Last Updated : 08 Sep, 2016 09:10 AM

 

Published : 08 Sep 2016 09:10 AM
Last Updated : 08 Sep 2016 09:10 AM

நாம் ஏன் கான் அகாடமி பாடத்திட்டத்தை வரித்துக்கொள்ளக் கூடாது?

உலகளாவிய வலைக்கல்வி முறைகளோடு நமது கல்வித் திட்டத்தை இணைத்தால் தீர்வு காண இயலும்

கல்வியாளர் எஸ். எஸ். இராஜகோபாலனுடைய பேட்டியைப் படித்தேன் ( ‘தி இந்து’ - 24, 25 ஆகஸ்ட் 2016). முக்கியமான பேட்டி. அது சார்ந்து சில கருத்துகளைப் பகிர்ந்துகொள்ள வேண்டும் என்று நினைக்கிறேன். கல்வித் துறையில் ஆழ்ந்த அறிவும், நீண்ட அனுபவமும் கொண்ட அவருடைய புதிய கல்விக் கொள்கை பற்றிய சுருக்கமான, எனினும் மிகக் கூர்மையான பெரும்பான்மைக் கருத்துகளை நான் ஏற்றுக்கொண்டு வழிமொழிகிறேன். எனினும், அவர் சொல்லியிருப்பதைவிட, மிக அதிகமாகவே இன்றைக்கு நம்முடைய பள்ளி/கல்லூரி ஆசிரியர்களின் தரம் - சில விதிவிலக்குகள் இருந்தாலும் - வீழ்ந்திருப்பதாகவே நான் நினைக்கிறேன்.

தான் கற்பிக்கும் பாடம் சொல்லும் பொருள் பற்றி மாதத்துக்கு ஒரு புத்தகம்கூடப் படிக்காத எண்ணற்ற கல்லூரி ஆசிரியர்களை என் அரசுப் பணியின்போது சந்தித்திருக்கிறேன். மாணவர்கள் தேர்வின்போது 75% மதிப்பெண்களைப் பல்கலைக்கழகத் தேர்வின் மூலமும், 25% மதிப்பெண்களைப் பாடம் நடத்தும் ஆசிரியர்களே வழங்குவதன் மூலமும் தீர்மானிக்கலாம் என்கிற நல்ல திட்டத்தை, மதிப்பெண்களை வாரி வாரி வழங்குவதன் வழியாக, மாணவர்களிடம் நல்ல பெயர் வாங்கிக்கொண்டு அந்தத் திட்டத்தையே குட்டிச்சுவராக்கியவர்கள்தான் நம் கல்லூரி ஆசிரியர்கள்.

கல்வி மாற்றமும் சமூக மாற்றமும்

இப்போதைய கல்வி வர்த்தகர்களின் ஆதிக்கத்தை எதிர்க்க வேண்டுமானால், சமூக மாற்றம் ஏற்பட்டால்தான் கல்வி மாற்றம் ஏற்படும் என்கிற அவர் கருத்தில் எனக்கு உடன்பாடு உண்டு. அதேசமயம், சமூக மாற்றத்துக்கும் கல்வி மாற்றத்துக்கும் உள்ளது ஒருவழித் தொடர்பன்று. பல சமயங்களில், கல்வி மாற்றமும் சமூக மாற்றத்துக்கு வழிகோலியிருக்கிறது. நம் விடுதலைக்கான போராட்டத்தின் அடித்தளமே தனி மனித சுதந்திரம், உரிமைகள் பற்றிய விழுமியங்கள் கல்வியினால் நம் மக்கள் பெற்றதன் மூலம் வந்ததுதான் என்பது என் நம்பிக்கை.

2002-ல் காலஞ்சென்ற பேராசிரியர் பிரமானந்தா அவர்களைச் சிறப்புச் செய்யும் நோக்கத்தோடு வெளியிடப்பட்ட நூலில், பெரும்பாலான கல்லூரி ஆசிரியர்களின் நிலை பற்றி இவ்வாறு குறிப்பிட்டிருந்தேன்:

