் தானே வரம்பில்லாமலும் குறிப்பிட்ட கால இடைவெளியிலும் பாராட்டிக்கொள்ளும் இந்த பாணி, மோடி தேசிய அரசியலுக்கு நகர்வதற்கு முன்னதாக அதிகமாக இருந்தது. 2013 பிப்ரவரியில் டெல்லி ராம் கல்லூரியில் குஜராத் முதல்வராக இருந்த மோடி பேசிய பேச்சு, அவர் பிரதமர் பதவிக்கான வேட்பாளராக வருவதற்கான பேச்சு என்று பிற்கால வரலாற்று ஆசிரியர்கள் பதிவுசெய்யப் போகின்றனர். டெல்லியில் உள்ள குழந்தைகளுக்கான பால் பாட்டில்களில் குஜராத்திலிருந்து வரும் பால்தான் இருக்கிறது என்று அப்போது பேசினார். ஏதோ அப்படி குஜராத் பால் வருவதற்கே அவர்தான் காரணம் என்பதைப் போல. இந்தக் கூட்டத்திலும் சரி, மற்ற கூட்டத்திலும் சரி, குஜராத் பால் பற்றிப் பேசிய மோடி, அமுல் என்ற கூட்டுறவுப் பால் பண்ணை நிறுவனத்தை ஆனந்த் மாவட்டத்தில் நிறுவவும் அதை உலகளாவிய வெற்றி நிறுவனமாக மாற்றவும் மிகவும் பாடுபட்டது வர்கிஸ் குரியன் என்ற மலையாளி என்று குறிப்பிடவேயில்லை. கேரளத்தைச் சேர்ந்த குரியன், குஜராத்தைத் தன்னுடைய கர்மபூமியாகக் கருதி, கூட்டுறவு பால் சங்கங்களைக் கிராமங்கள்தோறும் ஏற்படுத்தி, பாலைப் பெற்று அதிலிருந்து மதிப்புக் கூட்டப்பட்ட பண்டங்கள் பலவற்றை சர்வதேசத் தரத்தில் தயாரித்து நாட்டுக்கே சிறந்த முன்னுதாரணமாக்கினார்.

தொடரும் மோடியின் தற்புகழ்ச்சி

குஜராத் மாதிரி குறித்துப் பொதுக்கூட்டங்களில் பேசிய மோடி, அவர் முதலமைச்சராக வருவதற்கு முன்னால், குஜராத் மாநிலம் முழுக்க ஏதோ கட்டாந்தரையாகக் கிடந்தது போலவும் அவர்தான் அதில் பசுமையைத் தெளித்து, விவசாயத்தை வளர்த்து, தொழிலைக் கொடுத்து, பொருளாதாரத்தை உச்சாணிக் கிளைக்குக் கொண்டுபோனதைப் போலவும் பேசினார். குஜராத் வளர்ச்சி பெற அம்மாநில மக்களின் கடுமையான உழைப்பு, கூட்டுறவுத் துறை அடைந்த அமோக வளர்ச்சி, அவருக்கு முன்னால் முதலமைச்சர்களாக இருந்தவர்களின் அயராத உழைப்பு காரணமாக விளைந்த முதலீடு, தொழில் முன்னேற்றம், பல தலைமுறைகளாக சமூக சேவையில் முன்னணியில் இருக்கும் குஜராத்தியர்கள், தொழில் வளர்ச்சியில் மட்டுமல்லாது அறப் பணிகளிலும் முன்னோடியாகத் திகழ்ந்த லால் பாய்கள், சாரா பாய்கள் என்று பல அம்சங்கள் பின்னணியில் இருந்தும் மோடி அவற்றையெல்லாம் தன்னுடைய உரைகளில் ஒரு நாளும் நினைவுகூர்ந்து பாராட்டியதே கிடையாது. அவருடைய அரசிலேயே இடம்பெற்ற அமைச்சர்கள், அவருக்கு உதவிபுரிந்த அதிகாரிகள் என்று ஒருவரைக் கூட அவர் வாய் தவறி நினைவுகூர்ந்து பாராட்டியதே இல்லை.

பிரதமரான பிறகும்கூட இதே பாணி பேச்சுதான் தொடர்கிறது. உரைகளிலும் பேட்டிகளிலும் தன்னைத் தவிர வேறு எவரையும் அவர் குறிப்பிட்டுப் பாராட்டுவதே இல்லை. தன்னம்பிக்கை நாடாக உலக அரங்கில் இந்தியாவை வார்த்தெடுத்த ஜவாஹர்லால் நேரு, இந்திரா காந்தி ஆகியோரை ஒருமுறைகூட அவர் வெளிநாட்டு மேடைகளில் நினைவுகூர்ந்து பேசியதில்லை. அமெரிக்காவுடன் சிறந்த முறையில் உறவை ஏற்படுத்திய மன்மோகனைப் புகழ்ந்ததில்லை. ஜன் தன் என்ற தன்னுடைய திட்டம் இப்போது வெற்றிகரமாக வளர்ச்சி கண்டிருப்பதற்குக் காரணமே, முந்தைய காங்கிரஸ் அரசு கொண்டுவந்த ஆதார் திட்டத்தின் உதவியால்தான் என்பதை அவர் அங்கீகரித்ததே கிடையாது.

