Last Updated : 12 Apr, 2017 08:21 AM

 

Published : 12 Apr 2017 08:21 AM
Last Updated : 12 Apr 2017 08:21 AM

மருத்துவர்கள் பாதுகாப்புடன் இருக்கிறார்களா?

நோயாளியும் மருத்துவரும் ஒருவருக்கொருவர் நம்பிக்கை கொண்டு செயல்படுவதுதான் தீர்வு தரும்

‘சிகிச்சை பலனளிக்காமல் நோயாளி மரணம் - மருத்துவர் மீது தாக்குதல்’ எனும் செய்திகள் அடிக்கடி கண்ணில் படுகின்றன. தமிழகத்தில் மட்டுமல்லாமல், நாடு முழுவதும் இப்படியான சம்பவங்கள் நடக்கின்றன. கடந்த ஐந்து ஆண்டுகளில் மட்டும் அரசு மற்றும் தனியார் மருத்துவமனை மருத்துவர்களில் முக்கால்வாசிப் பேர் ஏதாவது ஒரு வன்முறையைச் சந்திப்பதாக இந்திய மருத்துவச் சங்கம் ஒரு புள்ளிவிவரம் தந்திருக்கிறது. இதன் பின்னணியில் இருக்கும் பிரச்சினைகள் என்னென்ன?

முன்பெல்லாம் ஒவ்வொரு குடும்பத்துக்கும் ஒரு ‘குடும்ப மருத்துவர்’ இருப்பார். எந்தவொரு நோய்க்கும் அவரிடம்தான் சிகிச்சைக்கு வருவார்கள். இப்போது நோயாளிகள் முதல்கட்ட சிகிச்சைக்கே சிறப்பு மருத்துவரிடம் நேரடியாகச் சென்றுவிடுகின்றனர். தேவைக்கு அதிகமாகப் பரிசோதனைகளைச் செய்ய நிர்ப்பந்திக்கிறார்களோ, தேவையில்லாமல் மருத்துவமனையில் தங்கச் சொல்கிறார்களோ என்பன போன்ற சந்தேகங்கள் அவர்களுக்கு ஏற்படுகின்றன. சந்தேகப் பார்வையோடு மருத்துவரை அணுகும்போது, நோய் குணமாகவில்லை - உயிர் காப்பாற்றப்படவில்லை - என்றால், மருத்துவர் மேலிருந்த நம்பிக்கையும் கலைந்துவிடுகிறது.

விழிப்புணர்வின்மை

பெரும்பாலும் விபத்தில் அடிபட்டவர்கள் இறப்பது, அறுவை சிகிச்சையில் மரணம் ஏற்படுவது போன்ற நிலைமைகளில்தான் மருத்துவர்கள் தாக்கப்படுகிறார்கள். பணி நேரத்தில் மருத்துவர்கள் மருத்துவமனையில் இல்லை, தவறான சிகிச்சை அல்லது தாமதமாகச் சிகிச்சை தரப்பட்டது, அலட்சியமாக சிகிச்சை செய்யப்பட்டது போன்ற பல குற்றச்சாட்டுகளை முன்வைத்தும் இம்மாதிரியான தாக்குதல்கள் நடக்கின்றன. ஒரு சில இடங்களில் நிகழ்கிற இத்தகைய முறைகேடுகள் உண்மை எனத் தெரியவந்தால், இந்திய மருத்துவர்கள் சங்கம் அந்த மருத்துவர் மீதும் மருத்துவமனை மீதும் தகுந்த நடவடிக்கை எடுக்கிறது.

ஒருவருக்கு சிகிச்சை பலன் தராமல் போவ தற்குப் பல காரணங்கள் உள்ளன. அவற்றில் முக்கியமானது, தாமதமாகச் சிகிச்சைக்கு வருவது. மேற்கத்திய நாடுகளைப் போல் இந்தியாவில் மருத்துவ விழிப்புணர்வு இன்னமும் மேம்படவில்லை. அதிலும் விபத்து, மாரடைப்பு, பக்கவாதம் போன்ற ஆபத்தான நிலைமைகளில் நோயாளிகள் எவ்வளவு விரைவாக மருத்துவமனைக்கு வருகிறார்களோ அவ்வளவு விரைவாக சிகிச்சைக்குப் பலன் கிடைக்கும். ஆனால், பெரும்பாலும் அப்படி நடப்பதில்லை.

