Published : 11 Jul 2016 09:42 AM
Last Updated : 11 Jul 2016 09:42 AM

மாணவர் ஓரம்: ஆசியப் புலிகள் தந்த பாடம்!

தென் கொரியா, சிங்கப்பூர், தைவான், வியட்நாம், இந்தோனேசியா, ஹாங்காங், பிலிப்பைன்ஸ், மலேசியா ஆகிய கிழக்காசிய நாடுகள் 1970,1980-களில் மிக வேகமான பொருளாதார வளர்ச்சியை அடைந்தன. இவற்றை ‘ஆசியப் புலிகள்’ என்றே அழைத்தனர். இந்த நாடுகளில் சேமிப்பும், முதலீடும் வேகமாக வளர்ந்தன. அந்நிய முதலீடுகளை ஈர்க்கும் வண்ணம் பல பொருளாதார நிகழ்வுகள் இருந்தன. தொழில் துறையும், நிதிச் சந்தையும் வேகமாக வளர்ந்தன. குறுகிய கால முதலீட்டுக்கான அந்நிய முதலீடு அதிகமாக வர ஆரம்பித்தது. இதனால், இந்த நாடுகளில் அந்நியச் செலாவணி வரத்து அதிகரிக்க… மக்கள் அதிக இறக்குமதி செய்தனர். 1990-களின் பிற்பகுதியில் இறக்குமதிக்குத் தேவையான அந்நியச் செலாவணிக் கையிருப்பு இல்லாமல் போக, நிதிச் சந்தைகளில் பெரிய சிக்கல் வெடித்து, பொருளாதாரங்கள் வேகமாக விழுந்தன. அந்நியச் செலாவணிகள் வேகமாக வெளியேறி சிக்கலை அதிகமாக்கின. புதிய பொருளாதாரக் கொள்கையைப் பின்பற்றிய கிழக்காசிய நாடுகளின் பொருளாதாரம் 1997-98ல் பின்னடைவைச் சந்தித்தது. இது இந்தியாவிலும் பொருளாதாரச் சீர்திருத்தத்தை மீண்டும் விவாதத்துக்குக் கொண்டுவந்தது.

அந்நேரத்தில், இந்தச் சிக்கல் பெரிய அளவில் இந்தியாவைப் பாதிக்கவில்லை. அந்நாடுகளில் சந்தை நிர்ணய நாணய மாற்றுமுறை இல்லை, ஆனால், இந்தியாவில் இருந்தது. அதாவது, சந்தையின் நிலைக்கு ஏற்ப ரூபாய் - டாலர் மாற்றுவிகிதம் மாறும். அதேநேரத்தில், இந்தியா குறுகிய கால அந்நிய முதலீடுகளின் மேல் வரையறை வைத்திருந்தது. மேலும், அந்நாடுகளைப் போல இறக்குமதி-ஏற்றுமதி இடைவெளி இந்தியாவில் அதிகம் இல்லை. தனியார் துறையின் அந்நிய நாட்டுக் கடன் அளவும் குறைவாக இருந்தது.

இன்றும்கூட நிதிச் சந்தையில் அந்நிய முதலீட்டை நாம் கட்டுக்குள் வைத்திருக்கிறோம். போதுமான அந்நியச் செலாவணி கையிருப்பு உள்ளது. நிதிச் சந்தையில் முதலீட்டுக்கு வரும் அந்நியச் செலாவணிக்கான மாற்றும் விகிதமும் கட்டுபாட்டுக்குள் உள்ளது.

இன்றும்கூட இந்தியா நிதி மற்றும் அந்நியச் செலாவணிச் சந்தைகளில் மிதமான கட்டுப்பாட்டைக் கடைப்பிடிக்க கிழக்காசியப் பொருளாதாரச் சிக்கல் ஒரு பாடமாக அமைந்துவிட்டது.

- இராம.சீனுவாசன், பேராசிரியர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x