Last Updated : 28 Oct, 2015 09:00 AM

 

Published : 28 Oct 2015 09:00 AM
Last Updated : 28 Oct 2015 09:00 AM

நிமிடக் கட்டுரை: ஒரு பேராசிரியரின் மரணம்

அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழகத்தின் நவீன இந்திய மொழிகள் துறையில் மராத்திப் பேராசிரியராகப் பணியாற்றிய ஸ்ரீனிவாஸ் ராமச்சந்திர சிரஸின் பெயர் 2010-ல் தவறான காரணங்களால் ஊடகங்களில் அடிபட்டது. பல்கலைக்கழக வளாகத்துக்குள் இருந்த அவரது குடியிருப்பு வீட்டுக்குள், ரிக்‌ஷா ஓட்டுநருடன் அவர் சம்மதத்துடன் ஒருபாலுறவில் ஈடுபட்டிருந்தபோது எடுக்கப்பட்ட வீடியோ தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டதுதான் அந்த சர்ச்சைக்குக் காரணம். பல்கலைக்கழக மாணவர்கள் சிலர் னிவாஸின் வீட்டுக் கதவை உடைத்துப் புகுந்து அந்த வீடியோவை எடுத்ததாகவும், உள்ளூர் தொலைக்காட்சி நிறுவனத்தினரின் வேலை என்றும் இருவேறு கருத்துகள் அந்தப் படத்தைப் பற்றி நிலவுகின்றன. இதைத் தொடர்ந்து னிவாஸ் ராமச்சந்திர சிரஸ் பல்கலைக்கழக நிர்வாகத்தால் இடைநீக்கம் செய்யப்பட்டு, வளாகக் குடியிருப்பிலிருந்தும் வெளியேற்றப்பட்டார்.

அலிகார் பல்கலைக்கழகத்தின் நடவடிக்கைகளை எதிர்த்து அலகாபாத் உயர் நீதிமன்றத்தை நாடினார் சிரஸ். அவருக்கு ஆதரவாகத் தீர்ப்பளித்தது நீதிமன்றம். ஓரினப் பாலுறவு சட்டபூர்வமானதே என்று டெல்லி உயர் நீதிமன்றம் தீர்ப்பு கொடுத்திருந்த சூழலில் இத்தீர்ப்பு வெளியானது. சில நாட்கள் கழித்து மர்மமான சூழ்நிலையில் சிரஸ் மரணமடைந்தார். காவல் துறையினர் அந்த மரணத்துக்குக் காரணம் தற்கொலை என்றனர். ஆனால், ஒருபாலுறவு தொடர்பாக நிலவும் சமூக வெறுப்புதான் அவரை மரணத்துக்கு இட்டுச்சென்றது என்றார்கள் ஒருபாலுறவு ஆதரவாளர்களும் மனித உரிமை ஆர்வலர்களும்.

னிவாஸ் ராமச்சந்திர சிரஸின் கதைதான் இந்திப் பட இயக்குநர் ஹன்சல் மேத்தாவால் ‘அலிகார்’ என்னும் திரைப்படமாக எடுக்கப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட பேராசிரியர் சிரஸ்சாக நடித்திருப்பவர் பாலிவுட்டின் சிறந்த நடிகர்களில் ஒருவரான மனோஜ் பாஜ்பாய். சிரஸ்சின் கதையை உலகுக்குச் சொல்லும் இளம் பத்திரிகையாளராக நடித்திருப்பவர் ராஜ்குமார் ராவ்.

“இந்தப் படம், ஒரு நிறுவனத்தையோ தனிநபரையோ குற்றம்சாட்டுவதற்காக எடுக்கப்பட்டதல்ல. நம்மைச் சுற்றி சகிப்புத்தன்மையின்மை பரவிவரும் நேரம் இது. இச்சூழ்நிலையில், தனிநபர் ஒருவர் தனது இணையைத் தேர்ந்தெடுப்பதற்கான அடிப்படை உரிமை பற்றிய பேச்சை உருவாக்குவதுதான் இப்படத்தின் நோக்கம். பரஸ்பர சம்மதம் இருக்கும் நிலையில், அவரவர் அந்தரங்க இடங்களில் இருவர் உறவில் ஈடுபடுவதற்கு உரிமை இருக்க வேண்டும்” என்கிறார் இதன் இயக்குநர் ஹன்சல் மேத்தா.

தென்கொரியாவில் நடக்கும் புஷன் சர்வதேசத் திரைப்பட விழாவிலும் லண்டன் திரைப்பட விழாவிலும் ஏற்கெனவே திரையிடப்பட்டு பாராட்டுகளைப் பெற்றுள்ளது இத்திரைப்படம்.

“லண்டன் திரைப்பட விழாவில் இப்படம், மிகுந்த நுண்ணுணர்வும் பரிவும் கொண்ட ஒரு சரிதையைச் சொல்லியிருப்பதாகப் பாராட்டப்பட்டது. மேற்கு நாடுகளில் ஒருபாலுறவுக்கு ஏற்பு இருக்கிறதென்றாலும் பொதுச் சமூகத்தில் அவர்களிடம் விலக்கம் காண்பிக்கப்படுகிறது. ஒருபாலுறவாளர்கள் மட்டுமல்ல இனம், வகுப்பு சார்ந்த பாகுபாடுகளும் நம்மிடம் உள்ளன” என்கிறார் ஹன்சல் மேத்தா. பேராசிரியர் சிரஸ் விவகாரத்தில் அவர் ரிக்‌ஷா ஓட்டுபவருடன் உறவுகொண்டது கடுமையாக விமர்சிக்கப்பட்டதைச் சுட்டிக்காட்டுகிறார் மேத்தா.

“உயர் கல்வி பெற்ற மனிதர் ஒருவர், மிகுந்த கல்வியறிவு பெற்றவர்கள் மத்தியில் வாழ்ந்தும் பாகுபாட்டால் தண்டிக்கப்பட்டவர். நீதிமன்றம் அவரைக் குற்றத்திலிருந்து விடுவித்தும், அவர் சார்ந்த சமூகம் அவரது பாலியல் துணையைத் தேர்ந்தெடுப்பதற்கான உரிமையைத் தரவேயில்லை. அவரது மரணம் நேர்ந்த சூழல் இன்னும் மர்மமாகவே நீடிக்கிறது. ஆனால், காவல் துறையோ தற்கொலை என்று வழக்கை மூடிவிட்டது” என்கிறார் ஹன்சல் மேத்தா.

சிரஸின் மரணத்துக்குப் பிறகு, ஒருபாலுறவைக் குற்றமாகக் கருதும் 377-வது சட்டப்பிரிவை ஆதரித்து உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x