அரசின் குறை

மருத்துவமனைகளில், குறிப்பாக அரசு மருத்துவமனைகளில் ஆபத்தான நேரங்களில் உயிர் காக்கும் எல்லா சிகிச்சைகளும் கிடைக்கும் என்றே மக்கள் நம்புகிறார்கள். அவர்கள் எதிர்பார்க்கிற வசதிகள் அங்கு இல்லாதபோது ஏமாற்றம் அடைகிறார்கள். அரசு மருத்துவமனைக்குத் தேவையான வசதிகளைச் செய்துகொடுக்க வேண்டியது ஒரு அரசின் கடமை. அதை ஏன் செய்யவில்லை என்று நோயாளியோ அவரது உறவினரோ அரசிடம் கேட்பதில்லை. மருத்துவருடன்தான் மோதுகிறார்கள்.

அரசு மருத்துவமனைகளில் அளவுக்கு அதிகமாக நோயாளிகள் வரும்போது மருத்து வரும் சரி, நோயாளியும் சரி பொறுமை இழக்கிறார்கள்; சோர்வடைந்துவிடுகிறார்கள். பொதுவாக, மருத்துவக் கல்லூரி மருத்துவ மனைகளில் இரவு நேரங்களில் வரும் நோயா ளிகளின் ஆரம்பக்கட்ட சிகிச்சைகளைத் தருவ தற்குப் பயிற்சி மருத்துவர்களும் முதுகலை மாணவர்களும்தான் பணியில் இருப்பார்கள். தொடர் பணிச்சுமை காரணமாக இவர்கள் சோர்வடைவதால், சில சமயம் சிகிச்சை தாமதமாகலாம். ஒரு விபத்து நடக்கும்போது மருத்துவமனையில் சிகிச்சைக்கு வருபவர்களும் உதவிக்கு வருபவர்களும் கும்பலாகக் கூடிவிடுவார்கள். அப்போது அனைவருக்கும் உடனடியாகச் சிகிச்சை தரப்பட வேண்டும் என்று உறவினர்கள் எதிர்பார்ப்பார்கள். ஆனால், அதற்கு ஆள் பலம் / மருத்துவ வசதிகள் அங்கே இருக்காது. அவசரக் கால மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவ உதவியாளர்கள் ஆகியோர் உலக சுகாதார நிறுவனம் நிர்ணயித்துள்ள எண்ணிக்கையில் இந்தியாவில் எந்த அரசு மருத்துவமனையிலும் இல்லை என்பதே உண்மை. தவிரவும், விபத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்குச் சிகிச்சை அளிக்கும்போது, கட்டாயமாகப் பின்பற்ற வேண்டிய மருத்துவமனை நடைமுறை விதிகளாலும் தாமதம் ஏற்படுவதுண்டு. இந்தக் குறைகள் எல்லாமே அரசு தலையிட்டு நிவர்த்தி செய்ய வேண்டியவை.

என்ன செய்யலாம்?