“அவர்களிடம் படிக்கும் மாணவர்களை அவர்கள் தேர்ந்தெடுப்பதில்லை. அந்த ஆசிரியரை அந்த மாணவர்களும் தேர்ந்தெடுப்பதில்லை. கல்லூரி ஆசிரியர்கள் தங்களை மேன்மைப்படுத்தப்பட்ட ‘டேப் ரெக்கார்டர்’களாக உருமாற்றம் செய்துகொள்ள வேண்டும். தாங்கள் உருவாக்காத, வேறு எவராலோ தீர்மானிக்கப்பட்ட, ஒரு பாடத்திட்டத்தின் அடிப்படையில், அதற்கு வேறு எவர்களாலோ மாணவர்களின் ஜீரணத் துக்கு உகந்ததான வகையில் எழுதப்பட்ட கடைத்தெருக் குறிப்புரைகளை கிளிப்பிள்ளைபோல் திரும்பத் திரும்ப ஒப்பிக்க வேண்டும். மார்க் ifவெயின் கூறியிருக்கிறபடி ‘ஆசிரியர்களின் நோட்டுப் புத்தகங்களிலிருக்கும் செய்திகள், அவர்களின் மாணவர்களின் நோட்டுப் புத்தகங்களுக்கு, இருவரின் மூளைக்குள்ளேயும் நுழையாமலே, இடமாற்றம் நடக்க வேண்டும்!’

அந்நியப்படும் கல்லூரி அமைப்பு

அவர்கள் பாடம் நடத்திய பொருள்குறித்து, வேறு எவரோ தயாரித்த கேள்விகளுக்கு அவர்களின் மாணவர் கள் விடையளிக்கும் தேர்வுகளை மேற்பார்வையிடும் பணி மாத்திரம் அவர்களுடையது. அவர்கள் திருத்தும் விடைத்தாள்கள் அவர்களின் மாணவர்களினால் எழுதப்பட்டவை அன்று. அவர்களின் மாணவர்களின் விடைத்தாள்களை வேறெவரோதான் திருத்தி மதிப்பிடுவார்கள்.

மாணவர்கள் தேர்வில் வெற்றிபெற்றார்களா, தோல்வி யுற்றார்களா என்பதை அந்த ஆசிரியர்கள் தீர்மானிக்க மாட்டார்கள். அதைச் செய்வது ஒரு மையப்படுத்தப்பட்ட அமைப்பின் பணி. இந்தியத் துணைக் கண்டம் தவிர, இப்படி ஆசிரியர்களும் மாணவர்களும் அந்நியமாயிருக்கும் கல்லூரி அமைப்பு உலகில் வேறெங்கும் இருப்பதாக எனக்குத் தெரியவில்லை.”

இப்போது அறிவித்திருக்கும் கல்விக் கொள்கையிலும் இந்தப் பிரச்சினைக்குத் தீர்வு எதுவுமில்லை. இப்போதைக்கு இதையெல்லாம் மாற்றியமைக்கும் ஒரு கல்விக் கொள்கையை நடைமுறைப்படுத்த முடியுமா என்பதிலும் எனக்கு ஐயமிருக்கிறது.

காணொளியில் பாடங்கள்

இணையத்தின் வழியாகத் தொலைதூரக் கல்வி நமக்கு விடிவுகாலம் தரலாம் என்பதில் என் முழு நம்பிக்கையும் அடங்கியிருக்கிறது. ஆரம்பநிலைக் கல்வி, பள்ளிக் கல்வி, கல்லூரிக் கல்வி, ஆய்வுகள் ஆகிய அனைத்துக் களங்களிலும் உலகளாவிய வலைக்கல்வி முறைகளைத் தொடக்க, பள்ளி, மற்றும் கல்லூரிக் கல்வித் திட்டங்களோடு இணைப்பதால் நம் பிரச்சினைகளுக்கு ஒரு தற்காலிகமான ஏற்கத்தக்க தீர்வு காண இயலும் என்று நம்புகிறேன்.

உலகெங்கிலும், பல்வேறு நாடுகளில் உள்ள பள்ளிகள் ‘கான்’ஸ் அகாடமி (www.khanacademy. org) காணொளிக் காட்சிப் பாடங்களைத் தங்கள் பாடங் களோடு இணைத்தும், வீட்டுப்பாடத்துக்காகவும் பெரு மளவில் பயன்படுத்துகின்றன. அவை பல மொழி களில் மொழிபெயர்க்கப்பட்டிருக்கின்றன. தமிழிலும் சில காணொளிகள் மொழிபெயர்க்கப்பட்டிருக்கின்றன என்றாலும், அவை பரவலாகப் பயன்பாட்டுக்கு வரவில்லை.