உலகின் உன்னத உதாரணங்கள்

உலகின் வெற்றிகரமான தலைவர்கள் பலரும் தங்களுடைய திறமையில் முழு நம்பிக்கை கொண்டதோடு, மற்றவர்களின் திறமையையும் அங்கீகரித்துப் பாராட்டியுள்ளனர். இரண்டாவது உலகப் போருக்குப் பிறகு, பிரிட்டனை அடிமட்டத்திலிருந்து கட்டியெழுப்பிய பிரதமர் கிளமென்ட் அட்லி இதற்கு நல்ல உதாரணம். அரசின் முழு அதிகாரத்தையும் கையில் வைத்திருந்தாலும் சர்வாதிகாரிபோல நடக்க அவர் ஒருபோதும் முயன்றதில்லை. மிகச் சிறந்த நல்வாழ்வு அரசாகக் கொண்டாடப்படும் அவரது நிர்வாகத்தில் தேசிய சுகாதார சேவை திட்டம் சிறப்பாக உருவானதற்குக் காரணம் அவரல்ல, அத்துறைக்கு அமைச்சராக இருந்த அனுரின் பெவன் என்று வரலாறு பாராட்டுகிறது. அட்லியே அதை மனமுவந்து ஏற்றிருப்பார். அவரைப் போலவே சமீபத்தில் வாழ்ந்த இன்னொரு தலைவர் ஜெர்மனியின் ஹெல்முட் கோல். அமைச்சரவை சகாக்களுடன் நெருங்கிப் பணியாற்றுவார், எதிர்க்கட்சிகளை வார்த்தைகளால் சீண்ட மாட்டார், தன்னுடைய கண்ணியத்தையும் அடக்கத்தையும் எப்போதும் கடைப்பிடித்தார் - அதே வேளையில் அதிகாரமும் செலுத்தினார்.

அதிகார வெறியே இல்லாத நிர்வாகி என்பதற்கு மிகச் சிறந்த உதாரணம், தென்னாப்பிரிக்க அதிபராக இருந்த நெல்சன் மண்டேலா. மிகப் பெரிய புரட்சிக்காரராகவும் நாட்டின் அதிபராகவும் இருந்த காலத்தில்கூட மற்றவர்களுக்கு இணையானவர் என்றே தன்னை கருதிக்கொண்டாரே தவிர, மற்றவர்களைவிட தான் பெரியவன் என்று கருதியதே கிடையாது. அவரது தலைமையை யாரும் கேள்வி கேட்டதே கிடையாது. இருந்தாலும், தென்னாப்பிரிக்காவின் விடுதலைக்கும் வளர்ச்சிக்கும் ஆலிவர் டாம்போ, வால்டர் சிசுலு, கோவன் மெபக்கி, ஜோ சுலோவா ஆகியோருக்கும் முக்கியப் பங்கு இருக்கிறது என்று பலமுறை பேசியும் எழுதியும் பதிவுசெய்தவர் மண்டேலா. அவர் மீதுள்ள பாசத்தாலும் அவருடைய தலைமையில் தங்களுக்கிருந்த நம்பிக்கையாலும் அவரை மதித்தனரே தவிர, அச்சத்தால் அல்ல. அவரை எதிர்த்தவர்கள்கூட அவருடைய கண்ணியத்தையும் பண்பையும் பெரிதும் மதித்தனர். அதனாலேயே முதல் தேசிய ஒற்றுமை அரசு ஏற்படுத்தப்பட்டபோது அதில் சேருமாறு விடுத்த அழைப்பை எஃப்.டபிள்யு. கிளர்க் என்ற வெள்ளையினத் தலைவர் ஏற்றார். அவர்தான் மண்டேலாவைச் சிறையில் அடைத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

மண்டேலாவைப் பற்றி எப்போது வேண்டுமானாலும் உதாரணம் காட்டலாம். ஆனால், இப்போதுதான் மோடி தென்னாப்பிரிக்கா சென்று திரும்பியிருக்கிறார். “தலைவர்களில் பலர் தங்களைப் பற்றி மிகவும் உயர்வாக எண்ணிக்கொள்கின்றனர். ஒரு கட்டத்தில் தன்னையே பெரிதாக நினைப்பதையும் பேசுவதையும் நியாயம்தான் என்று நினைத்துக்கொண்டுவிடுகின்றனர்” என்று ஒரு நண்பருக்கு சிறையிலிருந்து எழுதிய கடிதத்தில் மண்டேலா குறிப்பிட்டிருந்தார்.

நம்முடைய பிரதமரைப் பொறுத்தவரையில் இந்தக் கட்டம் ஆரம்பத்திலேயே தொடங்கி நீண்டுகொண்டே வருகிறது. அவருடைய நன்மைக்காகவும் நம்முடைய நன்மைக்காகவும் இது விரைவிலேயே முடிவுக்கு வர வேண்டும் என்று பிரார்த்தனை செய்வோம்.

தமிழில்: சாரி


தற்புகழ்ச்சியின் மறுவடிவம் மோடிமோடி அரசுபாஜக

Sign up to receive our newsletter in your inbox every day!

You May Like

More From This Category

More From this Author