நாட்டில் மருத்துவர்கள் பலரும் தற்போது எந்நேரம், எவரிடமிருந்து தாக்குதல் நடக்குமோ என்று பயந்துகொண்டுதான் மருத்துவ சேவையைத் தொடர்கிறார்கள். தங்கள் பெயருக்கும் புகழுக்கும் களங்கம் ஏற்பட்டுவிடுமோ என்று அஞ்சுகிற நிலைமையையும் மருத்துவர்களிடம் காண முடிகிறது. எரிகிற தீயில் எண்ணெயை ஊற்றுவதுபோல செய்திகளைப் பரபரப்பாகத் தர வேண்டும் என்ற எண்ணத்தில் ஊடகங்கள் உண்மை அறியாது வன்முறையைத் தூண்டும் நிகழ்வுகளைப் பெரிதுபடுத்துகின்றன. எரிகிற வீட்டில் எடுத்தது லாபம் என்பதுபோல் சில சமூக விரோதிகள் பாதிக்கப்பட்டவர்களோடு சேர்ந்துகொண்டு மருத்துவர்களை மிரட்டிப் பணம் பறிக்கவும் துணிகிறார்கள். இம்மாதிரியான நிலைமைகள் நீடித்தால், அது மக்கள் சமுதாயத்துக்கு நல்லதில்லை.

தேவையில்லாமல் மருத்துவர்களை நோகடிக்கும்போது அவர்களின் சேவை மனப்பான்மையில் தொய்வு ஏற்படுவது இயல்பு. மேலும், பணியில் பாதுகாப்பின்மை தரும் மன அழுத்தம் மருத்துவர்களை மட்டுமல்ல, அவர் களிடம் சிகிச்சை பெற்றுக்கொள்ளும் நோயாளி களையும் பாதிக்கும். ஆபத்தில் இருக்கும் அவசர நோயாளிகளுக்குச் சிகிச்சைகள் தரப்படுவதைத் தவிர்க்கக்கூடும். எனவே, இந்த நிலைமைகளைச் சீர்படுத்தும் முதல்படியாக, அனைத்து மருத்துவர்களுக்கும் பணிப் பாதுகாப்பு உறுதி செய்யப்பட வேண்டும். அதற்குக் காவல் துறை மூலம் அரசு தேவை யான ஏற்பாடுகளைச் செய்ய முன் வரவேண்டும்.

சிந்திக்க வேண்டிய தருணம்

மருத்துவச் சேவையில் கவனக்குறைவு, தவறான சிகிச்சை அளிக்கப்பட்டது போன்ற குற்றச்சாட்டுகள் எழுப்பப்படும்போது, அவை நிரூபிக்கப்படும் வரை மருத்துவர்களுக்குப் பாது காப்பு வழங்கப்பட வேண்டும் என்று ஒரு சட்டமும் உள்ளது. ஆனால், காவல் துறை அதைப் பயன்படுத்தி மருத்துவரைத் தாக்கியவர் களுக்குத் தண்டனை பெற்றுத் தந்ததாக இதுவரை வரலாறு இல்லை. மாறாக, அவசரப்பட்டு மருத்துவர்களைத்தான் கைது செய்கிறார்கள்.

மருத்துவச் சேவை என்பது உயிர் காக்கும் உன்னத சேவை. நாட்டில் ஆரோக்கிய மான சமுதாயம் நிலைப்பதற்கு மருத்துவர் களின் உதவி கட்டாயம் தேவை. மனிதநேயமும் செயலில் நேர்மையும் மருத்துவச் சேவையில் குறைந்துவிடக் கூடாது. அதேநேரம், மருத்துவர்கள் கடவுள்கள் அல்ல; அவர்களும் மனிதர்கள்தான்; மனிதத் தவறுகள் அவர் களுக்கும் ஏற்படலாம்; பொறுமை காக்க வேண்டும் என்ற மனப்பக்குவத்தை மக்கள் ஏற்படுத்திக்கொள்வதும், நோயாளியும் மருத்து வரும் ஒருவருக்கொருவர் நம்பிக்கை கொண்டு செயல்படுவதும்தான் நோயாளி மருத்துவர் உறவை மேம்பட வைக்கும். அப்போது நோயா ளிக்கு நோய்ப் பாதுகாப்பும் மருத்துவருக்குப் பணிப் பாதுகாப்பும் கிடைக்கும். அனைவரும் சிந்திக்க வேண்டிய நேரம் இது.

- கு.கணேசன், பொதுநல மருத்துவர்,
தொடர்புக்கு: gganesan95@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x