2014-ல் கான்ஸ் அகாடமி காணொளிகளின் எண்ணிக்கை 5,000 அளவிலேயே இருந்தது. இப்போது 6,000 ஆக இருக்கலாம். ஒவ்வொரு காணொளியும் 5-ல் இருந்து 20 மணித்துளி நேரமே ஓடுகின்றன. அவற்றை மொழிபெயர்க்க ஒரு காணொளிக்கு ரூ.1,000 செலவாகும் என்றாலும், மொத்தச் செலவு ரூ.10 கோடிக்குள் அடங்கிவிடும் என்பது என் கணக்கு. தொடக்கக் கல்வியிலிருந்து உயர் நிலைக் கல்வி வரை பல துறைகளுக்கு அவர்கள் பாடங்கள் கொடுத்திருக்கிறார்கள். அவர்கள் நிறுவனம் இலவசமாக வழங்குவதுபோலவே, மொழிபெயர்த்த அந்தப் பாடங்களை நம் கல்வித் துறை இலவசமாக இணையம் மூலம் வழங்கலாம். அது ஒரு மிகப் பெரிய கல்வித் தொண்டாக அமையும்.

கல்வித் தொண்டில் காணொளி

கான்ஸ் அகாடமியின் காணொளிகளை நான் ஒரு எடுத்துக்காட்டாகத்தான் காட்டியிருக்கிறேன். பள்ளிக் கல்விக்கே வேறு பல தொலைதூரக் கல்வித் திட்டங்கள் இணையத்தில் கிடைக்கின்றன. கல்லூரிப் பாடத்திட்டங்களுக்கும் இவை ஒரு எலும்புக்கூடுபோல (www.mooc-list.com) கிடைக்கின்றன. ஒருபொருளாதார ஆசிரியன் என்கிற முறையில் நான் இந்தக் காணொளிகளை (www.mruniversity.com) அனைத்துப் பொருளியல் மாணவர்களுக்கும் பரிந்துரைப்பேன்.

இந்த எலும்புக்கூடுகளை உலகின் பல்வேறு நாட்டு மாணவர்களும் பயன்படுத்துகிறார்கள் என்பதால், அவற்றின் பொதுத்தன்மை அங்கீகரிக்கப்பட்டுள்ளது. அந்த எலும்புக்கூடுகளுக்கு மேல் சதையும் நரம்பும் குருதியும் சேர்த்து உயிரூட்டுவதை நம் கல்வி நிபுணர்கள் செய்வார்களானால், அது அந்தப் பாடத்திட்டங்களை நம் தேவைகளுக்கேற்ற வகையில் மாற்றியமைக்கும் வழியாகலாம். இப்படிச் செய்வது நடைமுறைக்கு உகந்ததாகவும் அமையும்.

இதில் வேறொரு பெருநன்மையும் அடங்கியிருக்கிறது. பள்ளியிலோ, கல்லூரியிலோ ஆசிரியர்கள் காணொளி களின் உள்ளடக்கங்களைச் சரியாக விளக்கவில்லை என்றாலும்,மாணவர்கள் மற்றவர் உதவியுடன் அவற்றைப் புரிந்துகொள்ள இவை வழி அமைத்துக் கொடுக்கின்றன. விடாமுயற்சியுடைய மாணவர்கள் தாங்களாகவே அவற்றைப் புரிந்துகொள்ள வாய்ப்பிருக்கிறது. ஊருக்கு ஊர் ‘கற்பிக்கும் மையங்கள்’இதற்காகத் தோன்றினாலும் வியப்பொன்றும் இல்லை. அவை முற்றுரிமை விலைகள் வசூலிக்க இயலாது. ஏனெனில், இந்தக் காணொளிகளை நன்கு புரிந்துகொண்ட எவர் வேண்டுமானாலும் ‘கற்பிக்கும் மையம்’ தொடங்கலாம். நிறையப் போட்டி வரலாம். சுருக்கமாகச் சொன்னால், மோசமான ஆசிரியர்களை எளிதில் இனங்கண்டுகொள்ள இந்தக் காணொளிகள் ஓரளவு உதவும்.

கல்லூரிகளையும் பள்ளிகளையும் இவை இடப்பெயர்ச்சி செய்ய இயலாது. ஆனால், கல்லூரிகளையும் பள்ளிகளையும் திறன்மிக்கதாக ஆக்குவதற்கு இவை ஒரு பற்றாக்குறை நிரப்பும் சக்தியாக இயங்க இயலும். எனவே, நடைமுறை சாத்தியமான இந்த முயற்சியை மேற்கொள்வதற்குப் பரிசீலனை செய்ய வேண்டும்.

- எஸ்.நீலகண்டன், பொருளியலாளர், எம்ஐடிஎஸ் முன்னாள் இயக்குநர்,

தொடர்புக்கு: neelakantanster@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x